சென்னை நகரமோர் செல்வமடி!

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

பசுபதி


கண்ணை முழிப்பதோர் நாட்டினிலே — அகக்
கண்ணை விழித்ததோர் நாட்டினிலே — பிறந்த
மண்ணென்றன் வாழ்வில் மறைந்திடுமோ — தசை
வாட்டினும் ரத்தம் மறந்திடுமோ ? (1)

உன்னூர் எதுவென்று கேட்கையிலே — என்
உதிரம் களிபாடும் வேட்கையிலே –பூங்
குன்றனார் சொல்*போகும் காற்றினிலே !– நெஞ்சு
குளிக்கும் நினைவுகள் ஊற்றினிலே ! (2)

[ * ‘யாதும் ஊரே ‘ ]

அன்னைநா டாமிந்தி யாவினிலே — கலை
ஆரமாம் தென்னிந்தி யாவினிலே — உள்ள
சென்னை நகரமோர் செல்வமடி — அதன்
சீர்த்தியைக் கைகொட்டிச் சொல்வமடி ! (3)

சென்னை இளமையின் சின்னமடி — இன்பச்
சிந்தைக ளேதரும் அன்னமடி! — ‘பசு ‘ங்
கன்றின் நினைவினைப் பாடிடுவேன் — கடி
கார வயதை நிறுத்திடுவேன் ! (4)

முந்தைய சென்னைச் சிறப்புகளை –எஸ்.
முத்தையா^ மூலமாய்ப் பார்த்திருப்பீர்!– என்
இன்ப இளமை நினைவுகளை — உங்கள்
இதயக் கிடங்கினில் சேமியுங்கள்! (5)

[ ^பிரபல சென்னை வரலாற்று நிபுணர்]

கல்கிரா ஜாஜி அருகினிலே — பொற்
காலம் பஸுல்லா தெருவினிலே — முதற்
கல்வியோ ஆர்.கே.எம்# பள்ளியிலே — காதற்
கல்வி பனகல்பூங் காவினிலே ! (6)

[# = ராம கிருஷ்ணா மிஷன் ]

சற்றும் தெவிட்டாத தேவாரம் — ஓதும்
தர்ம புரத்தாரின் ஆதீனம்^ — அங்குக்
கற்ற சமய அரிச்சுவடி — இன்றுமின்
காற்றில் விண்ணேற்றும் ஆய்வேடு ! (7)

[^தி.நகர், உஸ்மான் தெருவில் உள்ள தர்மபுரம் கிளை ]

கல்லூரி ஐ.ஐ.டி கிண்டி*யடி — அங்கே
கற்றதோ சர்க்கரை மண்டியடி — உண்மைச்
செல்வம்நம் வாழ்வினில் என்னவென்று — நினைவு
செய்திடும் காந்தியின் மண்டபம்டி ! (8)

[ Indian Institute of Technology, Guindy Engineering College]

ஆயும் துறையினில் ஆழ்ந்திடுமுன் — உணவை
ஆயும் கலையினில் முக்குளித்தேன் !–சென்னை
ராயர் உணவக% வட்டிலிலே — ‘கேணி ‘
‘ரத்னா ‘வின்# இட்டிலி சட்னியிலே ! (9)

[% ராயர் காபி கிளப், # திருவல்லிக் கேணி, ரத்னா கஃபே]

நீலத் திரைகடல் கோலமடி — என்றன்
நினைவு படகாய் மிதக்குதடி — அதன்
ஓலம் அடக்கிடும் கர்ச்சனையில் — என்னை
ஊக்கிய நேருவின் மேடையடி ! (10)

மூர்சந்தை ஆழ்வாரெ^ன் போக்கிடங்கள் — புதின
மோகம் தணித்திடும் பொக்கிடங்கள் — அங்கே
ஆரணி தேவன் வடுவூர்பின் — தேவி ச
ரோஜாவைக் கையாலே தொட்டதுண்டு ! (11)

[ மூர் மார்கெட், ‘ஆழ்வார் ‘ நடத்தும் பழம்புத்தகக் கடை]

சென்னைத் தமிழினில் பேசிடுவோம் — அது
செந்தமிழ் இல்லையென் றேசிடுவோம் — ஆனால்
உன்னி வழக்கினை ஆய்ந்துவிடின் — வளர்
உயிரந்தப் பேச்சில் துடிக்குமடி ! (12)

நாட்டின் அரசியல் நாளமடி — கூவ
நாற்றம் சிலமுறை வீசுமடி — ஊரை
வாட்டும் வெயிலும் நாணும்படி — பல
வார்த்தை உதிர்குழாய்ச் சண்டையடி! (13)

பாரதி கால்பட்ட சென்னையிலே — அவன் மை
பட்டதோர் பேனாவைத் தேடிநிற்பேன் — பார்த்த
சாரதி கோபுரம் பார்க்கையிலே — அவன்
சாதனை நெஞ்சினில் விம்முமடி ! (14)

மூவரில் பேயார் மயிலையிலே — தமிழில்
மூழ்கியே ஆழ்வாராய் மாறினரே! — இங்குப்
பாவைக் குயிர்தந்தார் சம்பந்தர் — தமிழ்ப்
பாவைக் குயிர்தர எம்மாந்தர் ? (15)

மயிலை கபாலி கிறங்கிடுவார் — மதுரை
மணியாரின் மோகனப் பாட்டினிலே — மேலும்
மயிலை ‘மயில்கள் ‘ பேரழகை — பாடும்
மார்கழி சங்கீத ஸீஸனடி ! (16)

வெள்ளித் திரையினில் மாயமிட்டு — பல
வேலை கொடுத்திடும் கோலிவுட்டு !– பக்தி
வெள்ளம் பெருகிடும் பக்கத்திலே! — பழனி
வேலைத் தொழு!கோடம் பாக்கத்திலே ! (17)

பதவிப் பொறுப்பிலே பல்லாண்டு -நம்
பாரதம் சுற்றிய வேற்றினத்தார் –நான்
மதராஸ் எனும்பெயர் சொன்னவுடன் — நகர்
மாட்சியைப் போற்றிப் புகழ்ந்திடுவார் ! (18)

அன்றைக்குப் பாரதி சாவினிலே — உரை
‘ஆர்யா ‘வின் ஆந்திர நாவினிலே ! — புவியில்
இன்றுதே வையன்புப் பந்தமடி ! — சென்னை
எல்லா மொழியர்க்கும் சொந்தமடி! (19)

காலையில் ‘கானடா ‘ ராகமடி — அலுவல்
காரியம் ஆனபின் தாகமடி ! — தினம்
மாலையில் சென்னையில் கொண்டுவிடு! — ஒளி
மங்கும் திரியினைத் தூண்டிவிடு! (20)

pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி