கீதாஞ்சலி (71) உன்னோடு என் கலப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


பாடுபட்டுப் பணி புரிவதற்கு
ஈடுபடுத்த வேண்டும் முழுமையாக,
என்னை நான்
எப்புறத் திசைகளிலும்!
அப்பணிகள்தான்
உந்தன் ஒளிக்கதிர்கள் சிதறி
ஒப்பிலா மாயையாக
உருவாக்கும்
பன்னிற நிழல்கள்!
உன்னிருக்கையைச்
சுற்றிலும் வேலி அரணை நீயே
கட்டிக் கொள்கிறாய்!
உன் மனமுறிவைப் பற்றி
எண்ணற்ற பாக்களில் எழுதி
விளித்திடுவாய் பிறகு!
நின்னுடல் பிரிவு
என்னுடல் சேர்க்கையில்
ஒன்றாகி விட்டது!
விண்வெளி எங்கணும்
வண்ணமய வேறுபாடுகளில்
கண்ணீர் துளிகள் பொழிந்து,
புன்னகை சிந்தி,
முன்னறிவிப்பு செய்து,
நம்பிக்கை ஊட்டி,
வெம்பிடும் கீதங்கள்
விண்வெளியில் எதிரொலிக்கும்!
பொங்கி எழும் அலைகள்!
மங்கி விழும் மீண்டும்!

எனது கனவுகள் சிதையும்,
ஒருவேளை
நனவாய்ப் பலிக்கும்!
உன் சுயத் தோல்வியை அங்ஙனம்
என் மூலம் காட்டுவாய்!
இரவு பகல் என்னும் தூரிகையால்
எண்ணற்ற உருவ ஓவியங்கள்
தீட்டப் படுகின்றன, நீ
தொங்க விட்ட
திரைச் சீலையில்!
பின்புறத்தில் திரையுடன்
பிணைந்துள்ளது
உன் ஆசனம்,
மர்ம நெளிவு களோடு,
மலட்டுத்தன நேர் பாதைகள்
விலக்கப் பட்டு!
உன் மகத்துவ நடையழகு
என்னுடன் சேர்ந்து
விரிந்து பரவுகிறது,
விண்வெளி விளிம்பைத் தாண்டி!
உன்னிசையுடன்
என்னிசை கலக்கும் போது,
வாயு மண்டலமே
ஆடி அதிர்கிறது!
உன்னையும், என்னையும்
ஒளித்தும், தேடிக் கண்டும்
நகர்ந்து செல்கின்றன,
யுகங்கள் எல்லாம்!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 1, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா