இந்தியாவின் தேவை சன்னமான கோவை

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

ரவி நடராஜன்


சில ஆண்டுகள் முன்பு விடுமுறையில் இந்தியா சென்றிருந்த பொழுது, கோவை சென்றிருந்தேன். பொழுது போகாமல் சாயிபாபா காலனியில் பழைய புத்தக கடையில் குறிக்கோள் இல்லாமல் எதையோ தேடிக் கொண்டிருந்தேன். கடைக்காரரிடம்,
“இந்த ஐஐடி நுழைவு பரீட்சை தயார் செய்யும் புஸ்தகம் இருக்கா?”
“அதெல்லாம் இங்க யாரு வாங்குவாங்க? அதுக்கெல்லாம் மெட்றாஸ் போகோணும். வேற ஏதாவது தொழில் புஸ்தகம் வேணுமா? டிரில்லிங், வெல்டிங், எல்லாம் நம்மகிட்ட உண்டுங்க”
சற்றும் மாறவில்லை கோவை.
நான் படித்த உயர்நிலைப்பள்ளி ரயில் பாதை அருகில் இருந்த்து. மதியம் உணவு சாப்பிட மைதானத்தில் மரத்தடிக்கு செல்வது வழக்கம். பள்ளியின் மறுபுறம் ரயில்பாதை அருகே உள்ள குடிசைகளில் பேசும் பேச்சுக்கள் கேட்கும். சில நாட்கள் அதிக மாணவ கூச்சலில்லாத சமயங்களில் நன்றாகவே கேட்கும். அங்கு பலவித தொழில்களை செய்வபர்கள் வசித்தார்கள். அந்த நாட்களில் நான் ‘குடிசைத் தொழில்’ என்பதை இதுதான் என்று நம்பினேன். சில பேச்சுக்கள் 35 ஆண்டுகள் கழித்து இன்னும் நினைவிலிருக்கிறது.
“என்ன தங்கராசு, காயில் வேல எப்படி போவுது?”
”எல்லாம் முடிச்சுடேன் சாமி, நீங்க போன வாட்டி சொன்ன அந்த குவார்ட்டர் ஹெச் பி எல்லாம் முடிங்சுது, 30 எண்ணிக்கை ரெடி”
“சரி, அடுத்த வாரத்துக்குள்ளாற இன்னும் 50 ஒன்ற ஹெச் பி செஞ்சுறு. கம்பி கேஜெல்லாம் தெரியும்ல”
“ஆவட்டும் சாமி”
இப்படியான மின்னியல் இன்ஜினியரிங் சமாச்சாரங்கள் எனக்கு விந்தையாகவும் சற்று தர்மசங்கடமாகவும் தோன்றும். விஞ்ஞானம் மற்றும் மின்னியல் பற்றி இவ்வளவு படித்தும் இந்த குடிசை தொழிலாளிக்கு தெரிந்தது நமக்கு தெரியாமல் போய்விட்டதே என்று கொஞ்சம் தர்மசங்கடம் ஏற்பட்டதும் நினைவிருக்கிறது.
கோவையில் மாடுகள் பூட்டப்பட்ட ரப்பர் டயருடைய வண்டிகள் இன்றும் இப்படி மோட்டார்களை தயாரித்து தொழிற்காலைகளுக்கு சகாய விலைக்கு கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலேயே அதிகம் மோட்டார் தயாரிக்கும் இடம் கோவை மாவட்டம். இன்னொரு விஷயம் – கோவையில் உள்ள வித்தியாசமான தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள். உலோக வேலைகள் செய்யும் பட்டறைகள் அதிகம். எங்கும் அந்த பேச்சுக்கள் அடிபடும். ஃபோர்ஜிங், அனீலிங் போன்ற இன்ஜினியரிங் விஷயங்கள் எந்த பொறியல் கல்லூரி பக்கமும் போகாத கோவை மக்களுக்கு ரொம்ப பரிச்சயம். கோவையில் உள்ள இன்னொரு விசேஷ விஷயம், அங்கு இந்தியாவிலேயே குடும்பம் ஒன்றில் அதிக பேர் (employment per household) வேலைக்கு போகிறார்கள். ஒருவர் எலக்டிரீஷ்யன், ஒருவர் கார் திருத்த வேலைக்காரர், ஒருவர் மில் தொழிலாளி, ஒருவர் வெல்டர் – இது குடும்பங்களில் ரொம்ப சகஜம்.
சமீபத்தில் இணையத்தில் படிக்க நேர்ந்த ஒரு செய்தி இந்த கட்டுரையை எழுதத் தூண்டியது. பயங்கரமாக சூடு பிடித்துள்ள இந்திய பொருளாதார சூழ்நிலையில் தொழில் தெரிந்தவர்கள் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளதாம். ஃபிட்டர்கள், குழாய் ரிப்பேர் தெரிந்தவர்கள், வெல்டர்கள், கட்டிட வேலை, உலோக வேலை தெரிந்தவர்கள் எல்லாம் ரொம்ப கிடைப்பது அரிதாகிவிட்ட்தாம். (http://dealbook.nytimes.com/2011/01/26/can-india-leapfrog-china/) ஒரே ஒரு கோவைதானே இருக்கிறது!
நகரங்களில் குழாய் ரிப்பேர் வேலை தெரியுமா என்றால் ”உன் குழாய்” (youtube) தெரியும் என்கிறார்கள்! வெல்டிங் தெரியுமா என்றால் விஷுவல் பேசிக் தெரியும் என்று விண்ணப்பிப்பார்கள் போலும்! தெருவெல்லாம் பொறியியல் கல்லூரி வந்த பிறகு இது எப்படி சாத்தியம்? ஏதோ உதைக்கிறதே!
அதற்கு முன், மேற்கத்திய உலகில் உள்ள நிலவரத்தை ஆராய்வோம். என் பார்வையில், இந்தியாவின் திறமை பிரசனைக்கு மேற்கத்திய அனுபவத்தில் தீர்வு உண்டு என்று நினைக்கிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன் வட அமெரிக்காவில் குடிபுகுந்த பொழுது நான் பார்த்த சில விஷயங்கள் கொஞ்சம் வியப்பூட்டியது. அவற்றில் சில:
1. பொதுவாக மேற்கத்திய உலகின் சாதாரண மனிதர்களின் பார்வை ஒரு 500 கி.மீ. க்குள் அடங்கிவிடும். வெளியுலகைப் பற்றி அதிகம் தெரியாது. ஒருவரின் உறவினர்கள் 500 கி.மீ. க்குள் வசிக்கிறார்கள். அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். ஆனால், மிகவும் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.
2. எந்த ஒரு வேலையையும் பெரியதாகவோ, சிறியதாகவோ நினைப்பதில்லை. நான் வேலை செய்த கணினி மென்பொருள் நிறுவனம் வியாபார சோர்வால், மூடப்படும் நிலை வந்து பலருக்கு வேலை போனது. அதில் உயர் பதவியில் இருந்த நண்பர் ஒருவர், தனது பழைய சமைக்கும் வேலைக்கு (Chef) சர்வ சாதாரணமாக அடுத்த நாளே சென்று விட்டார். இவர், தன்னுடைய இரவு நேரங்களில் கணினி மென்பொருள் நுட்பங்களைக் கற்று உயர்ந்தவர்!
3. அதே போல, என்னுடன் வேலை செய்த சக ஊழியர் ஒருவர் அவரது ஓய்வு நேரத்தில் ஃபைபர் கண்ணாடியில் தன்னுடைய வீட்டில் மோட்டார் சைக்கிள் பாகங்களை தயாரிப்பதில் ஈடுபட்டு வந்தார். அவரது வேலை ஒரு நாள் போகவே, ஃபைபருக்கு அடுத்த நாளே மாறினார். அவரது பெயரில் 4 பேடண்டுகள் உள்ளதால், மிக நிபுணத்துவம் நிறைந்த தொழிலை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
4. என்னுடன் இன்றும் வேலை செய்யும் சக ஊழியர், வாரக் கடைசியில், பல விதமான மின் வேலைகள், வீட்டு தியேட்டர் அமைப்பு (home theater installations) கணினி வலையமைப்பு வேலைகள், செய்து வருகிறார். காரணம், தன்னுடைய வார வேலையான கணினி மென்பொருள் வேலையையும், வாரக் கடைசி மின்னியல் வேலைகளையும் ஒன்றாகவே பார்க்கிறார்.
5. அலுவலகங்களில் இந்தியர்கள் முதுநிலை பல்கலைக்கழக பட்டம் பெற்று செய்யும் வேலைகளை, இளநிலை அல்லது பள்ளி பயின்ற ஊழியர்களே செய்து வருகிறார்கள். இதை இந்தியர்களை குறை கூறுவதாக நினைக்க வேண்டாம்.
இந்தியாவில் உள்ளது போல, பெற்றோர், குழந்தைகளின் படிப்புக்கு டாக்ட்ரேட் பட்டம் வரை செலவழிப்பதில்லை. இங்குள்ள பெற்றோர், குழந்தைகளின் உயர்நிலைப் பள்ளி படிப்புவரை தங்களுடைய பொறுப்பாக நினைக்கிறார்கள். அதற்கு மேல் படிக்க ஆசைப்படும் மாணவர்கள் கடன் வாங்கி படிக்கிறார்கள். கடன் சுமையை சமாளிக்க இங்கு மாணவர்கள் புதிய தொழில்களை தெரிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் உள்ளது. கோடை கால விடுமுறையில் பலவிதமான வேலைகளை மாணவர்கள் செய்கிறார்கள். சூப்பர் மார்கெட்டில் காய்கறிகளை அடுக்குபவர் உயிர் தொழில்நுட்பத்தில் டாக்ட்ரேட் படித்துக் கொண்டிருப்பார். காய்கறிகளை அடுக்குவதை அவர் சிறிய வேலையாய் நினைப்பதில்லை. அதே போல, மர வேலை தெரிந்தவர்கள் கோடைக் காலத்தில் வீட்டில் சில மாற்ற (remodeling work) வேலைகள் செய்து தங்கள் படிப்புக்கு பணம் சேர்க்கிறார்கள்.
விஷயத்திற்கு வருவோம். எப்படி முடிகிறது, இவர்களால்? இங்கு உயர்நிலைப்பள்ளியில் தொழில் கல்வி கட்டாயம். தப்பிக்கவே முடியாது. அத்துடன், சமூகத்தில் எந்த ஒரு தொழிலையும் உயர்ந்தது, தாழ்ந்தது என்று பார்ப்பதில்லை. எது சட்டத்துக்கு உட்பட்டது, எது புறமானது என்று மட்டுமே பார்க்கிறார்கள். எல்லோருக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கத்தான் செய்கிறது. தொழில் கல்வி அதை வெளிக் கொண்டுவர மிக அவசியம். ஆனால், நம்முடைய அணுகுமுறை முற்றிலும் வேறாக இருப்பதால் வருவதுதான் பிரசனை.
சத்துணவு திட்டம் ஆரம்பப் பள்ளிக்கு குழந்தைகள் வர உதவியாக இருந்தது. உயர்நிலைப் பள்ளியின் சத்துணவு எது? அக்பரும், ஆங்கில இலக்கணமும், ஆப்பிரிக்க நாடுகள் பற்றிய பூகோளமும் உதவாது. அவற்றை தெரிந்து கொள்ள ஆசை உள்ளவர்கள் மிகக் குறைவு. ஆனால், தொழில் கல்வியை உயர்நிலைப்பள்ளியில் கொண்டு வந்தால், தானாகவே மாணவர்கள் பள்ளி வருவதில் ஆர்வம் காட்டுவார்கள். உதாரணத்திற்கு, மேற்கத்திய நாடுகளில், 9 ஆம் வகுப்பு வந்தவுடன், மாணவர்களுக்கு இரு பாதைகள் உள்ளன. 1) தொழில் கல்வி 2) பல்கலைக்கழக்கத்திற்கான கல்வி. இதில், இரண்டாம் பாதையில் செல்பவர்களுக்கும் தொழில் கல்வி வகுப்புகள், பயிற்சிகள் உண்டு. எப்படிப்பட்ட தொழில் கல்வி? வாகன திருத்த வேலைகள், மின் வேலைகள், கட்டிட வேலைகள், மர வேலைகள், இசை, கணக்கியல் (accounting) என்று பல வகை பயிற்சிகள் உண்டு. அந்த மூன்று ஆண்டுகளில் மாணவர்கள் சோலார் கார் செய்கிறார்கள், புதிய மர சாமான்கள் செய்கிறார்கள், பள்ளியில் தேவையான மின் வேலைகளை அவர்களே செய்கிறார்கள், பள்ளி இசைக்குழுவில் வாத்தியம் வாசிக்கிறார்கள்.
பள்ளிப் படிப்பு முடிந்தவுடன், தொழில்கல்வி பாதையை மேற்கொண்டவர்கள் அடுத்த கட்டமான அத்தொழிலில் சான்றிதழ் பெற முயற்சிக்கிறார்கள். சான்றிதழ் தேவைகள் கடுமையானவை. தொழில் பாதுகாப்பு, தொழில் நேர்மை போன்றவற்றையும் சோதிக்கிறார்கள். சான்றிதழ் பெற்றவர்களுக்கு வேலை நிச்சயம். இதற்கு அடிப்படைத் தேவை வளரும் பொருளாதாரம் மற்றும் குறிப்பாக கட்டிடத் தொழில். கட்டிடத் தொழில், பல வகை தொழில் தேவைகளைக் கொண்ட ஒன்று, மின் தொழிலாளர், குழாய் தொழிலாளர், மரத் தொழிலாளர் எல்லோரும் தேவைப்படும் தொழில் அது. இதில், மணிக் கணக்கில் நல்ல சம்பளம் – கடுமையாகவும் உழைக்க வேண்டும். காலை ஏழு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கூட குளிர் வெய்யில் என்று பாராமல் உழைக்கிறார்கள்.
இந்திய சமூக நிலை எதிர் மாறாக இருக்கிறது. அனைவருக்கும் கணினி வேலை மீது அப்படி ஒரு மோகம். பேர் தெரியாத ஊரில் கணினி விஞ்ஞானம் படிக்க பல லட்சம் சொத்துக்களை விற்று காசு கொடுத்து, அமைச்சர்களை திட்டி, அவர்களின் கல்லூரிகளில் சேர்த்து பட்டம் பெறுகிறார்கள். படிக்க வந்த பிறகுதான் தெரிகிறது, கல்லூரியில் சரியான கணினி வசதிகள், பாடம் சொல்லிக் கொடுப்பவர்கள் இல்லாதது. படித்து முடித்த பிறகு அனைவருக்கும் இன்போஸிஸ், டிசிஎஸ் போன்ற நிறுவனங்களில் வேலை செய்ய கனவு. கனவு பலிக்காமல் கால் செண்டரில் வேலை. இரவு தோறும் மேற்கத்திய சேவைகளுக்காக சாக்கு போக்கு சொல்லும் வேலை. இல்லையேல் பின்னலுவல் மையங்களில் ஏதாவது நிர்வாக வேலைகள்.
உலகிலேயே படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் அதிகம் தொடர்பில்லாத நாடு இந்தியாவாகத்தான் இருக்கும். முதலில் பெற்றோர் கணினி கனவை துறக்க வேண்டும். எல்லோருக்கும் கணினி விஷயங்கள் சரிப்பட்டு வராது. எல்லோருக்கும் கணினி நிறுவனங்களில் வேலை கிடைக்காது. பல்லாயிரம் இளைஞர்கள் இந்த மோகத்தால் தனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ கணினியுடன் போராடி ஏதோ ஒரு வேலையில் சேருகிறார்கள். இந்தியா சோஷலிச நாடாக இருந்த பொழுது ஏற்பட்ட நம்பிக்கைகள் இன்னும் நம்மை விடவில்லை.
எப்படிப்பட்ட நம்பிக்கைகள்? அரசாங்க வேலை, அடித்து பிடித்து இன்ஜினியரிங், மருத்துவம், கணினி வேலைகள், மற்றும் வங்கிகள் போன்ற நிர்வாக வேலைகள். வேலையில் அமர்த்தும் நிறுவனங்களும் பழைய வடிகட்டல் முறைகளை பின்பற்றுகிறார்கள். கணினி வேலைகளுக்கு பள்ளிப் படிப்பு போதுமானது. மற்றவை எல்லாம் வேலை வடிகட்டலுக்கு மட்டுமே உதவும் சமாச்சாரங்கள். ஐஐடி யில் படித்தால்தான் கணினி வேலை என்று ரொம்ப நாளாக தப்பாகவே நம்பிக் கொண்டிருக்கிறோம். ஐஐடியில் படித்த இளைஞர்கள் பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் நிர்வாக வேலைகளையே செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்ட தொழில் கல்வி மற்றும் பயிற்சி விரயமாகவே போய் கொண்டிருக்கிறது.
நம்மில் பெரும் வெற்றி பெற்றவர்கள் பள்ளி படிப்பு படித்தவர்களே. இளையராஜாவோ, ரஹ்மானோ உலகம் புகழும் 8 ஆம் வகுப்பு வரை படித்த இசை மேதைகள். படிப்பு தேவையில்லை என்று இங்கு சொல்ல வரவில்லை. தேவையானவர்கள் படிக்கட்டுமே என்பது மட்டும் என் வாதம். வளர்ந்துவிட்ட நம் பொருளாதாரத்திற்கு தொழில் பயிற்சி பெற்றவர்கள் அதிகம் தேவை. தொழில் செய்து கொண்டே படிக்க ஆசை உள்ளவர்கள் தொடரலாமே. இத்தனை பொறியியல் கல்லூரிகள், சேர்வதற்கு அலை மோதும் கூட்டம், ஏராளாமான பண விரயம் எதுவும் தேவையில்லை என்றே படுகிறது.
அப்படி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தவர்களில் 75 சதவீதத்தினர் தங்களுடைய படிப்பையும் பயிற்சியையும் பயன்படுத்துவதே இல்லை. இதற்கு பயனுள்ள, பிடித்த தொழில் பயிற்சிகளை உயர்நிலைப் பள்ளியில் கற்று ஏன் வேலைக்கு செல்லக் கூடாது? தொழில் கல்விக்கு அதிகம் ஆங்கில அறிவு தேவையில்லை. ஆங்கிலம் பலரை அச்சுறுத்தும் சமாச்சாரம். நகரங்களில் பொறியியல்/மருத்துவக் கல்லூரிகளில் சேரும் கிராமத்து இளைஞர்களுக்கு மொழியே பெரிய இடைஞ்சலாக இருக்கிறது.
சமூகத்தில் தொழில் கல்விக்கு ஊக்கம் தேவை. அதுவும் விடுமுறைக் காலங்களில் மாணவர்களுக்கு நாம் பகுதி நேர வேலை வாய்ப்புகள் தர முன் வர வேண்டும். வெறும் அரசாங்கத்தையே நம்பி பழைய சோஷலிச கதையே சொல்லி பயன் இல்லை. தனியார் நிறுவனங்கள் மாணவர்களை கோடை விடுமுறையில் (16 வயதுக்கு மேல்) சின்ன வேலைகளில் அமர்த்தி சற்று பயிற்சியும் அளித்தால், அவர்களது தன்னம்பிக்கையும் வளரும். தொழில் தெரிந்தவர்கள் கிடைக்கவில்லையே என்று அழவும் வேண்டாம். உயர்நிலைப் பள்ளிகளில் தொழில் கல்வி வசதிகள் கொண்டு வந்தால், பல மாணவர்கள் பள்ளி செல்வதை ஒரு த்ரில்லாக நினக்கத் தொடங்குவார்கள். எல்லோரும் பொறியியல் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. தொழில் சான்றிதழ் பெறுவதற்கான அமைப்புகள் கண்டிப்பான தேர்வுகளை நட்த்தினால் ஒரு புதிய வேலை வாய்ப்பு வழியையே உருவாக்கலாம்.
இதை முதலில் சில தனியார் பள்ளிகள் நடத்த முன்வர வேண்டும். அரசாங்கம் இது போன்ற முடிவுகள் எடுக்க பல ஆண்டுகள் ஆகும். அத்துடன் உள்ளூர் தொழில்களுடன் சேர்ந்து இந்த தொழில் கல்வியை தொடங்க வேண்டும். வேலை வாய்ப்புகளை உள்ளூர் தொழில்கள் சான்றிதழ் பெற்றவர்களுக்கு கொடுக்க முன்வந்தால், இம்முயற்சி வெற்றி பெறுவது நிச்சயம். ஏனென்றால், அத்தனை சமரசங்கள், பண விரயம், கூட்டம் எல்லாம் வேலைக்காகத்தானே!

Series Navigation

ரவி நடராஜன்

ரவி நடராஜன்