கண்ணே! கவிதைப் பெண்ணே!

This entry is part of 22 in the series 20020714_Issue

கரு.திருவரசு


கருத்து: இரவீந்தீரநாத் தாகூர்
கவிதை: கரு.திருவரசு

எனது கவிப்பெண்! எனது கவிப்பெண்!
தனது மெய்யின் அணிகலன் அகற்றிச்
செய்யாக் கோலத் திருவில் ஒளிர்கிறாள்!
துய்யாள்! ஆடை அணிகளில் துளியும்
பெருமை கொள்ளாப் பிறவி! ஏனெனில்
பெருமைக் கெல்லாம் உரியவள் பெரியவள்!

கண்ணே கவிதைப் பெண்ணே! அந்த
வண்ண அணிகளை அகற்றினை அழகே!
ஆமாம் அவைநம் இணைப்பை அழிக்கும்!
நாமாய் இருக்கும் உனக்கும் எனக்கும்
இடையில் அவைவந் தொலியை எழுப்பித்
தடையாய், நின்றன் தண்மை மிகுந்த
‘கிசுகிசு ‘க் குரலைக் கேட்கா தாக்கும்!
பசுமை உரைகளைப் பாழா யாக்கும்!

மின்னே உன்றன் மின்சுடர்ப் பார்வையில்
என்னென் றுரைப்பேன், என்றன் காவியப்
பெருமை எல்லாம் நாணிப் போனது!
அருளே! நின்றன் அழகடி நீழலில்
அமர்ந்துள உன்றன் அன்பன் வாழ்வை
நிமிர்ந்த நாணற் குழல்போல் நேராய்
அமைத்தருள், அதிலே அழியா நாதம்
சமைத்தருள்! நாதம் சமைத்தருள் திருவே

**
‘Kr.Thiruvarasu ‘

Series Navigation