அழகான ராட்சசி

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


ஐஸ்வர்யராய் அழுதால் மனம் பொறுக்குமா ? சல்மான்கானிலிருந்து சன்னாசிக்குப்பம் மாரிமுத்துவரை இன்றைய தேதியில் துடித்து விட மாட்டார்களா ? நானும் சந்திரின் அழுதபோது அப்படித்தான் துடித்தேன். என்னோட சந்திரின் ஐஸ்வர்யராயின் ஐரோப்பியப் பதிப்பு.

அது ஒரு மாலைவேளை. மே மாதம், வசந்தகாலம் என்பதால் ஊமை வெய்யிலில் சிலு சிலுவென்று காற்று. அந்தச் சுகத்தில் அவளை அணைத்துக் கொண்டு நடந்தேன். சோகத்தைச் சுமக்க இயலாமல் அவளுக்கு மூச்சு முட்டியது. அதனை வாங்கிக் கொள்ளும் வகையிலே முகத்தைக் கைகளில் ஏந்தி அழுந்த முத்தமிட்டேன். என்னை ஒதுக்கிவிட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். இருவரும் பக்கத்திலிருந்த ஃப்ளன்ச் ரெஸ்டரெண்டிற்குள் நுழைந்தோம். கறுப்புக் காப்பியைக் வாங்கி கொண்டு, காலியாக இருந்த இரண்டு இருக்கைகளைத் தேடி அமர்ந்தோம். கைக்குட்டையால் சிவந்த மூக்கை மேலும் அழுந்தத் துடைத்து சிவக்க வைத்து, மெள்ள விசும்ப, எப்படித் தேற்றுவது என்ற சிந்தனையில் நான் .

சந்திரினைச் சந்தித்ததே ஒரு வசந்த காலத்திற்தான்.

பிரான்சே பூத்திருக்கும் காலம். என் புதிய உத்தியோகத்தில் பொறுப்பேற்பதற்காக அந்த அலுவலகம் சென்றிருந்தேன்.

இயற்கைச் சூழலில் செருக்குடன் நின்றிருந்தது அந்தக் கட்டிடம். வாயிலின் இருபுறமும் புற்களால் மெழுகப்பட்டிருக்க, இடைக்கிடை கும்பல் கும்பலாக ஒழுங்குடன் துலிப், அனெமோன், கொல்ஷிக், மற்றும் இனம் தெரியாத பூக்கள், கொஞ்சம் அதிகப்படியாகவே ‘வாவ் ‘ என்னும்படியான ரம்மியத்துடன். சற்றுத்தள்ளி வரிசையில் மஞ்சள் இலைகளோடு ஷேன் மரங்கள். செரி மரங்களில் கொத்துக் கொத்தாகச் சுமை போட்டிருந்த செர்ரி பழங்கள் கலவையில் மூக்கை நனைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போதுதான், வாயிலை ஒட்டிய வரவேற்பு டெஸ்க்கில் சாய்ந்தவாறு நின்றிருந்த அந்த வசந்தத்தைச் சந்தித்தேன்.

கையில் டெலிபோன் ரிஸீவரை அடக்கி, மெல்லிய பிரெஞ்சில் பேசிக் கொண்டிருந்தாள். என் வருகை உணரப்பட்டிருக்க வேண்டும். தலையைச் சற்றே இறக்கி, இதமாக ரிஸீவரைத் தோளில் அணைத்துக் கொண்டே, என்னைப் பார்த்து ‘உய் ‘ என்று நிமிர்ந்தபோது, என் நெஞ்சில் அனுமதி இல்லாமலே அவள் கால் பதித்து நிற்பதை உணர முடிந்தது.

அந்த அழகான ராட்சசியைப் பார்த்….. மன்னிக்கவும், பாதியளவே பார்க்க முடிந்தது. மீதிப் பாதியை பொல்லாத டெஸ்க் மறைத்திருந்தது.

நிதானத்தில், மனம் ஒன்றிப் படைத்த ஓவியமாய், ஐரோப்பிய சிவப்பில், அடர்த்தியான இளம் பழுப்பில் கூந்தல் தோளைத் தொட்டுச் சரிந்திருக்க, இத்தாலிய பசுஞ்திராட்சை நிறத்தில் கண்கள் மின்ன, இளமை கொலு வைக்கப்பட்டிருக்கும் தோற்றம்.

கழுத்தில் தொற்றியிருந்த மெல்லிய சங்கிலியின் சிலுவையைத் தனது அதரங்களுக்கு இடையில் கொண்டு போக முயன்று, தோற்றுப்போன விரல்கள் காது வளையத்தில் தஞ்சம் புக… அவளது ‘ரோப் ‘ சற்று அதிகமாகவே கீழிறங்க… நான் ஊமையாகி நின்றேன்.

‘உய் ‘

அவளது இரண்டாவது ‘உய் ‘ என்னை மீட்டு வந்தது.

‘பர்தோன் மத்மசல்! ழெ சுய் வினோத். தெபல் வினோத். விற்பனைப் பிரிவுக்குப் புதிதாக நியமனமாகியிருக்கும் பொறுப்பாளன். விற்பனைத் துறை இயக்குனரைப் பார்க்கவேண்டும் ‘

‘முதல் மாடியில், அறை எண் 125. மிஸியே மர்த்தன் லுய்க். சற்றுத் தள்ளி இடது புறம் லிஃப்ட் இருக்கிறது. எடுத்துக் கொள்ளுங்கள். ‘

‘மெர்சி ‘ என்று சொல்லிவிட்டு அவளை நீங்கியபோது, என் நினைவு அவளோடு ஒட்டிக்கொண்டது.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு எனது அலுவலக அறைக்குப் போகின்ற வழி வேறாக இருந்ததால் அவளை சந்திக்கின்ற சந்தர்ப்பங்கள் மிக அரிதாகவே இருந்தன. அப்படி நேர்ந்தாலும் இருவரும் ‘போன்ழூர் ‘ சொல்வதோடு நிறுத்திக் கொண்டோம். அவளால் ஏற்பட்ட உஷ்ணமும் அவளைப் பார்ப்பதற்குச் சந்தர்ப்பமின்றி கொஞ்ச கொஞ்சமாகத் தணிந்துவிட்டது.

ஆறு மாதங்கள் கழிந்திருக்கும். என்னோடு இருந்த பெண் செயலர் விடுமுறையிற் செல்ல, சந்திரின் அவள் இடத்துக்கு வந்து சேர்ந்தாள். இதனை நான் எதிர்பார்க்கவில்லை. இதுதான் விதியா ? எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் சந்திரின், பின்னர் இதுபற்றிய விவாதத்தில் ஒருநாள் ‘அப்படித்தான் ‘ என்றாள்.

கோப்புகளை தேதி, இடம், பொருள் வாரியாகப் பிரித்து, அது சம்பந்தப்பட்ட தகவல்களைக் கணிணியில் பதிப்பித்து, அலுவலக செயற்பாட்டில் அதீதகவனம் சேர்பிக்க, என் உள்ளத்தில் சந்திரின் மிக வேகமாகப் பரவ ஆரம்பித்தாள்.

மில்லேனியம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு ஒரு நட்சத்திர ஓட்டலில் நிர்வாகம் ஏற்ப ‘டு செய்திருந்த விருந்தில் அதிகமாக குடித்துவிட்டு நினைவு இழந்த என்னை, காரில் ஏற்றி அவளது அப்பார்ட்மெண்டில் கொண்டு செல்ல, நாங்கள் நெருங்கியிருந்தோம்.

என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் நான் மறந்திருந்த இந்தியாவை அவள் நினைவூட்டியது.. ரமணமகரிஷியையும், ஜெ. கிருஷ்ணமூர்த்தியையும் கொண்டாடியது.. ரெசிபியை வைத்துக்கொண்டு, இந்தியக் கடைகளுக்குச் சென்று ‘சப்பாத்தியும், காஷ்மீர் ஆலுவும் செய்திருக்கிறேன் சாப்பிட வாங்கள் ‘ என்று நான் சொல்லிக் கொடுத்ததை இனிமையாகச் சொல்லப் பழகிக்கெ ‘ண்டது.. என்று நிறைய …

இப்படி இருந்தவள்தான் ஒரு ஞாயிற்றுக் கிழமை என் ஜாகைக்குத் திடாரென்று வந்து, ‘எனக்கு அம்மா வேண்டும் ‘, என்றாள் தன் வயிற்றைத் தடவியபடி. ஆமாம் எங்கள் உறவுக்குச் சாட்சி அவள் வயிற்றில் கடந்த நான்கு மாதமாய் வளர்ந்து வந்தது.

எனக்கு சிரிப்பு வந்தது, ‘அம்மா நினைப்பு வந்தால் போய்ப் பார்த்துவிட்டு வாயேன் ‘, சொன்னேன்.

பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் பிள்ளைகள் பெற்றோர்களை விட்டுப் பிரிந்திருப்பது சகஜம். அதற்கான காரணங்கள் அனேகம். அவளுடைய பெற்றோர்களும் எங்கேயோ இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவளிடம் கேட்டதில்லை.

‘இல்லை முடியாது. அவர்களைத் தேட வேண்டும் ‘

‘தேட வேண்டுமா ? ‘ ஆச்சரியத்தோடு கேட்டேன்.

‘ஆமாம் வினோத். தேடத்தான் வேண்டும் ‘.

‘புரியவில்லை ‘

‘ந ‘ன் ஒரு அநாதை. அநாதைகள் வளர்ப்பைப் பொறுப்பேற்கும் நிறுவனத்தால் வளர்க்கப்பட்டவள். தனது சிறியவயதில், தவறான உறவால் கருத்தறித்து என்னை அந்த அநாதைகள் இல்லத்தில் பெற்று போட்டுவிட்டு என் தாய் தலை மறைவாகிவிட்டாள். . அவள் யாரென்று அலுவலகக் குறிப்பேடுகளில் இருக்கும். ஆனால் அவள் விரும்பாமல் அவள் இன்னாரென்று சொல்லமாட்டார்கள். எனது தந்தை பெயரும் அதில் ‘எக்ஸ் ‘ என்றே குறிப்பிடபட்டிருக்கும் ‘ சொல்லும் போதே அவளது கண்களில் நீர் கோர்த்தது.

எனக்கு அதிர்ச்சி. ஐரோப்பிய நாடுகளில் இது சகஜம் என்றாலும், சந்திரினிடம் இதை எதிர்பார்க்கவில்லை.

‘ழெ சுய் வ்ரேமான் தெசொலே (நான் உண்மையிலேயே வருந்துகிறேன்) ‘ என்றேன்.

அவளை அமைதிப் படுத்தும் வகையில் மெள்ளக் கைகளைப் பற்றி மார்பில் அணைத்துக்கொண்டேன். என் மார்பு ரோமங்களில் அவளது கண்ணீர் உஷ்ணங்கள் இறங்க, மெள்ளத் தலையைக் கோதினேன்.

‘பரவாயில்லை.. ஷெரி! விட்டுவிடு. உனக்கு நானிருக்கிறேன். நீ அநாதை இல்லை ‘

‘ இல்லை விநோத். உனக்குப் புரியலை. இன்னும் சொல்லப்போனா இதுக்கு நீதான் காரணம். ‘

‘எதுக்கு இந்த குழந்தைக்குத்தானே ? ‘

‘உளறாதீங்க வினோத். நான் சொல்ல வந்தது வேற. ஒரு நாள் பேச்சு வாக்கில என்ன சொன்னீங்க. இந்தியாவுல முதல் பிரசவங்கிறது முக்கியமான சம்பவம்னும், அந்தப் பெண்ணுக்கு அவள் தாயோட வழிகாட்டுதல் அநேக விஷயங்கள்ல தேவைப்படுங்கிறதாலே, அவளது தாய் வீட்டுலதான் பிரசவம் நடக்கும் என்று சொல்லிட்டு, கூடவே எங்க அம்மாவும் எனக்கு ஆறுதலா பிரசவ சமயத்துல இருந்தா நல்லதுன்ணு நீங்கதானே சொன்னீங்க ? ‘

‘ஓ.கே.. ஓ.கே இப்ப என்ன செய்யலாம் ? சரி உன்னை வளர்த்த நிறுவனத்துல கேட்டுப்பாரேன். உன்னைப் பெற்றவளுக்கும் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரலாம் இல்லையா ? ‘

‘உண்மைதான். விண்ணப்பம் போடப் போகிறேன். எனக்கு என் அம்மா வேண்டும். அதுவரை என் தேடுதல் நிற்காது ‘ என்று என்னிடம் சொல்லிவிட்டுச் சென்றவளை, இரண்டு வாரங்களாக நான் பார்க்கவில்லை. எனது அதிகாரி கேட்டுக் கொண்டதின் பேரில், விற்பனையில் தேக்கம் இருந்த மற்றொரு நகரின் கிளையைக் கவனிக்கச் சென்றிருந்தேன். திரும்பியவுடன், தொலைபேசியின் மெசேஜஸ் பகுதியைப் போட்டுப் பார்த்தேன். சந்திரின் போன் செய்திருக்கிறாள்.

‘வினோத், உங்களை உடனே பார்க்க வேண்டும். வரமுடியுமா ? ‘ விசும்பல் ஒலி தெளிவாகக் கேட்டது. அடுத்தடுத்து, ஐந்து தடவை போன் செய்திருக்கிறாள்.

நான் அடுத்த நிமிடமே அவளைத் தொடர்புகொண்டு, ப்ளாஸ் கிளேபரில் வழக்கமாகச் சந்திக்கும் ஃப்ளன்ச் ரெஸ்டரெண்ட்டிற்கு வரச் சொல்லியிருந்தேன். இதோ என் முன்னால் அவள், துக்கத்திலிருந்து விடுபடாமலிருக்க, சற்றுத் தள்ளி நான்.

ஃபிரித்தைக் கொறித்துக் கொண்டிருந்த சின்னக் குழந்தையொன்று, பக்கத்திலிருந்த தனது தாயிடம் சந்திரினைச் சுட்டிக் காட்டி ஏதோ சொல்லிவிட்டுப் பின்னர் தாயோடு ஒட்டிக் கொண்டது.

‘சந்திரின்! கொஞ்சம் அமைதியாய் இரு!. என்ன நடந்தது. உன் தேடுதலுக்குப் பதில் வந்ததா ? ‘

‘இல்லை.. வினோத். எனது தாய்க்குத் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விருப்பமில்லையாம், நிர்வாகமும் அவள் யாரென்று சொல்லாதாம். என்ன நாடு இது ?. அவர்களது உரிமையைப் பாதுகாக்கிறேன் என்று சொல்லி, எங்களை அநாதையாக்குவது எந்த விதத்தில் நியாயம் ? நான் நீதிமன்றத்துக்குப் போகப் போகிறேன் ‘

‘சரி சந்திரின் தாராளமாகப் போ. உனக்கு நானிருக்கிறேன். இப்போது என்னோட அப்பார்ட் மெண்ட்க்குப் போகலாம் ‘ .

இருவரும் காப்பியைக் குடித்துவிட்டு வெளியில் வந்து டாக்சி பிடித்து எனது இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தோம். அஞ்சல் பெட்டியில் அன்றைக்கு வந்திருந்த கடிதங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, விளம்பரத்தாள்களை குப்பைக் கூடையில் போட்டுவிட்டு, லிப்டைத் தவிர்த்துவிட்டு, மூன்றாவது மாடிக்கு அணைத்தபடியே நடந்தோம்.

உள்ளே நுழைந்ததும் கனப்பேயில் சந்திரினை உட்காரச் சொன்னேன்.

‘சந்திரின் இதைக் கேள். நீ உன் அம்மாவை தேடிக் கண்ணீர் விடுகிறாய். எனக்கு அம்மா இருந்தும், கூப்பிட முடியாதவனாக இருக்கிறேன். ‘

‘எப்படி ? ‘

‘இதோ இது இந்தயாவிலிருந்து இந்த மாதத்தில் வந்த மூன்றாவது கடிதம். என் அம்மாதான் எழுதியிருக்கிறாள்

‘அப்படியா!… ? ‘

‘அம்மா ஒரு பிரபல முதியோர் இல்லத்தில் சென்னையில் இருக்கிறாள். மாதம் ஐந்தாயிரம் ரூபாய் அனுப்புகிறேன். தன்னை நன்றாக பராமரிப்பதாக அம்மா அடிக்கடி கடிதம் எழுதுவாள். ஆனால் இப்போது சில மாதங்களாக அவள் கடிதத்தில் ஒரு மாறுதல். என்னைப் பார்க்க வேண்டுமாம், எப்போது வருகிறாய் ? என்கிறாள்.

‘போய்ப் பார்ப்பதுதானே ?

‘எப்படி ? எனது சம்பாத்தியம் பதினைந்தாயிரம் பிராங்கும் வாடகை, சாப்பாடு, மற்றும் இளைஞர்களுக்கே உரிய செலவுகள் எனக் கரைந்து விடுகிறது. ம்..இதில் இந்தியப் பயணத்தை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. அம்மாவைப் பிரான்சுக்கு அழைப்பது என்றால் அதுவும் பிரச்சினைதான். அவர்களுக்கு மூன்றுவேளையும் வெற்றிலை போடவேண்டும். அதனைத் துப்புவதற்கு இடம் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒன்பதரை மணிக்குச் டி.வி சீரியல் இருக்கிறது அதைப் பார்த்தாக வேண்டும். கிருத்திகை, அமாவாசை என்றால் வீட்டில் இலைபோட்டுப் படைத்து, வெளியே காக்கையைக் கூப்பிடவேண்டும்.. இப்படி அம்மாவின் பட்டியலில் என்னால் நிறைவேற்ற முடியாதவை நிறையவே உள்ளன. ‘

‘பிறகு ? ‘

‘உனக்குத் தெரியாதா ? என் தரப்பிலும் அவளிடம் மறைக்க வேண்டியவை நிறையவே இருக்கின்றன. பீர், விஸ்கியெனக் குடிப்பது.. இரவு விடுதிகளுக்குச் செல்வது. இப்படி அவள் முகம் சுளிக்கக் கூடிய குறைபாடுகள் ஏராளம். கூடவே, இப்போது நான் ஒரு பிரெஞ்சுப்பெண்ணோடு தொடர்பு இருக்கிறது என்றால் வேறு வினையே வேண்டாம். ‘

‘விநோத் உனக்கு ஆட்ஷேபனை இல்லையென்றால், ஒன்று சொல்லட்டுமா ? ‘

‘ம் ‘

‘என் தேடுதலுக்கு பலன் கிடைத்தாற்போல் தெரிகிறது. ‘

‘என்ன சொல்ற ? ‘

‘உங்கள் அம்மாவை பிரான்சுக்கு கூப்பிடனும்னு சொல்றேன் ‘

‘இப்போதுதானே எனது பிரச்சினைகளைச் சொன்னேன் ‘

நீ சொல்வதெல்லாம் பிரச்சினைகளே அல்ல, நொண்டிச் சாக்குகள். உனக்கு வேண்டாமற் போகட்டும். எனக்கு அவள் வேண்டும். ஏற்பாடு செய்வாயா ?

‘சந்திரின் நீ அவசரப்படற. அவங்க இந்தியாவிலே பிறந்து வளர்ந்த சூழ்நிலை வேற. அவர்களது எதிர்பார்ப்பு வேற. ‘

‘இருக்கட்டுமே, நீ என்ன இங்கே பிறந்தாயா ? அவங்களோட எதிர்பார்ப்பும் என்னோட எதிர்பார்ப்பும் ஒத்துப் போகும், நான் நம்பறேன். ‘

‘வேண்டாம் சந்திரின். கொஞ்சம் நிதானமா முடிவு எடுப்போம் ‘

‘இல்லை வினோத். இது திடாரென்று எடுத்த முடிவுன்னு நீங்க நினைச்சாலும் எனக்கு இது

தீர்மானமான முடிவு ‘

‘எனக்குச் சிரிப்புத்தான்ன் வருது. நீங்க இரண்டுபேரும் என்ன பேசிக்குவீங்க ? எப்படி பேசிக்குவீங்க ? ‘

‘சிரிக்காதீங்க வினோத். அன்பை பரிமாறிகிறதுக்கு மொழி எதுக்கு ? ‘ என்றவளை ஆர்வத்தோடுப் பார்த்தேன். அணைக்கவேண்டும் போலிருந்தது. இறுக அணைத்தேன்.

‘அய்யோ இப்படியா ? என்ன ஆச்சு உங்களுக்கு ? ‘

‘ம்.. இப்பத்தானே சொன்ன அன்பை வெளிபடுத்த மொழி எதுக்குண்ணு. ‘ சொல்லிவிட்டு மறுபடியும் இறுக அணைத்து முத்தமிட்டேன்.

***

குமுதம் 05 – 08-02

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா