புத்தர் ?

This entry is part [part not set] of 28 in the series 20020518_Issue

போப் ஜான் பால்


கேள்வி:

‘ஒற்றைக் கடவுளைத் தொழும் மதங்கள் – முக்கியமாய் யூத மதம், இஸ்லாம் – பற்றிச் சிந்திக்கும் முன்பு பெளத்தம் பற்றி நீங்கள் பேச வேண்டும் எப்று கேட்டுக் கொள்கிறேன். பல மேநாட்டினருக்கு, கிறுஸ்துவ மதத்திற்கு மாற்றாக ஒரு முக்தி வழியை அது தருவதாய் அர்த்தம் கொள்கிறது. மாற்றாக இல்லாவிடினும் கிறுஸ்துவத்தை முழுமை செய்யும் வகையில் , இரண்டையும் பின்பற்றலாம் என்று , துறவுப் பண்புகளையும், ஆன்மீகப் பண்புகளையும் முன்வைத்து, சிலர் கருதுகின்றனர். ‘

போப் ஜான் பால் :

நீங்கள் சொல்வது சரியே. உங்கள் கேள்விக்கு என் நன்றி. திருச்சபையின் ஆவணமான ‘ கிறுஸ்துவம் அல்லாத மதங்கள் பற்றி திருச்சபையின் நிலைபாடு ‘ என்ற குறிப்பில் இதைக் குறிப்பிட்டுள்ளோம். கிறுஸ்துவம் போலவே பெளத்தமும் ‘முக்தி ‘ பற்றிப் பேசுகிறது. இருப்பினும், முக்தி பற்றிய கிறுஸ்துவ நிலைபாடும், ‘நிர்வாணம் ‘ பற்றிய பெளத்தத்தின் நிலைபாடும் எதிரிடையானவை.

தலாய் லாமா, மேற்கு நாடுகளில் நன்கு அறியப் பட்டவர். நானும் அவரைச் சில சமயம் சந்தித்திருக்கிறேன். பெளத்தம் பற்றியும், பெளத்தத்தின் வழிபாட்டு முறைகள் பற்றியும் அவர் சொல்வது மேனாடுகளில் பலர் ஆர்வத்தைக் கிளறியுள்ளது. தாய்லாந்தில் அவரைச் சந்தித்தபோது, மேனாட்டிலிருந்து குடிபெயர்ந்து பெளத்த முனிவர்களான சில நபர்களையும் சந்தித்தேன். இன்று பெளத்தம் மேற்கில் பரவத் தொடங்கியுள்ளது.

பெளத்தம் பேசும் நிர்வாணம் பற்றிய கோட்பாடு, பெளத்தத்தின் மையக் கருத்து. சொல்லப்போனால் பெளத்தத்தின் ஒரே கருத்து என்று சொல்ல வேண்டும். ஆனால் இந்த முக்தி வழி பெளத்த மரபிலும், முறைகளிலும் எதிர்மறையான முக்தி வழி என்றே சொல்ல வேண்டும்.

புத்தர் பெற்ற ஞானம் , உலகம் மிக மோசமானது, உலகமே தீமையின், துயரத்தின் மூல காரணம் என்பதாய்க் காண்கிறோம். இந்தத் தீமையிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்றால், உலகிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பது அவர் பார்வை. அதாவது, நம்முடைய புற யதார்த்தத்திலிருந்து நம்மை நாம் விடுவித்துக் கொள்ள வேண்டும்- நம் மனித இயற்கையிலிருந்தும், நம் மனவெளியிலிருந்தும், நம் உடலின் தேவைகளிலிருந்தும் துறவு பூண வேண்டும். இந்த பந்தங்களிலிருந்து விடுபட்டால் தான் , உலகியலிலிருந்து விடுபட்டால் தான் நாம் உலகு தரும் துயரிலிருந்தும் விடுபட முடியும்.

இந்த முறையில் கடவுளின் அருகில் நாம் செல்கிறோமா ? இது புத்தர் பெற்ற ‘ஞானத்தில் ‘ குறிப்பிடப் படவில்லை. பெளத்தம் பெரும்பான்மையும் ஒரு நாத்திக வாத மதம். நாம் கடவுளிடமிருந்து பெறும் நல்வழியைப் பயன்படுத்தி , தீமைகளிலிருந்து விடுதலை பெறுவதில்லை. நாம் இந்த உலகிலிருந்து, தீமையே உருவான உலகிலிருந்து விடுபட்டு முக்தி நிலையை எய்துகிறோம். இப்படிப் பட்ட துறவு நிலையின் முழுமை கடவுளுடன் ஒன்று படுவதல்ல, மாறாக உலகியலைக் கருதாத ஒரு நிர்வாணம். உலகியலிலிருந்து விலகி, தன்னை தீமையே உருவான உலகிலிருந்து விலக்கிக் கொண்டு , பெறுகிற நிர்வாணம் இது. இதுவே இந்த துறவு நிலையின் உச்சம்.

பல சமயங்களில் இந்தத் துறவு நிலையை, கிறுஸ்தவப் புனிதர்கள் பிரசாரம் செய்யும் துறவு நிலையுடன் இணைக்க முயற்சிகள் நடந்ததுண்டு. ஆனால் புனித ஜான் தூய்மை பற்றிப் பேசும் போது , உலகிலிருந்து துறவு எனப் பேசும்போது, இந்தத் துறவே அதனில் முடிந்த ஒரு லட்சியம் என் வகையில் பேசவில்லை. ‘இப்போது நீ சுகிக்காத விஷயங்களைத் தேடிப் போக வேண்டுமெனில், நீ அந்த விஷயங்கள் சுகிக்காத இடத்தை அடைய வேண்டும். நீ தெரிந்து கொள்ளாத விஷயங்களைத் தேடிப் போக வேண்டும் என்றால் , தெரிந்து கொள்ளத் தேவையில்லாத ஒர் இடத்தை நீ அடைய வெண்டும் ‘ என்கிறார் ஜான். கீழை நாடுகளில் இந்த வாசகங்கள் கீழைத் துறவுக் கோட்பாட்டிற்கு இயைந்ததெனக் காண்பவர்கள் உண்டு. ஆனால் ஜான் வெறும் துறவு பற்றி மட்டும் சொல்லவில்லை. இந்த உலகைத் துறப்பதென்பது, உலகிற்கு அப்பால் உள்ள ஓர் சக்தியுடன் ஒன்றுபடுவது , தனிப்பட்ட முறையில் கண்டடையப் பட்ட கடவுளுடன் ஒன்று படுவது என்று சொல்கிறார். கடவுளுடன் ஒன்று படுவது தூய்மையினால் மட்டுமல்ல, அன்பினாலும் வருவது.

ஜானின் ஆன்மீகம் புத்தர் விட்டுச் சென்ற இடத்தில் தொடங்குகிறது. ஆன்மீக வாழ்க்கைக்கான பாடம் ஆகிறது. மனித ஆன்மாவை, செயல்களைத் துறந்தும், செயல்களின் மூலமாகவும் தூய்மை பெறச் செய்வது , வாழும் நேசத்தீயை ஆன்மாவில் மூட்டுவதற்கான ஒரு ஆயத்தம் மட்டுமே. ‘ வாழும் நேசத் தீ ‘ என்பது ஜானின் மிக முக்கியமான நூலின் பெயருமாகும்.

ஒத்தது போல காண்கிற சில விஷயங்கள் இருந்தாலும், அடிப்படியான வித்தியாசம் இருக்கிறது. கிறுஸ்துவ ஆன்மீகம் – எல்லாக் காலங்களிலும் – வெறுமே எதிர்மறை ‘ஞானத் ‘திலிருந்து பிறந்ததல்ல. மனிதனின் புலன் உணர்வுகளினால், அறிவால், ஆன்மாவால் மேற்கொண்ட உலக பந்தங்களின் தீமையைப் பற்றிய உணர்வினால் பிறந்ததல்ல இந்த கிறுஸ்தவ ஞானம். மாறாக வாழும் கடவுள் பற்றிய பேரறிவால் உண்டானது. கடவுள் மனிதனுடன் ஒன்றுபட வேண்டி , மனிதனுக்குள் எழுப்பின இறையியல் பண்புகளால் – இறை நம்பிக்கையால் , முக்கியமாய் நேசத்தால் உண்டானது.

கிறுஸ்துவ ஆன்மீகம் , பல சிறந்த செயலாளிகளால், கிறுஸ்துவத்தின் மையச் சரடாய் உருவாக்கப் பட்டிருக்கிறது. திருச்சபையை, இறைஅர்ப்பணம், நம்பிக்கை, தானதருமம் உள்ள ஓரு சமூகமாய் உருவாக்கியிருக்கிறார்கள். இதுதான் கலாசாரத்தை, முக்கியமாய் மேற்கத்திய கலாசாரத்தை உருவாக்கியிருக்கிறது. இது உலகம் பற்றிய நேர்மறையான அணுகுமுறையில் காலூன்றியது. இது தான் விஞ்ஞானம், தொழில் நுட்பம் வளர வழி வகுத்தது. இந்த இரு துறைகளும், பண்டைய கிரேக்க மரபினாலும், யூத-கிறுஸ்துவ மலர்ச்சியினாலும் உருப் பெற்றவை. உலகினை உருவாக்கிய கடவுள் பற்றிய உண்மையும், கிறிஸ்து என்ற மீட்பர் தந்த அபார ஆற்றலும், நமக்கு உந்துதல் சக்தியாய் அமைந்து, தமது நேர்மறைப் பார்வையினால் உலகை மாற்றியமைக்கவும், சிறப்பானதாய் உருவாக்கவும் முயலவேண்டிய ஊக்கம் அளித்தது.

இரண்டாவது வாடிகன் கவுன்சில் இந்த உண்மையை மறுபடி அழுத்தமாய்க் கூறியது. உலகு பற்றிய எதிர்மறையான அணுகுமுறை, உலகே தீமையின் ஊற்றுக்கண் அதனால் உலகிலிருந்து விடுபட வேண்டும் என்ற அணுகுமுறை , ஒற்றைப் பரிமாணப் பார்வை மட்டுமல்ல, கடவுள் மனிதனுக்குக் கையளித்த உலகையும், உலகம் வளர்ச்சி பெற்ற விதத்தையும் மறுதலிக்கிறது.

‘நவீன உலகில் மனிதன் மற்றும் திருச்சபையின் இடம் ‘ என்ற திருச்சபை ஆவணத்தில் : ‘ திருச்சபை, உலகம் என்று சொல்லும்போது மனிதக் குடும்பம் முழுமையையும் குறிக்கிறது. எல்லா யதார்த்தங்களையும் உள்ளடக்குகிறது. மனித குலத்தின் போராட்டங்கள், குறைபாடுகள், வெற்றிகள் அனைத்தையும் கணக்கில் கொள்கிறது. கடவுளால் உருவாக்கப்பட்டு, கடவுளின் அன்பினால் காப்பாற்றப் பட்ட இந்த உலகம் பாவத்தால் அடிமைப் பட்டிருந்தாலும், சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த கிறிஸ்துவால் விடுதலை செய்யப்பட்டு, தீமை அழிந்து, கடவுளின் தெய்வீகத் திட்டத்தின் படியே, நன்மாறுதல் பெற்று முழுமையடையும். ‘

இந்த வார்த்தைகள் கிறுஸ்துவமும், மற்ற கீழை மதங்களும், குறிப்பாக பெளத்தமும் , சாராம்சத்திம் உலகப் பார்வையில் எப்படி வேறுபட்டிருக்கின்றன என்று காட்டுகின்றன. கிறுஸ்துவர்களைப் பொறுத்தவரையில், உலகம் கடவுளின் படைப்பு. கிறுஸ்துவால் மீட்கப் பட்டது. உலகில் தான் மனிதன் கடவுளைத் தரிசிக்கிறான். தன் ஆன்ம ஆழத்திற்குப் போக வேண்டி அவன் உலகை முற்றிலும் துறக்க வேண்டிய அவசியம் இல்லை. கிறுஸ்துவத்தைப் பொறுத்தமட்டில், உலகமே தீமை என்று பேசுவதில் பொருளில்லை – ஏனெனில் உலகின் தொடக்கத்தில் தன் படைப்புகளை நேசிக்கும் கடவுளைக் காண்கிறோம். ‘கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அளித்து, தம்மில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் அழியாத பரலோக வாழ்க்கை அடையப் பண்ணினார் ‘.

இந்தக் காரணத்தினால், இப்படிப்பட்ட கீழைத் தேசத்தின் மதக் கருத்துகளை வரவேற்கும் மேனாட்டினரை எச்சரிப்பது தவறில்லை. கீழைநாட்டு தியான முறைகளையும், துறவு நெறிகளையும் வரவேற்கும் மேனாட்டினரை எச்சரிப்பது சரியே. சில அமைப்புகளில் இவை விமர்சனமற்று உள்வாங்கப் பட்டுள்ளன. முதலில் ஒருவர் தம் ஆன்மீக மரபுகளை அறிந்து கொள்ள வேண்டும். அவற்றைப் புறமொதுக்குவது சரியா என்று சிந்திக்க வேண்டும். மற்ற தியான மரபுகளை எப்படி கிறுஸ்துவ மரபிற்குள் பயன் படுத்த வேண்டும் என்ற திருச்சபையின் ஆவணத்துடன் நம்முடைய நடைமுறை ஒத்துப் போக வேண்டும்.

‘புது யுகம் ‘ என்ற பெயரில் முகமூடியிட்டு கீழைதேசத்து தெய்வங்களை வழிபடுவது பற்றித் தனியாய்ச் சொல்ல வேண்டும். இது மத மறுமலர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்று நாம் நம்மை ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. கடவுளை வழிபடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு கடவுளின் வார்த்தைகளைத் திரித்துக் கூறி, கடவுளின் வார்த்தைகளுக்குப் பதில், மனித வார்த்தைகளை பாவிக்கிற போக்கு இது. கிறுஸ்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், ஆனால் அதனுடனே இருக்க முயல்கிற இந்தப் போக்கு , சில சமயம் தத்துவ இயக்கமாய்க் காட்டிக் கொள்ள முயல்கிறது. மதமாகவும், மதம் தாண்டிய ஒரு வழியாகவும் தன் பண்புகளை, இப்படிப் பட்ட இயக்கங்கள் காண்பித்தாலும், இவை கிறுஸ்துவத்திற்கு முற்றிலும் எதிரானவையே.

(போப் ஜான் பாலின் புத்தகத்திலிருந்து)

Series Navigation

போப் ஜான் பால்

போப் ஜான் பால்