அன்புள்ள அப்பாவுக்கு !

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

எம்.ரிஷான் ஷெரீப்


வழமைக்கு மாறாக வீடு அன்று பெரும் அமைதியிலிருந்தது.ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாய் தான் வீட்டிலிருப்பது தெரியுமெனில் கொண்டாடிக்களிக்கும் அவரது பதினைந்து வயது மகள் அன்றைய விடியலில் இன்னும் நித்திரையை விட்டும் எழும்பாதது சிறிது கலவரத்தை உண்டுபண்ணியது.
நேற்று இரவு மகளின் பரீட்சை மதிப்பெண்கள் மிகக்குறைந்திருப்பதைக் காட்டி அவளைக் கடுமையாகக் கண்டித்திருந்தார்.ஒரே பெண்.எதிர்காலத்தில் சிறப்பாக வரவேண்டுமென எதிர்பார்ப்பது தப்பா என்ன ?இருந்தாலும் கொஞ்சம் கடுமையாகவே நடந்துகொண்டு விட்டார்.எதுவும் உண்ணாமலும்,எந்த பதிலும் இல்லாமலும் உறங்கிவிட்டாள் மகள்.
அவளது அறைக்கதவை மெல்லத் தட்டி “ஸ்ருதி” என்றார்.எந்தப் பதிலுமற்ற மௌனத்தின் காரணத்தால் கதவை லேசாய்த் தள்ளினார்.வழமையாகக் கலைந்து கிடக்கும் அறையும் ,அவளுக்கான கட்டிலும் அன்று மிக நேர்த்தியாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.அழகான படுக்கை விரிப்பின் மத்தியில் ஒரு வெண்ணிற உறையுடன் கூடிய கடிதம்.கடித உறையின் மேல் ‘அன்புள்ள அப்பாவுக்கு !’ என்றிருந்தது.
இலேசாகப் பீதி மனதைக்கவ்வ கடித உறையை எடுத்தார்.மறுபக்கம் திருப்பிப் பார்த்துவிட்டு உறையைக் கிழித்தார்.நடுங்கும் விரல்களால் கடிதத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.

அன்புள்ள அப்பாவுக்கு,
மிகத் துக்கத்துடனும்,வேதனையுடனும் நான் இதை உங்களுக்கு எழுத நேர்ந்திருக்கிறது.நான் இதுவரை வாழ்ந்த எனது இவ்வீட்டை விட்டும் செல்கிறேன்.எனது புதிய காதலனின் கட்டளைக்குத் தலைசாய்க்க வேண்டியும்,அவரது மேல் எனக்குள்ள அன்பை வெளிப்படுத்தவுமே இதனை நான் செய்கிறேன்.எனது காதலனைப் பற்றி அறிவீர்களெனில் ஒரு போதும் நீங்களோ,அம்மாவோ இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டீர்களென நான் நன்கு அறிவேன்.
எனக்கு மிகவும் பொருத்தமானவராகவும்,அன்பானவராகவுமான ஒரு வாழ்க்கைத் துணையை நான் தேடிக்கொண்டு விட்டேன்.எனக்கு அவரை மிகவும் பிடித்திருக்கிறது.ஒருவேளை நீங்களும் அவரைச் சந்திக்க நேரிடின் அவரது தோள்வரையிலான கூந்தலுக்காகவும்,உடம்பில் குத்தப்பட்டிருக்கும் பச்சைகளுக்காகவும்,அவரது மோட்டார் சைக்கிளுக்காகவும்,அலங்காரக் கிழிசல் மிக்க ஆடைகளுக்காகவும் உங்களுக்கும் சிலவேளை அவரைப் பிடிக்கக் கூடும்.
மேற்சொன்னவை மட்டுமே நான் அவரோடு செல்வதற்குக் காரணமல்ல அப்பா.நிஜக்காரணம் நான் இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறேன்.கென்னி(அதுதான் அவர் பெயர்)யுடன் சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றுக் குடும்பமாய் வாழ்ந்துபார்க்கவும் ஆவலாக இருக்கிறது.அதுதான் அவரது விருப்பமும் கூட.
கென்னி என்னை விடச் சிறிது வயதில் அதிகமானவராய் இருப்பினும் (இந்தக்காலத்தைப் பொறுத்தவரையில் 42 வயதென்பது அவ்வளவு அதிகம் இல்லை அப்பா),பணம் மற்றும் வசதிகளற்றவரெனினும் எமது உண்மைக்காதலில் இவை என்றும் தடைகளேயல்ல என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள்தானே அப்பா.
கென்னியிடம் ஏராளமான இசைத்தட்டுக்கள் இருக்கின்றன அப்பா.அவற்றை வைத்துக்கொள்ள ஒரு பலகையிலான அலுமாரி மட்டுமே இருக்கிறது.அதுவும் அவரது மற்றக் காதலியான ரீட்டா கொடுத்தது.நான் அதனை விடப் பிரமாதமான,பெறுமதிமிக்க ஏதாவது பரிசளிக்கலாமென எண்ணியிருக்கிறேன்.அத்தேவைக்கான பணத்துக்காக நீங்கள் எனது கடந்த பிறந்தநாளுக்குப் பரிசாக அளித்த வைரமோதிரத்தை விற்கவேண்டி வரும்.அதற்காக மன்னியுங்கள் அப்பா.
ஆமாம்.அவருக்கு ஏராளமான காதலிகள் இருக்கிறார்கள்தான்.எனினும் என்னிடம் உண்மையாகவும்,தனிப்பட்ட கரிசனத்தோடும் நடந்துகொள்கிறார்.வேறென்ன வேண்டும் அப்பா?என் மூலமாக அவருக்கு நிறையக் குழந்தைகள் வேண்டுமென எதிர்பார்க்கிறார்.எனது விருப்பமும்,கனவும் அதுவே.
மர்ஜுவானா போதைப் பொருள் உடம்புக்குத் தீங்கு பயப்பதில்லையென கென்னி சொன்னார்.முடியுமெனில் நாமே அதனைப் பயிரிட்டு நண்பர்களிடையே விற்பனை செய்யலாமெனவும் அவருக்கு எண்ணமிருக்கிறது.அத்துடன் விஞ்ஞானம் எய்ட்ஸுக்கான மருந்தைச் சீக்கிரம் கண்டுபிடித்துவிட வேண்டுமென நாமிருவரும் தினமும் பிரார்த்தித்துக் கொண்டே இருக்கிறோம்.கென்னியைக் குணப்படுத்திவிடலாமல்லவா அப்பா?
என்னைப் பற்றி எந்தக் கவலையும் வேண்டாம் அப்பா.எனக்கு இப்பொழுது 15 வயது பூர்த்தியாகிவிட்டது.என்னைக் கவனித்துக்கொள்ள என்னால் முடியும்.என்றாவது ஒருநாள் உங்களையும் அம்மாவையும் பார்த்துப் போக நானும்,கென்னியும் உங்கள் பேரக் குழந்தைகளும் கட்டாயம் வருவோம்.
அன்றைய தினத்தில் சந்திக்கும் வரை,

உங்கள் அன்பு மகள்,
ஸ்ருதி.

முழுதாய்ப் படித்துமுடித்தவருக்குக் கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. கட்டிலில் அப்படியே உட்கார்ந்துவிட்டார்.மனைவியை அழைக்கலாமா என ஒரு கணம் சிந்தித்தவர் பார்வைக்கு கடிதத்தின் இறுதிப்பாகத்தில் ‘மறுபக்கம் பார்க்கவும்’ என எழுதியிருந்தது தென்பட்டது.இன்னும் என்னென்ன வசனங்கள் தன்னை வதைக்கக் காத்திருக்கின்றனவோ என எண்ணியவாறே மறுபக்கம் புரட்டினார்.

பின்குறிப்பு :
அப்பா,மேற்சொன்ன எதுவுமே உண்மையில்லை.நான் இப்பொழுது பக்கத்து வீட்டிலிருக்கிறேன்.இந்த வருடப் பரீட்சையில் நான் பெற்றுக்கொண்ட குறைந்தளவிலான புள்ளிகளை விடவும் உலகில் என் வயதுப் பெண்கள் செய்யக்கூடிய எத்தனையோ தவறான காரியங்கள் இருக்கின்றன என்பதை உங்களுக்கு உணர்த்தவே அப்படி எழுதினேன்.என் மேசை மேலிருக்கும் இறுதிப்பரீட்சைக்கான மதிப்பீட்டு அறிக்கையில் உங்கள் கையெழுத்திட்டு விட்டு தொலைபேசி மூலமெனக்கு அறிவிப்பீர்களெனில் வீடு வருவதை நான் பாதுகாப்பாயும்,மகிழ்வாயுமுணர்வேன்.

என்றும் உங்களை மட்டுமே நேசிக்கும்,
உங்கள் அன்பு மகள்,
ஸ்ருதி.


எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
msmrishan@gmail.com

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்