பாலஸ்தீனிய தெற்காசிய ஜிகாதி வெறுப்பியல் வேர்களில் சில இணை பரிமாணங்கள்

This entry is part [part not set] of 28 in the series 20050729_Issue

அரவிந்தன் நீலகண்டன்


அண்மையில் நடக்கும் மக்களிடையே நல்லெண்ணம் வளர்க்கும் நாடகங்களின் ஒரு பகுதியாக எங்களூர் கவிதாயினி ஒருவர் பாகிஸ்தான் சென்றார். சென்றவர் தமது மார்க்கம் குறித்த எளிமையான கேள்விகளுக்கு கூட ‘நோ கமெண்ட்ஸ் ‘ கூறுகிற அரசியல் சாதுரியம் படைத்தவர். இந்த மதரஸா புத்திரி -அஹ் மன்னித்துவிடுங்கள் -மனுச புத்திரி பாகிஸ்தான் சென்று வந்தாரோ இல்லையோ உள்ளூர் வாரமலர் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் பாகிஸ்தானை வாயாரப் புகழ்ந்தார். அங்கெல்லாம் ஜனநாயகம் ததும்பி வழிகிறதாம் ‘இண்டியா ‘ போல கிடையாதாம். மக்களெல்லாம் ‘இண்டியன்ஸிடம் ‘ அன்புக்காக ஏங்கி கிடக்கின்றனராம் – இந்த ரீதியில் விளாசித்தள்ளினார். நம்மூர் இடதுசாரிகளும் இன்னபிற மதச்சார்பற்ற அறிவு ஜீவி வகையறாக்களும் புல்லரிக்க அவரது பாகிஸ்தானிய அனுபவங்களை ஆங்காங்கே டாக்கடை பழைய புத்தக கடையருகே என்று என்னைப் போன்ற ஹிந்துத்வ பாசிஸ்ட்களிடம் கூட விலாவாரியாக வர்ணிக்க, ‘அடடா பாகிஸ்தானன்றோ பூலோக வைகுண்டம்; இஸ்லாமன்றோ உண்மையான மதச்சார்பின்மை; ஜிஸியாவன்றோ மதச்சார்பின்மையின் மணிமகுடம்; ஜிகாத் அன்றோ உண்மை அன்பின் ஒளி மார்க்கம் ‘ என்று புல்லரிக்க வைத்து விடுகின்றனர். இந்த அருமையான சூழ்நிலையிலா ஓராண்டுக்கு முன் வெளிவந்த அந்த உருப்படாத நூல் பாரதச்சூழலில் பேசப்பட வேண்டும்! ‘Who killed Daniel Pearl ? ‘ என்கிற நூலைத்தான் குறிப்பிடுகிறேன். இந்நூல் ஆசிரியர் பெர்னார்ட் ஹென்றி லெவி நிச்சயமாக ஜார்ஜ் புஷ்ஷின் இரசிகரல்ல. ‘வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ‘ தெற்காசியாவுக்கான நிருபரான டேனியல் பேர்ல் கராச்சியில் பத்து துண்டுகளாக வெட்டப்பட்ட அந்த அமைதி மார்க்க நிகழ்ச்சி படமெடுக்கப்பட்டு உலகளாவிய ‘காஃபீர்களுக்கு ‘ ஒரு அமைதியான எச்சரிக்கையாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் பின்னணியிலிருந்த மனிதனான ஒமர் ஷேக் குறித்து ஆராயப்புகுகிறார் லெவி. ஓமர் ஷேக் ஞாபகமிருக்கிறதா ? தேஜகூ அரசு காந்தகார் விமான கடத்தலையடுத்து விடுவித்த பயங்கரவாதிகளில் ஒருவன் அவன். ஷேக் இலண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் படித்தவன்; செஸ் விளையாட்டு வீரன். இவனது பயங்கரவாத மாற்றத்தின் பின்னணி என்ன என்பதை அறிய முற்படும் லெவி ஒரு பெரும் வலைப்பின்னலையே கண்டடைகிறார். அமைதி மார்க்கத்தின் வெறுப்பியல் இதயத்தின் வெளிப்பாடு. யூத வெறுப்பின் உச்சங்கள் மறைக்கப்படாமல் பாகிஸ்தானில் பலதளங்களில் வெளிப்படுவதைக் காண்கிறார். அதிர்ச்சியடைகிறார். ஆனால் அதிர்ச்சியடைய வேண்டிய அவசியமேயில்லை என்பதுதான் உண்மை. இஸ்லாமாபாத் முதல் இடலாக்குடி வரையுள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகளிடமும் சரி அவர்களின் மூளைகளாக செயல்படும் ‘அமைதி மார்க்கம் குறித்த எளிய விளக்கங்களை ‘ காஃபீர்கள் அறிந்து கொள்ள முன் வைக்கும் பேராசிரியர்களிடமும் சரி, யூத வெறுப்பினை வெளிப்படுத்துவதில் எவ்வித தயக்கமும் இருந்ததில்லை. இஸ்லாமிய மார்க்கவாதிகளிடம் அறிவுத்தளத்தில் திமியாக சரணடைந்த காஃபீர்கள் விஷயத்தில் இது மிக நுட்பமாக வெளிப்படும்.சரி விஷயத்திற்கு வரலாம். அதற்கு முன்னால் சின்னதாக ‘ஒரு பழைய ஞாபகண்டா பேராண்டி ‘ என்பார்களே அது போல ஒன்று.

சில வருடங்களுக்கு முன் ஒரு அறிவுஜீவி பத்திரிகையில் நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். இஸ்லாமிய இறையியலில் இன்றியமையாததாக இருக்கும் யூத வெறுப்பியலைக் குறித்து. இதற்கு பல எதிர்வினைகள் வந்தன. அதனை அப்பத்திரிகை பிரசுரித்திருந்தது. பாஸிச நாஸி சக்திகளை எதிர்ப்பதை தன் உயிர் மூச்சாகக் கொண்டப் பத்திரிகை அது. எனவே என்னைப்போன்ற ஹிந்துத்வ பாசிஸ்ட் ஒருவனை எதிர்க்கும் எதிர்வினைகளைப் பிரசுரிப்பதும் அதன் தார்மிகக் கடமை. அதே சமயம் அந்த பத்திரிகையில் வெளிவந்த ஒரு கடிதத்தின் வரி என்னைக் கவர்ந்தது. யூதர்கள் எத்தனை மோசமானவர்கள் என்பதை ஹிட்லர் அழகாக விளக்கியிருப்பதாக ஒரு இஸ்லாமிய சகோதரர் எழுதியிருந்தார். ஹிட்லரின் எழுத்து இன்னமும் அதன் அழகியலுக்காக இஸ்லாமிய சகோதரர்களிடம் மதிப்பு பெறுவதை பிரசுரித்தமைக்கு உள்ளூர் பாசிஸ-நாசியிச எதிர்ப்பு இயக்கங்கள் அந்த அறிவுஜீவி பத்திரிகைக்கும் அதன் ஆசிரியருக்கும் என்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்களாக! ஆக, டேனியல் பேர்லின் கொலைக்காக பாகிஸ்தானுக்கு ஆராய வந்த லெவி பாகிஸ்தானில் வெளிப்படையாக விளங்கும் யூத வெறுப்பியலைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் அல்லவா அங்கேயே வரலாம். சிறிதே ஆராய்ந்தோமெனில் யூத வெறுப்பியலுக்கும் பாகிஸ்தானிய இயக்கத்திற்குமானத் தொடர்பினை நாம் கண்டடைவது ஒன்றும் கடினமானக் காரியமல்ல.

பாகிஸ்தானின் சிறந்ததோர் சமுதாய சிந்தனையாளராக அறியப்படுபவர் அக்தர் ஹமீது கான். கொமிலா மேம்பாட்டு செயல்திட்டத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர். அவரது கட்டுரைகள் அடங்கிய நூலொன்றினை 2002 இல் கராச்சியின் சிட்டி பிரஸ் வெளியிட்டது.ஹிட்லர் காலத்திய நீட்சேயின் தத்துவங்களுக்கு -குறிப்பாக நீட்சேயின் தத்துவ ஓட்டத்திற்கு மாறாக, நாஸி தத்துவவாதிகளால் பொருள் கொள்ளப்பட்ட ‘உயர் மனிதன் ‘ சிந்தனைக்கு- இஸ்லாமிய இளைஞர்களிடம் இருந்த ஈடுபாட்டினை அவர் பதிவு செய்கிறார். பாகிஸ்தானின் தத்துவ பிதாமகரான முகமது இக்பாலிடம் குறிப்பாக இந்த ஈர்ப்பினை அதிகமாகக் காணலாம். அல்லாமா மஷ்ராஹி ஹிட்லரின் அபிமானியாக இருந்தவர். என்ற போதிலும் இவையெல்லாம் வெறும் தத்துவார்த்த ஈடுபாடுகள்தாம். நாஸிகள் செய்த யூதப் பேரழிவினை இந்த ஈர்ப்புகள் அறிந்திருக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானிய இயக்கம் வளருகையில் குறிப்பாக 1930களின் இறுதிகள் தொடங்கி 1947 வரையில் ‘பாலஸ்தீனிய பிரச்சனை ‘யை பாகிஸ்தானிய இயக்கம் தம்மை வளர்க்க நன்றாகவே பயன்படுத்திக்கொண்டது. ‘Private and Confidential ‘ என முத்திரையிடப்பட்டு 7 அக்டோபர் 1937 தேதியிடப்பட்ட கடிதத்தில் இக்பால் ஜின்னாவிற்கு பின்வருமாறு யோசனை அளித்திருந்தார்: ‘பாலஸ்தீனியப் பிரச்ச்னை முஸ்லீம்களை உணர்ச்சியடைய வைத்துள்ளது. லீக்கின் வளர்ச்சிக்காக பெருமளவில் மக்கட் தொடர்பு கொள்ள நல்ல வாய்ப்பினை இது தருகிறது. லீக் இது குறித்து வலிமையானதோர் முடிவினை தனியாக தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கும் என்பதிலும் மக்களை ஈடுபடுத்தும் ஒரு செயல் திட்டத்தையும் வகுக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை. ‘ விரைவில் நாடு முழுவதும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. வெறியூட்டும் பேச்சுகளில் யூத-வெறுப்பு கொப்பளித்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் இவ்வெறுப்பியல் நாடகங்களூடே ஓர் உள்ளோட்டம் இருந்தது. முகமது இக்பால் அதை மிகவும் நன்றாகவே செய்தார். பாகிஸ்தான் கோரப்பட்ட பிரதேசங்களில் வாழும் ஹிந்துக்களை பண முதலைகளாகவும், பணத்தாசைக் கொண்டவர்களாகவும், வர்ணித்து யூத- ‘பாலஸ்தீனிய ‘ பிரச்சனைக்கு இணையாக பாகிஸ்தானிய கோரிக்கையை மாற்றினார். (28 மே 1937 தேதியிட்டக் கடிதம்) இவ்விதத்தில் யூதர்களுக்கு எதிரான வெறுப்பியலில் ஹிந்துக்களே உண்மையான பிராந்திய எதிரிகளாக முன்னிறுத்தப்பட்டனர். இதன் அடிப்படையாக விளங்கும் ‘மார்க்க இறையியல் ‘ பார்வையை விளக்க வேண்டியதில்லை. (எனினும் விளக்கம் தேவைப்படுபவர்களுக்கு, பாகிஸ்தான் வீதிகளில் கிடைக்கும், பாகிஸ்தானில் தடைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் லஸ்கர் இ தொய்பாவின் பத்திரிகையான ‘Greater Kashmir ‘, அண்மையில் ஹமாஸ் பயங்கரவாதி ஷேக் யாசீன் இஸ்ரேலில் கொல்லப்பட்டபோது தெளிவாகவே எழுதியது ‘ இக்கொலைக்கு நாங்கள் இந்தியாவில் பழி வாங்குவோம் ஏனெனில் யூதர்களும் ஹிந்துக்களும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ‘ )

பொதுவாக கிறிஸ்தவ ஐரோப்பாவிலிருந்து பல யூதர்கள் பாலஸ்தீனியத்திற்கு ஓடி வந்தனர். அப்போது பாலஸ்தீனியம் பிரிட்டிஷினரால் ஆளப்பட்டது. பல பிரிட்டிஷ் உயரதிகாரிகள் இனத்தூய்மை முதல் யூத வெறுப்பு வரையில் நாஸி இனவாதக் கோட்பாட்டுடன் இணக்க உறவு கொண்டவர்கள் என்பதுடன் அராபியர்களுடனும் நல்ல உறவு கொண்டவர்கள். இந்நிலையில் இங்கு யூதர்களின் குடியேற்றம் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனால் உள்ளூர் அராபியர்களுக்கு இவர்களின் குடியேற்றம் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் பெரும்பாலும் பாலைவனமாக இருந்த பாலஸ்தீனத்தில் யூதர்கள் தேசத்தினை உருவாக்கும் ஸியோனிஸ முயற்சிகள் வலிமையடைந்து வந்தன. முடிவில் இது பாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியினை அகற்றும் என்பதனை பிரிட்டிஷார் அறிவர். எனவே யூதர்களுக்கு எதிராக உள்ளூர் பாலஸ்தீனியர்களையும் சுற்றியிருந்த அராபியர்களையும் மதவாத அடிப்படையில் தூண்டிவிட பிரிட்டிஷார் முடிவெடுத்தனர். அல்லது இயல்பாகவே பிரிட்டிஷ் அதிகாரிகளிடமிருந்த யூத வெறுப்புணர்வே இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். 1921 இல் இஸ்லாமிய அடிப்படைவாத இறையியலாளனான முகமது அமின் அல் ஹுசைனி ஜெருசலத்தின் முஃப்தியாக பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்டார். ஜெருசலத்தில் பாழடைந்து அது வரை யாராலும் கவனிக்கப்படாமலிருந்த அல்-அகூசா மசூதியை உடனடியாக புதுப்பிக்கும் பணியில் அவர் ஈடுபட்டார், இதற்கான பணம் கணிசமான அளவு இந்தியாவிலிருந்து வந்தது என்பது கவனிக்கத்தக்கது. ஆக அல்-அகூசா மசூதியின் புனர்-நிர்மாணத்தின் மூலம் சர்வதேச பான்-இஸ்லாமிய இயக்கத்தின் வலிமையான உணர்ச்சியூட்டும் பிம்பமாக இதுவரை கவனிப்பாரற்றுக்கிடந்த இந்த மசூதி மாற்றப்பட்டது. (கோவிலாகவே செயல்பட்டு வந்த பாப்ரி அமைப்பு மசூதியாக இஸ்லாமிய கூட்டு பிரக்ஞையில் பதியவைக்கப்பட்ட இடதுசாரி-இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பித்தலாட்டம் நினைவுக்கு வரலாம்.) இக்கால கட்டத்தில் ஜெர்மானிய-பிரிட்டிஷ் அணிகள் எதிர் எதிராக அணி கொள்ள ஆரம்பித்தன. தொடக்கத்தில் ஜெர்மனியின் இனத்தூய்மை சட்டங்கள் பிரிட்டிஷாரால் ஆதரிக்கப்பட்டன என்றாலும் யூத எதிர்ப்பு ஜெர்மனியில் கொளுந்துவிட்டு எரிந்தது. இதன் விளைவாக முஃப்தி ஜெர்மனியின் பக்கம் சாயத்தொடங்கினார். முஃப்தியைப் பொறுத்தவரையில் யூதர்களின் எதிரி அவரது நண்பர். இதனால் 1936 இல் முஃப்தி ஈடுபட்ட யூத எதிர்ப்புக் கலவரத்தை காரணம் காட்டி பிரிட்டிஷ் அரசு அவரை முஃப்தி பதவியிலிருந்து நீக்கியது. அல் ஹூசைனி கலவரங்களை திட்டமிட்டு நடத்துவதில் தனித்திறம் கொண்டவராக இருந்தார். இதனைத் தொடர்ந்து அல் ஹுசைனி ஹிட்லருக்கு 15 முறை கோரிக்கைகளை அனுப்பினார். ஜெர்மனி போலவே பாலஸ்தீனிலும் ‘யூதப்பிரச்சனைக்கு ‘ தீர்வு காணப்பட வேண்டுமென அவர் கோரிக்கை வைத்தார். பின்னர் ஹிட்லரை நேரில் சந்தித்த அல் ஹுசைனி போஸ்னியாவில் வாழும் இஸ்லாமியர்களிலிருந்து 20,000 பேர் கொண்டதோர் பிரிவினை ஹிட்லரின் எஸ்எஸ் எனும் இராணுவ அமைப்பிற்கு அளிக்க முயற்சி எடுத்துக்கொண்டார். பொதுவாக ஹிட்லரின் யூத எதிர்ப்பு அனைவருக்கும் தெரியுமெனினும் ஹிட்லரின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான படுகொலை முகாம்கள் 1944 லில்தான் வெளிவந்தன. ஆனால் இக்கொடுமைகளை முன்னரேயே அறிந்திருந்த வெகுசில உள்வட்ட நாஸி தலைவர்களுள் ஒருவர் அல் ஹூசைனி என்பது தெரிய வரலாயிற்று. எய்க்மான், ஹிம்லர் போன்ற நாஸி தலைவர்களுடன் ஹூசைனி நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். அவர் ஆஸ்ட்விச் கொலைமுகாமைக் கூட பார்வையிட்டார் என எய்க்மானின் ஸ்லோவேக்கியாவுக்கான டெபுடி டெய்ட்டர் விஸ்லென்ஸி தெரிவிக்கிறார். 1943 இல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து யூதர்களுக்கு விசா அளித்து பாலஸ்தீனம் செல்லவிருந்ததை இரத்து செய்ததன் மூலம் அவர்கள் நாஸி கொலை முகாம்களுக்கு இலக்காக்கியவர் அல் ஹூசைனி. அல் ஹூசைனியின் இந்த ‘அமைதி மார்க்கப் பணியினால் ‘ விசா மறுக்கப்பட்டோருள் பல்கேரியாவிலிருந்து 4000 யூதக்குழந்தைகளும், ருமேனியாவிலிருந்து 1800 யூதக்குழந்தைகளும், ஹங்கேரியிலிருந்து 900 யூதக்குழந்தைகளும் அடங்குவர். 1944 இல் பெர்லின் வானொலியில் பேசிய முஃப்தி அராபியர்களை 11 மில்லியன் யூதர்களை தோற்கடிக்குமாறு அழைப்பு விடுத்தார். 1939 மக்கட்தொகை கணெக்கெடுப்பின் படி 17 மில்லியன் யூதர்கள் என்றிருக்க சரியாக ஆறு மில்லியன் யூதர்கள் குறைவாக ‘யூதப்படுகொலை ‘ வெளியே தெரியும் முன்னரே அல்-ஹூசைனி குறிப்பிட்டது அவருக்கு எத்தனை யூதர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது தெரிந்திருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது. எய்க்மான் கைதாக காரணமாகவிருந்த நாஸி போர் குற்றவாளிகளைத் தேடும் புலானாய்வாளர் சைமன் வியஸெந்தாலும் அல் ஹூசைனி அஸ்ட்விச் கொலைக்களத்தை பார்வையிட்டார் என்பதனை உறுதிப்படுத்துகிறார். 1944 இல் அல் ஹூசைனி நாடு திரும்பினார். இத்தகைய அல்ஹூசைனியைத்தான் முகமதலி ஜின்னா ஒரு சர்வதேச மார்க்க மாநாட்டில் கெய்ரோவில் சந்தித்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் ஜின்னா அல் ஹுசைனியுடன் கொண்டுள்ள நெருக்கத்தை பறை சாற்றுகின்றன. இச்சந்திப்பின் பாதிப்புகளை பின்னர் கல்கத்தா நவகாளி ஆகிய இடங்களில் வாழ்ந்த ஹிந்துக்கள் உணர முடிந்தது. 1944 இல் ஜெர்மனியிலிருந்து மீண்டும் பாலஸ்தீனம் திரும்பினார் அல்ஹூசைனி. இறுதி முயற்சியாக நாஸி கர்னல் கர்ட் வய்லாண்டர் என்பவனுடன் தொடர்பு கொண்டு நாஸி உதவியுடன் யூதர்களுக்கு எதிராக -தமது தனித்திறனான- பெரும் கலவரத்தை அல் ஹுசைனி திட்டமிட்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக அது முறியடிக்கப்பட்டது. (சுவாரசியமாக இதே ரீதியில் புது தில்லியிலும் ஒரு திட்டமிடல் நடந்தது. ஸ்டென் துப்பாக்கிகளும், பெருன் துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து போலீசால் கைப்பற்றப்பட்டது.) 1946 இல் இதே ரீதியாக தெளிவான திட்டமிடலுடன் கல்கத்தாவிலும் நவகாளியிலும் எல்லைப்பிரதேசங்களிலும் தமது கட்சியின் மூலம் ஹிந்துக்களுக்கு எதிரான படுகொலைக் கலவரங்களைத் தொடங்கினார் ஜின்னா. காந்திக்கு இங்கிலாந்தில் வட்டமேசை மாநாட்டின் போது உறைவிடமளித்தவரான மிஸ். மூரியல் லெஸ்டர் காந்தியின் கட்டளையின்படி நவகாளியின் கிரவுண்ட்-ஸீரோவை பார்வையிட்டார். தமது அறிக்கையின் போது பாகிஸ்தானிய இயக்கத்தின் திட்டமிடலையும் கருணையின்றி அப்பாவி ஹிந்துக்களை குடும்பங்களாக கொலைசெய்து தீர்த்தமையையும் குறித்து கூறுகையில் ‘ சிறந்து திட்டமிட்டு இயங்கிய ஹிட்லரிய வலைப்பின்னல் அமைப்பு ‘ என பாகிஸ்தானி இயக்கத்தை கூறுகிறார். ஜின்னா-அல் ஹூசைனி தொடர்பு மிகத்தெளிவாகவே தனிப்பட்ட நட்பிற்கும் அப்பால் பான்-இஸ்லாமிய எதிரிகளைத் துடைத்தொடுக்கும் நடைமுறை வழிகளையும் பகிர்ந்துள்ளதெனவே தெரிகிறது. 1945 இல் குரோஷியாவிலும் ஹங்கேரியிலும் படுகொலைகளில் ஈடுபட்ட கொலைப்படைகளை நாஸிகளுக்கு திரட்டிக் கொடுத்தமைக்காக அல் ஹூசைனிக்கு எதிராக யூகோஸ்லாவியா நடவடிக்கை எடுக்க முயற்சித்தது. அவ்வாறே பிரான்ஸும் முயன்றது. ஹூசைனி அதற்குள் பாலஸ்தீனத்திற்கு வந்துவிட்டார். 1948 இல் இஸ்ரேலுக்கு எதிரான அல் ஹூசைனியின் முயற்சிகள் வீணானதைத் தொடர்ந்தும் அவரது நாஸி தொடர்புகள் வெளியானது தொடர்ந்தும் அவர் பிரபலமிழந்தார் எனினும் பாகிஸ்தானில் அவர் வீர நாயகராகவும் யூத எதிர்ப்பாளராகவும் புகழப்பட்டார். 1951 இல் நடைபெற்ற சர்வதேச மொத்தமார் மாநாட்டிற்கு அல் ஹூசைனி தலைமை தாங்கி அரியணை போன்றதோர் ஆசனத்தில் அமர்ந்திருக்க அடக்க ஒடுக்கமாக பாகிஸ்தானிய அன்றைய பிரதமர் லியாகத் அலிகான் பணிவுடன் உரையாற்றுவதைக் காணலாம். ஆக, பின்வரும் இணைத்தன்மைகள் மூலமாக யூதவெறுப்பியலினை எவ்விதமாக பாகிஸ்தானிய இயக்கம் கொண்டிருந்தது என்பதனை விளங்கிக்கொள்ளலாம்:

அ) தன்னை ஓர் முற்போக்கு இயக்கமாகக் காட்டிக் கொள்ள ஹிந்துக்கள் நிலவுடமையாளர்கள், பணமுதலைகள் என்பது போன்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்டனர். அவ்விதமாகவே யூதர்கள் குறித்த மன பிம்பமும் உருவாக்கப்பட்டு இவ்விரு இனங்கள் மீதுமான தாக்குதல்கள் நியாயப்படுத்தப்பட்டன.

ஆ) திட்டமிட்ட படுகொலைக் கலவரங்களை அரசியல் ராஜதந்திரத்துடன் இணைத்து எதிரிகளை பணிய வைப்பதனை அல் ஹூசைனியும் சரி ஜின்னாவும் சரி இலாவகமாக கையாண்டனர்.

இ) பாலஸ்தீனிய ஜிகாதி அமைப்புகளின் யூதவெறுப்பியலும் சரி தெற்காசிய ஜிகாதி அமைப்புகளின் ஹிந்து வெறுப்பியலும் இஸ்லாமிய இறையியல் அடிப்படையில் உருவானவை. பாகிஸ்தானில் நாஸித் தொடர்பு கொண்ட அல் ஹூசைனியின் பிரபலமும் பாகிஸ்தானிய பிதாமகனான ஜின்னா அவர் மீது கொண்டிருந்த மரியாதையும் இத்தொடர்பின் இயல்பான வெளிப்பாடேயாகும். லஸ்கர் ஈ தொய்பாவின் இதழில் இது ‘ஹிந்துக்களும் யூதர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ‘ எனக்கூறுவது ஜின்னா ஏற்றுக்கொண்டதோர் கருத்தேயாகும்.

ஈ) பின்னாளில் வங்கதேசத்தில் ஹிந்து வீடுகள் நாஸி முறையில் குறிப்பிட்ட வர்ணமடிக்கப்பட்டு இராணுவத்தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதும் அண்மையில் அங்கு நடந்தேறும் ஹிந்து வனவாசி, தலித் இனத்தினருக்கு எதிரானக் கொடுமைகளும் புத்த வனவாசிகள் இனமழிக்கப்படுவதும் தெற்காசிய இஸ்லாமிய ஜிகாத் இயக்கத்தின் நாஸி தன்மைகளுக்கு சான்று பகர்பவையாகும்.

உ) பாலஸ்தீனிய/தெற்காசிய ஜிகாதி அமைப்புகளுக்கு தார்மீக ஆதரவு அளித்துவரும் இன்றைய இந்திய இடதுசாரி இயக்கத்தினர் தம்மை ஆரியராக கருதுபவர்கள். மாறாக ஹிந்து தேசியவாதிகள் ஆரிய எனும் வார்த்தைக்கு இனவாதப்பொருள் இல்லை என்பதுடன் ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டினை எதிர்ப்பவர்கள். எனவே இந்திய இடதுசாரிகளின் பாலஸ்தீனிய ஜிகாதி ஆதரவு அவர்களது தலித்-யூத வெறுப்பியலிலிருந்து வெளிப்படுவதாக இருக்கலாம். தமிழ்நாட்டிலும் பங்களாதேஷிலும் தெற்காசிய ஜிகாதி அமைப்புகள் பல பிற்பட்ட-தலித் சமுதாயத்தினரைச் சார்ந்த ஹிந்து அமைப்புத்தலைவர்களையே கொன்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இடதுசாரி மகளிரணி தலைவரான பிருந்தா காரட்டின் உறவினர்களால் நடத்தப்படுவதும் இடதுசார்புடையதுமான என்டிடிவி கந்தகார் விமானக்கடத்தலின் போது இந்திய அரசாங்கத்துக்கு உணர்ச்சி பூர்வ நெருக்கடியை அளித்ததும் அன்வர் ஷேக் விடுதலையாக ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

எனவே நம்மூர் கவிதாயினி நமக்களிக்கும் பாகிஸ்தானின் எளிய இனிய அறிமுகமும் சரி இதர பேராசிரியர்கள் அளிக்கும் அமைதி மார்க்க எளிய அறிமுகங்களும் சரி காஃபீர்களுக்கு அவர்களின் மகத்தான பிரம்மாண்ட மார்க்கப்புலத்தின் அனைத்து பரிமாணங்களையும் அறிமுகப்படுத்தவில்லையென்றே தோன்றுகிறது. ஆகவே இச்சிறு கட்டுரையை என் போன்ற காஃபீர்களுக்கு ‘மார்க்க ஒளியை ‘ (of which i can do without) கொணரப் பாடுபடும் அப்பெருமக்களுக்கே சமர்ப்பிக்கிறேன். Just to say we know what you are.

-அரவிந்தன் நீலகண்டன்

மேலதிக விவரங்களுக்கு

1. பெர்னார்ட் ஹென்றி லெவி , ‘Who killed Daniel Pearl ? ‘, ரூபா பதிப்பகம்.

2. ஜின்னாவின் முஸ்லீம் லீக்கின் திட்டமிட்ட கலவரங்களின் நாசித்தன்மை குறித்து காந்தியின் அருமைச்சீடர்களில் ஒருவரான கிருபளானி அவர்கள் எழுதிய இந்திய அரசால் வெளியிடப்பட்ட ‘Gandhi His life and thought ‘ இல் 253-300 பக்கங்களில் காணலாம். டெல்லியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டமைக் குறித்தும் இதில் காணலாம்.

3. Snorri G. Bergsson, ‘The Mufti and the Holocaust ‘ Chapter-5 இணைய முகவரி: http://notendur.centrum.is/~snorrigb/mufti5.htm

4. ‘Nazis planned Palestine subversion ‘, நாஸிகளுடன் இணைந்து அல் ஹூசைனி உருவாக்கிய கலவரத்திட்டம் குறித்த பிபிஸி இணைய முகவரி: http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/1423589.stm

ஃ அல் ஹூசைனியின் ஹிட்லருடனான புகைப்படம் – நன்றி: Jewish virtual library

ஃ அல் ஹூசைனியின் ஜின்னாவுடனான புகைப்படங்கள்: பாகிஸ்தானிய இணைய தளங்களிலிருந்து எடுக்கப்பட்டவை

—-

hindu_infidel@yahoo.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்