வாரபலன் – மறுபடி எழுத்து ப்ராப்தி

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

மத்தள ராயன்


மேட ராசிக்காரர்கள் (எல்லாப் பாதமும்) இன்னும் பந்த்ரெண்டு மாசம் சகல நன்மையும் பெறுவார்கள். அவர்கள் வாரபலன் எழுதுவதைத் தொடர்ந்தால் நூதன எலக்ட்ரோனிக் உபகரணப் ப்ராப்தி வர்த்திக்கும் என்று ஆஸ்தான ஜோசியர் நாட்டின்கல் நம்பூத்ரி சொன்னதால், மறுபடி வாரபலன் தொடர்கிறது.

******************************************************************

நவம்பர் மாதச் செய்திகளில் (மட்டும்) இந்து ராம் அதிகம் அடிபட்டதால் பத்திரிகை விற்பனை அதிகரித்திருக்கிறதா ?

‘நாலு இந்து. ரெண்டு எக்ஸ்பிரஸ். ஒரு தினமணி. ஒரு ஆந்திரப் பிரபா. இந்த வருஷம், போன வருஷம், அதுக்கு முந்தின வருஷம் எல்லாம் இதேதான் ‘.

எட்டுத்தொகையான எங்கள் குடியிருப்பில் பேப்பர் போடுகிறவர் விட்டெறிந்துவிட்டு ஓடுகிற அவசரத்தில் சொன்ன கணக்கு இது.

சாரிட்டி மட்டும் இல்லை, சாம்பிள் சர்வே கூட வீட்டில் தான் தொடங்குகிறது.

போன மாதச் செய்திகளில் அடிபடாமல் ஓரத்தில் தலைகாட்டிய இன்னொருவர் தோழர் லெனின். அக்டோபர் புரட்சிக்கு வருடா வருடம் நினைவு தினம் அனுஷ்டிக்கும்போது மாஸ்கோவில் லெனின் நினைவகம் பற்றி ஒரு வரியாவது எங்கேயாவது படிக்கக் கிடைக்கும். கம்யூனிசமும் வேணாம், காம்ரேடும் வேணாம் போங்கப்பா என்று ரஷ்யர்கள் ஓட்காவைக் கோப்பையில் நிறைத்துக் கொண்டு விலகிப் போனாலும், ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல் லெனின் உடலை அந்த நினைவகத்தில் தான் இன்னும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.

இந்த வருடம் தீபாவளிக்கு இரண்டு நாள் கழித்து சாவகாசமாக லெனினுக்கு விசேஷ எண்ணெய்க் குளி. புது உடுப்பு வேறே அணிந்திருக்கிறார் ஜாம்ஜாமென்று. அடுத்த புதுச் சொக்காய்க்கு இன்னும் மூணு வருஷம் காத்திருக்க வேண்டும் விளாதிமிர் இலியிச் லெனின்.

லெனினுக்கு லால் சலாம் சொல்லி அப்பாலே போனால் கூர்க்கா ரெஜிமெண்ட் குறுக்கே வருகிறது. இங்கிலாந்து ராணுவத்தில் கூர்க்கா படைக்குக் கர்னலாக இருக்கப்பட்டவர் நவம்பரில் ஒன்பது நாள் இங்கே வந்து உள்ளூர் கூர்க்காப் படையைச் சந்தித்து உரையாற்றியிருக்கிறார்.

எலிசபெத் ராணியம்மாளின் புத்ரன் சார்லஸ் இளவரசர் தான் அந்தக் கூர்க்கா சேனைக் கர்னல்.

‘ஹூம் .. என்னாத்தைச் சொல்ல .. ரெண்டு கூர்க்கா ரெஜிமெண்ட் வச்சிருந்தோம். கட்டுப்படியாகலே. இப்போ எங்க ஊர்லே ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுதான். ‘

சார்லஸ் பெருமூச்சு விட, ‘இங்கே நாங்க முப்பத்தெட்டுப் படைப் பிரிவு ‘ என்று நம் ராணுவ வீரர் நெஞ்சு நிமிர்த்திச் சொல்லி இருக்கிறார்.

‘நோ ஒன் ரைட்ஸ் டு கர்னல் ‘ என்று கதை எழுதிப் போனார் காப்ரியா மார்க்வஸ். இங்கிலாந்தில் ‘நோ ஒன் பேய்ஸ் கர்னல் ‘ போலிருக்கு. பவுண்ட் ஸ்டெர்லிங் என்ன மரத்திலா முளைக்கிறது ?

ஆகவே, மடியில் முடிந்து கொடுத்த பணத்தைப் பார்த்துச் செலவு பண்ணுப்பா என்று எலிசபெத்தம்மா சொன்னதாலோ, அல்லது அவருக்குப் படியளக்கிற பிரதமர் டோனி பிளேர், கருவூலத் தலைவர் கார்டன் ப்ரவுன் ஆகிய மாட்சிமை தாங்கிய தொழில் கட்சித் துரைகள் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டதாலோ என்னமோ, சார்லஸ் டெல்லியில் ஹோட்டலுக்கெல்லாம் போகவில்லை. பிரிட்டாஷ் தூதர் வீட்டு மாடியிலேயே விருந்தாளியாகத் தங்கிக் கொண்டார். அப்படியே ராஜஸ்தான் போய் ஓசியில் ஜோத்பூர், ஜெய்ப்பூர் அரச குடும்பங்களின் விருந்தாளியாக அரண்மனையில் ஒண்டுக் குடித்தனம்.

மும்பையில் மட்டும் யார் தயவிலோ, தாஜ் ஹோட்டல் வாசம். அங்கே ஐஸ்வர்யா ராய் படத்துக்குக் கிளாப் அடித்து ஆரம்பித்து வைத்தார். சிக்ஸ் சிக்மா ஒழுங்கு முறைச் சேவையை லட்சக் கணக்கான மும்பாய்வாசிகள் தினசரி அனுபவிக்கும்படி அலுவலகத்தில் வீட்டுச் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து, கேரியர் எடுத்துப் போகிற டப்பாவாலாக்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார். அப்போது பார்த்து யாரோ காதருகில் ‘ ‘பட்லர் ‘ என்று சொல்லி மூடைக் கெடுத்துப் போட்டார்கள்.

போன வருஷம் செய்தியில் அடிபட்டவர் பக்கிங்ஹாம் அரண்மனை பட்லர் பால் பெர்ரல். அவர் மேல் அரச குடும்பம் போட்ட வழக்கு வாபஸான குஷியில் பட்லர் தன் நினைவலைகளைப் புத்தகமாக எழுதி வெளிவந்த செய்திதான் இளவரசரை மூட்-அவுட் ஆக்கியது.

சார்லஸ் இளவரசரின் காலம் சென்ற, விவாகரத்தான மனைவி டயானாவின் விசுவாச ஊழியரான பட்லர் அரண்மனை ரகஸ்யத்தை அங்காடிப் பரஸ்யமாக்கி இறக்கி விட்ட புத்தகத்துக்கு பிரிண்ட் ஆர்டர் எழுபதாயிரம் காப்பி இங்கிலாந்தில். நாலு லட்சம் காப்பி அமெரிக்காவில்.

சார்லஸின் பிள்ளைகளான இளம்-இளவரசர்கள் வேண்டாம்ப்பா பட்லர், ‘மடையர் அறிவரோ மன்னர்தம் மேன்மை ‘ என்று சட்டையைப் பிடித்து இழுத்தாலும், விடேன் தொடேன் என்று காசே குறியாக பால் பேரல், தன் புத்தகத்தில், புருஷன் பெண்டாட்டி சண்டையை எல்லாம் நிறையத் தண்ணீர் விளம்பி எடுத்து விட்டிருக்கிறார் என்று தெரிகிறது. போதாக்குறைக்கு கூடுதல் கவர்ச்சியாக சார்லஸ் மேல் ஓரின வன்புணர்ச்சிப் பழி வேறு.

நம்ம ஊரில் மே மாதம் தொண்ணூத்தெட்டில் மேஜர் ஆன அற்புத விஷயத்தைச் சொன்ன சினிமாக்காரர் புத்தகம் போட்டால், அது ஜான் மேஜர், மேஜர் சுந்தர்ராஜன், மேஜர் ஜெனரல் கரியப்பா என்று என்ன விஷயம் பற்றியதாக இருந்தாலும் சராசரிக்குப் பத்துப் பிரதியாவது அதிகம் விற்கும் என்பது ஐதீகம். அதே போல், யாரையாவது கே அல்லது லெஸ்பியன் என்று சொன்னால் அவர் பற்றின எழுத்து ஐரோப்பாவில் பிய்த்துக் கொண்டு போகிறதாகக் கேள்வி.

எங்க ஊரில் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு எந்தத் தடையும் எப்பவுமே கிடையாது என்று இறுகின மேலுதட்டைக் கொஞ்சம் போல் திறந்து வார்த்தையருளி பிரிட்டாஷ் அரசு மார்தட்டிக் கொள்ளும் . அது சரித்திரத்திலேயே முதல் தடவையாக நெருப்புக்கோழி அவதாரம் எடுத்து சட்ட மணலில் தலையைப் புதைத்துக் கொண்டு பிரிட்டாஷ் பத்திரிகைகளையும் கட்டாயப்படுத்த, கிட்டத்தட்ட சார்லஸ் – பட்லர் விவகாரம் தணிக்கை செய்யப்பட்டு, சபையில் பேசத் தகுதியில்லாத விஷயமானது.

இங்கே மும்பாயில் ஐஸ்வர்யா ராயிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்ட கையோடு, பட்லர் மனதைக் கஷ்டப்படுத்த, சார்லஸ் ஓமனுக்கு ஓடினார்.

சார்லஸுக்குக் காசு செலவழிக்காத பிளேர் ஈராக்கில் தன் கூட்டுக் களவாணியான அமெரிக்க அதிபர் புஷ் நாலு நாள் விஜயமாக லண்டன் வர, அந்த மனுஷரின் பாதுகாப்புக்கென்று பணத்தை வாரி இறைத்தார். அரசாங்கம் இந்த வகையில் செலவழித்த பணத்தை வைத்து பத்தாயிரம் பிரிட்டாஷ் போலீஸ்காரர்களுக்கு ஒரு வருடம் சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி, ஓவர்டைம், சாப்பிட்டுப் பல் குத்தக் குண்டூசி எல்லாம் கொடுக்கலாம்.

ஆனால், பிரிட்டாஷ் போலீஸ்காரர்கள் அவர்களோடு கூட வேலை பார்க்கிற வெள்ளைத் தோல் அல்லாத ஆப்பிரிக்க இன, பாக்கிஸ்தானி, சர்தார்ஜி சகாக்களை போலீஸ் வாழ்க்கையில் ஓரத்துக்கே ஓட வைக்கிறதில் மும்முரமாக இருப்பதால் இதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் லாட்டியைச் சுழற்றிக் கொண்டு புஷ்ஷுக்கு பாதுகாப்பு கொடுக்கப் போனார்கள்.

அவரும் பக்கிங்ஹாம் அரண்மனையில் பிணைக்கைதி போல் தங்கிக்கொண்டு ஜன்னல் வழியே எக்கி எக்கிப் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு லட்சம் பேர் வெளியே கூடி அவருடைய பொம்மையை ஈராக்கில் சதாம் உசைன் சிலையைத் தரையிறக்கியதுபோல் கீழே இழுத்துப் போட்டு, ‘ ‘புஷ், திரும்பிப் போ ‘ ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார்கள். ‘ ‘நல்ல வேளை, இங்கிலாந்தில் எண்ணெய் வளம் இல்லை. ஆண்டவனுக்கு நன்றி ‘ என்று அவர்கள் பிடித்திருந்த போஸ்டர் புஷ் கண்ணில் பட்டதோ என்னவோ.

புஷ் விஜயம் வில்லங்கம் இல்லாமல் முடிய முயற்சி எடுத்துக் கொண்ட லண்டன் மேயர் கென் லிவிங்க்ஸ்டனைத் திரும்பத் தொழிற்கட்சிக்கு இழுக்கப் பிரதமர் படாதபாடு பட்டுக் கொண்டிருப்பதையோ, இந்தியா ரிடர்ண்ட் இளவரசரையோ, அவருக்கு ஆசனவாய் வலியான அரண்மனை பட்லரையோ, டெளனிங் தெரு இட்லரையோ, வந்தார் – போனார் புஷ்ஷையோ இதற்கு மேல் லட்சியம் செய்யவில்லை பிரிட்டாஷ் மக்கள்.

அவர்கள் சோஹம் கொலை வழக்கு விசாரணையில் மூழ்கி இருக்கிறார்கள். சென்ற ஆண்டு ஜூலையில் நடந்து நாட்டையே உலுக்கிய இரண்டு சிறுமிகளின் கொடூரமான கொலை பற்றிய அந்த வழக்கைத் தொடர்ந்து கவனித்து வருகிறவர்களில் நானும் ஒருத்தன். அடுத்த வாரம் அது பற்றி.

***************************************************************

அப்புறம் வாங்கலாம், அப்புறம் வாங்கலாம் என்று ரொம்ப நாள் தள்ளிப்போட்ட ‘தனிப்பாடல் திரட்டு ‘ (இரண்டு புத்தகம்) அண்மையில் புக்லாண்ட் போனபோது கண்ணில் பட வாங்காமல் இருக்க முடியவில்லை.

எனக்கு என்னவோ தனிப்பாடல் என்றால் காளமேகப் புலவர்தான் என்று நினைப்பு பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது எலுமிச்சம்பழத்துக்கும் சிவனுக்கும் சிலேடை, தேங்காய்க்கும் சிவனுக்கும் சிலேடை, எண்ணெய்க்கும் பாம்புக்கும் சிலேடை என்று தனிப்பாடல் பகுதியில் தமிழ்ப்பாடப் புத்தகத்தில் போட்டு உருவேற்றி உருவேற்றி ஏற்பட்ட நினைப்பு அது.

புத்தகத்தைப் பிரித்தால் திரும்பவும் காளமேகப் புலவர்.

அவர் திருவானைக்கா பெரிய- சிறிய வீட்டில் தூங்கும்போது கூட லப் டப் என்று இல்லாமல் மா முன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர் என்றுதான் மூச்சு விட்டுக் கொண்டிருந்திருப்பார் என்று தோன்றுகிறது.

கிட்டத்தட்ட வெண்பா யந்திரம் போன்ற அந்த அசாத்தியத் திறமையை ஆளாளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தென்னைமரத்துக்கும் கணிகைக்கும், வெற்றிலைக்கும் வேசிக்கும் சிலேடை என்றெல்லாம் பாட வைத்து அலுத்தோ என்னமோ ‘நல்ல வார்த்தை ‘யில் தொடங்கி ‘நஞ் சு(ண்)ணி ‘ என்று இன்னொரு ‘நல்ல வார்த்தை ‘யில் முடிய சிவபெருமானைப் பற்றி வெண்பா பாட வைத்திருக்கிறார்கள். பாவம் முக்கண்ணன்.

காளமேகப் புலவரைக் கடந்தால் கம்பர், ஒட்டக்கூத்தர், ஒளவையார் என்றெல்லாம் போட்டு ஏகப்பட்ட பாடல்கள். இவற்றையெல்லாம் இன்னின்னார் தான் எழுதியது என்று எப்படிக் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை.

அப்புறம் (உத்தேசமாக) பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பது வரை எழுதப்பட்ட விடலைக் கவிதைகள் ஏகத்துக்குக் கிடைக்கின்றன.

எல்லாம் பெண் உடலைப் பற்றியவை. தனத்தைக் கொடுத்தால் தனத்தைத் தருவாயா என்ற விசாரிப்புகள். மூன்று குடத்தோடு நடந்துபோனால் இடுப்பு எப்படித் தாங்கும் என்று கரிசனம். முதுகைத் திருப்பி நின்றால் எப்படிப் போரிட முடியும் என்று ஏக்கக் குரல். வாழை மரங்கள். தேன் கூடு. திருமால் பெண் உருவம் எடுத்ததால், வைணவர்கள் நெற்றியில் பாலுறுப்பை வரைந்து கொண்டிருக்கிறார்கள் என்று எக்காளம். வாரி விட்டிருக்கிறார்கள்.

புலவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. தமிழ்ப் புலமை சங்க காலத்தில் இருந்த போதும், காப்பியக் காலத்தில் இருந்தபோதும் அப்புறமும் அதே தரத்தில் தான் இருந்திருக்க வேண்டும்.

சங்க காலத்திலும் அதற்கு அப்புறமும் மாமன்னர்கள் புலவர்களுக்குப் புரவலராக இருந்தார்கள். அவர்களைப் பற்றி என்ன விமர்சனம் இருந்தாலும் ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்கள் எல்லோரும் படிப்பறிவு நிரம்பியவர்கள். ரசனை உணர்வும் அதிகம் தான். அந்த மன்னர்கள் ஆதரித்துப் பாட வைத்த புலவர்களின் கவிதையிலும் அதற்குத் தீனிபோட்ட செழுமையான கவித்துவம் வெளிப்பட்டது.

சிங்கம் தேய்ந்து கட்டெறும்பான பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் குறுநில மன்னர்கள், குறுகுறு நில மன்னர்கள், ஜமீந்தார்கள் தான். இவர்களில் பலருக்கும் கல்வியறிவு கிஞ்சித்தும் கிடையாது. ஒரு சின்ன சமஸ்தானம். ஏழெட்டு ஏமாந்த பெண்களை வளைத்துப்போட்டு அந்தப்புரம். வேலை வெட்டி எதுவும் கிடையாது. பேச்சும் நினைப்பும் எல்லாம் கொக்கோகம்.

ஏழைப் புலவன் காசுக்குப் போய் நின்றால் யோனியைப் பற்றிப் பாடு என்று இந்த மயிரரசர்கள் சொல்ல, அவன் நாலு நாளாவது பட்டினி இல்லாமல் காலம் தள்ளலாமே என்று கற்பனையை அவனுக்குக் கைகாட்டப்பட்ட திக்கில் செலுத்த மேற்சொன்ன பாடல்கள்.

இவற்றுக்கு நடுவே அங்கங்கே சில நல்ல பாடல்களும் கண்ணில் படுகின்றன என்பது உண்மை.

******************************************************************

நானும் வரேன். வழியிலே இறக்கி விட்டுடுங்க.

ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது மனைவி சொன்னாள்.

ஏம்மா, ஆப்பீஸ் போகலியா ?

சிநேகிதி வீட்டுலே அவ தங்கையைப் பொண்ணு பார்க்க வர்றாங்க. அது முடிஞ்சு கிளம்பிடுவேன்.

கடியாரத்தைப் பார்த்தேன். காலை ஆறரை மணி.

இந்தப் பெண்ணு பார்த்தல் என்பது ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் சொஜ்ஜி, பஜ்ஜி, ரவாகேசரி, சலமேலரா ஓ ராகவா, மல்லிகைப்பூ, எவர்சில்வர் தட்டில் சர்க்கரை, ஃபில்ட்டர் காப்பி சகிதம் அரங்கேறுகிற சமாச்சாரம் இல்லையோ.

காரில் வரும்போது இவளைக் கேட்டேன்.

என்ன பண்றது ? பிள்ளை ஸ்டேட்ஸிலே இருக்கானாம். ஃபோட்டோவைப் பார்த்துட்டே ஓ.கேன்னுட்டான். பெண்ணும்தான். பிள்ளையோட அப்பா அம்மா குடும்பத்தோட வராங்க பெண்ணு பார்க்க. சும்மா ஒரு ஃபார்மாலிட்டிக்குத்தான்.

சரிதான். அப்போ, சாவகாசமா ராத்திரி டிவியிலே சஹானா முடிஞ்சு வச்சுக்கலாமே ?

பெண்ணும் கம்ப்யூட்டர் கம்பெனி தான் பிள்ளை மாதிரி. ஒரு வருஷமா வேலைக்குப் போறா. வருஷம் முன்னூத்து அறுபத்தஞ்சு நாளும் வேலைக்கு வரச்சொல்லி உசிரை வாங்கறாங்களாம். காலையிலே கிளம்பினா, ராத்திரி பத்து மணி ஆகிறதாம் திரும்ப. அதான் இப்படிப் பொழுது ஒருபக்கம் விடிஞ்சதும் பெண்ணு பார்த்தல். வண்டியை நிறுத்துங்க. இங்கே தான் சிநேகிதி வீடு.

இவள் இறங்கிக் கொண்டாள்.

ஊரில் என்னவெல்லாம்தான் நடக்கிறது ? கால் செண்டரில் ‘லிண்டா ஹியர், மே ஐ ஹெல்ப் யூ ? ஹவ் இஸ் தி வெதர் இன் மான்செஸ்டர் டுடே ? ‘ என்று பெயரை, மொழியை, பேசும் விதத்தை மாற்றிக் கொண்டு கூடு விட்டுக் கூடுபாய்ந்து தினசரி பத்து மணி நேரம் லிண்டாவும், ரேச்சலுமாகிற மீனலோசனி, கயற்கண்ணி. முப்பது நாளில் முடிக்கிற வேலையை எண்ணி மூணு நாளில் முடிச்சுக் கொடு என்று ஆணையிடும் துரைகள். தெண்டனிட்டு டாலரை வாங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு நாலு காசு அதிகம் கொடுத்து, வெளிநாட்டுக்கு அனுப்ப ஆசை காட்டி ஆள் சேர்த்துச் சவுக்கைச் சுழற்றி விடுமுறையுமாச்சு மயிருமாச்சு வேலைக்கு வாங்க எல்லோரும் என்று உறுமுகிற கம்பெனிகள்.

எங்கேயோ இருக்கப்பட்டவன் வேலையைப் பறித்து இங்கே கொண்டு வந்து, ஆன செலவில் பத்தில் ஒரு பங்கு மாத்திரம் கொடுத்து சக்கையாகப் பிழிந்து லாபத்துக்கு மேலே லாபம் சம்பாதித்துக் கொழுக்கிற பல்நாட்டு நிறுவனங்கள் வீசி எறியும் காசில் தான் இந்தியப் பொருளாதாரம் உயரப் போகிறதாம்.

உயரட்டும். நாம் காலையில் வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருப்போம்.

——————-

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்