‘இண்டியாவின் ‘ இறக்குமதி பிரதமரின் திறமை

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

அரவிந்தன் நீலகண்டன்


இந்திரா காந்தி தேசிய கலை மையம் (IGNCA) நவம்பர் 19 ஆம் தியதி 1985 இல் ராஜீவ் தலைமையிலான இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. அதற்கு மார்ச் 24 ஆம் தியதி 1987 இல் 134 கோடி ரூபாய் ராஜீவின் அமைச்சரவையின் ஒப்புதலின் மூலம் இந்திய அரசால் அளிக்கப்பட்டதுடன் புது டெல்லியின் மையத்தில், இந்தியாவிலேயே மிக அதிக விலையுடைய இடத்தில் – குடியரசு தலைவர் மாளிகைக்கும், இந்தியா கேட்டுக்கும் நடுவில்- 27 ஏக்கர்கள் இந்த மையத்திற்கு அளிக்கப்பட்டது. ராஜீவ் காந்தியால் இந்திய அரசு நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த மையத்தின் நோக்கம் கலையினை ஆராய்வது என கூறப்பட்டது. இதற்கு இந்திய அரசின் பெரும் நிதி உதவி இருப்பதால் இந்த கலை மையத்திற்கான அறங்காவலர் அமைப்பு ஒப்பந்த விதிமுறைகள் (Trust Deed) இந்திய அரசின் தலையீட்டிற்கான வசதியுடன் உருவாக்கப்பட்டது. உதாரணமாக: இந்த மையத்திற்கான டிரஸ்ட்டின் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை கண்காணிக்கும் உரிமை நம் குடியரசுதலைவருக்கு உண்டு; இந்த டிரஸ்ட்டின் நிதி தணிக்கை இந்திய அரசின் ஆடிட்டர் ஜெனரலால் நடத்தப்பட வேண்டும்; இந்த டிரஸ்ட்டின் உறுப்பினர்களை இந்திய அரசாங்கம் தேர்வு செய்யலாம் என்பதுடன் இந்த டிரஸ்ட்டின் செயலர் இந்திய அரசால் நியமிக்கப்படலாம் என்பன போன்றவை. மேலும் இந்த டிரஸ்டின் விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படுவதற்கு முன்பு அதற்கு இந்திய அரசின் ஒப்புதல் வேண்டும் என்பதும் இந்த விதிகளில் ஒன்று. அன்றைய இந்திய அரசின் பிரதமரான ராஜீவ்காந்தி இந்த டிரஸ்டின் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் 1991 இல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதும், இந்த கலை மைய டிரஸ்ட்டின் தலைவராக பொறுப்பேற்றவர் வேறு யாருமல்ல, ஆண்டானியா மைனோ அதாவது நம்மூர் காங்கிரஸ்காரர்களின் ‘அன்னை ‘ சோனியா காந்திதான். ஆக இந்திய அரசால் நிதி உதவி அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நாட்டின் மிக அதிக சொத்துடைய ஒரு டிரஸ்ட், ஒரு குடும்பத்தின் ஏகபோக உரிமை என்பது போல நடத்தப்பட்டது. 1995 காங்கிரஸ் ஆட்சியின் போது இந்த டிரஸ்ட்டின் சார்பில் சோனியா காந்தியால் ஒரு கடிதம் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டது. அதன் படி இந்த டிரஸ்ட்டின் விதிமுறைகளில் ‘சிறிய மாற்றங்கள் ‘ (alterations) செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஜூன் 2 1995 அன்று காங்கிரஸ் அரசின் மத்திய மனிதவள அமைச்சரான மாதவ்ராவ் சிந்தியா அவர்கள் இந்திய அரசு இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டதை சோனியா அம்மையாருக்கு ‘மகிழ்ச்சியுடன் ‘ தெரிவித்தார். இந்த ‘சிறிய மாற்றங்கள் ‘ என்ன தெரியுமா ?

1. சோனியா காந்தி தன் வாழ்க்கை முழுமைக்குமாக இந்த டிரஸ்ட்டின் தலைவராக இருப்பார்.

2. இந்த டிரஸ்ட்டின் உறுப்பினர்களை நியமிக்க இந்திய அரசிற்கான அதிகாரம் முழுமையாக நீக்கப்படுகிறது.

3. இந்த டிரஸ்ட்டின் நிதி நடவடிக்கைகளை கண்காணிக்க மறுஆய்வு கமிட்டி அமைக்க இந்திய குடியரசு தலைவருக்கான உரிமை நீக்கப்படுகிறது.

சுருக்கமாக சொன்னால் இந்திய அரசின் நிதி உதவியுடன் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு டிரஸ்ட் மிக அழகாக ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக ஒரு குடும்ப சொத்தாக மாற்றப்படலானது. இந்த பித்தலாட்ட மாற்றங்களை அட்டர்னி ஜெனரல் செல்லுபடியாகாது என மறுத்த போதும் காங்கிரஸ் அரசு விஷயம் வெளிவராமல் அமைதி காத்து ‘அன்னை ‘ சோனியாவையும் காத்தது. இந்நிலையில் பாரதிய ஜனதா அரசு பதவிக்கு வந்த பின்னரே இந்த அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதி மன்றம் இந்திய அரசினை எவ்வாறு இந்த டிரஸ்ட் ஒரு தனியார் டிரஸ்ட்டாக மாற்றப்பட்டது என அறியுமாறு பணித்ததால் திருமதி சோனியா காந்தி அவரது ‘வாழ்க்கை முழுவதுமான டிரஸ்ட் தலைவர் ‘ எனும் பதவியிலிருந்து நீக்கப்பட்டார், அவரை வெறும் டிரஸ்ட்டியாக மட்டுமே தொடர அனுமதிக்க முடிவாயிற்று. இவ்வாறு சோனியாவை ‘வாழ்நாள் தலைவர் ‘ பொறுப்பிலிருந்து நீக்கியதை தடுக்குமாறு கோரி தொடரப்பட்ட வழக்கினை ஜனவரி 11, 2000 அன்று டெல்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

தான் பிரதமராகமலே, ஆளும்கட்சியில் எந்த பதவியையும் வகிக்காமலே, இத்தகைய மகத்தான தில்லுமுல்லுகளை நடத்தும் திறன் வாய்ந்த அம்மணி ஆண்டானியோ மைனோவை பிரதமராக்கி, இத்தகைய திறமைகள் ஏதுமற்றவரான வாஜ்பாயை தோல்வியை தழுவ வைத்த இந்திய மக்களுக்கு வாழ்த்துக்கள்.

—-

hindoo_humanist@lycos.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்