அ.வெற்றிவேல்
பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
மெல்லப் போனதுவே.. ………………பட்டினத்துப் பிள்ளை
மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களுக்கு
தங்களின் வார்த்தையில் சொல்லப்போனால், 38 நீண்ட நெடிய ஆண்டுகள், தங்களைத் தமிழினத் தலைவராக ஏற்றுக்கொண்டு ,அரசியலில் தங்கள் பின்னால் அணி வகுத்து வந்தவன் என்ற முறையில் இக்கடிதம்.
1971 தேர்தலின் போது ,சிவகங்கை சண்முகராசா கலை அரங்கில் அரைக்கால் டவுசருடன் தங்களைப் பார்த்து ,தங்களின் கவர்ச்சிகரமான கரகரக் குரலுக்கு மயங்கி , தங்கள் பின்னால் வந்தவன். எம்.ஜி.ஆரை தி.மு.கவில் இருந்து வெளியேற்றிவிட்டு , அதே மேடையில்,அதிகக் கூட்டமில்லாத ஒரு மதியப் பொழுதில், மறுபடியும் தங்களை கவனித்தேன்.தி.மு.க என்ற கட்சியே காணாமல் போய்விட்டது என்று அன்றைய அனைத்து ஊடகங்களும் எம்.ஜி.ஆர்.பின்னால் நிற்க, அது குறித்து எந்த அலட்டலும் இன்றி , தன்னம்பிக்கையுடன் தாங்கள் பேசியது 37 ஆண்டுகளுக்குப் பின்னாலும் இன்னும் என் நினைவில் உள்ளது.
முதல்வர் பதவி இழந்து, மகன், மருமகன் எல்லோரையும் சிறைக்கு அனுப்பிவிட்டு , இந்தியாவின் இரண்டாவது விடுதலைப் போராட்டத்தில் தளகர்த்தராக ,நெருக்கடிகளுக்கு பணிந்து விடாமல்,தன்னந்தனியாக அண்ணா சாலையில் முரசொலி விற்ற செய்தி கேள்விப்பட்டு , இவன் தான் தலைவன் என்று முடிவு செய்தவன் நான்.இந்திராவின் நெருக்கடிக்குப் பயந்து எம்.ஜி.ஆர்., தனது கட்சியை அனைத்திந்திய கட்சியாக முடிவு செய்தபொழுது, தி.மு.வின் பெயரை மாற்ற மாட்டேன் என்று எதிர்த்து நின்ற வீரம் தமிழனுக்கே உரியது என்று பெருமிதம் அடைந்தவன்.
நீதிதேவன் மயக்கம் என்ற பெயரில் ஒரு கடிதம்,நெருக்கடி காலம் முடிந்து சிறையில் இருந்து வெளிவந்த தொண்டர்களின் மனநிலையை பேறு கால மனைவியின் மனநிலையை உதாரணம் காட்டி ஒரு கடிதம் என தாங்கள் எழுதிய கடிதங்கள் தான் எனக்கு அன்றைய பைபிள்.படிப்பகம் படிப்பகமாக சென்று படிப்பது தான் என் வேலை.
நாஞ்சில் மனோகரன், இரா.செழியன், லக்ஷ்மணன் என டெல்லிக்கு அனுப்பியவர்கள் எல்லாம் முதுகில் குத்த தயங்காததால், மருமகன் முரசொலி மாறன் அவர்களை அனுப்பி,டெல்லி அரசியலில் தனக்கென்று ஒரு இடம் பெற்றுக்கொண்ட அரசியல் சாணக்கியத்தனம் கண்டு ஆச்சர்யப்பட்டேன். 1977ல் முதன் முதலாக காங்கிரஸ் இல்லாத மாற்று நடுவண் அரசு அமைத்ததும் 1988ல் வி.பி.சிங் தலைலையில் மறுபடியும் மாற்று நடுவண் அரசு அமைத்ததும் தாங்கள்தான் என்பது அரசியல் தெரிந்த அனைவரும் அறிந்த செய்தி.
மூன்று “க”: கலைஞர், கவியரசு,கணேசன்( சிவாஜி) மூன்று கடவுள்களாக இருந்து எனக்கு தமிழ் போதித்தீர்கள்.
இன்று கூட ஐந்தாவது முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து அகவை 86யிலும்,மக்கள் நலத்திட்டங்கள், தமிழகத்தை தொழில் வளர்ச்சியுள்ள மாநிலமாக மாற்றிக்கொண்டிருக்கும் தங்களின் நிர்வாகத்திறன் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று தான்.
இது போதுமா? தமிழினத் தலைவர் என்ற அடைமொழிக்கு…..
உண்ணாநோன்பு என்றால் என்னவென்று தங்களுக்கு தெரியாதது இல்லை. அப்படி தெரியவில்லை என்றால் வரலாற்றை திரும்பிப்பாருங்கள்.அதற்கும் நேரம் இல்லை என்றால், தனித் தெலுங்கானா கேட்டு திரு.சந்திரசேகர் ராவ் இருந்ததைப் பாருங்கள். தங்களைப் போல் மக்கள் செல்வாக்கு இல்லாத
தலைவர் தான் அவர்.இருந்தும் தான் நினைத்ததைச் சாதித்தபின் தான் உண்ணாநோன்பை விலக்கிக் கொண்டார். 1987ல் இந்திய அமைதிப்படையின் செயல்களுக்கு காந்திய வழியில் உண்ணாநோன்பிருந்து எதிர்ப்பு காட்டி உயிர்நீத்த தியாகச்செம்மல் திலீபன் பற்றி அறிந்திருப்பீர்கள்.
இந்தப் பின்ணனியில் தாங்கள் அண்ணா சமாதியின் முன்னாடி இருந்த உண்ணாநோன்பு நாடகத்தை யோசித்துப் பாருங்கள்.
ஈழப்பிரச்சனையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்ற சட்டசபைத் தீர்மானத்தை நடைமுறைப்படித்தி இருந்தால், ஈழத்தில் மே 17 அப்படி ஒரு கோர நிகழ்வு நடந்திருக்கச் சாத்தியமில்லை. தடுத்து இருக்கலாம். தமிழினத்தலைவர் என்ற பட்டத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கும்.
சட்ட மாணவர்களும் வழக்குரைஞர்களும் ஈழப்பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு, இந்திய உதவியுடன் சிங்கள ராணுவம் நடத்தி வரும் தமிழ் இன அழிப்பை, தமிழக மக்களிடம் கொண்டு சென்று எழுச்சியுடன் மக்களை திரளச் செய்த நேரம், மருத்துவமனையில் இருந்து கொண்டே.,அந்த எழுச்சியை முனை மழுஙகும் விதமாக,திசை திருப்பி விட்டது,தங்களுக்கு வேண்டுமானால் சாணக்கியத்தனமாக இருக்கலாம்.தமிழினத் தலைவா என தங்களை வாயாரா வாழ்த்திக்கொன்டு இருக்கும் தமிழ் இனத்திற்கு தாங்கள் செய்த மன்னிக்க முடியாத துரோகம் அல்லவா?
அது மட்டுமில்லாது,உலக நாடுகள் எல்லாம் ஒருங்கிணைந்து இலங்கை மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப் போகிறது என்றவுடன் , அதை தடுக்கும் விதமாக , ஒரு பொம்மைக்குழுவை இலங்கைக்கு அனுப்பி இந்திய அரசின் உதவியுடன் , உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பிவிட்டது, தமிழினத்தலைவர் என்ற தங்களின் அடை மொழிக்கு கொஞ்சமாவது அடுக்குமா? என்று தங்கள் மனசாட்சியைக் கேட்டுக் கொள்ளவும்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் தமிழ் ஆர்வலர்கள்,தேச விரோத சக்தியாகப் பார்க்கப்பட்டு தடா, பொடா என்று அரசின் அடக்கு முறைக்கு ஆளானார்கள்.அது எதிர்பார்த்த ஒன்றுதான். சோ,என்.ராம்,ஜெ. கும்பலுக்கு தமிழன் என்றால் ஆகாது தான். ஆனால் தஙக்ள் ஆட்சியிலுமா?
பாரதிராஜா,தா.பாண்டியன், சீமான் போன்ற ஈழ ஆதரவாளர்களின் இல்லம், சொத்துககள் தாக்கப்பட்டதற்கு இன்றுவரை ஒரு நடவடிக்கையும் இல்லை.தமிழ்த் தியாகி , தியாகத் திருமகன் முத்துக்குமாரை யாரென்று கேட்ட ஒரு ஈனப் பிறவி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டில் நடந்த ஒரு நிகழ்வுக்கு, உடன்டியாக தம்பிகள் நால்வரை சிறையில் அடைத்துள்ளது உங்களின் கீழ் உள்ள காவல் துறை.
ஏன் இந்த மாற்றம்?
தங்களின் பதவிக்காலத்தில் தான் தமிழக உரிமைகள் பறி போகிறது என்ற குற்றச்சாட்டு,எதிர்க்கட்சிகளால் அரசியல் ஆதாயத்திற்காக வைக்கப்படும் குற்றச்சாட்டு என்று தான் இன்று வரை நினைத்திருந்தேன். ஆனால் ஈழத்தமிழர் , தமிழக மீனவர்கள், முல்லைபெரியார் போன்ற பிரச்சனைகளில் தாங்கள் எடுக்கும் எந்த முடிவும் தமிழகத்திற்கு சாதகமாக இல்லை என்பதே உண்மை.
நடுவண் அமைச்சரை எதிர்த்து குரல் கொடுக்க ஒரு கண்டனக்கூட்டம் கூட நடத்த முடியவில்லை என்பது தான் இப்போதைய சோகம்.இந்திரா அம்மையாரை எதிர்த்து வீரமுடன் நடந்து கொண்ட தாங்கள் சோனியாவிடம் தமிழக உரிமைகளை அடகு வைப்பதை என்னால் பொருத்துக் கொள்ள முடியவில்லை.
ஆலமரத்தின் கீழ் புல் பூண்டு வளருவது மிகக்கடினம்.தங்கள் ஆளுமையின் கீழ் வளர்ந்தும் தனக்கென்று தனிப்பாதை அமைத்துக்கொண்டு நவீன தமிழ் இலக்கியத்தில் தனக்கென்று தனி இடம் தக்கவைத்துள்ள கவிஞர்.கனிமொழியின் ஆலோசனைகளைத் தாங்கள் கேட்பீர்கள் என்று எங்கோ படித்தேன்.ஈழப்பிரச்சனையில் கனிமொழியின் கருத்துக்கும் தாங்கள் இடங்கொடுக்கவில்லை என நினைக்கிறேன்.
ஏன் இந்த மாற்றம்?
தமிழக அரசு காங்கிரஸின் தயவில் இருப்பதாலா?காங்கிரஸ்காரன்கள் செக்கு எது? சிவலிங்கம் எது என்று என்றுமே தெரியாதவர்கள்.அவர்களை நம்பி தாங்கள் வளர்ந்த ,வளர்த்தெடுத்த கொள்கைகள், தமிழ் இன உணர்வு அழிய இடங்கொடுக்கலாமா? அதுவும் மிகத் தேவையான காலகட்டத்தில்..
கடைசியாக ஒன்று. பேரறிஞர் அண்ணா சொன்னதாக தாங்கள் அடிக்கடி மேடைகளில் சொல்லிவந்ததை இங்கு ஒரு முறை நினைவுபடுத்த விரும்புகிறேன். “பதவி என்பது தோளில் போடும் துண்டு போன்றது..தமிழ் இன உணர்வுதான் இடுப்பில் கட்டும் வேட்டி போன்றது”.
தாங்கள் வேட்டிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையிலும், இல்லை என்றால், தமிழினக் கொலைஞர் என்ற அடைமொழிதான் தங்களுடன் தொடர்ந்து வரும் என்பதைக் கூறிகொண்டும்
இம்மடலை முடிக்கிறேன்.
தங்களின் ஒரு முன்னாள் உடன்பிறப்பு.
அ.வெற்றிவேல்.
- அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 2)
- அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.
- தீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ கவிதை நூல் வெளிவருகின்றது.
- ஈரம் – ஆன்ட்டி கிளைமாக்ஸ்
- பைக்காரா
- இ.பா வின் ‘வேதபுரத்து வியாபாரிகள்’- ஒரு அரசியல் அங்கத நாவல்.
- யுவனின் குண்டூசி தேடாத யானைகள்= நாவல் விமர்சனம் (2)
- யுவனின் குண்டூசி தேடாத யானைகள் – நாவல் விமர்சனம் (1)
- சினிமா கட்டுரை யஸ்மின் அமாட் சினிமா : “sepet” ஒரு சீன வாலிபன் – ஒரு மலாய்க்காரப் பெண் – மறக்க முடியாத காதல் கதை
- திலகபாமாவின் மறைவாள் வீச்சு
- 67 வயதில் சிறுவனான மாயம்
- குலாபி தியேட்டர் சினிமாவை முன்வைத்து
- மிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல் (முடிவுப்பகுதி)
- மிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல்
- “கரப்பான் பூச்சி பிரபஞ்சம்” (cosma…a cocoon of cockroch)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -2
- வேத வனம் –விருட்சம் 64
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-3 மதுக்குடி அங்காடி (The Tavern)
- பனி சூழ்ந்த பாலை!
- நூலகத்தில் பூனை
- நிச்சயமாக உனதென்றே சொல்
- காதல்
- இரவினில் பேசுகிறேன்
- அதிகாரத்துவத்தின் நீட்சியும் ஆளுமையின் வலிமையும்
- கலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்..
- வார்த்தை டிசம்பர் 2009 இதழில்…
- வாடகை
- மூன்று கதைகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -2
- டிராகன்