பரல்கள்

This entry is part [part not set] of 29 in the series 20020728_Issue

ருத்ரா.


தெறிக்கும் இந்த
மணிப்பரல்களின்
சிலம்பு ஏந்திய கை எது ?

பெண் என்பவள்
வெறும்
பூச்சியம்மாவும் இல்லை.
பூஜ்யமாகவும் இல்லை.
சீறும்
‘ஃபி யூஜியாமாக்கள் ‘ இவள்!

சினைகொள்ளும்
எந்திரம் அல்ல இவள்.

சினங்கொண்டு
தீ பூத்து
அதில் பூச்செண்டு
நீட்டுபவள் இவள்.
தனியொருவனுக்கு
உணவில்லை யெனில்
இந்த ஜெகத்தினை
அழித்திடுவோம் எனும்
வெறும்
‘சிகப்பு பாரதி ‘ யல்ல
இவள்.

யாருக்கு வேண்டும் உணவு ?

பூச்சியும் புழுக்களும் கூட
தின்கின்றன
இந்த மலங்களை!

கற்பு
தனியொருத்திக்கு மட்டும் அல்ல
தனியொருவனுக்கும் தான்.

முதன் முதல்
அன்பு எனும் ஈர்ப்பில்
கட்டப்பட்ட
இந்த பிரபஞ்சம்
கற்பு இழந்த போது
கட்டுக்கோப்பை–
இழந்த போது
உடைந்து சிதறிய
சித்திரங்கள்
இந்த ‘பிக் பாங்க் ‘.
அந்த பரல்களில்
தெறித்த
டி.என்.ஏ..ஆர்.என்.ஏ க்களிலிருந்து
துவங்குகிறது
இந்த நாடகங்கள்.

அந்த நாடகங்களின்
தொப்பூள்கொடிகளைப்
பற்றிக்கொண்டு
ஊஞ்சல் விளையாடும்
எழுத்து தச்சர்களின்
உளிகளை உற்றுப்பாருங்கள்
அத்தனையும்
ரத்தத்தின்
சத்தங்கள்.
அந்த ப்ரொடொபிளாசங்களின்
செல் பிளவுகளிலும்
சைட்டோபிளாங்களின்
மெம்ப்ரேன் வேலிகளிலும்
தகிக்கும் காமக்காய்ச்சலை
சாணை பிடித்துக்கொண்டிருக்கும்
சினிமாக்கவிஞர்களின்
பாடல்கள் எனும்
எய்ட்ஸ் நோய்க்கிட்டங்கிகளில்
எத்தனை எத்தனை
இசைக்கும்மாளங்கள்!
அவற்றுள் பிறாண்டிக்கொண்டிருக்கும்
இராட்சத நகங்களிலிருந்து
தொங்கும்
ரத்த வரிகள்
உங்களுக்கு தெரிகின்றதா ?

அந்த அரிதாரத்தையெல்லாம்
துடைத்து
அழித்துவிட்டு
அந்த அவதாரத்தை
உற்றுப்பாருங்கள்.
கண்ணகியின்
அடி மனதைப்
பிறாண்டியது
பாண்டியன் நீதி
தவறியது அல்ல.

பொற்கொல்லனின்
பொய்ப்பழியும் அல்ல.

‘மாசறு பொன்னே !
வலம்புரி முத்தே ! ‘
என்றவன்
‘மாதவி ‘ எனும்
பெண்ணியத்துக்கு
ஈர்க்கப்பட்டது
எப்படி ?

அன்று
இருபத்தியொன்றாம்
நூற்றாண்டின்
காலப்பாம்பு
அங்கு
கால் பதித்திருந்தால்
கண்ணகி
என்ற பெண்ணியம்
பழிக்குப் பழி வாங்க
கோவலன் மாதிரி
இன்னொரு
‘பாவலன் ‘
என்றொரு ஆணியத்தை
நோக்கி ஈர்க்கப்பட்டதாய்
ஒரு நாடகம்
நடத்தியிருக்காதா ?

பழிவாங்க
பாண்டியன் தானா கிடைத்தான் ?

கோவலன்கள் மொய்த்த
இந்த சந்தைக்கடை
சதை வியாபாரத்தை
சுட்டெரிக்க
சட்டென ஜனித்த
தீப்பிழம்பு கண்ணகி.

இந்த மொத்த சமுதாயத்தின்
போலியானதொரு
கற்பு இலக்கணத்துக்கு
ஒரு கல்லறை கட்டவே
அன்று அவள் அந்த
நெருப்பு சாந்தில்
சிமிண்டு குழைத்தது!

எரிந்தது மதுரை அல்ல.

சிக்மண்ட ஃப்ராய்டு
சொன்ன
‘அடி மனத்து லாவா ‘ அது !

மனம் என்பது
வெறும் செப்புகளில்
சட்டி பானை வைத்து
சமையல் செய்து சாப்பிடும்
விளையாட்டு ‘ஹோம் சயன்ஸ் ‘ அல்ல
பெண்ணுக்கு!

பாண்டியன்
‘பொன் செய் கொல்லன் தன் சொல்
கேட்டு ‘
தடம்புரண்டதை மட்டும்
உரை நடையிட்ட
பாட்டுடை செய்யுளாக
படைக்கவில்லை கவிக்கோவன்
இளங்கோ!

முதன் முதலில் இடறிய
‘ஆணியத்தின் ‘ கற்புதான்
அந்த மெரீனா கடற்கரையின்
‘தலைவிரிகோலம் ‘.
ஆனாலும் மூடத்தனத்தின்
உச்சகட்டம்

அங்கு பஞ்சாங்க சோழிகளை
உருட்டி
விளையாடிகொண்டிருக்கின்றது.
கற்பு தவறிய
கோவலனுக்கு
பொற்கொல்லன் உருவில்
‘ஊழ்வினை உறுத்து வந்து
ஊட்டியதை ‘
குறிப்பாக பாடியதன்
உட்குறிப்பையும்
உணராத
இலக்கிய ‘மந்தை ‘ வாதிகளின்
ஆட்டுக்குரல்களும்
ஆணிய ஆதிக்கத்தின்
சப்பை கட்டுகளுக்கு
அங்கே
தாரை தப்பட்டைகள்
முழக்கிக்கொண்டிருக்கின்றன…

கற்புக்கரசி கண்ணகிகளுக்கு
கோவில் எடுக்க.

***
ருத்ரா
epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா