மறுசிந்தனையில் இஸ்லாமிய கருத்தாடல்கள்

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

ஹெச்.ஜி.ரசூல்



பின்காலனிய கல்வியியல் பேராசிரியர் ஜியாவுதீன் சர்தார் இஸ்லாத்தின் புனிதப் பிரதிகளான குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ§ சட்டவியல் தொகுப்புகள் குறித்த மறுசிந்தனையை முன் வைக்கிறார். இஸ்லாம் குறித்த மறுசிந்தனையை கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஜமாலுதீன் ஆப்கானி, முகமது அப்து உள்ளிட்டோர் புதிய இஜ்திகாத் மூலம் முன் வைத்தனர். இஸ்லாமிய அறிவுத்துறையினர் சமகால உலகில் நவீனமயமாக்கலின் விளைவாக சீர்திருத்த இஸ்லாமை உருவாக்க கருத்தியல் ரீதியாக போராடி உள்ளனர். முகமது இக்பால், மாலிக் பின் நபி மற்றும் அப்துல்காதிர் அதா இதனை பின் தொடர்ந்தனர் எனினும் முஸ்லிம் சமூகம் இஜ்திகாத் குறித்த சிந்தனையில் பின்னடைவையே கண்டது.
இஜ்திகாத் நவீனகால பிரச்சினைகளுக்கு அறிவுரீதியாக எடுக்கும் முடிவை குறிப்பதாக உள்ளது. இந்த வகையில் ஷரீஅ கோட்பாட்டை புரிந்து கொள்ளும் முறையியலை சர்தார் விவரிப்பதை இங்கே குறிப்பிடலாம். பொதுவாக ஷரீஅ என்பது இஸ்லாமிய சட்டம் என பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் இஸ்லாத்தை பொறுத்தமட்டில் குர்ஆன் மட்டுமே தெய்வீகத்தன்மை பொருந்திய சட்டமாக அர்த்தம் பெறுகிறது. குர்ஆன், ஹதீஸ் மூலங்களோடு தொடர்புடையது எனினும் இஸ்லாமிய அறிஞர்களால் அபாசித்துகளின் ஆட்சிக் காலகட்டத்தில் தான் ஷரீஅ உருவாக்கப்பட்டது. பிக்ஹ§ இஸ்லாமிய சட்டவியல் கோட்பாடுகளாகவும் மரபுவழி இஸ்லாமிய நீதிபதிகளின் சட்டக்கருத்துகளாகவும் இவை வடிவம் பெற்றுள்ளன.

முஸ்லிம் ஆட்சி வரலாற்றின் விரிவாக்கத்திற்கு உட்பட்டதான இக்கோட்பாடுகளின் உருவாக்கம் தர்க்க அடிப்படையிலேயே நிகழ்ந்தது. இது இந்த உலகத்தையே தாருல் இஸ்லாம், தாருல்ஹர்ப் என்பதாக பிரித்துப் பார்க்கிறது.
ஷரீஅ எனப்படும் பிக்ஹ§ சட்டங்களை இந்தோனேஷியா முதல் நைஜீரியா வரை இஸ்லாமிய சமூகங்கள் நிறைவேற்ற முற்படும் போது பலப்பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. மத்திய காலச் சூழலில் முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றன. இந்த நிலைமையினை சவுதி அரேபியா, சூடான் மற்றும் தலிபான்களின் ஆப்கனிஸ்தான், முஸ்லிம் நாடுகளில் ஷரிஅத்தை நடைமுறைப்படுத்துகையில் உருவாகும் பிரச்சினைகளாக கவனிக்கலாம். உடல் உறுப்பு துண்டிப்பு, கல்லெறிந்து கொலை செய்தல், உள்ளிட்ட குற்றவியல் சட்டங்களின் நடைமுறையாக்கம் சார்ந்ததாகவும், மன்னராட்சி முறை, ஜனநாயகம், சமயசார்பின்மை, தாராளவாதம் உள்ளிட்ட கருத்தாக்கங்கள் தொடர்புடையதாகவும் இவை வெளிப்படுகின்றன.

எனவே ஷரீஅ என்பது சில வரையறுக்கப்பட்ட கோட்பாடுகள், அதன் மூலம் உருவாக்கப்படும் ஒழுக்க மதிப்பீடுகள் முஸ்லிம் சமூகத்திற்கான வழிகாட்டுதலாக உள்ளது. இந்தக் கோட்பாடுகளும், மதிப்பீடுகளும், மாறாத்தன்மை கொண்டதாக கருத முடியாது. மாறுபடும் சூழல்களுக்கு ஏற்ப இந்தக் கோட்பாடுகளும் மதிப்பீடுகளும் இயங்கியல் தன்மையைப் பெற வேண்டும் என்பதே முக்கியமானது. இது குர்ஆனையும், நபிமுகமதுவின் ஹதீதுகளை அர்த்தப்படுத்துவதிலும் உள்முகமாக நிகழ்கிறது என்றே கூறலாம்.

இஸ்லாமிய அறவியல் கோட்பாட்டை அரசியல் சித்தாந்தமாக ஒட்டுமொத்த ஆட்சி, அதிகாரத்தின் வடிவமாக குறைத்தல்வாதம் செய்யும் பல இஸ்லாமிய இயக்கங்களின் அணுகுமுறை முஸ்லிம் அரசியலை, இஸ்லாமிய அரசுகளை நிலை நிறுத்தும் பொருட்டு, அதிகாரத்தை மாறாத்ததன்மை கொண்டவையாக கட்டமைத்து விடுகிறது. இரான், சவுதி அரேபியா, சூடான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளை இந்த வகையில் குறிப்பிடலாம் என்கிறார்.

ஆலிம்/அறிஞர் என்ற சொல் பூர்வீக இஸ்லாத்தில் இல்ம்/அறிவு என்ற விரிந்த தளத்தில் பயன்படுத்தப்பட்டது. யார் ஒருவர் ஆலிம் என்றால் பரந்த அறிவுள்ளவர் என்பதாக இது இருந்தது. இந்த வகையில் மரபுவழி இஸ்லாமிய சிந்தனை மரபில் அல்ஹிந்தி, அல்பராபி, இபுனு சீனா, அல்கஸாலி, இப்ன் கல்தூன் உள்ளிட்ட அறிஞர்கள், விஞ்ஞானிகள், தத்துவவாதிகள், இறையியல்வாதிகள் அனைவரும் ஆலிம் (உலமா) என்ற வகைப்பாட்டிற்குள் வந்தனர். இஜ்திகாதின் வாசல் அபாசித்துகளின் கால கட்டத்தில் அடைக்கப்பட்டபோது இல்ம் என்பதை சமயக் கல்வியாக மட்டும் சொல்லி சமய அறிஞர்கள் மட்டுமே இந்த வகைப்பாட்டில் கொண்டுவரப்பட்டனர். பிற அறிவுத்துறையினர் நிராகரிக்கப்பட்டனர்.

இது போன்றே இஜ்மா கருத்தாக்கமும் மக்களின் ஒருமித்த கருத்து என்ற நிலையிலிருந்து சமய அறிஞர்களின் ஒருமித்த கருத்து என குறைத்தல் வாதமாக்கப்பட்டது. பூர்வீக இஸ்லாத்தில் நபி முகமது பள்ளி வாசலில் திரட்டப்பட்ட மக்களின் முன்னே விவாதித்து அதன்பிறகே பிரச்சினைகளுக்கு முடிவு எடுக்கும் ஜனநாயக வழிமுறையை மேற்கொண்டார் முஸ்லிம்களின் சமூக, கலாசார வாழ்வில் இது நிகழ்ந்தது. இந்த முறைமையும் முல்லாக்கள், உலமாக்களின் ஏகபோக உரிமையாக மாற்றப்பட்டது.
உம்மா கருத்தாக்கமும் தேசிய அரசின் அதிகாரம் சார்ந்ததாக மாறி அடையாளங்களை அங்கீகரிக்கிற உலகளாவிய முஸ்லிம் சமூக கருத்தை புறந்தள்ளிவிடுகிறது. கடந்தகால ஈராக்கிய அனுபவம் இதற்கு உதாரணம் இதிலும் ஒரு குறிப்பிட்ட சுன்னி பிரிவு சார்ந்த சதாம் உசேனின் செயல்பாடு தேசியம் சார்ந்த மனோபாவமாகவும் அதன் ஒற்றுமையை குறித்ததாக மட்டுமே அமைந்தது ஷியாக்கள் குர்திஷ் பழங்குடிகள் இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டனர்.

ஜிகாத் என்பதும் இஸ்லாம் அல்லாதவர்கள் மீது தொடுக்கும் புனிதப்போர் என்ற ஒற்றைப் பாரம்பரிய அர்த்தத்தையே முன் வைக்கிறது. நியாயத்திற்கான போராட்டம், அறிவுரீதியான போராட்டம் சமூக கட்டமைப்புக்கான போராட்டம் என்பவை எல்லாம் இவற்றில் வெளிப்படவில்லை. மக்கள் நலன் அடிப்படையிலான இஸ்லாமிய கருத்தாக்கம் ஜிகாத் பற்றிய முஸ்லிம்களின் மனோபாவங்களிலிருந்து விடுபட்டுள்ளது.

நிராகரிப்போரின் உள்ளங்களில் நாம் பேரச்சத்தை ஏற்படுத்துவோம். ஏனெனில் இறைவனுக்கு இணையானவை எதுவுமில்லை. ஆனால் அவர்கள் இணையாக்கிவிட்டார்கள். இவர்கள் இறுதியாக சேருமிடம் நரகமே. அக்கிரமக்காரர்கள் சேர இருக்கும் இந்த இடம் எத்தனை கெட்டது. (அத்தியாயம் 3 ஆலுஇம்ரான் 149151)

செப் 11 தாக்குதலுக்கு ஆதாரமாக தலிபான் ஆதரவாளர்கள், மேற்கத்திய இஸ்லாமிய அறிஞர்கள் இத்தகைய குர்ஆன் வசனங்களை முன்வைப்பதை கவனிக்கலாம். இது எல்லா முஸ்லிம்களுக்கும் எல்லா சூழலுக்கும் பொருந்தக்கூடிய வசனமல்ல. நபிமுகமதுவின் வரலாற்றில் உஹதுபோர் சூழலுக்கு சொல்லப்பட்டவைகள். இந்தச் சூழலிருந்து இந்த வசனத்தை துண்டித்து தற்போதைய சூழலுக்கு பொருத்துவது எப்படி சரியாகும் என்ற விவாதமும் முன் வைக்கப்படுகிறது.

ஹதீதுகளின் மூலமாக வெளிப்பட்ட நபி முகமதுவின் தோற்றம் ஒரு நல்ல முஸ்லிமின் அடையாளமாக கருதப்படுகிறது. எவ்வளவு நீளத்தில், எந்த வடிவத்தில் முஸ்லிம்கள் தாடி வைத்துக் கொள்வது, தொப்பிக்கு மேல் கட்டப்பட்ட தலைப்பாகையை எப்படி அணிவது போன்ற குறியீடுகளை பிரதானப்படுத்தி நபிமுகமதுவின் சுன்னத் நடைமுறைகளை வெறும் அடையாளங்களாக குறைத்தல்வாதம் செய்வதும் நிகழ்கிறது. நபி முகமதுவின் இத்தகைய நடைமுறைகளுக்கான அறிவியல், ஒழுக்கவியல், சமூகவியல் பரிமாணங்கள் அனைத்தும் இரண்டாம் நிலையாக்கப்படுகின்றன.

ஜியாவுதீன் சர்தார் இஸ்லாமிய கருத்தாக்கங்களின் எல்லை குறைத்தல் வாதம் செய்யப்படுவதிலிருந்து விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்கிறார். பங்கேற்பின் மூலம் பெறப்பட்ட அனைத்து மக்களின் கருத்துவடிவமாக இஜ்மாவை மாற்றுவதும் எல்லா பகுதியில் வாழும் மக்களுக்கான அமைதிக்கும் சமூக நீதிக்குமான போராட்டமாக ஜிகாதின் அர்த்தத்தை விரிவடையச் செய்வதும் அவசியமாகிறது என்கிறார். இஸ்லாத்தை பின்பற்றுகிற முஸ்லிம்கள் ஒரு சமூகமாக ஒழுக்கவியல் ரீதியாக எப்படி உருவாக வேண்டும் என்பதும், தங்களுக்குள்ளும், பிற சமூகங்களோடும் இயற்கையின் உலகோடும் கொள்ள வேண்டிய உறவுகளையும் உம்மாவின் மூலம் விளக்குகிறார். முஸ்லிம்களோடு மட்டுமல்ல நீதிக்காக போராடும் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளோடு ஒன்றிணையும் ஒரு கருத்தாக்கமாகவும் உம்மாவை சர்தார் அர்த்தப்படுத்துகிறார்.

ஜியாவுதீன் சர்தார்: 1951களில் பிறந்த சர்தார் லண்டனில் வாழ்ந்து வருகிறார். இஸ்லாத்தின் எதிர்காலம், இஸ்லாமிய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பின்நவீனத்துவம், கீழைதேயவாதம் என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பின்காலனிய கல்வியியல் சிறப்புப் பேராசிரியராக லண்டன்நகர பல்கலைக்கழகமொன்றில் பணிபுரிகிறார். பிரிட்டனின் தஅப்சர்வர், நியூஸ்டேட்ஸ்மேன் இதழ்களில் எழுதுபவர். அண்மையில் இவரது இஸ்லாமிய ஆய்வுகளை உள்ளடக்கிய தொகுப்புநூல் Breaking the Monolith வெளிவந்துள்ளது.
புத்தகம்பேசுது, மார்ச் 2009

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்