சொல்லத்தான் நினைகின்றேன்

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

கஜன்


சிரத்தினில் சிறிதைக் கண்டேன்
. சிறியவன் சிலதைப் பெற்றேன்
துரிதமாய்க் கவிதை யாத்து
. சொல்லிலே கருத்தைக் கொண்டு
பொருந்திடும் மரபு வேண்டி
. புகல்ந்திட முடியா தென்னால்
நெருடிடும் சமயம் நூறாய்
. நிகழுதே மனதில் யுத்தம்

கருதிய கடனால் வேலை
. காட்டிடும் கைதிக் கோலம்
பொருதிடும் புழுக்கள் போலப்
. பொசுங்கிடும் நித்தம் கோழை
வருந்திடும் சமயம் எல்லாம்
. வாயிலே வார்த்தை வந்தும்
செருகிடும் நினைப்பு யாவும்
. சிக்கிடும் ஊமைச் சொல்லாய்

சொப்பனம் கண்ட காட்சி
. துடித்திடும் நிகழ்வு ஒன்றாய்
அப்புறம் நினைத்துப் பார்க்க
. அறிவினில் வராமல் போகும்
செப்பிட நினைத்த போதும்
. தினத்தினில் இன்னல் காண
அப்படி மறந்த கோலம்
. அவனியில் நிகழும் பின்னர்

படைத்ததில் கற்றுப் பெற்றுப்
. படித்ததில் பிழைகள் கூற
எடுத்திடும் என்றன் எண்ணம்
. ஏங்கிடச் செய்வதாலே
அடுத்தவர் பிழைகள் காட்டல்
. அங்கிடல் நல்ல தல்ல
சடுதியாய் முடிவு மாறி
. சங்கடம் உள்ளம் கொள்ளும்

வெளித்தெருக் கடைகள் செல்ல
. வீண்வழிச் செயல்க ளாலே
தளிர்விடும் விடலைச் சொந்தம்
. தடம்புரண் டோடல் செய்யத்
தெளிவுடன் திருத்தச் செப்பத்
. திடமாய் வார்த்தை கோத்தும்
அளித்திட உரிமை யின்றி
. அனுமதிக் காது வாயும்

பலகண முரைக்கத் தோன்றி
. பெளர்ணமி பலது பார்த்தும்
வலம்வரும் கடின வாழ்வில்
. வசதியாய் நேர மற்று
சிலகணம் மூளை சொல்லும்
. சிறைப்படும் மனித னென்று
விலங்கென யிருப்ப தாலே
. வெருட்டுது விலகும் காலம்

முகத்திலே நடிப்புக் கூட்டி
. மொழிந்திட ஊக்கம் காட்டி
பகர்திட நினைத்த தேதோ
. பலகணம் யோசிக் கையில்
அகத்தினில் அடிமை யாக
. அடியவன் நிலையில் தாழ்ந்து
மிகுதியாய் விரட்டும் அல்லல்
. விளைவுகள் சிலதில் வாழ்வு

– 0 –

avathanikajan@yahoo.ca

Series Navigation

கஜன்

கஜன்