திராவிடநாடு ? (திராவிட மாயை ?)

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

ரகுபதி ராஜா


இன்று இந்தியாவில் ‘திராவிட’ என்ற சொல்லுடன் இணைந்த அரசியல் கட்சிகள் புதிது புதிதாகத் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.

முதலில் ‘திராவிட கழகம்’ என்ற பெயரில் ஈரோட்டுப் பெரியார் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு கட்சியை துவக்கினார். சமுதாய சீர்திருத்தத்திற்காக அந்த கட்சி துவக்கப்பட்டது.

பிரிட்டிஷ்காரன் இந்தியாவுக்கு சுதந்திரம் தரமுடிவு செய்த நாட்களில் பாகிஸ்தானை இந்தியாவிலிருந்து பிரித்து தனிநாடு ஒன்றும் உருவாக்கவேண்டும் என்று பிரிட்டீஷார் முடிவு செய்தனர்.

அப்பொழுது திராவிடக் கழகம் இந்தியாவுக்கு சுதந்திரம் தரவேண்டியதில்லை. அப்படித்தருவதாக இருந்தால் பாகிஸ்தானைப் பிரிப்பது போன்று தென் இந்தியாவில் திராவிட நாட்டைப் பிரித்து தனிநாடு கொடுக்கவேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள்.

பிரிட்டிஷ்காரர்களுக்கு திராவிட நாட்டைப் பற்றிய ஐடியா ஒன்றும் இல்லையாகையால் இவர்களுடைய பேச்சை எடுத்துக்கொள்ளாமல் பாகிஸ்தானை மட்டும் பிரித்து, இரண்டு நாடுகளுக்கும் சேர்த்து சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு ஓடிப் போய்விட்டார்கள்.

சமுதாய சீர்திருத்தத்தால் மட்டும் தங்களுக்கு கிடைக்காது என்று புதிதாக திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அண்ணாத்துரை தலைமையில் ஒரு கட்சி துவக்கப்பட்டது. இந்த தி.மு.க அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டது. “அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு” என்ற கோஷத்தை வைத்து போராட்டங்களும் நடைபெற்றன.

ஜவஹர்லால் நேரு பிரதம மந்திரியாக இருந்தார். அவருக்கு ‘திராவிட நாடு’ என்றால் என்னவென்று புரியவில்லை. what is this? Nonsense… என்று ஒதுக்கித் தள்ளிவிட்டார்.
Nonsense என்று சொன்னதற்காக போராட்டங்கள் நடைபெற்றன. இப்படியே போனால் ஆளுக்கு ஆள் தனிநாடு பிரித்துக்கொடுக்க வேண்டுமென்று கேட்பார்கள். அதைத் தடுத்து நிறுத்த ‘இந்திய பிரிவினை தடைச் சட்டம்’ ஒன்று கொண்டு வந்தார். (இப்பொழுதுகூட யாராவது பிரிவினை வேண்டுமென்று கேட்டால் அதற்கு தண்டனை உண்டு)
அண்ணாத்துரை உடனே திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டு அந்தக் கோரிக்கையை சுடுகாட்டுக்கு அனுப்பிவிட்டார்.

பிறகு திமுக தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சி அதிகாரம் என்று வந்துவிட்டால் எதிர்ப்புகள் வருவது இயற்கை. அண்ணாத்துரைக்குப் பிறகு கருணாநிதியுடன் மோதிக்கொண்டு எம்.ஜி.ஆர் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்தார். எம்.ஜி. ராமச்சந்திரன் அரசியல் கட்சியை ஆரம்பித்த வேகத்திலேயே தமிழக ஆட்சியையும் பிடித்தார்.

அப்புறம் குடும்ப வாரிசு அரசியலை எதிர்த்து வை. கோபால்சாமி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கினார்.

அதன் பிறகு சினிமா நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைத் துவக்கினார். இதுவரை ஆட்சி செய்த திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் வன்மையாக சாடுகிறார். அவர்களுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறார்.

இதில் விசேஷம் என்னவென்றால் ஆட்சியைப் பிடிக்க ‘திராவிட’ என்ற சொல்லை தனது கட்சிக்கு செல்லமாக இணைத்துக் கொள்வது பொதுப்படையான தன்மையாகத் தெரிகிறது. தமிழ்மக்களும் கடந்த 40 ஆண்டுகளாக திராவிட கட்சிகளுக்கே வாக்களித்து ஆதரவளிக்கிறார்கள். இந்த ‘திராவிட’ என்ற சொல்லுக்கு அவ்வளவு மகிமை.

இவை போதாதென்று திராவிட என்ற பெயரில் ஒரு சில சில்லறை கட்சிகளும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த நிலை. இந்தியாவின் பிற பகுதிகளில் இந்தச் சொல்லுக்கு அரசியல் முக்கியத்துவம் இல்லை.

நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்தவனல்ல என்பதை இங்கே நான் சொல்லியாக வேண்டும். இனிமேல் சொல்ல வருவதை வைத்துக்கொண்டு நீங்கள் தவறாக எடைபோட்டு விடக்கூடாதல்லவா!

‘திராவிட’ என்ற சொல் முதலில் மூலத்தில் தமிழ் சொல் அல்ல. தொல்காப்பியத்தில் இந்த சொல் இல்லை. திருக்குறள் முதலான பதினெண்கீழ்க்கணக்கு சங்க நூல்கள் எதிலும்
இந்தச் சொல் வரவில்லை. இதிகாசங்களான ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் எங்கும் இந்த சொல் கிடையாது. முடிமன்னர்கள் யாரும் தங்களை திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டதில்லை. பாரதியாரும் இந்தச் சொல்லை தனது பாடல்களில் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை.

இந்த சொல்லின் ஆரம்பத்தைத் தேடி ஆய்வாளர் ‘ஆர்.எஸ். என். சத்யா’ நாடெல்லாம் அலைந்து கண்டுபிடித்து சில கருத்துகளை முன்வைத்தார்.

ஜைன சங்க எழுத்துகளிலிருந்துதான் இந்த சொல்லாட்சி தொடங்குகிறது என்று கண்டுபிடித்தார். (இது அநேகமாக களப்பிரர் காலத்தில் இருக்கலாம்)

அந்தக் காலத்திய சமஸ்கிருத இலக்கியங்களில் மன்னர்களை குறிப்பிடும்போது சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிப்பிட்ட பிறகு அவர்கள் நீங்கலாக திராவிட மனன்ர்கள் என்றும் தனியாக குறிப்புகள் வருகின்றன என்று சத்யா குறிப்பிடுகிறார். இந்த சமஸ்கிருத இலக்கியங்களின் அடிப்படையைப் பார்த்தால் தமிழ் வேந்தர்கள் திராவிடர்கள் அல்லர். இந்த மூவேந்தர்களுக்கு அப்பாலுள்ள இடத்தில் வேறாக திராவிட மன்னர்கள் இருந்திருக்கிறார்கள்.

தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு வடக்கே ஆட்சி புரிந்த சக மனன்ர்கள், சாளுக்கியர், பல்லவர், சதவாகனர் முதலியோர் ஆண்ட தக்காண பீடபூமி திராவிடம் என்று கொள்ளப் பட்டதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டின் பூகோள அமைப்பு தக்காண பீடபூமியில் இல்லை. பீடபூமிக்குத் தெற்கே தமிழ்நாடு அமைந்துள்ளது.

இல்லாத ஒரு திராவிடநாடு என்ற சொல்லை தமிழில் முதலில் கையாண்ட மகானுபாவர் அனேகமாக மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையாகத்தான் இருக்க வேண்டும்.

‘திராவிட நல் திருநாடு’ என்ற ஒரு நாட்டை அவர்தான் முதலில் தமிழில் உருவாக்குகிறார். இன்றுள்ள திராவிட அரசியல் கட்சிகள் அவரைப் போற்றி தமிழ்த்தாய் வாழ்த்தாக
அந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்தனர். திராவிட நற்திரு நாடு ஒன்று இருந்ததாகவும் அதில் தரித்த நறும் திலகமாக தமிழ் அணங்கு (தமிழ் மொழி) இருப்பதாகவும் பாடிவைத்தார். (தமிழ்நாடு இருந்ததாகப் பாடவில்லை)

எந்தவித ஆதாரமும் இன்ரி இந்தச்சொல்லை திருப்பித் திருப்பிச் சொல்லி மக்களிடையே ஒரு மாயை ஏற்பட்டு விட்டது. இந்தச் சொல்லை சொல்லாவிட்டால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என்று தங்கள் அரசியல் கட்சிகளுக்கு இந்தப் பெயரைச் சூட்டிக் கொள்கிறார்கள்.

இதை திராவிட மாயை எனக்கூறலாமா?

ரகுபதி ராஜா
ragupathirajaibr@gmail.com

Series Navigation

ரகுபதி ராஜா

ரகுபதி ராஜா