இந்த ஆண்டின் நாயகன்

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன்


1

இதோ இங்கே தெருமுனையில்
செக்கச் சிவந்த தபால்பெட்டி மேல்
போதை தலைக்கேறிய நிலையில்
சாய்ந்து நிற்கிறேன்.

சட்டைப் பையில் காலி மதுக்குப்பி.
மடையன்போல் இளித்தபடி
குதத்தில் கிழிசலுடன் நிற்கிறேன்.

இசைத்தட்டுக் கடையிலிருந்து
எல்விஸ் பிரஸ்லியின் பாட்டு
( ‘Santa Clause is Back in Town ‘).

ஆடவேண்டும் போல் இருக்கிறது.
ஆனால் அதுபோல்
குதிகால் அதிரும் காரியமெல்லாம்
என்னால் செய்யமுடியாது.

மாமிசம் திணித்த பணியாரம்போல்
என் தலைக்குள் துணிச் சுருளும்
கையுறை காலுறையில் மரத்தூளும்
வயிற்றில் பழைய செய்தித்தாள் கந்தலுமாக
மூச்சு முட்டக் குத்தி
அடைத்து வைத்திருக்கிறார்கள்.

2

சொல்லப் போனால்,
நான் ரொம்பவே திடகாத்திரமானவன்.
சாயம் போன ஜீன்ஸ் இடுப்பில்.
ஏற்றுமதி உபரியான பெரிய்ய்ய சட்டை மேலே.
மால்பரோ சிகரெட் நாட்டிலிருந்து
நேரே வந்து சேர்ந்த தொப்பி தலையில்.
என் தலை இறுகத் தைக்கப் பட்டிருக்கிறது.

கழுத்தில் பஞ்ச வர்ண
மப்ளரைக் கழற்றிவிட்டுப் பாருங்கள்
(அது திருட்டுச் சந்தையில் வாங்கியது)
நான் சொல்வது புரியும்.

என் கழுத்தைச் சுற்றி முப்பது தையல்.
இதோ இங்கே. வேணுமானால்
எண்ணிக் கொள்ளுங்கள்.

3

டிசம்பர் மாதத்தில் அழகானதொரு
காலைப் பொழுது இது.
நேரம் முழுக்க இங்கே
அலையலையாக நகரும்
அழகான பம்பாய்நகர்ப் பெண்களைப்
பார்த்தபடியே நிற்க நன்றாக இருக்கிறது.

அவர்கள் தங்கள் தட்டச்சுப் பொறிகளிடம்,
தொலைபேசிப் பலகைகளிடம்,
கணினிகளிடம், காத்திருக்கும் காதலர்களின்
பொறுமையிழந்த கைகளால் வளைக்கப்படப்
போய்க் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் என்னைத் தவிர யாருக்கும் தெரியாது
என் நேரம் முடியப் போகிறதென்று.
எனக்கு ஒரேயொரு வருத்தம்தான்.
நான் முத்தமிட வாய்க்காத
இத்தனை அழகான பெண்கள் நிறைந்த
உலகத்தை விட்டுப் போகிறேன்.

மாலதி, நிலோஃபர், அஞ்சலி, சாந்தா,
அல்பன, கல்பனா, ஷிரின், சரின், சில்வியா, மரியா,
ஹர்லின், யாஸ்மின், நைனா, கமலா, மோனா, லோபா;

உங்கள் எல்லாரையும் நேசிக்கிறேன்,
நீள முத்தமிட்டு உங்கள் ஒவ்வொருவருக்கும்
பிரியாவிடை சொல்ல முடிந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்.

4

தபால் பெட்டி இருட்டுக்குள்
புதுவருட வாழ்த்து அட்டைகள்
முத்தமிட்டுக் கொள்கின்றன.

அனுப்பியவருக்கும் பெறுகிறவருக்கும்
இடையே விரிந்த ஆளரவமற்ற பரப்பில்,
சட்டமெல்லாம் செல்லாது போன
பரிசுத்தமான அன்பின் ஈர்ப்பில்,
கூவிச் சிணுங்கி
பெருமூச்சும் முனகலுமாக
நாளை என்பதே இல்லாததுபோல்
ஒன்றை ஒன்று ஆரத்தழுவிக் கிடக்கின்றன.

சேரவேண்டிய இடம் நோக்கி
களங்கமில்லா மனசாட்சியோடு
பிரியும் கணத்தில் கடைசி கடைசியாக
இழுத்தணைத்துக் கொள்கின்றன.

5

இந்த ஆண்டான நான்
மிகவும் சாதாரணமானவன்.
வரலாற்றுப் புத்தகங்களில்
நிச்சயமாக இடம்பெற மாட்டேன்.

என்னை நினைவில் வைத்துக்கொள்ளும்படி
புரட்சி இல்லை. போரில்லை.
இனப் படுகொலை இல்லை.
இயற்கையாக நிகழ்ந்தோ, நிகழ்த்தப்பட்டோ
அசம்பாவிதம் எதுவும் இல்லை.

இமயமலை இன்னொரு அங்குலம்
வளர்ந்தது தவிர,
கண்டம் கடந்து நாரைகள்
குறைவான எண்ணிக்கையில் பறந்து வந்தது தவிர,
பைசா நகரச் சாய்ந்த கோபுரம்
இன்னும் 1.29 மில்லிமீட்டர் சாய்ந்தது தவிர,
தான்யூப் நதியிலிருந்து பெருகியோடி
இருநூற்று மூன்று கன கிலோமீட்டர்
புதுவெள்ளம் கருங்கடலில் கலந்தது தவிர,
ஓசோன் பரப்பில் துளை
இன்னும் விரிவடைந்தது தவிர,
இரண்டாயிரத்து எழுநூறு தாவர இனங்கள்
நசித்துப் போனது தவிர
இந்த வருடம் எதுவும் நடக்கவில்லை.

நான் எந்தப் பிரச்சனையையும்
தீர்க்கவில்லை. இன்னும் விடுவிக்கப்படாத
தத்துவ இயல் கேள்வி எதற்கும்
விடைகாண முற்படவில்லை.
தொழில்நுட்பப் பெருமாற்றம்,
குதித்துச் சாடிய வளர்ச்சி
எதுவும் இல்லை. ஒரு காலில்
நொண்டியடித்துச் சுற்றியபடிதான்
பொழுது கழிந்தது.

புதிய சிந்தனை எதுவுமில்லை.
அழுகின வாடையை மறைக்க
நிறைய மசாலா சேர்த்துப்
பழைய சிந்தனைகளே
பரிமாறப்பட்டன.

ஒரு நல்ல செய்தி என்னவென்றால்,
பள்ளிக் கூடத்தில் சிறுவர்களும் சிறுமியரும்
என்னை மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை.

யாருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது ?
யாருக்கு புக்கர் பரிசு ?
விம்பிள்டன் கோப்பையை வென்றது யார் ?
டைம் பத்திரிகை யாரை
இந்த ஆண்டின் நாயகனாகத்
தேர்ந்தெடுத்தது ? நான் மறந்தாகி விட்டது.

6

காகிதப் பீப்பிகள் முழங்க
சைரன்கள் அலற, ஹாரன்கள் முழங்க,
மாதாகோவில் மணிகள் ஒலிக்கச் சொல்கிறேன்

– உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்.

நெருப்பை சுவாசித்துக்கொண்டு
புகையில் இருமி,
சாம்பலைத் துப்பியபடி சொல்கிறேன்

– உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்.

என் பொத்தான்கள் தெறிக்கின்றன.
என் நெஞ்சு திறந்து, நுரையீரல்கள் மடிய,
என் தொப்பியைத் தீயிறகு தின்னத் தொடங்க

– உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்.

நான் ஒரு கறையாகத் தெருவில் விழுவதை
கழுத்தை எக்கிப் பார்த்தபடி
உயர்ந்த மாடிக் கட்டிடம்
மகிழ்ச்சியோடு பாடத் தொடங்க

– உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்

(அருண் கொலட்கர் – காலா கோடா பொயம்ஸ் – Man of the year –
மொழியாக்கம் இரா.முருகன் நவம்பர் 2004)

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்