கத்தியின்றி..ரத்தமின்றி..

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

T V ராதாகிருஷ்ணன்


தன்னுடைய திட்டம் பூமராங்காக தன்னையேத் தாக்கும் என சுந்தரம் நினைக்கவே இல்லை.

அவனுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன.

அவனது தாயார் மதுரமும்..மனைவி உமாவும் சென்ற வாரம் வரை ஒரு நாள் கூட
தகராறு செய்யாமல் இருந்ததில்லை..

மருமகள் எது செய்தாலும் ..அதில் குறைகள் கண்டு பிடிப்பதே மாமியாரின்
வேலையாகவும்..மாமியார் சொல்லும் சாதாரணமான விஷயத்தில் கூட உள்ளர்த்தம்
இருப்பதாக மருமகளுக்கும் தெரிந்தது.

மாலை..அலுவலகத்திலிருந்து திரும்பும் சுந்தரம் நீதிபதியாக மாறி அவர்கள்
வாதங்களைக் கேட்டு சமாதானப் படுத்த முயலுவான்..

பெரும்பாலும் அவன் தீர்ப்பு சாலமன் பாப்பையாவின் தீர்ப்புப் போலவே
இருக்கும்..ஆனால் ..போன வாரம்..வந்த அமாவாசை அன்று சாதாரணமாக புகைந்துக்
கொண்டிருந்த ..மாமியார்..மருமகள் சண்டை தீப்பற்றி எரியவே ஆரம்பித்து
விட்டது..

அமாவாசை இரவுகளில்..தன் கணவன் இறந்தது முதல் டிஃபன் மட்டுமே சாப்பிடும்
வழக்கத்தை மேற்கொண்டிருந்தாள் மதுரம்.

ஆனால்..அன்றைய தினம் எந்த டிஃபனுக்கும் மாவு அரைத்து வைக்கவில்லை..அது
தெரிந்ததும்..அவளைக் கடுமையாகக் கண்டித்த மதுரம்..’சரி..சரி..பொங்கல்
செய்து விடு’ என்றாள்.

பொங்கலை ஒரு டிஃபனாக ஒப்புக் கொள்ளாத உமா’ அரிசியும், பருப்பும்
சேர்ந்து வெந்த பொங்கல் ஒரு டிஃபன்னா..சாதமும்..சாம்பாரும் கூட டிஃபன்
தான்’ என்றாள் நக்கலாக.

அவ்வளவுதான்..

எல்லைக்கோட்டைத் தாண்டிவிட்ட எதிரிப்படைகள் போல அவர்களுக்குள் சண்டை மூண்டது.

அவர்களது இந்த வழக்கிலும் ..சுந்தரம் புகுந்து சமாதானப்
படுத்தியதுடன்..மனைவியைத் தனியாக அழைத்து..’உமா.. அம்மா ஏதாவது
சொன்னால்..அதற்கு பதில் சொல்லாமல்..வாயை மூடிக் கொண்டு இருந்து
பாரேன்..அப்புறம்..அம்மா..என் மருமகள் போல உண்டான்னு உன்னை தலையில்
தூக்கி வைத்துக் கொண்டு புகழ்வார்’ என்றான்.

உமாவிற்கு..அப்போது சுந்தரத்தைப் பார்க்க பரிதாபமாக இருந்ததால்..’சரி,
இனி நான் வாயை திறக்கவே மாட்டேன்’ என்றாள்..

ஒரு வாரம் ஓடி மறைந்தது..வீட்டில் அமைதியோ..அமைதி..

சுந்தரத்திற்கோ அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தால்..நிம்மதி..ஆனால்
அந்த நிம்மதி அன்றுடன் முடியப் போகிறது என அவன் அறியவில்லை.

மாலை..விடு திரும்பியவனிடம்..அவனது அம்மா..’எனக்கு எப்படி ஒரு மருமகள்
வந்து வாய்ச்சிருக்காள் பாரு..நான் எதைச் சொன்னாலும்..ஒரு பதிலைக் கூடச்
சொல்லத் தெரியாத ஒரு மண்டூகம்..உடம்பில ஒரு சூடு ..சுரணை
வேண்டாம்..?உப்புப் போட்டுத்தான் சாப்பிடறாளோ..? இல்லை..” என்றாள்.

சுந்தரத்திற்கு..இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை..

ஆனால்..

அடுக்களையில் இருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த உமா..பாத்திரங்களை
உருட்டி..தான் போருக்கு தயாராவதை உணர்த்தினாள்.

by T.V.ராதாகிருஷ்ணன்

Series Navigation