புதிய மனிதம்

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

செந்திலான்


ஜனனியை உங்களுக்குத் தெரியாது.

எனக்குக் கூட!

ஒரு தனிமையான அட்லாண்டா இரவில் இணைய வலையில் சந்தித்தேன்.

மின் அஞ்சல்…

மூன்று நாட்களுக்குப் பின் பதில் வந்தது.

என்னைப் பற்றி நிறையக் கேட்டிருந்தாள். தன்னைப் பற்றிச் சொல்லவில்லை.

அசாதாரண மனுஷியல்ல.

தனிமையான பயண இரவுகள் தந்த மணித்தியால விடுமுறைகளில் நிறைய எழுதினேன்.

தனக்கு விருப்பமான கேள்விகளுக்கு மட்டுமே பதில் வரும், சின்னதாக. மற்றவையெல்லாம் முகில்களுக்கே சிக்கிக்கொண்ட கற்களாக புவியீர்ப்பை எதிர்த்து நிற்கும்.

அட்லாண்டாவிற்கும் வாட்டர்லுாவிற்கும் முடிச்சுப் போட முடியவில்லை. ஆறாயிரம் மைல் சாணல் கயிறுக்கு எங்கே போவது.. ?

திடாரென்ற அவளது அம்மாவின் மறைவு, அப்பாவின் சுகயீனம் ஒரு உறவு மெதுவாவதற்கு கடவுள் இயற்றிய துரதிருஷ்ட வெண்பாக்கள்..

-எனது பார்வையில்.

தொலைபேசி இணைப்பு கேட்டிருந்தேன்.

நட்பு தினமும் பரிணாமிக்க வேண்டும்..

-evolution எனது பார்வையில்.

நிறைய மறுப்புகளுக்குப் பின் செல் இலக்கம் வந்தது.

புன்னகைத்தேன்… ஜனனி அசாதாரண மனுஷியல்ல.

வாட்டர்லுாவிலிருந்து குரல் இனிமையாக இருந்தது, ஏழு வருடங்களுக்கு முன் என் அதீத அன்பால் தொலைக்கப்பட்ட ஆளைள ஓன் மெதுவான சந்தங்களைப் போன்று.

ஆளைள ஓன் பெயர் சொல்ல முடியாது. அவளுக்கு இப்போது இரண்டு பிள்ளைகள். மூத்தவன் என் கண்களைக் கொண்டிருக்க வேண்டியவன்.

கடவுள் எழுதும் கதையில் நிறைய முடிச்சுகள்..

செல் உரையாடலில் வளர்ந்த நம்பிக்கையில் ஒரு நாள் சொன்னாள்:

தனது பெயர் ஜனனி இல்லையாம்.

சின்னதாக வலி, ஏமாற்றம். கற்கள் இடறியது. விழவில்லை. ஜனனம் தொடர்ந்தது.

சந்திக்க முடிவு செய்தோம். படம் கேட்டிருந்தாள். மின் அஞ்சலில் அனுப்பினேன். தனது படம் தரவிலலை!

டெல்டா விமானம் ஹீத்ரோவில் இறங்கிய போது ஒரே மழை. நல்லவர்கள் வரவில் பூமி நனையுமாம். -தற்புகழ்ச்சி!

லண்டன் பாதாள ரயில் ஏறி ரசல் ஸ்குயரில் வெளியே வந்தபோது காதுகளில் சின்னச் சிமிக்கி, கண்களில் பழைய வலியுடன் கைகுலுக்கினாள்.

ம்… குரல் மட்டுமல்ல, உருவம் கூட மெதுவாக இருந்தது, பளிச்சென்று தெளிக்காத அதிகாலை மோகனம் போல.

பிரிட்டிஷ் ம்யூசியம் சென்றோம். இதிகால இகிப்தில் அவள் பரிணமித்த பொழுதில் மெலிதாக வீசிய பெண் காற்று கழுத்தில் இதமாக முத்தமிடச் சொல்லிற்று.

செய்யவில்லை!

நான் நோக்காதபோது என்னைப் பார்த்தாள். உடைந்த புத்தரை அடைத்து வைத்திருந்த கண்ணாடிப் பெட்டி காட்டிக் கொடுத்தது, வள்ளுவர் என்றோ எழுதி வைத்ததைப் போல..

ஆங்கிலத்தில் தான் நிறையக் கதைத்தோம். எனது அமெரிக்கப் பிரயோகம் அவளது பிரிட்டிஷ் மொழியருவியில் கலந்து நிறையச் சொற்களுக்கு புதிய அகராதி படைத்தது.

கலைஞர் கோவிப்பார்.. ஆனால் நாங்கள் தமிழை மறக்காத தமிழர்கள்.

இடையிடையே அவளுக்கு செல்போன் அழைப்புகள் வந்தன. துாண்களின் பின்னே மறைந்து தோன்றிய அரை நிமிட உரையாடல்களின் பின் கண்களில் சின்ன ஏக்கத்தை மறைத்து புன்னகைப்பாள்.

மீண்டும் சின்னக் கல் ஒன்று இடறியது.

Madam Tussady பைகளைப் பறிமாறிக் கொண்ட போது விரல்கள் உரசி உணர்வு சட்டென்று மூளைக்குச் செய்தி சொல்ல பார்வைகள் சந்தித்தன.

Eye of London அடிவாரத்தில் மழைத் துாறல்களைப் பார்த்துக் கொண்டு நிறையக் கதைத்தோம்.

முதல்க் காதல், இளமைக் காதல், பிரிவுகள், துயரங்களைப் பற்றிப் பகிர்ந்து கொண்டதில் இருவருமே தேவப் புனிதம் கொண்டவர்கள் அல்ல என்பதை ஒப்புக்கொண்டோம்.

மனிதம் எவ்வளவு இலகுவானது!

அன்று பின்னேரம் பிரிந்தோம், அடுத்த நாள் சந்திக்க. காலையில் லேட்டாக வந்தாள். காரணம் சொல்லவில்லை.

London Bridgeல் வைத்து தனது குடும்பப் படம் காட்டினாள்: அவள், மறைந்த அம்மா, அப்பா. அவ்வளவுதான்.

“இவ்வளவு தானா குடும்பம் ?” என்றபோது பார்வையைத் தவிர்த்தாள். நீல நிற பலுான் ஒன்றுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை பார்வை தொடரிற்று.

மீண்டும் விமான நிலையம். பிரிவு நேரம். நட்பு ஏனோ பரிணாமம் இன்றி நிலைத்து நிற்பது மாதிரி உணர்வு. தொடர்பில்லாத கதைகள், உள்ளே பிரிவுப் பாட்டு. இலகுவான மனிதம் உணர்வுகளை வெளிப்படுத்த இப்போது பயந்து கொண்டது.

விமானம் ஏறக் கூப்பிட்டார்கள்.

மனதில் ஒரு திடார் வேகம். ஊகம். ஊமை எதிர்பார்ப்பு.

“உனது குடும்பத்தின் மற்ற அங்கத்தை பார்க்கலாமா ?”

திகைத்தாள்.

வேறு நோக்கினாள்.

கண்களில் நீர்த்திரை.

நிமிட மெளனம்.

நான் பைகளைத் துாக்குவதற்காக குனிந்து நிமிர்ந்த கணங்களில் அவள் கைகளில் ஒரு செய்தி:

4 ‘x6 ‘ ல் சின்ன ஜனனி!

கண்களில் மருட்சி பிரிகின்ற ஆறு வயதில் தாயின் புன்னகையும் நிறைந்த, சிவந்த கன்னங்களுமாய் சின்ன ஜனனி.

விமானம் எனக்காக தாமதிக்காது என்றார்கள்.

தீர்மான நேரம்…

“மீண்டும் வருவேன் ?” என்றேன்.

***

அச்சாக்கம்:

muttu@earthlink.net

Series Navigation

செந்திலான்

செந்திலான்