நள பாகம்

This entry is part of 23 in the series 20021007_Issue

மீனாக்ஸ்


உனக்கு முன்பாக
அலுவலகத்திலிருந்து
வந்து விடும் நாட்களில்
உன் கஷ்டம் நினைத்து
சாதம் வடித்து
எனக்குத் தெரிந்த வகையில்
வத்தக் குழம்பும் ரசமும்
பொரியலும் செய்து வைத்து
உனக்காகக் காத்திருப்பேன்..

நீ வந்து
சமையலறையில் எட்டிப் பார்த்து,
‘எதுக்குடா கஷ்டப்படறே ?
எனக்காக ? ? ‘
என்று கேள்வியும் பதிலும்
நீயே சொல்லிப்
பூரித்துப் போவாய்..

குளித்து முடித்து
சாப்பிட உட்கார்ந்து
என் உப்புக் குறைந்த சமையலை
உன் ஆனந்தக் கண்ணீரால்
சரியாக்கிச் சாப்பிட்டு
‘நல்லாயிருக்குடா!! ‘
என்று கண்கள் பனிக்க
நீ சொல்லும் நேரத்தில்
ஆசையாய்த் தானிருக்கிறது,
வேலையை விட்டு விட்டு
வீட்டோடு கணவனாய்
இருந்து விடலாமென்று!!!

– மீனாக்ஸ்

Series Navigation