அவன் சிரித்தான்

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

புஷ்பா கிறிஸ்ரி


அன்று சாலை வழியே
என் பயணம்
அவன் என்னிடம் கையை
நீட்டி அம்மா தாயே
என்று கெஞ்சினான்

என் கை ஒரு
ஐந்து ரூபாயை
அவனிடம் நீட்டியது
நன்றி சொல்லிய
அவன் வாங்கிக் கொண்டான்

இரண்டு வாரத்தில்
மீண்டும் அவனது தரிசனம்
என்னிடம் இருந்ததோ
இரண்டே ரூபாய்கள்
அவனிடம் தந்தேன்
பார்த்து விட்டு வாங்கி
மடியில் போட்டுக் கொண்டான்

மீண்டும் ஓர் நாள்
அவனைக் கண்ட போது
என்னையும் அறியாமல்
கை துளாவியது பையை
கிடைத்தது ஒரு ரூபாய்
அவனிடம் தந்தேன்
அவன் ஏளனமாய்ச் சிரித்து
பணத்தை வாங்கினான்

என்ன சிரிப்பு ?
பணம் இல்லை.
அடுத்த தடவை பார்க்கலாம்
அதிகம் தருகிறேன் என்றேன்

அவனோ இல்லை இல்லை.
என் நிலைக்கு நீயும் வர
இன்னும் கொஞ்சக் காலம் தான்
பாக்கியிருக்கிறது என்றான்

ஏன் ? எதற்கு அப்படிச்
சொல்கிறாய என்று
அதட்டினேன் அவனை.

நானும் இப்படி உன் போல்
அள்ளி அள்ளிக் கொடுத்து
இல்லாத நாள் வந்த போது
இங்கு வந்து அமர்ந்து கொண்டேன்
இப்போது உன்னிடமும் இல்லை
எனவே நீயும் இங்கு வர
அதிகம் நாள் இல்லை என்றான்

எனக்குள் வியர்த்துக் கொட்டியது
அவன் சொல்வதும் உண்மையா
அர்த்தமுள்ளதாகப் பட்டது
அப்படியானால் கொடுக்க கொடுக்க
குறையும் என்றால்
எப்படிக் கொடுப்பது ?

அள்ள அள்ளக் குறையாத ஆழி
ஒன்று இறைவனிடம் கேட்கிறேன்
நான் கொடுக்க வேண்டும்
எனக்குக் குறையக் கூடாது
தருவானா இறைவன் ?….

புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி