பூமியெல்லாம் பூ

This entry is part of 19 in the series 20020113_Issue

அலமேலு மணி.


புதுப்பானை வேகவைத்து பசுமஞ்சள் சரத்தைக்கட்டி
புத்தரிசி குடத்திலிட்டு புதுப்பொங்கல் படைத்து விட்டோம்.
குடத்திலிட்ட குறுணி அரிசி கும்பிப்பசி தீர்த்திடணும்.
குனிஞ்சு நிமிந்த உழவன் கையில் செல்வமெல்லாம் கொழித்திடணும்.

கடலு கிழித்து மேலவந்து கதிருகளை வளரவச்சு
காடு மலையும் உயர வச்சு உச்சி போகும் சூரியனே
ஊரூசனம் கூடி நின்னு குலவையிட்டுக் கும்பிட்டோம்.
வத்திடாம அருளையெல்லாம்நீ வாரிவாரி தந்திடணும்.

கலர் கலரா சோறெடுத்து மஞ்சள் இலையில் பிடிச்சு வச்சு
காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம் பண்ணிடுவோம்.
கொம்பு சீவி வண்ணமிட்டு கழுத்துச் சலங்கை சலசலக்க
குளம்பதிர ஓடி வரும் மாட்டுக்கும் மகிமையின்று.

பகைமையெனும் இருட்டை நீக்கி அன்புஎனும் ஒளியைப் பாய்ச்சி
பசுமைதானே உள்ளத்திலும் பூமியிலும் காணவேண்டும்.
புண்ணியத்தால் பெத்தெடுத்த புள்ளையெல்லாம் மணமுடிச்சு
பேரன் பேத்தி கொஞ்ச தர சாமியே நீ அருள வேண்டும்.

எலும்பு ஒண்ணு தடுக்குதின்னு மூக்கிலுள்ள ஓட்டை இரண்டும்
தனித்தனியா மூச்சு விட்டா உடம்பு அதைத் தாங்கிடுமா ?
நூலு பிடிச்ச பாவனையா நாடு பிரிஞ்ச சோதரராம்
நல்லவராம் இந்தியனும் பாகிஸ்த்தானும்கை கோர்த்திடணும்.

காந்திசுட்ட கோட்சேவும் உலகத்தில ஒருத்தனுதான்
கலியுக ராட்சசனாம் ஒசாமாவும் தனித்தவந்தான்.
புதுக்காளான் புல்லுருவி கெல்லி எடுத்து நசிக்கிடுவோம்
பூமியெல்லாம் சிரித்து நிற்கும் பூவைக்கண்டு மகிழ்ந்திடுவோம்.

**

Series Navigation