மனித சங்கிலி

This entry is part [part not set] of 20 in the series 20011118_Issue

ஸ்ரீனி.


சிதைந்து கிடக்கும் உணவுப்பொட்டலங்கள்
தசை கொத்தித் தின்னும் கழுகுகள்
பசிக்கு உணவிருந்தும்
பயந்து அழும் மழலைகள்
சூாியனும் சந்திரனும் சுகமாய் உலாவர
சுத்தமாய் உருவான சுடுகாட்டுப்பிரதேசங்கள்
கூடார நிழலில் குடித்தனம் செய்யும்
கொத்தடிமைப் பெண்கள்
குண்டு மழையின் வெம்மையில்
குளிர் காய்ந்து, விளங்காத வெற்றி நோக்கி
வெறிபிடித்தலையும் வீணர்கள்.

வெற்றியின் உச்சியிலமர்ந்து
அதிவேக வாழ்க்கை வலம் வந்து
ஆகாயத்தாக்குதலால் தரைமட்டமாய் ஆனவர்கள்
நேற்று வரை சிாித்துப் பேசி,
அண்டை வீட்டாருக்கு இன்று
அன்னியமாய் போனவர்கள்
கேளிக்கை வாழ்க்கையில் காலை வரை விழித்திருந்து
மரண பயத்தால் உறக்கம் தொலைத்தவர்கள்.

மனிதச்சங்கிலி செய்வோமெனில்
உலகத்தின் ஒருமுனையை மறுமுனையொடு கோர்க்க
ஓராயிரம் இலட்சம் உயிர்கள் தேவையில்லை.
மனிதனை மனிதன் அறியும் வகையில்
ஆறு மனிதர்களே தேவையென
அறிவிக்கிறது மெய்ங்ஞானம்.
முனைகள் இவர்களெனில்
இடைபட்ட வளையங்கள் எங்கே ?

தேவையில்லை இந்த
தேடிப்பிடிக்கும் மரண விளையாட்டு.
தேடவேண்டியது இடைப்பட்ட வளையங்களை
முன்னேற்ற திசையில் இந்த
பூமியை நகர்த்த
முறையாய் சங்கிலி செய்யுங்கள்.
முனைகள் மட்டுமெனில் இந்த பூமி
இரண்டாய் பிளப்பது நிச்சயம்.

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி