புகைவண்டி நிலையக் கவிதைகள் (மூலம் : அருண் கொலட்கர் )

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

தமிழில் இரா.முருகன்


கைகாட்டி

வர்ணம் உதிர்ந்துபோன
மரக்கட்டை ஞானியாக

தனக்குத் தெரிந்த
புகைவண்டி நிலையங்களின்
பெயரை எல்லாம்
விழுங்கிவிட்டு

பத்துத் தடவைக்குமேல்
உள்நோக்கி
சுட்டிக் கொண்டது
கைகாட்டி.

அடுத்த ரயில்
எப்போ வருமென்று
தெரிந்தாலும் கோடிகாட்டாமல்

முகத்தில் பதிந்த
கரங்களை அகற்றிப்
பையில் போட்டுக்கொண்ட

கடியாரப் பரப்பில்
எண்களைக் கூட்டக்
கிடைத்தது பூஜ்யம்.

ஸ்டேஷன் நாய்

கடந்து போன முன்னூறு வருடமாக
ரயில் வரப் போகப்
பார்த்து நின்ற
மரத்தடியில்
தவம் செய்யும்

ஸ்டேஷன் நாயின்
சொறிபிடித்த உடலுக்குள்
ரயில் நிலையத்தின் ஆத்மா
இருக்கிறது.

நீங்கள்
மனிதனா, தெய்வமா, பாதிக் கடவுளா
இல்லை, அற்புத சுகமளிக்கத்
தலையில் தொட்டு ஆசிர்வதித்துத்
சொர்க்கத்துக்குக் கூட்டிப் போக வந்த
எட்டுக்கை முளைத்த
புகைவண்டி அட்டவணையா என்று
வலக் கண்ணைக்
கொஞ்சம் போல திறந்து
பார்க்கிற நாய்க்கு

இன்னும் அதுக்கான வேளை
வரவில்லை என்று தெரியும்.

தேநீர்க் கடை

பேசா நோன்பு நோற்றபடி
தேநீர்க்கடைப் பையன்.

கேள்வி எதாவது கேட்டால்
அழுக்குத் தண்ணீர்
முகத்தில் சாரலடிக்கப்
பேயோட்டி விட்டுத்

தேநீர்க் கோப்பைகளுக்கும்
பீங்கான் தட்டுகளுக்கும்
கழுவு தொட்டியில்
திருமுழுக்காட்டிக் கொண்டிருக்கிறான்.

ஸ்டேஷன் மாஸ்டர்

பயணச் சீட்டு எழுத்தர்
அடுத்த ரயில்
உண்டென்ற கோட்பாட்டைத்
திடமாக நம்புகிறவர்.

வண்டி வரும் நேரம் பற்றிப்
பேச்சு நீளும்போது
நாக்கைப் பிடுங்கி
சீட்டு வழங்கும் சன்னல் வழியே
உங்கள் கையில் கொடுத்துவிட்டு
எல்லாம் தெரிந்த
அதிகாரியைப் போய்ப்
பார்க்க வழிகாட்டுகிறார்.

ரெண்டுதலை ஸ்டேஷன் மாஸ்டர்
இரும்புப்பாதை போட்ட வருடத்துக்குப்
பிற்பட்ட கால அட்டவணை எல்லாம்
நம்புவதற்கானதில்லை என்று
ஒதுக்கித் தள்ளும் ஜாதி.

ஆனாலும்
முதன்முதல் அட்டவணையைத்
தெளிவாக அறிந்த சுதந்திரத்தோடு
அதன் வரிகளுக்கு நடுவே
பின்னாடி வந்த ஒவ்வொரு அட்டவணையையும்
படிக்க முடியும் அவருக்கு.

சூரிய அஸ்தமனம்
ஏதோ ஒரு ரகசியச் சடங்கின் பகுதி
எந்தப் பிசகும் அதில்
ஏற்படக் கூடாது என்பதுபோல்
மேற்கில் மறையும் சூரியனை
உன்னிப்பாகக் கவனிக்கிறார்.

ஆம் இல்லை இரண்டுக்கும் நடுவில்
அடித்துத் தகர்ப்பதுபோல்
தலை அசைத்துச் சொல்கிறார் –
பதிப்பிக்கப் பட்ட எல்லா அட்டவணையும்
பதிப்பிக்கப் படப்போகிற எல்லா அட்டவணையும்
எந்த நேரமும் எல்லா வழிக்கும்
செல்லுபடியானவை.
ரயில்பாதை போட்டபோது
வெளியிட்ட முதல் அட்டவணையில்
அவை எல்லாம் அடக்கம்.

இதைச் சொன்னதும்
அவருடைய இரண்டு முகத்திலும்
செம்மை படர்கிறது.

நேர்த்திக் கடன்

கடியாரத்துக்குக்
கிடா வெட்டு.
தண்டவாளத்தில்
சிதறு தேங்காய் உடை.
கோழியைக் கழுத்தறுத்துக்
கைகாட்டிக்கு ரத்தம் பூசு.
ஸ்டேஷன் மாஸ்டருக்குப்
பாலாபிஷேகம் செய்.
புக்கிங்க் கிளார்க்குக்குத்
தங்கத்தில் ரயில் வண்டி பொம்மை
காணிக்கை தருவதாக
நேர்ந்து கொள்.
அடுத்த ரயில் எப்போ என்று
யாராவது சொல்லணுமே.

அஸ்தமனம்

தீர்க்க தரிசனம் போல
இணைகோட்டுத் தண்டவாளங்கள்
சந்திப்பதாகத் தோன்றும்
அடிவானத்துக்கு அப்பால்
அகன்றதொரு சக்கரமாக
மறையும் சூரியன்.

அருண் கொலட்கர் – ஜெஜூரி தொகுப்பு – தமிழில் இரா.முருகன் நவம்பர் 06 2004

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்