கற்றுக் கொள்ள – “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்)

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

நடராஜா முரளிதரன்


அமெரிக்கக் கண்டமெங்கணும் ஆங்கிலமும், ஸ்பானிசும், போர்த்துக்கீசும் (பிரேசில் நாட்டில் மட்டும்) பேசு மொழிகளாகக் கோலோச்சுவதை இன்று காணுகின்றோம். ஐரோப்பியர்கள் அமெரிக்க மண்ணில் காலடி வைப்பதற்கு முன்பாகவே இந்த நீண்ட பெரு தொடர் நிலப்பரப்பிலே பல்வேறு மொழிகளைப் பேசிய பல தரப்பட்ட கலாச்சார, பண்பாட்டு வாழ்க்கை அமைவுகளை வரித்துக் கொண்ட “மண்ணின் மைந்தர்கள்” திட்டுத், திட்டாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.
ஆயினும் அசுர பலம் படைத்த ஆக்கிரமிப்பாளர்கள், குடியேற்றவாதிகள் முன்னே தனித்துவம் வாய்ந்த தொன்மை கொண்ட அக் குடிகளின் வன்மம் அடக்கப்பட்டு, முறியடிக்கப்பட்ட வரலாறே எம் கண் முன் விரிந்து கிடக்கிறது. அந்த முறியடிக்கப்பட்ட மாந்தர்களின் மனக் குமுறல்களை, ஆதங்கங்களை வரலாற்றின் புதைகுழிகளிலிருந்து மீட்டெடுப்பதில், மறு வாசிப்புக்குள்ளாக்குவதில் எங்களில் அநேகருக்கு ஈடுபாடு இருக்கப் போவதில்லை.
ஆனாலும் கடந்த சனிக்கிழமையொன்றில் ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் நடைபெற்ற கருத்தரங்கமொன்றில் அந்தப் பழங்குடிகளின் சந்ததி வழி வந்த பெண் மனித உரிமைவாதியொருவர் அந்த மக்களின் உரிமைகள் குறித்ததோடல்லாமல் அதற்க்கும் மேலாக அந்த மக்களினங்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கான ஏக்கங்களைப் பிரதிபலித்த போது அந்த உணர்வுகள் நெஞ்சைப் பிழிந்தமையை என்னால் வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.
இந்தத் தளத்திலே உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிய பழங்குடி மக்களது போராட்ட வாழ்வுக் களங்களில் கனடாவிற்கு மிகவும் அண்மையில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான மெக்சிக்கோவின் “சியாப்பாஸ்” பிரதேசத்தில் வாழ்ந்து வரும் பழங்குடி மாயன் இந்தியர்களின் துயரம் தோய்ந்த வரலாற்றுச் சுவடுகள் ஆழ்ந்து பரிசீலிக்கப்பட வேண்டியவை என்பதை அண்மையில் நான் வாசித்துக் கொண்டிருந்த விடியல் பதிப்பகம் பிரசுரித்த “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்) என்ற நூல் எனக்கு உணர்த்தியது.
இந்த நூலின் 36வது அத்தியாயத்தில் “சியாப்பாஸ் பழங்குடிகளின் போராட்டத் தலைவர்களில் மிக முக்கியமானவர் என்று கருதப்படும் துணைத் தளபதி மார்க்கோஸ் காடுகளில் ஒழிந்தவாறான 17 ஆண்டு கால போராட்டத் தலைமறைவு வாழ்க்கையின் பின் 2001ஆம் ஆண்டு மார்ச் மாத நடுக் கூறில் மெக்சிக்கோ அதிபரின் அழைப்பையேற்றுப் பெருமளவு மக்கள் நிறைந்த மாபெரும் பேரணியொன்றை வழிநடத்திப் பல நூறு மைல்கள் கடந்து மெக்சிக்கோ நகரத் திடலை வந்தடைவதும், அச் சமயத்தில் தங்களது குறிக்கோளை வென்றெடுப்பதற்கான அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக “காம்பியோ” என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியும் கூறப்பட்டுள்ளது.”
அரசியல் வன்முறைகள் உச்சம் பெற்றிருக்கும் முரண்பாட்டுக் களத்தில் ஒடுக்கப்பட்ட மக்களது தளைகளை அறுப்பதற்காக அமைதியைப் பேணிக்கொண்டு அடக்குமுறையாளனோடு தீர்வுக்காகப் பேசப் புறப்படுவது குறித்த வளர்ச்சிப் போக்கினை துணைத் தளபதி “மார்க்கோஸ்” எவ்வாறான அரசியல் பார்வையூடு அளவிடுகிறார் அல்லது அளவிட முனைந்தார் என்பது குறித்து இங்கு உரையாடவிழைவதே எனது நோக்கமாகும்.
காம்பியோ பத்திரிகைப் பேட்டியின் போது “ இனவெறிக்கு நிச்சயமாக ஏற்படப் போகின்ற தோல்வியைப் பற்றிய கருத்தானது அரசுக் கொள்கையின் பிரச்சினை, கல்விப் பிரச்சினை, மெக்சிக்கோ சமூகம் முழுவதினுடைய பிரச்சினை. இந்தப் பிரச்சினைக்கான தீர்வை நாங்கள் மிகவும் நெருங்கி விட்டோம்;, எனினும் இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. போர் வீரர்களான நாங்கள் கூறுவதைப் போல, போரில் வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் இன்னும் சில யுத்தங்களைப் புரிய வேண்டியிருக்கிறது. சமூகத்துடன் எங்களைப் பிணைப்பது இராணுவரீதியான எங்களது வலிமை அல்ல என்பதாலும், நல்ல விளைவுகளைத் தரப்போவது அமைதி வழியிலான போராட்டமே என்று நாங்கள் உறுதியாக நம்புவதாலும், எங்களுடைய ஆயுதங்களை நாங்கள் கீழே போட வேன்டும் என்பதே மார்ச் 11ம் தேதி எங்களுக்கு உணர்த்தும் செய்தி என்று நான் நினைக்கிறேன். மெக்சிக்கோ அரசு மட்டும்தான் இதைப் புரிந்து கொள்ளவில்லை.” என்று “மார்க்கோஸ்” கூறுகின்ற வார்த்தைகளானது சொல்லும் தீர்மானகரமான அரசியல் செய்தி என்ன என்பது பற்றிய புரிதலிலேதான் மக்களின் சுதந்திரம், அமைதியான வாழ்வு பிறப்பெடுத்தல் சாத்தியமாகும்.
மேலும் இன்னுமொரு பதிலில் “ஒரு படை என்ற விதத்தில் அது மறைந்து போய் விட வேண்டும். இராணுவத் தன்மை கொண்ட ஒருவனாக – ஒரு படை வீரனாக – வாழ்வது ஓர் அபத்தமாகும். ஏனென்றால், ஒருவன் தனது கருத்துக்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று மற்றவர்களை வற்புறுத்தி ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு, ஆயுதங்களையே எப்போதும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த அர்த்தத்தில், எங்களுடைய படை இராணுவத் தன்மையைக் கொண்டிருக்குமானால், அதற்கு எதிர்காலம் என்பதே கிடையாது. எமது தேசிய விடுதலைப் படை ஓர் இராணுவரீதியான அமைப்பாகவே தொடர்ந்து நீடிக்குமானால், அது தோல்வியடையப்போவது உறுதி. உலகத்தைப் பற்றிய ஒரு நிலைப்பாடு என்ற முறையில், ஒரு கருத்தியல் ரீதியான தேர்வு என்ற முறையில், அது நிச்சயமாகத் தோல்வியடையும். அது அதிகாரத்தைக் கைப்பற்றித், தன்னை புரட்சிகரமான இராணுவம் என்ற பெயரில் நிலை நிறுத்திக் கொள்ள முயலுமானால், அது இந்தத் தோல்வியை விட மோசமானதாயிருக்கும். தேசிய விடுதலை இயக்கங்களாக உருவான, 60- களையும் 70- களையும் சேர்ந்த அரசியல்- இராணுவ அமைப்புக்களினால் வெற்றி என்று கருதப்பட்டது எதுவோ, அது எங்களால் தோல்வியென்று கருதப்படுகின்றது.” என்றும் கூறுகின்றார்.
இங்கு துணைத் தளபதி “மார்க்கோஸ்” வியாக்கியானம் செய்யும் தத்துவார்த்தச் சிந்தனை முறைமைகள் இலத்தீன் அமெரிக்கச் சூழலில் மாத்திரமே பொருத்திப் பார்க்க முடிந்த நிகழ்வுகளா? அல்லது உலகளாவிய விரிந்த சமூகப் பரப்பில் மீள் வாசிப்புக்குரிய விடயங்களா?
சமூகத்திலே மேலே இருந்தவாறு அதிகாரம் செலுத்துகிற சூழல் புரட்சியை வெற்றி கொண்டவர்களுக்குக் கிடைத்தபோது சமூகத்திற்கான நன்மை, தீமைகளை அக் குழுவே தீர்மானிக்கும் பொழுது உலகத்தையோ, சமூகத்தையோ மாற்றியமைத்துவிட முடியாது என்பதாகவே “மார்க்கோஸ்” தனது வாதத்தை நிகழ்த்துகிறார்.
ஒரு புறத்தில் ஆயுதங்களை ஏந்தாமல் அணிதிரள்வது ஒரு விதத்தில் நிம்மதி அளிக்கும் செயல்பாடாக மாறிவிடுகிறது என்று அவர் சொல்வது இராணுவச் சொல்லாடல்கள் குறித்த அவரது விமர்சனப் பார்வை இவற்றிலிருந்து ஏதாவது நாம் கற்றுக் கொள்ள முடியுமா?

Series Navigation

நடராஜா முரளிதரன் (கனடா)

நடராஜா முரளிதரன் (கனடா)