காஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்

This entry is part [part not set] of 33 in the series 20070913_Issue

மலர் மன்னன்


(அண்மையில் காஷ்மீர் நிலவரம் குறித்து உண்மை கண்டறியும் குழுவொன்று அங்கு சென்று வந்ததையொட்டி குழுவில் இடம் பெற்றிருந்த திரு ஜி. கே. ராமசாமி எழுதிய கட்டுரையினை காலச் சுவடு ஆகஸ்ட் 2007 இதழில் படிக்க நேர்ந்தது. அதுவே இக்கட்டுரைக்குத் தூண்டுதலாகவும் அமைந்தது. இது ஜி கே ராமசாமியின் கட்டுரைக்கு எதிர்வினை அல்லவே அல்ல. காஷ்மீர் பற்றி எனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற உந்துதலால் விளைந்த கட்டுரை இது.)

கடந்த காலங்களில் ஒரு சுயேற்சையான பத்திரிகையாளன் என்கிற முறையில் ஹிந்துஸ்தானத்தின் எந்தப் பகுதியில் எந்தப் பிரச்சினையென்றாலும் அதன் உண்மையைக் கண்டறிவதில் உள்ள ஆர்வம் காரணமாக எதற்கும் காத்திராமலும், எதைப்பற்றியும் யோசியாமலும் நேராகக் கள ஆய்வுக்குப் போய்விடுவது எனது வழக்கமாக இருந்து வந்தது. சில சமயம் பத்திரிகைகள் தாமாகவே முன் வந்து பிரச்சினைக்குள்ளான இடங்களுக்கு என்னை அனுப்பி வைப்பதும் உண்டு. 1984 ல் போபால் ரசாயன வாயுக் கசிவு ஏற்பட்ட போது வேறொரு நிகழ்ச்சிக்காக தில்லி சென்றிருந்த என்னை இதயம் பேசுகிறது மணியன் அழைத்து விமானத்திலேயே போபால் சென்று தகவல் சேகரித்து விமானத்திலேயே சென்னை திரும்பி அறிக்கை தருமாறு கேட்டார். செலவுக்குத் தில்லியில் இதயம் பேசுகிறது, ஞான பூமி முகவரிடமிருந்து தேவையான செலவுக்கும் ஏற்பாடு செய்தார். இதன் பயனாக அந்த வார இதயம் பேசுகிறது இதழிலேயே போபால் துயரச் சம்பவம் பற்றி ஏராளமான புகைப்படங்களுடன் ஒரு நீண்ட கட்டுரை வெளிவருவது சாத்தியமாயிற்று. அதுபோலவே சீக்கியர் பொõற்கோவிலில் பதுங்கி அதன் புனிதத்துவத்தையே நாசம் செய்துகொண்டிருந்த பிந்தரன்வாலேயையும் அவனது கூட்டாளிகளையும் வெளியேற்ற பிரதமர் இந்திரா காந்தி எடுத்த ராணுவ நடவடிக்கையையும் நேரில் கண்டு வந்து எழுதினேன். வழிபாட்டுக்குரிய தலமான பொற்கோயிலில் ஆணுறைகளும், பெண்களின் கிழிந்துபோன உள்ளாடைகளும் மூலைக்கு மூலை சிதறிக் கிடந்ததையும் புகைப் படம் எடுத்து காலிஸ்தான் கோரிக்கைப் போராட்டத்தின் லட்சணம் இன்னதென்று அறியச் செய்தேன். ஆனால் இவற்றையெல்லாம் ஒரு பத்திரிகையாளனின் இயல்பான பணியாகச் செய்தேனே யன்றி, உண்மை கண்டறியும் நடவடிக்கையாக அதனைக் கருதியதில்லை.

மேற்கு வங்கத்திலும் பிற வட மாநிலங்களிலும் அவ்வப்போது நிகழ்ந்து வந்த ஹிந்து முகமதியர் மோதல்களையும் நேரில் கண்டு எழுதியண்டு. ஆனால் அவற்றைப் பத்திரிகை கள் வெளியிட மறுத்துவிடும். இத்தகைய கலவரங்களை உள்ளது உள்ளபடி வெளியிட்டால் மோதல்கள் பிற பகுதிகளுக்கும் பரவி சட்டம் ஒழுங்கு நிலைமை பல்வேறு மாநிலங்களிலும் குலைந்து போய்விடும் என்று அதற்குச் சமாதானம் சொல்லப்படும். நிலமையைக் கண்டறிந்து வருமாறு பணித்து அனுப்பும் பத்திரிகைகளே கூடத் தகவல்களைத் தெரிந்துகொள்வதற்காகத்தான் அனுப்புகிறோம், அவற்றைப் பிரசுரம் செய்வதற்காக அல்ல; காவல் துறை பூசி மெழுகித் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டுமே பிரசுரத்திற்கு வைத்துக்கொள்வோம் எனக் கூறிவிடுவதுண்டு!

இவ்வாறாக அவ்வப்போது எழும் பிரச்னைகளை நேரில் கண்டறிந்து வரப் பழகிய எனக்கு ஹிந்துஸ்தானத்தின் நிரந்தரமான பிரச்சினையாகிவிட்ட காஷ்மீரில் என்னதான் நடக்கிறது எனத் தெரிந்து வந்து சொல்வதில் ஆர்வம் இல்லாமல் போகுமா?

196465 கால கட்டத்தில் மேற்கு வங்கத்தில் இருந்த போதே காஷ்மீருக்குப் போய் வந்துகொண்டுதான் இருக்கிறேன். எல்லைக் கோட்டிற்கு அப்பால் இருந்துகொண்டு ஹிந்துஸ்தானத்திற்குட்பட்ட காஷ்மீர் கிராமப்புற அப்பாவி விவசாயிகளை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு விளையாடும் வழக்கத்தை மேற்கொண்டிருந்த காலகட்டத்திலும், பயங்கர வாதக் குழுக்களை எல்லை தாண்டி காஷ்மீருக்குள் நுழைக்கும் பொருட்டு அது ஹிந்துஸ்தானத்து ராணுவத்திற்கு போக்கு காட்டும் உத்தியாக திடீர் குண்டு மழை பொழியச் செய்து வந்த சமயங்களிலும், பின்னர் பயங்கர வாதக் குழுக்களின் தாக்குதல் உச்ச கட்டத்தை அடைந்த போதுமாக உடம்பில் போகிய வலிமை இருந்தவரை பலமுறை எவரது நிதி உதவியையும் எதிர்பாராமலும், குடும்பத்தாரின் வன்மையான ஆட்சேபங்களைப் பொருட்படுத்தாமலும் காஷ்மீருக்குப் போய் வந்துவிட்டேன்.

காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ராணுவப் பிரிவுகளில் மிகப் பெரும்பாலானவர்கள் தமிழர்களும் தென்பாரதத்தவருமேயாவர். தமிழனாகப் பிறந்து, பிற தென் மொழிகள் அனைத்திலும் பேசவும் தெரிந்திருக்கிற எனக்கு இது மிகவும் வசதியாகப் போயிற்று. ஹிந்துஸ்தானியில் சரளாமாகக் கருத்து பரிமாற்றம் செய்துகொள்ள முடிவது அங்குள்ள மக்களுடன் ஒன்றி அவர்களின் எண்ணங்களை அறிந்துகொள்வதை மிகவும் எளிதாக்கியது. பாரசீகச் சொற்கள் மலிந்த இன்றைய காஷ்மீரி மொழி ஹிந்துஸ்தானிக்கு மிக அருகாமையிலேயே இருப்பதால் காஷ்மீரிகளுடனான கருத்துப் பரிமாற்றங்களில் சங்கடம் ஏதும் இல்லை.

பயங்கர வாதத்தின் கொடிய பிரசன்னம் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு கணமும் வெளிப்படக் கூடிய ஒரு பிரதேசத்தில் எப்போது வேண்டுமானாலும் ஒரு திடீர் தாக்குதலுக்குப் பலியாக நேரிடலாம் என்கிற நெருக்கடியுடன்தான் நமது பெருமைக்குரிய ராணுவத்தின் அடி மட்ட சிப்பாய் இன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறான். தனக்கு ஒத்து வராத தட்ப வெப்பம், பற்றாக்குறையான வசதிகள், சொற்பமான மாதச் சம்பளம், அவசரமான சந்தர்ப்பங்களில்கூட விடுமுறை பெற்று சொந்த ஊர் திரும்ப முடியாத இக்கட்டு, பலவாறான மன உளைச்சல்கள் என எத்தனையோ சிரமங்கள் இருந்தபோதிலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அவன் கருமமே கண்ணாயிருப்பதையும், நிர்வாகத்தின் கரங்கள் நீள முடியாத ஒதுக்குப் புறங்களில் எவரையும் கேள்விமுறையின்றிச் சுட்டுத்தள்ளும் வாய்ப்பிருந்தும் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக எவரையும் தாக்காமல் அவன் அமைதி காப்பதையும் பயங்கர வாதிகளின் ஈவிரக்கமற்ற வெறியாட்டம் எல்லை மீறிய போதிலும் எதிர்த் தாக்குதலால் பொது மக்களுக்கு இழப்பு ஏதும் நேர்ந்துவிடலாகாது என்பதற்காக ஒற்றைக்கையால் மட்டுமே போராடுங்கள் என ராணுவத்திற்கு நிரந்தரமான உத்தரவிட்டிருக்கும் பாரத அரசின் பொறுமையையும் பார்க்கையில் நமது தேசத்தின் அருமையான ஜனநாயகப் பண்பிற்கு காஷ்மீர் மிகச் சிறந்த உரை கல்லாக இருப்பதை நேரில் கண்டுணரும் வாய்ப்பினைப் பல முறை பெற முடிந்தது. பாரத தேசத்தின் ஜனநாயகம் இதர பகுதிகளில் மிகுந்த மனச் சோர்வினை அளிப்பதாக இருந்த போதிலும், காஷ்மீர் மாநிலத்தில் அது மக்களுக்கு இயன்றவரை பாதுகாப்பு அளிப்பதாகவே உள்ளது. ஷேக் அப்துல்லா காலத்திலிருந்து அவரும் அவருடைய குடும்பத்தாரும் பாரத அரசு காஷ்மீர் மாநில நலனுக்காக ஆண்டு தோறும் கோடி கோடியாக அள்ளித் தந்த நிதியைச் சூறையாடிக் கொழுக்க ஜனநயகம் மிகவும் வசதியாகப் போயிற்று என்பது உண்மைதான் என்ற போதிலும், காஷ்மீர் மக்கள் தமது விருப்பத்திற்கு இணங்க ஆட்சியை நிர்ணயிக்கும் வாய்ப்பினைப் பெற பாரத நாட்டின் ஜன நாயகம் வழிசெய்து கொடுப்பதாகவே இருந்து வருகிறது. அதன் காரணமாகவே ஷேக் அப்துல்லா தொடங்கிவைத்து அவரது வாரிசுகளின் பரம்பரைச் சொத்தாக இருந்துவரும் தேசிய மாநாடு கட்சிக்கு மாற்றாக முஸ்தி முகமது சயீதின் காஷ்மீர் மநிலக் கட்சியையும் காங்கிரசையும் காஷ்மீர் மக்கள் பயங்கரவாதிகளின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் ஓர் அமைதியான தேர்தல் மூலம் ஆட்சிப் பொறுப்பிற்குத் தேர்ந்த்தெடுக்க முடிந்திருக்கிறது. ஐ நா பார்வையாளர்களே வியந்து சான்றறிக்கை அளிக்கும் வண்ணம் காஷ்மீரில் மக்கள் தீர்ப்பு அளிப்பது சாத்தியமானது பாரதத்தின் ஜன நாயகப் பண்பிற்குச் சரியான உரைகல்லேயாகும்.

சைவ சித்தாந்தமும் பவுத்தமும் தத்துவார்த்த சிகரங்களைத் தொட்டு நின்ற காஷ்மீரில் ஈரான் என இன்று வழங்கப்படும் பாரசீகத்தின் வழியாகத்தான் முகமதியம் நுழைந்தது. இது நடந்தது 1370ல். காஷ்மீர் முகமதிய மயமான பின்னரும் அதன் அசலான அடையாளங்கள் இன்றளவும் நீடிக்கவே செய்கின்றன. எந்தக் காராணத்திற்காக ஹிந்து சமூகம் கடுமையான விமர்சனங்
களைத் தாங்கிக் கொள்ள நேர்ந்துள்ளதோ அந்தக் காரணமான ஜாதி அடையாளங்களை இன்று பல காஷ்மீரி முகமதியர்கள் பெருமையுடன் வெளிப்படுத்திக் கொள்ளத் தவறுவதில்லை. அகமது தார், சுலைமான் பண்டிட் என்று ஜாதிப் பெயர் தொற்றிக் கொண்ட முகமதியப் பெயர்கள் அங்கு சர்வ சாதாரணமாகக் காதில் விழும். குறிப்பாக உயர் ஜாதியினர் எனத் தம்மைக் கருதிக் கொள்ளும் முகமதியர் தங்கள் ஜாதிப் பெயரைச் சேர்த்துக்கொள்ளத் தவறுவதில்லை. தாழ்ந்த ஜாதியினராகக் கருதப்படும் முகமதியர் மட்டுமே தமது ஜாதி அடையாளங்களைத் தவிர்த்து விடுகின்றனர்.

197273ல் சென்னையில் காஷ்மீரைச் சேர்ந்த தார் என்கிற ஜாதி அடையாளம் தெரிகிற ஒரு பிராமண முகமதியர் எனக்கு அறிமுகமானார். நாங்கள் பிராமணராயிருந்தவர்கள் என்று பெருமையுடன் தன்னை அறிமுகம் செய்துகொண்ட அவர் ஒரு டாக்டர். குவைத்தில் வேலை பார்த்து வந்தார். மனைவியும் டாக்டர்தான். மலையாளி. ஆனால் தங்கள் தொழிலுக்குச் சம்பந்தமில்லாமல் போல்ட்டும் நட்டும் உற்பத்தி செய்யும் சிறு தொழிலை அவர்கள் சென்னையில் தம் உறவினர் பொறுப்பில் நடத்தி வந்தனர்.

அவர்களது சிறுதொழில் கூடத்தையொட்டி வேறு சிலரும் பல்வேறு சிறு தொழில்களை
நடத்தி வந்தனர். இன்று தி முகழகத்தின் தலைமை நிலையமாக இருந்துவரும் அண்ணா அறிவாலயம் உள்ள இடத்தில்தான் அந்தச் சிறு தொழில் கூடங்கள் இருந்து வந்தன!
தி மு கழகம் அந்த இடத்தை வாங்கியதும் அங்கிருந்த சிறு தொழில் முனைவோருக்குப் போதிய அவகாசம் கொடுக்காமல், ஒரு நாள் இரவோடு இரவாக புல்டோசரைக் கொண்டு வந்து எல்லாச் சிறுதொழில் கூடங்களையும் தரை மட்டமாக்கி இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது. சிறு தொழில் கூடங்களில் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பொருள்கள் எல்லாம் குப்பை கூளங்களைப் போல வாரி எறியப் பட்டன!

ஆளும் கட்சியான தி மு க வின் அத்து மீறிய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் முனைவோர் செய்வதறியாது திகைத்தனர். அந்தச் சமயத்தில் நான் அண்ணா தி மு க வினருடன் நெருக்கமாக இருந்தபோதிலும் முதலமைச்சர் கருணாநிதிக்கே ஆலோசனை கூறும் மதியூகியாக இருந்துவந்த முரசொலி மாறனுடனும் எனக்கு நட்பு இருந்து வந்ததை அந்த காஷ்மீரி டாக்டரும் அவர் மனைவியும் யார் மூலமாகவோ கேட்டறிந்து ஒரு பொது நண்பர் மூலமாக என்னை அணுகி நடந்த அட்டூழியத்தைத் தெரிவித்து பரிகாரம் தேட உதவுமாறு கேட்டார்கள்.

நீஙக்ள் என்ன எதிர் பார்க்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டபோது லட்சக் கனக்கான ரூபாய் நஷ்டமாகிவிட்டது; எதேனும் இழப்பீட்டுத் தொகை கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்றார்கள்.

நடந்திருப்பது சட்டத்திற்குப் புறம்பான போக்கிரித்தனம். நீங்கள் ஏன் இதனை எதிர்த்துப் போராடக் கூடாது என்று கேட்டேன். மற்ற சிறுதொழில் முனைவோரையும் சேர்த்துக்கொண்டு ஒரு குழுவாகச் செயல்பட முன் வந்தால் இதனை ஓர் அரசியல் பிரச்சினையாக்கிப் பெரிய கிளர்ச்சியாகவே நடத்தலாம் என்று சொன்னேன். அவர்கள் போராடும் வர்க்கமல்ல. அதிலும் அடாவடிச் செயல்களுக்குத் தயங்காத தி மு க என்கிற ஆளுங் கட்சியுடன் பொருதும் துணிவு அவர்களுக்கு இல்லை. சுமுகமாகப் பேசி அனுதாபத்தைப் பெற்று இழப்பீடாகச் சிறிது தொகையை வாங்கிக் கொண்டு நஷ்டத்தைக் குறைத்துக் கொள்ளவே விரும்பினார்கள்.

முன்னறிவிப்பின்றிஇரவோடு இரவாக புல்டோசரை வைத்துச் சிறு தொழில் கூடங்களையெல்லாம் தி மு கவினர் தரைமட்டமாக்கிய சட்ட விரோதச் செயல்பற்றி அப்போது சென்னை மாநகரக் காவல் துறை ஆணையராக இருந்த ஷெனாயிடம் தொலைபேசி மூலமாகப் புகார் செய்தேன். விசாரித்துச் சொல்வதாக என்னிடம் கூறியவர் பத்து நிமிடங்கள் கழித்து அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லை என்று சொல்லிவிட்டார்!

ஷெனாய் ஒரு நேற்மையான அதிகாரிதான். ஆனால் ஆளுங் கட்சியான தி மு கவால் முடக்கிப் போடப்பட்ட பல அதிகாரிகளுள் அவரும் ஒருவர். அவரால் எவ்வித ஒத்துழைப்பும் கிடைக்காது என்பது உறுதியானதும் முரசொலி மாறனிடமே பேசி அவர்களுக்கு இழப்பீடு ஏதாவது கிடைக்க முடிவு செய்தேன்.

1958-59 ல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதி மவுண்ட் ரோடில் முல்லை சத்தியின் முல்லை அச்சகத்திற்குத் தினசரி மாலை வந்து அரட்டை அடிப்பார், முரசொலி மாறன். அந்த அரட்டையில் நானும் பங்கு கொள்வதுண்டு. அதன் மூலமாகவே அவர் எனக்குப் பழக்கமாகியிருந்தார். ஆனால் நான் மட்டும் போனால் போதாது என்று துணைக்கு முல்லை சத்தியையும் அழைத்
தேன்.

கருணாநிதியுடன் தனக்குச் சில மனக் கசப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் மாறனைச் சந்திக்க வருவது சரியாக இருக்காது என்றும் தொலைபேசியில் விஷயத்தைச் சொல்லி ஏதாவது செய்யுமாறு வேண்டுவதாகவும் முல்லைசத்தி கூறிவிடவே மாறனிடம் அவர்களை நான் மட்டுமாக அழைத்துச் செல்ல முடிவு செய்தேன்.

அந்தச் சமயத்தில் நான் எம் ஜி ஆரோடு நெருக்கமாக இருந்ததால் அவருக்குத் தெரியாமல் மாறனைச் சந்திக்கச் செல்வது என் மீது தவறான அனுமானங்கள் தோன்ற இடமளித்துவிடும் என்பதால் அவரிடம் தகவல் தெரிவித்தேன். அட, இதைப் பெரிது படுத்தி தி முக வுக்கு ச் சங்கடத்தைக் கொடுக்கலாமே என்று எம் ஜி ஆர் ஆர்வமாகக் கேட்டார். ஆளுங் கட்சியை எதிர்த்துக்கொள்ள சிறுதொழில் முனைவோர் துணிய வில்லை என்று விளக்கினேன். நஷ்டப்பட்டுக் கிடக்கும் சிறுதொழில் முனைவோருக்கு தி மு க தலைமக் கழகத்திடமிருந்து ஏதாவது இழப்பீடு கிடைத்தால் நல்லதுதானே என்று நான் சொல்லவும் சரி போகட்டும் முயற்சி செய்து பாருங்கள் என்று எம் ஜி ஆர் விஷயத்தை அதோடு விட்டு விட்டார்.

காஷ்மீரி டாக்டரையும் அவர் மனைவியையும் அழைத்துக் கொண்டு முரசொலி மாறனைச் சந்தித்தேன். அவர் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு தலைமைக் கழகத்தை இதில் சம்பந்தப் படுத்த முடியாது; வேறு ஏதாவது வழியில் இழப்பீடு கிடைக்க முயற்சி செய்கிறேன் என்று சொன்னார். ஆனால் பலமுறை அவர்களை இழுத்தடித்துவிட்டுக் கடைசியில் கையை விரித்துவிட்டார்!

என்னை அணுகியதால் பயன் ஏதும் கிடைக்கவில்லை என்ற போதிலும் நான் எடுத்துக்கொண்ட முயற்சிக்காக அந்த காஷ்மீரி டாக்டர் என்னிடம் மிகவும் அன்பு பாராட்டினார். மருத்துவ மனையில் என் மாமனார் இறந்தபோது சிறிதும் தயக்கமின்றித் தனது காரின் பின் இருக்கையில் அவரது உடலைக் கிடத்தி தலைமாட்டில் தானும் கால் மாட்டில் நானுமாக உட்கார்ந்து வீடு வந்து சேர உதவினார்.

பிற்காலத்தில் காஷ்மீரில் சில தொடர்பு முகவரிகளைக் கொடுத்தும் உதவினார், அந்த காஷ்மீரி டக்டர். மீண்டும் அவர் தன் மனைவியுடன் குவைத்துக்குச் சென்று விடவே அவருடனான எனது தொடர்பு அறுந்து போயிற்று.

இவ்வளவும் விவரிக்கக் காரணம் வெறும் செய்தியாளனாக அல்லாமல் நட்பு ரீதியாகவும் எனக்குக் காஷ்மீருடன் தொடர்பு இருந்தது என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான்.

வலுக்கட்டாய முகமதிய மத மாற்ற காலத்திலிரு ந்தே காஷ்மீரின் சோகக் கதையைப் பேச முடியும் என்றாலும் பஞ்சாப் அரசர் ரஞ்சித் சிங் காலத்திலுருந்து தொடங்ககினாலேயே பக்கங்கள் நீளும். ஆகையால் டோக்ரா அரசர் குலாப் சிங் காலத்திலிருந்து ஆரம்பிப்போம். பஞ்சாப் சிங்கம் என வர்ணிக்கப்பட்ட ரஞ்சித் சிங் காஷ்மீரையும் தனது ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்டமையால் மகுடம் இழந்து நின்ற டோக்ரா அரசர் குலாப் சிங்கிடம் ஆங்கிலேய கிழக்கிந்திய கும்பினியார் பேரம் பேசி ரஞ்சித் சிங்கைத் தோற்கடிக்க உதவி கோரினர். தமக்குரிய காஷ்மீர் பிரதேசத்தைத் தம்மிடம் ஒப்படைப்பதாக இருந்தால் ரஞ்சித் சிங்கைத் தோற்கடிக்க உதவுவதாக குலாப் சிங் பதிலுக்குப் பேரம் பேசினார். பேரம் படிந்தது. குலாப் சிங் உதவியுடன் ஆங்கிலேயர் ரஞ்சித் சிங்கைத் தோற்கடித்துப் பஞ்சாபைத் தமது ஆளுகையின்கீழ் கொண்டு வந்தபோது தாம் அளித்த வாக்குறுதிக் கிணங்க காஷ்மீர் பகுதிகளை டோக்ரா அரச வம்ச குலாப் சிங்குக்கு ஆங்கிலேயர் மீட்டுக் கொடுத்தனர். காஷ்மீரை குலாப் சிங் பரிசாகப் பெறவில்லை. தமக்கு உரிமையுள்ள பிரதேசத்தைத்தான் அவர் பெற்றுக்கொண்டார். அவ்வாறு பெற வேண்டும் என்பதற்காகவே அவர் ரஞ்சித் சிங் மீது போர் தொடுத்த ஆங்கிலேயருக்கு உதவ முன்வந்தார். அது முதல் காஷ்மீர் சமஸ்தானம் பிரிட்டிஷ் தயவிலும் கண் காணிப்பிலும் ஒரு சுதந்திரப் பிரதேசமாக இருந்து வந்தது.

1947 ஆகஸ்ட் 15 க்குப் பிறகு சுயேற்சையான சமஸ்தானங்களை பாரதத்துடன் இணைக்கும் முயற்சியில் சர்தார் வல்லபாய் பட்டேல் ஈடுபட்டபோது காஷ்மீர் சமஸ்தானத்தையும் பாரதத்துடன் இணைக்க முனைந்தார். அன்று காஷ்மீரின் நுழைவு வாயில்கள் யாவும் பாகிஸ்தானாகப் பிரிந்து தனி தேசமாகிவிட்ட பிரதேசத்தில் இருந்தன. எனவே தமது சமஸ்தானத்தை எப்படி பாரதத்துடன் இணைக்க இயலும் என்று அப்போது காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரி சிங் தர்க்கித்தார்.

ஹிந்துமுகமதியர் என மத அடிப்படையில் தேசத்தைப் பிரிப்பது முஸ்லிம் லீகின் கோட்பாடேயன்றி, காங்கிரஸ் மகாசபையின் கொள்கை அல்ல. முஸ்லிம் லீகின் பிரிவினைக் கோரிக்கைக்கு அது இசைந்தது, மாறாக இசைய நேரிட்டது, அவ்வளவே.
எனவேதான் பிரிவினைக்குப் பிறகும் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்து செல்ல விரும்பாத முகமதியர் அனைவரும் தொடர்ந்து பாரதத்தில் வசிக்க அனுமதித்தது. இதன் அடிப்படையில்தான் பட்டேலும் காஷ்மீரம் பாரதத்துடன் இணைவதற்கு முயற்சி மேற்கொண்டார். பாகிஸ்தானோ தனது மதவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் காஷ்மீர் சமஸ்தானத்தின் மக்கள் தொகையில் முகமதியர் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் அதனைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டது. உண்மையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டுமே முகமதியரின் எண்ணிக்கை அதிகம் இருந்தது. ஜம்முவிலும் லடாக்கிலும் ஹிந்துக்களும் பவுத்தர்களும் வசித்தனர். ஹிந்துக்கள் மிகுதியாக இருந்த ஜம்முவிலாவது முகமதியர் ஓரளவு இருந்தனர். லடாக்கில் மிகச் சொற்பமாக உள்ள மக்கள் தொகையில் அனைவரும் பவுத்தர்களாகவே இருந்தனர் எனலாம்.

தன்னுடன் இணைந்துவிடுமாறு காஷ்மீரை நிர்பந்திக்கும் பொருட்டு பாகிஸ்தான் தன் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இருந்த காஷ்மீரின் நுழை வாயில்களை எல்லாம் அடைத்து காஷ்மீர் சமஸ்தானத்திற்குப் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தியது. இதனால் அத்தியாவசியப் பண்டம் எதுவும் கிடைக்கப் பெறாமல் காஷ்மீர் திண்டாடியது. மக்கள் பொறுமையிழந்து ஆங்காங்கே கிளர்ச்சி செய்யத் தொடங்கினார்கள்.

நாற்பதுகளின் தொடக்கத்திலிருந்தே மன்னராட்சியை நீக்கி மக்களாட்சியை நிறுவுவோம் என ஜன ரஞ்சகக் கோஷத்தை எழுப்பி ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்து வந்த ஷேக் அப்துல்லாவின் முஸ்லிம் மாநாடு இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன் படுத்தி கிளர்ச்சியைத் தீவிரப்படுத்த மக்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது.

மக்களாட்சி முறையில் மிகுந்த ஈடுபாடுள்ள ஜவஹர்லால் நேருவிடம் தொடக்கத்திலிருந்தே ஆதரவு கேட்டு வந்த ஷேக் அப்துல்லாவுக்கு அவரது கட்சியின் பெயரை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த பெயராக இல்லாமல் அனைவருக்கும் இசைவான பொதுப் பெயராக மாற்றிவைக்குமாறு நேருஜி ஆலோசனை சொன்னார். ஷேக் அப்துல்லாவும் அதனை ஏற்று முஸ்லிம் மாநாடு என்று இருந்த தன் கட்சியின் பெயரை தேசிய மாநாடு என மாற்றிக் கொண்டார். பாகிஸ்தான் கொடுத்த னெருக்கடியைத் தொடர்ந்து மன்னரிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்குச் சரியான சந்தர்ப்பம் வாய்ய்த்துவிட்டதைப் புரிந்துகொண்ட ஷேக் அப்துல்லா, தமது கட்சியினரை நன்றாக ஊக்குவித்துக் கிளர்ச்சி பரவலாக நடைபெறச் செய்தார்.

ஆட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு சட்டம் அமதியைக் குலைக்கிறார் என்னும் குற்றத்தின் அடிப்படையில் ஷேக் அப்துல்லாவை மன்னர் ஹரி சிங் கைதுசெய்து சிறையில் அடைத்தார்.

காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு குலைந்து அமைதிக்குக் குந்தகம் விளைந்ததை பாகிஸ்தான் நன்கு புரிந்து கொண்டது. தனது வசமுள்ள வட மேற்கு எல்லைப் புறப் பிரதேசத்தில் வாழும் வனவாசிகளுக்கு ஆயுதங்கள் அளித்துப் பலவாறான ஆசைகள் காட்டி காஷ்மீரை ஆக்கிரமிக்கச் செய்தது. தனது ராணுவத்தினரையும் அவர்களுக்குத் துணையாக அனுப்பியது.

மக்களின் கிளர்ச்சிக்கு உதவும் சாக்கில் கூலிப்படைகளான வடமேற்கு எல்லைப்புற வனவாசிகளும், பாகிஸ்தான் ராணுவமும் 1947 அக்டோபர் 22 அன்று காஷ்மீருள் நுழைந்தன. ஆனால் எந்த மக்களுக்கு உதவுவதற்கு வந்ததாகக் கூறியதோ அந்த மக்களின் உடமைகளைச் சூறையாடுவதிலும் பெண்களைக் கூட்டாக வன்புணர்வதிலும் வெகு உற்சாகமாக விறுவிறுப்புடன் ஈடுபட்டது!

காஷ்மீர் ஆக்கிரமிப்புக்குப் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஜெனரல் அக்பர் கான் தலைமை வகித்தார். இதற்குப் பரிசாகப் பின்னர் அவர் பதவி உயர்வும் பெற்றார். காஷ்மீரில் தான் ஆகிரமிப்பு ஏதும் செய்யவில்லை என்றும் அது மலைவாசிகள் தம் சகோதர மக்களான காஷ்மீரிகளுக்கு உதவப் பொங்கி எழுந்துவிட்டதன் விளைவு எனவும் பாகிஸ்தான் தொடக்கத்தில் சாதித்தது. ஆனால் அதன் ராணுவத்தினர் பலர் சீருடையில்லாமலும், சீருடையிலும் மலைவாசிகளை வழி நடத்துவதும், மலைவாசிகள் வசமுள்ள ஆயுதங்கள் பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்துபவை என்பதும் அம்பலமானதும், முகமதியர் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்குத் தான் உதவுவதாகப் பாகிஸ்தான் சொல்லத் தொடங்கியது.

ஆகிரமிப்புச் செய்த பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் பராமுலா, ரஜோரி, பூஞ்ச் மாவட்ட கிராமங்களை முற்றிலுமாக அழித்தது. குறிப்பாக பராமுலாவில் தனது சாதனை பற்றி அக்பர் கான் தனது தலைமயகத்திற்கு அனுப்பிய செய்தியை இடைமறித்துக் கேட்டபோது இது தெரிய வந்தது, பத்தாயிரம்பேருள்ள பராமுலாவில் ஏழாயிரம்பேரைக் கொன்றுவிட்டோம். அவர்கள் அனைவரும் பால்வாலே காபிர் ( சிகை வளர்த்துள்ள காபிர்கள்; அதாவது சீக்கியர்கள்). பெண்கள் கூட்டாக வன்புணர்வு செய்யப்பட்டனர் என்கிற பெருமித அறிவிப்பு அது!

பாகிஸ்தானின் கொடூரமான ஆக்கிரமிப்புக்கு ஈடுகொடுக்க இயலாத காஷ்மீர் மன்னர் பாரத அரசிடம் உதவி கேட்டார். உள்துறைக்குப் பொறுப்பேற்றிருந்த துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல் காஷ்மீர் சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைத்தால் தக்க உதவி கிடைக்கும் என்றார். பிரதமர் நேருவோ அது போதாது, சிறை வைக்கப்பட்டுள்ள ஷே அப்துல்லாவை விடுதலை செய்வதும் அவசியம் என்று நிபந்தனை விதித்தார். வேறு வழியின்றி மன்னர் ஹரி சிங் இரண்டுக்கும் ஒப்புக்கொண்டார். விடுதலையான அப்துல்லா பாகிஸ்தான் படைகளால் எங்கே தான் சிறைப் பிடிக்கப் பட்டுவிடுவோமோ என அஞ்சி, நேருவின் தயவில் குடும்பத்துடன் மும்பைக்குச் சென்று பத்திரமாகப் பதுங்கிக் கொண்டார்.

1947 செப்டம்பர் மாதமே மன்னர் ஹரி சிங்கிற்குக் காஷ்மீரை பாரதத்துடன் இணைப்பதற்கான மனப்பக்குவத்தை குருஜி கோல்வால்கர் ஏற்படுத்தியிருந்தார். பாகிஸ்தானின் திடீர் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இணைப்புத் திட்டத்தைத் துரிதப் படுத்தியது. மன்னர் ஹரிசிங் இணைப்பு ஒப்பந்ததில் கையெழுத்திட்டதும் பாரத ராணுவம் காஷ்மீரைக் காக்கும் பணியை மேற்கொள்ள விரைந்தது. அன்று ஜம்முவில் லுள்ள ஸ்ரீநகரில் சரியான விமான ஓடுதளம் கூட இல்லை. இருபத்து நான்கே மணி நேரத்தில் அங்கு ராணுவத்தினர் பெருமளவில் வந்திறங்குவதற்கு வசதியாக விசாலமான விமான ஓடு தளத்தை ஆர்எஸ்எஸ் என அறியப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் தொண்டர்கள் அமைத்து மகத்தான சாதனை புரிந்தனர். தன்னலமற்ற அவர்களின் தொண்டை பாரத ராணுவம் தனது ஆவணங்களில் பதிவு செய்து கவுரவித்தது.

காஷ்மீர் சமஸ்தானத்தின் வடக்குப் பிரதேசத்தைப் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த நிலையில் வலிமை மிக்க பாரத ராணுவம் வெகு எளிதில் அதனை மீட்டிருக்க முடியும். அதற்குள் பிரதமர் நேரு போரில்லாத புத்துலகைக் காணும் தமது கனவின் லயிப்பால் போரைத் தவிர்த்து ஐக்கிய நாடுகள் அவையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்துப் புகார் செய்து பரிகாரம் வேண்டினார்.

இதற்கிடையில் 1947 அக்டோபர் 31 அன்று மக்கள் கருத்து எதனையும் கேட்டறியாமலேயே ஷேக் அப்துல்லாவை காஷ்மீர் மாநிலத்தின் அவசர கால நிர்வாகியாக நேரு நியமித்து, ஆட்சி அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தார். காஷ்மீர் சமஸ்தானத்தைத் தமது அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும் நீண்ட நாள் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் ஷேக் அப்துல்லா ஊர் திரும்பி சமஸ்தானத்தின் ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்டார். மன்னர் ஹரிசிங் அதிகாரம் இல்லாத வெறும் பொம்மையானார். சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைக்க மட்டுமே அவரது அதிகாரம் தேவைப்பட்டது. ஷேக் அப்துல்லாவை காஷ்மீரின் அவசர கால நிர்வாகியாக நியமிக்கலாமா என அவரிடம் ஒரு மரியாதைக்காகக் கூட ஆலோசனை கேட்கப்படவில்லை. இது குறித்து பட்டேலும் அதிருப்தி தெரிவித்தார். குருஜி கோல்வால்கர் அவர்களும் பொறுப்பை ஷேக் அப்துல்லாவிடம் ஒப்படைப்பது உசிதம் அல்ல என்றே கருத்துத் தெரிவித்தார். சொல்லப் போனால் குருஜிதான் ஹரி சிங்கின் தயக்கத்தை அகற்றி பாரதத்துடன் இணைவதுதான் அவருக்கும் காஷ்மீர் சமஸ்தானத்தின் எதிர் காலத்திற்கும் நல்லது என்று அறிவுரை சொன்னவர். அது ஹரி சிங்கின் மனதில் நன்கு பதிந்தது.

காஷ்மீரை பாரதத்துடன் இணைக்கும் முடிவை ஷேக் அப்துல்லாவும் ஆதரித்தார். வெறும் உணர்ச்சிப் பெருக்கினாலோ, சங்கடமான சூழ்நிலையின் நிர்ப்பந்தம் காரணமாகவோ காஷ்மீர் மக்கள் பாரத்ததுடன் இணையவில்லை. பாரத மக்களின் எதிர்காலத்துடன் தங்கள் எதிர்காலத்தையும் மனமொப்பிப் பிணைத்துக் கொள்வது எனத் தேர்ந்துதான் பாரதத்துடன் இணையும் முடிவுக்கு வந்துள்ளனர் என்று 1947 அக்டோபர் மாதம் ஷேக் அப்துல்லா பிரகடனம் செய்தார்.

ஆட்சி அதிகாரம் தன்னிடம் வந்த சில ஆண்டுகளுக்குள் பாரதத்தின் ஒரு பகுதியாக இருப்பதைவிடச் சுதந்திர தேசமாகக் காஷ்மீர் இயங்கினால் மேலும் தன்னிச்சையாக ஆளலாமே என்கிற ஆசை வயப்பட்ட ஷேக் அப்துல்லா, பாகிஸ்தானுடன் ரகசியமாக பேரம் பேசத் தொடங்கி, காஷ்மீரைச் சுதந்திர நாடு எனப் பிரகடனம் செய்யத் திட்டமிட்டார். உளவுத் துறையின் மூலம் இதனை அறிந்துகொண்ட பாரத அரசு, தக்க தருணத்தில் ஷேக் அப்துல்லாவைப் பதவி நீக்கம் செய்து சிறையில் தள்ளியது. நேருஜி யாரைத் தமது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் எனக் கருதிப் பரிவு காட்டிப் பதவியில் அமர்த்தினாரோ அவரது சாயம் வெளுத்துப் போனதில் நேருவுக்குப் பெருத்த அதிர்ச்சி. கனாக் காண்பதிலேயே காலம் முழுவதையும் செலவிட்ட நேருஜி இப்படித்தான் எல்லாவற்றிலும் தவறான முடிவுகளை எடுத்து அவற்றால் இன்றளவும் பாரதம் சிரமப்பட்டுக் கொண்டிருக்க நேர்ந்துவிட்டது. காஷ்மீரை பாரதத்துடன் இணைத்த மன்னர் ஹரி சிங்கிடமே பாரத அரசின் துணையோடு அவரது சமஸ்தானத்தின் நிர்வாகத்திற்கு மாற்று ஏற்பாடு செய்யும் அதிகாரத்தை அளித்திருந்தால் ஷேக் அப்துல்லா காஷ்மீரின் ஏக போகத் தலைவராக உருவெடுக்காமல் பத்தோடு பதினொன்றாக அவரளவில் ஓர் அரசியல்வாதியாக இயங்கி வந்திருப்பார்.

காஷ்மீர் இணைப்பின்போது அதற்கான தனி ஒப்பந்த ஆவணம் ஏதும் எழுதப்படவில்லை. பிற சமஸ்தான மன்னர்கள் பாரதத்துடன் தமது சமஸ்தானங்களை இணக்க எந்த ஆவணம் பயன் படுத்தப்பட்டதோ அதே ஆவணத்தில்தான் காஷ்மீர் சமஸ்தான மன்னர் ஹரி சிங்கும் கையொப்பமிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. ஷேக் அப்துல்லா மீது நேருவுக்கு இருந்த பிரத்தியேகப் பரிவின் காரணமாகவே காஷ்மீருக்குச் சில சிறப்புச் சலுகைகள் தரப்பட்டன. மேலும் ஜவஹர்லால் நேருவின் பாரம்பரியமும் காஷ்மீரைச் சேர்ந்தது என்பதும் கவனத்திற்குரியது.

1948 ல் காஷ்மீர் பற்றி அமெரிக்காவின் நிலைப்பாடு இன்னதென்று பிரிட்டிஷ் அரசிடம் தெளிவாகவே தெரிவிக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்த ஜார்ஜ் ஸி மார்ஷல் காஷ்மீர் சமஸ்தானம் பாரதத்துடன் முறையாக இணைந்துவிட்ட பகுதி என்பதுதான் எங்கள் கருத்து என்று கூறினார். காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி அல்ல என அவர் தெளிவு படுத்தினார்.

பாரதமாகட்டும், பாகிஸ்தானாகட்டும், சமஸ்தானங்களைத் தம்மோடு இணைத்துக் கொள்கையில் அந்தந்த சமஸ்தான மக்களின் கருத்தைக் கேட்டறியவில்லை. எனவே காஷ்மீருக்கு மட்டும் அவ்வாறு இணைப்பு குறித்து மக்கள் கருத்தறிய வேண்டும் எனக் கோருவது எந்த அளவுக்குச் சரி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்ட ஐ நா அவையும் காஷ்மீர் பாரதத்துடன் இணைந்தது பற்றிக் கேள்வி எதுவும் எழுப்பவில்லை. 1948 தொடங்கி, 195051 வரை காஷ்மீர் தொடர்பான பல தீர்மானங்களை நிறைவேற்றிய ஐ நா அவற்றில் கட்டளை ஏதும் பிறப்பிக்கவில்லை. பரிந்துரைகளாகத்தான் தனது தீர்மனங்காளைத் தெரிவித்தது.

காஷ்மீரில் மக்கள் கருத்தறிந்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறும் ஐ நா தீர்மானத்தில் பாகிஸ்தான், தான் அக்கிரமிப்புச் செய்துள்ள பகுதியிலிருந்து முற்றிலுமாக வெளியேறுவதோடு, காஷ்மீரிகள் அல்லாத பிறர் எவரும் அந்த அக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் இருக்கவும் கூடாது என்று மிகத் தெளிவாகவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்றளவும் தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியிலிருந்து பாகிஸ்தான் வெளியேறாதது மட்டுமல்ல விடுவிக்கப்பட்ட காஷ்மீர் என்று தான் ஆக்கிரமித்த பகுதியைக் கூறிக் கொள்ளவும் தயங்க வில்லை. எனவே காஷ்மீர் பாரதத்துடன் நீடிப்பதா, பாகிஸ்தானுடன் இணைவதா அல்லது தனித்து இயங்குவதா என மக்கள் கருத்தறிவற்கான சூழல் தொடக்கத்திலிருந்தே உருவாகவில்லை.

காஷ்மீரின் பாதுகாப்பிற்கும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கும் தேவையான ராணுவத்தை பாரதம் அங்கு நிறுத்தி வைத்துக் கொள்ளலாம் என்றும், ராணுவக் குவிப்பை மட்டுமே தவிர்க்க வேண்டும் எனவும் ஐ நா தீர்மானம் கூறுகின்றது. காஷ்மீரில் நிலவும் பதட்டச் சூழ்நிலையினை அறிந்தவர்கள் அங்கு பாரதம் தனது ராணுவத்தைத் தேவையான அளவுக்கே வைத்துள்ளது என ஒப்புக்கொள்வார்கள். 1947 அக்டோபர் முதலே காஷ்மீர் மக்களின் பாதுகாப்பிற்காக தினந் தினம் பாரத தேசத்து ராணுவ வீரன் தனது ரத்தத்தைச் சிந்திக்கொண்டிருக்கின்றான். 1947 அக்டோபர் தொடங்கி இன்றுவரை இருபதாயிரத்துக்கும் அதிகமான பாரத ராணுவ வீரர்களும் இளம் அதிகாரிகளும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆம்புஷ் எனப்படும் ஓளிந்திருந்து கைப்பற்றிக் கொல்லும் முறைக்கும் அது ஏவி விட்ட பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலுக்கும் பலியாகியுள்ளனர். இத்தகைய தாக்குதலால் நிரந்தரமாக ஊனமடைந்தவர்களும், இன்றளவும் வலியையும் வேதனையையும் சகித்துக் கொண்டு சிகிச்சை பெற்று வருபவர்களும் பல்லாயிரக் கணக்கில் உள்ளனர்.

எந்த நிமிடமும் எந்த மூலையிலும் பயங்கரவாதிகளின் கோழைத்தனமான திடீர் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலும் வழிபாட்டுத் தலமான மசூதிகள் உள்ளிட்ட எந்த இடத்திலும் பயங்கர வாதிகள் பதுங்கியிருக்கும் சாத்தியம் உள்ள சந்தர்ப்பத்திலும், அமைதியான மக்களின் வீடுகளில்கூட அடாவடியாக நுழைந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பயங்கரவாதிகள், தாம் பலவந்தமாகத் தஞ்சம் புகுந்த வீட்டில் உள்ள நபர்களையே கேடயங்களகப் பயன்படுத்திக் கொண்டு நடத்தும் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையிலும் உள்ள பாரத் தேசத்து ராணுவ வீரர்கள் எத்தகைய நெருக்கடியில் இருப்பார்கள் என யோசிக்க வேண்டும்.

காவல் காத்து நிற்கும் ராணுவ வீரன் எதிரில் வருபவரை யார் எனக் கேட்டு அதற்குச் சரியான பதில் வராவிடில் பதற்றமுற்றுச் சுட்டுவிடுவது உள்ளதுதான்.

சில மாதங்கள் முன்பு லண்டனில் ஒருவனை இவ்வாறு பிரிட்டிஷ் காவல் துறையினர் சுட்டுவிடவில்லையா? பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும்போது இப்படிச் சில அசம்பாவிதங்கள் நடந்து விடுவதைத் தவிர்க்க இயலாது என அதற்குச் சமாதானம் சொல்லப் படவில்லையா? அந்த நபர் சிறு குற்றம் ஏதோ இழைத்துவிட்ட அச்சத்தில் ஒடத் தொடங்கி விட்டார்; அவ்வாறு ஒடாமல் இருந்திருந்தால் அவரைச் சுடும்படியான கட்டாயம் ஏற்பட்டிருக்காது என்றுதான் விளக்கம் தரப்பட்டது. இருபத்து நான்கு மணி நேரமும் எதிரில் வரும் எவரும் ஒரு பயங்கரவதியாக இருக்கக்கூடும் என்ற பதற்றமான சூழலில் ஒரு காவலரோ ராணுவ வீரரோ எத்தைய நெருக்கடியில் இருக்கக்கூடுமென யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படியொரு சூழலை அனுபவித்தால்தான் அதன் இறுக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களில் ஒரு சில சபல சித்தம் உள்ளவர்களும் இருக்கக்கூடும்தான். அவர்கள் செய்யும் தவறோ இழைக்கும் குற்றமோ தெரியவரும் போது தக்க நவடிக்கைகள் எடுக்க்கப்படாமல் போவதில்லை. சில அத்துமீறல்கள் நடக்கவும் கூடும்தான். பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஒரு பெரிய அவசர அவசிய காரியத்தில் இம்மாதிரியான உறுத்தல்கள் ஏற்படவே செய்கின்றன. அதற்காக மேற்கொண்ட பொறுப்பைக் கைவிடுவது அறிவுடமையாகாது.

பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்தபோது பாரத நாட்டு ராணுவத்திற்கு உறு துணையாக இருந்து தொண்டு செய்த வரலாறும் குருஜியின் சீடர்களான ஆர் எஸ் எஸ் ஊழியர்களுக்கு உண்டு. ஆனால் அவரகள் அனைவரும் மறக்கப்பட்ட, வரலாறு அடையாளம் காட்டத் தவறிய வீர சாகச தீரர்கள். காஷ்மீர் போரில் கடமையாற்றிய பாரத ராணுவத்தினர் மட்டுமே நேரில் கண்டு வியந்து பாராட்டிய பெயர் தெரியாத சாமானியர்கள், அவர்கள்.

காஷ்மீர் போரின்போது ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் உயிராசையின்றி மிகவும் துணிவோடு செயல் புரிந்தது பற்றிப் பின்னர் குருஜியிடம் ராணுவத் தளகர்த்தர்கள் வியப்போடு விசாரித்தனர், உங்கள் தொண்டர்கள் இவ்வளவு துணிச்சலாகச் செயல்படுமளவுக்கு நீங்கள் அவர்களுக்கு அப்படி என்னதான் பயிற்றுவிக்கிறீர்கள் என்று.

குருஜி புன்னகையுடன் அதற்கு அளித்த பதில்: கபடி!

எந்தச் சமயத்திலும் நான் ஆர் எஸ் எஸ் ஸில் இருந்ததில்லை. வெளியிலிருந்து அதனை அவதானிக்கும் பார்வையாளனாகவே இருந்து வந்துள்ளேன். ஆகவே ஆர் எஸ் எஸ் தொடர்பான எனது தகவல்களில் கற்பிதங்கள் ஏதும் இல்லை.

நேருஜி காஷ்மீர் பிரச்சினையை ஐ நா அவையின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதன் பின் விளைவுகள் பாரதத்திற்குப் பாதகமாகவே அமைந்தன. போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் காஷ்மீரில் தான் ஆக்கிரமிப்புச் செய்த பகுதியில் பாகிஸ்தான் நிலையாகத் தன் கால்களை ஊன்றிக் கொண்டு விட்டது. சில ஆண்டுகள் கழித்து அதில் ஒரு பகுதியை சீனாவுக்குத் தாரை வார்த்தும் கொடுத்துவிட்டது! இதற்கெல்லாம் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதோடு தனது கடமை முடிந்து விட்டதாக பாரதம் கருதுகிறது. 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த போர்களின் போது பாரதம் வெகு எளிதாக பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியை மீட்டிருக்க முடியும். ஆனால் ஐ நா வுக்கு அளித்த வாக்குறுதிக்குக் கட்டுபட்டு, தான் கைப் பற்றிய அந்தப் பகுதியின் சில பாகங்களிலிருந்து வெளியேறியது.

காஷ்மீரில் மக்கள் பாரத ராணுவத்தின் எதிர்ப்பாளராக இருப்பதுபோலவும் காஷ்மீர் ஒரு சுதந்திர தேசமாக எவர் தலையீடுமின்றி இயங்க வேண்டும் என விரும்புவது போலவும் ஒரு தோற்றத்தைச் சிலர் உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர்.

உண்மையில் 85 சத காஷ்மீர் மக்கள் பாரதத்தின் ஒரு பகுதியாகத் தங்கள் மாநிலம் இருந்து வருவதைத்தான் விரும்புகின்றனர். பத்து சதவீதத்தினர் மட்டுமே மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுடன் இணைவதை விரும்புகின்றனர். வெறும் ஐந்து சதவீத மக்கள் காஷ்மீர் ஒரு சுதந்திர தேசமாகத் தனித்து இயங்குவதை விரும்புகின்றனர். தங்கள் மாநிலம் எல்லா அம்சங்களிலும் முன்னேற்றம் காணவும் பாதுகாப்பாக இருக்கவும் பாரதத்தின் ஒரு மா நிலமாக இருப்பதுதான் நல்லது என்பதைப் பெரும்பான்மையான காஷ்மீர் மக்கள் அறிந்துள்ளனர்.

காஷ்மீர் சுதந்திர தேசமாக இயங்க அனுமதிக்கப்பட்டால் அடுத்த கணமே பாகிஸ்தான் அதனைக் கபளீகரம் செய்துவிடும் எனக் காஷ்மீரிகள் பலரும் கருதுகின்றனர். அவ்வாறு நேர்ந்தால் அறுபது ஆண்டுகளாகியும் இன்னமும் ஒரு ஸ்திரத் தன்மையின்றி வெளி நாட்டு நிதி உதவியின் தயவிலேயே உயிர் தரித்திருக்கும் பாகிஸ்தானின் துரதிர்ஷ்டம் தங்களையும் தொற்றிக்
கொண்டுவிடும் எனக் காஷ்மீர் மக்கள் கருதுகின்றனர்.

1947ல் காஷ்மீரை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தபோது அது நடத்திய அட்டூழியங்களை நினைவுகூரும் முதிய காஷ்மீரிகள், பாரதத்தின் ராணுவம் அவ்வாறெல்லாம் நடந்து கொள்வதில்லை என்றும் மிகவும் கட்டுப்பாடாகத்தான் இயங்கிவருவதாகவும், எப்போதேனும் எங்கேயாவது அபூர்வமாக நடைபெறும் முறைகேடுகள்கூட, மேலதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாரதத்தின் மாநிலமாக உள்ள காஷ்மீரில் தேர்தல்கள் நடைபெற்று மக்கள் தீர்ப்பிற்கிணங்க ஆட்சியமைந்து வருகிறது. நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன. இதி லுள்ள குறைபாடுகள் பாரதத்தின் பிற மாநிலங்களிலும் காணப்படுபவைதாம். காஷ்மீர் மாநிலம் பாரதத்தின் மைய அரசாலோ பிற மாநிலங்களாலோ சுரண்டப்படும் நிலைமை ஏதும் இல்லை. காஷ்மீரில் பிற மாநிலத்தவர் வீடோ, நிலமோ வாங்க அனுமதியில்லை என்பதுபோன்ற தனிச் சலுகைகள் பிற மாநிலத்தவர் ஆதிக்கம் அங்கு வேரூன்றுவதைத் தவிர்க்கிறது.

பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரில் தேர்தல் என்பதெல்லாம் இல்லை. அங்கு பாகிஸ்தான் நியமிக்கும் ராணுவ அதிகாரிதான் அதிபர் பதவியில் அமர முடியும். அங்குள்ள மக்கள் பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருப்பதாக ஒப்பந்தப் படிவத்தில் கையொப்பமிட்டால்தான் ரேஷன் கார்டே கிடைக்கும். கில்ஜ்த் முதலான இடங்களில் மக்களுக்குக் குடியுரிமையே வழங்கப்படவில்லை. கடந்த அறுபது ஆண்டுகளில் எவ்வித முன்னேற்றமும் காணாத பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் அண்மையில் பாரதத்தின் மாநிலமாக உள்ள காஷ்மீரிலேற்பட்டுள்ள வளர்ச்சியையும் மக்கள் சுதந்திரமாகச் செயல்படுவதையும் கண்டு வியப்படைந்தனர். மிகுந்த ஏக்கத்துடன்தான் அவர்கள் தாம் வசிக்கும் பாகிஸ்தானின் பிடியிலுள்ள காஷ்மீருக்குத் திரும்பிச் சென்றனர்.

பாரத ராணுவம் பெருமளவில் குவிந்திருப்பதால் பயங்கர வாதிகள் பொது மக்களைத் தாக்குவது குறைந்திருப்பதாகவும் ராணுவத்தினர், கவல் துறையினர் ஆகியோர் மீதுதான் பயங்கர வாதிகளின் கவனம் செல்வதாகவும் காஷ்மீரிகள் பலர் கூறுகின்றனர். இதுபற்றி நூலாசிரியரும் இஸ்கான் இயக்கத்தில் ஈடுபாடு உள்ளவருமான ஸ்டீபன் நாப் என்ற அமெரிக்கர் தமது நேரடி அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார். ஒரு சுற்றுலாப் பயணியாகக் காஷ்மீர் சென்ற அவர், பொது மக்கள் பலரையும் சந்தித்துப் பேசி அவர்களிடம் பல்வேறு பிரச்சினைகள் குறித்துக் கருத்துக் கேட்டார். ஸ்டீபன் நாப் 2007 ஜூன் மாதம்தான் காஷ்மீர் சென்று வந்துள்ளார். எனவே அவரது தகவல்களை மிக மிகச் சமீபத்திலானவையாகக் கொள்ள வேண்டும்.

ஸ்டீபன் நாப் பதிவுகளிலிருந்து சில பகுதிகள்:

காஷ்மீருக்கு நான் சென்றது கோடைப் பருவத்தில். ஸ்ரீநகரில் பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிரு ந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருப்பதைக் கண்டு வியப்படைந்தேன் (காஷ்மீரில் பாரத எதிர்ப்புணர்வு அதிகமாகிவிட்டதால் அங்கு பாரதத்தின் பிற பகுதிகளிலிருந்து எவரும் செல்லவே அஞ்சுவதாகப் பிரசாரம் செய்யபடுவதால் இவ்வாறு குறிப்பிடுகிறார் ).

காஷ்மீர் நிலவரம் குறித்து உண்மை நிலையினையும் மக்களின் கருத்தினையும் அறிய எனது பயணத்தைப் பயன் படுத்திக்கொண்டேன். ஒரு முகமதிய சிறு வியாபாரியையும், சுற்றுலா சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள முகமதியக் குடும்பத்தினரையும் கைவினைப் பொருள்களை விற்பனை செய்வோரையும் சந்தித்துப் பேசினேன்.

காஷ்மீரில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்திருப்பதாகவும் பயங்கரவாதிகளின் குறி ராணுவம், காவல் துறை ஆகியவற்றின் மீது திரும்பிவிட்டதால் பொது மக்கள் மீதான தாக்குதல் குறைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பொதுவாக மக்களிடையே பாரத அரசின் மீதோ பாரத மக்கள் மீதோ வெறுப்பு ஏதும் இல்லை என்பது தெளிவாகப் புலப்பட்டது.

காஷ்மீர் மக்கள் தமது வருமானத்திற்குப் பெரும்பாலும் சுற்றுலா வரும் பயணிகளையே சார்ந்துள்ளனர். பயங்கரவாதிகளின் நடமாட்ட மிகுதியால் சுற்றுலா பாதிக்கப்பட்டு, வருமானம் குன்றுவதால் அவர்கள் உண்மையில் பயங்கரவாதிகளை அறவே வெறுக்கின்றனர். பயங்கரவாதிகளின் நடமாட்டத்திற்கு பாரத ராணுவத்தின் பிரசன்னம் பெரிதும் இடைஞ்சலாக இருப்பதால் தொடர்ந்து பாரத ராணுவத்தின் கண்காணிப்பு இருந்து வருவதையே அவர்கள் விரும்புகின்றனர்.

பயங்கரவாதிகளின் நடமாட்டம் நகர்ப்புறங்களில் பெருமளவு குறைந்துவிட்டது. மலைகளும் காடுகளும் சூழ்ந்த கிராமப் புறங்களில்தான் திடீர் திடீர் என அவர்கள் தோன்றி மக்களை மிரட்டுகின்றனர். ஆயுதங்களை நீட்டி உணவும், பணமும் ஏன் பெண்களையுங்கூடத் தருமாறு அதிகாரத்துடன் கேட்கும்போது அதற்கு மக்கள் அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை. ராணுவத்திற்கோ காவல் துறைக்கோ தகவல் கொடுப்பவர்கள் எனப் பழி சுமத்திப் பலரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்று அவர்களின் உடமைகளைச் சூறையாடிப் பெண்களையும் தமது போகப் பொருளாகப் பயன்படுத்திக் கொள்வதைக் காணும் காஷ்மீரி எவனும் பயங்கரவாதிகளை ஆதரிக்க முன்வரமாட்டான். பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் நுழையும் பயங்கர வாதக் குழுக்கள் காஷ்மீரி இளைஞர்களை வலுக்கட்டாயமாகவும் பலவாறு ஆசைகாட்டியுமே தம்முடன் அழைத்துச் சென்று பயிற்சி அளித்து பயங்கரவாதச் செயலில் ஈடுபடுமாறு திருப்பி யனுப்புகின்றன. அதற்கு ஒப்புக்கொள்ளாத காஷ்மீரி இளைஞர்கள் பயங்கரவாதக் குழுக்களின் கொடிய தண்டனைக்கு ஆளாக நேரிடும். அதற்கு அஞ்சி பயங்கர வாதச் செயலில் ஈடுபடும் காஷ்மீரி இளைஞர்கள் பாரத ராணுவத்திடமோ காஷ்மீர் காவல் துறையிடமோ சிக்கிகொள்ள நேர்ந்தால் அப்போதும் துன்புறநேரிடும். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில்தான் காஷ்மீர் மக்கள் ராணுவத்திற்கும் காவல் துறைக்கும் எதிராகப் பொங்கி எழுகிறார்கள். இதனை பாரத ராணுவத்தின் இருப்புக்கு எதிரான நிலையாகப் பிரசாரம் செய்வது சரியல்ல. பயங்கரவாதிகளும் பாகிஸ்தானிகளும் எளிதாகப் பிரவேசிக்கும் நிலை இருப்பதால் காஷ்மீர் மக்களுக்குக் குடியுரிமைக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்தினரும் காவல் துறையினரும் காஷ்மீர் மக்களிடம் அவர்களின் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கெடுபிடி செய்யும்போது மக்களுக்கு எரிச்சல் ஏற்படுவதும் இயற்கையே. ஆனால் பாரத ராணுவத்தின் இருப்பு தங்களின் அமைதியான வாழ்க்கைக்கும் சுற்றுலா மூலமான தடையில்லாத வருமானத்திற்கும் மிகவும் அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்தே உள்ளனர்.

பயங்கர வாதம் காலூன்றுவதற்கு முன் காஷ்மீரிகள் சிலரால் ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பு பிரபலமடையலாயிற்று. அந்த இயக்கம்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசித்த ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் அப்புறப்படுத்தும் செயலை மேற்கொள்ளலாயிற்று. அதற்குமுன் மக்களிடையே சமயத்தின் அடிப்படையில் வேற்றுமை உணர்வோ வெறுப்போ இருந்ததில்லை. ஹிந்துக்களான காஷ்மீர் பண்டிட்களைத் துரத்திவிட்டு அவர்களின் வீடு வாசல்களை இந்த விடுதலை இயக்கத்தினர் ஆக்கிரமித்து அனுபவித்து வருகின்றனர். பண்டிட்களை அச்சுறுத்தி விரட்ட க் கொலை, கொள்ளை, சித்திரவதை, பாலியல் கொடுமை என எல்லாவிதமான முறைகேடுகளும் கையாளப்பட்டன. விடுதலை இயக்கத்தின் பெயரால் ஹிந்து இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஹிந்து பண்டிட்கள் கொல்லப்பட்டு நான்கு லட்சத்திற்கும் அதிகமான பண்டிட்கள் இன்று தமது தாயகமான காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு வெளியே அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர். மனித உரிமைக் காவலர்கள் எவரும் அவர்களைச் சந்தித்து குறை கேட்பதும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பதும் இல்லை.

தொடக்கத்தில் காவல் துறையினர் தம்மிடம் சிக்கும் பயங்கரவாதிகளைக் கைது செய்து வழக்குப் பதிவுசெய்து தண்டனை பெற்றுக் கொடுத்தனர். ராணுவத்தினரும் தாம் பிடித்து வைக்கும் பயங்கர வாதிகளைக் காவல் துறையிடம் ஒப்படைப்பதோடு தமது கடமையை முடித்துக்கொண்டனர். ஆனால் தண்டனைக் காலம் முடிந்தபின் பயங்கரவாதிகள் திரும்பவும் பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்ததால் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணும் அவசியம் ஏற்பட்டது. இதையொட்டி எதிர்ப்படும் பயங்கரவாதிகளுடன் போரிட்டு அவர்களைச் சுட்டு வீழ்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவ்வப்போது பிழைகளும் நேர்ந்து முறையாகத் தங்களை அடையாளங் காட்டிக் கொள்ளத் தவறுபவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விடுகின்றனர். பயங்கரவாதிகளுடனான துப்பாகிச் சண்டையின்போது இடையில் தற்செயலாகச் சிக்கிக்கொள்பவர்களும் குண்டடி படுவதுண்டு. பயங்கரவாதிகளின் நெருக்கத்தில் சிக்குண்ட ஒரு பிரதேசத்தில் இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழ்வது இயற்கையே என்பதை விவரம் அறிந்த காஷ்மீர் மக்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

ஸ்ரீநகரில் கடை வைத்துப் பிழைக்கும் அப்துல்லா பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொல்வதுதான் நல்லது, அவர்களைச் சிறைக்கு அனுப்புவதால் பலனில்லை என்கிறார். பயங்கரவாதிகளின் நடமாட்டம் தற்போது குறைந்திருப்பதற்குக் காரணம் அவர்கள் மீது எதிர்த் தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்று போடுவதுதான் என்று அவர் கூறுகிறார். காஷ்மீர் மக்களின் வருமானத்திற்குத் தடையாக இருக்கும் பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொல்வதுதான் சரி என்பது அவரது கருத்து. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமைக் கொல்வதுதான் சரி என்று சொல்வதை முதல் தடவையாகத் தாம் கேட்டதாகக் கூறுகிறார், ஸ்டீபன் நாப்.

அமைதியான அன்றாட வாழ்க்கை, சீரான வருமானத்திற்கு இடையூறில்லாத சூழல், தடங்கல் இல்லாத வளர்ச்சிப் பணிகள், கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் இவையே மக்களின் எதிர்பார்ப்பு. உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதமில்லாத நிலைமையை அவர்களால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. காஷ்மீரில் பயங்கர வாதம் ஊடுருவுமுன், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் எல்லைக் கோட்டினையொட்டி உள்ள காஷ்மீர் மாநில கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே பாகிஸ்தான் ராணுவத்தின் தொல்லை இருந்து வந்தது. பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி வந்து தொல்லை தராமல் இருக்க பாரத ராணுவம் ஒரு கவசமாகவும் காஷ்மீர் மாநில மக்களைக் காத்து வந்தது.

முன்பு பாரத ராணுவத்தின் அரவணைப்பில் நிம்மதியாகக் கழிந்த அமைதி வாழ்க்கை மீண்டும் திரும்ப வேண்டுமாயின் பயங்கரவாதம்தான் அடியோடு ஒழிக்கப்பட வேண்டுமேயன்றி பாரத ராணுவம் அகற்றப்படலாகாது என்பதைக் காஷ்மீர் மக்கள் நன்கு அறிந்தேயுள்ளனர்.


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்