Trouble with Islam புத்தகத்தின் அரபி மொழிப் பதிப்பு – இடதுசாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

ஆசாரகீனன்


கனடாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண் எழுத்தாளர் இர்ஷத் மஞ்ஜியின் நேர்காணல் ஒன்றை திண்ணை வாசகர்களுக்காக மொழி பெயர்த்திருந்தேன். இவர் எழுதிய The Trouble with Islam புத்தகத்தின் காரணமாக இவருக்கு கனடாவின் அடிப்படைவாத முஸ்லிம்களால் மரண தண்டனைக்கான ஃபட்வா விதிக்கப்பட்டது. தற்போது இர்ஷத் பலத்த பாதுகாப்புடன் வாழ்ந்து வருகிறார்.

இது போன்ற தகவல்களையும், ஷரியத் நீதிமன்றங்களை ஏற்படுத்தி இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் குளிர்விக்கும் முயற்சியில் கனடா அரசாங்கம் இறங்கியுள்ளதையும் திட்டமிட்டு மறைக்கும் சிலர், பன்முகப் பண்பாட்டு வாதம் பேசி, கனடா மிகவும் முற்போக்கான நாடு என்றும், கருத்துச் சுதந்திரம் மிக்க நாடு என்றும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்தியா என்ற முப்பெரும் சாத்தான்களுள் முதன்மையான சாத்தானும், கனடாவின் அண்டை நாடுமான அமெரிக்காவை எப்படியேனும் ஒழித்துக் கட்டி, அன்பு மற்றும் சமத்துவத்தின் மொத்த உருவமான அரபு ஏகாதிபத்தியம் உலகெங்கும் கோலோச்ச வேண்டும் என்பது இவர்களது விருப்பம்.

இப் புத்தகத்தை ஏகாதிபத்திய மொழியான ஆங்கிலத்தில் படிக்க விரும்பாதவர்களின் வசதிக்காக, இடதுசாரிகளுக்கு உகந்த ஏகாதிபத்திய மொழியான அரபியில் இது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அரபிப் பதிப்பு இணையத்தில் இலவசமாகக் கிடைப்பதுடன் குறுக்கப்பட்ட கோப்பு வடிவிலும் தரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் இருக்கும் அரபி மொழி அறிஞர்கள் இதை அவசியம் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அரபு மொழி தெரியாத இந்திய இடதுசாரியினரும் இப் புத்தகத்தைக் கைக்காசு போட்டு வாங்கிப் படிப்பது போல பாவனையாவது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு வேளை அரபி மொழி தெரிந்த அடிப்படைவாதிகள் இந்தியாவில் இர்ஷத் மஞ்சிக்குக் கொடும்பாவி கட்டி எரித்து, இப் புத்தகத்தைத் தீயிட்டு எரிக்க முயற்சி செய்தால் அந்த அன்பான, பல பண்பாட்டிய நேரிய மக்கள் ஜனநாயக முயற்சிக்கு இந்திய இடதுசாரியினரும், மாஒயிஸ்டுகளும் தம் முழு சக்தியையும் திரட்டி உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அன்பாளரும், மக்கள் நேயருமான லெனின்/ஸ்டாலின்/மாஒ ஆகியோர் தத்துவப் போராட்டங்கள் நடத்துவதின் அவசியம் குறித்து எத்தனையோ முறை நம்மிடம் உரையாற்றி இருக்கின்றனர். எனவே, இத் தருணத்தைக் கை நழுவவிடாமல் களத்தில் இறங்குவோமாக.

குறைந்தது ஒரு பத்தாயிரம் பிரதிகளையாவது வாங்கி இடதுசாரியினர் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய இந்தியா அல்லாத பகுதிகளிலும், மத்திய இந்தியாவில் உள்ள இந்திய அரசின் கொடும் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு, நக்சல்பாரி அரசின் அன்பு வழியில் ஆளப்படும் அமைதிப் பாசறைகளிலும், பகுத்தறிவுக்கே நாமமாகத் (திலகமாக) திகழும் தமிழ்நாட்டிலும் இப் புத்தகத்தைக் கொளுத்தினால், இர்ஷத் மஞ்சிக்குத் தன் வாழ்வின் அர்த்தம் புலப்பட்டு பெரு மகிழ்ச்சி அடைவார் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

சொக்கப்பனையைப் பொதுவாக கோவில் சார்ந்த விழாக்களே ஆக்கிரமிக்கின்றன. இந்துத்துவாவின் பிடியில் இருந்து மக்களின் கற்பனையை விடுவித்து, இஸ்லாமியப் பாதையிலும் மக்களுக்கு விடுதலையும் கதகதப்பும் உண்டு என்று காட்டினால், லெனினியப் பாதைக்கும், வஹாபியத்துக்கும் மேலும் பல மிலியன் மக்கள் வந்து சேரக் கூடும். நம் மக்களுக்கோ விழாக்கள் எல்லாம் நிரம்பவே பிடிக்கும். சொக்கப்பனையினால் மக்களுக்கு டிசம்பர்/ஜனவரி குளிருக்கு இதமாகச் சற்று கதகதப்பும் கிடைக்கும்.

மேலும், டிசம்பரில் கொளுத்தினால் வழக்கமான சென்னை சங்கீத சீஸனின் மேல் சாதி பண்பாட்டு ஏகாதிபத்திய ஆபாசத்துக்கு எதிரான போராட்டமாகவும் இந்துத்துவாவின் சதிகளை முறியடிக்கும் போராட்டமாகவும் கூட இதை உருப்பெருக்க வாய்ப்பு இருக்கிறது. மகஇக, தமுமுக, தவ்ஹீது பேரவை போன்ற தோழமை சக்திகள் இந்தப் போராட்டத்தில் நிச்சயம் ஈடுபடுவார்கள். சவுதி அரசு இதற்கு ஏதாவது ஊக்கத் தொகை கூட கொடுக்கும். யுகப் புரட்சிக்கு ஒரு துவக்கமாகவே இது இருக்கக் கூடும்.

என் கற்பனைக் குதிரைக்கு பெரும் இறக்கைகளே முளைத்த மாதிரி இருக்கிறது. எனக்கே இப்படி எல்லாம் தோன்றினால், உண்மையையே எந்நாளும் தேடும் இந்திய இடதுசாரிகளுக்கும், நேர்மையே உருவான இதர அடிப்படைவாதிகளுக்கும் இயல்பான இன்னும் உயரத்தில் சஞ்சரிக்கும் கற்பனையில் வேறு என்னென்ன விபரீதங்கள் தோன்றுமோ. எல்லாவற்றிற்கும் இடம் தரும் தாராளம் இந்தியாவுக்கும், இந்தியருக்கும் உண்டு என்பதால் அனைத்தையும் முயலுமாறு கோருகிறேன்.

இப்போதே இதையெல்லாம் முயன்றால் சர்வாதிகாரியான ஜெயலலிதாவின் அரசுக்கும் பெரும் தலைவலியைத் தருவதாக இது அமையும் என்பதால், அவர் முந்திக் கொண்டு வழக்கமான தடாலடி நடவடிக்கையாக அரசின் சார்பில் ஒரு நூறாயிரம் பிரதிகளை வாங்கி பகுத்தறிவு/விடுதலைத் திடலில் சொக்கப்பனையில் இட்டாலும் இடுவார். அரபி மொழியின் வளர்ச்சிக்கு இது பெரும் ஊக்கம் கொடுக்கும் என்பதையும் கருதுவீர்கள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.

இர்ஷத் மஞ்சியின் அடுத்த புத்தகங்களையும் அரபியில் வெளியிட்டால் மேலும் கூட்டங்கள் போட்டுத் தொடர்ந்து சொக்கப்பனை விழாக்கள் நடத்தும் வாய்ப்பும் ஏற்படும். இதையே தொடர்ந்து ஒவ்வொரு டிசம்பரிலும் செய்தால் சொக்கப்பனைகளின் தாய் மண்ணாகவே தமிழகத்தை அறிவித்து விடலாம். இப்படி ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றால், தமிழகத்தில் அரபிப் பதிப்பகங்களை நடத்தும் ஊக்கம் நிறைய பேருக்கு ஏற்படும். பல ஆயிரம் ஆண்டு தொடர்புள்ள அரபு மொழியைத் தமிழகத்தில் வளர்ப்பதைப் போன்ற பாக்கியம் நமக்கு வேறு என்ன இருக்க முடியும். பல பண்பாட்டியப் பூங்காவாகத் தமிழகத்தையாவது மாற்றும் பெரும் வாய்ப்பு இங்கு உள்ளது.

மேலும், இயக்குனர் வான் கோ படுகொலையைத் தொடர்ந்து, இர்ஷத் மஞ்ஜி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு தலையங்கக் கட்டுரையை எழுதியுள்ளார். இதை இடதுசாரிகள் அவசியம் படிக்கும்படி வேண்டுகிறேன். அமெரிக்க முஸ்லிம் பெண் எழுத்தாளரான ஆஸ்ரா நொமானி அமெரிக்க மசூதிகளில் நிலவும் பால் சமத்துவமின்மை பற்றி எழுதி இருந்த கட்டுரையையும் திண்ணையில் மொழிபெயர்த்திருந்தேன். ஆஸ்ரா நொமானியும், இர்ஷத் மஞ்ஜியும் வரும் டிசம்பர் மாதம் 5-ம் தேதி ஞாயிறு மாலை நியூயார்க் நகரில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் ‘பெண்களும் இஸ்லாமும் ‘ என்ற தலைப்பில் பேச உள்ளார்கள். மேலதிக விவரங்களுக்குப் பார்க்க: Irshad Manji and Asra Nomani: Women and Islam

இவர்களைத் தமிழ்நாட்டில் கூப்பிட்டுப் பேசச் சொன்னால் அதைச் சாக்காக வைத்து ஒரு பெரும் போராட்டம் நடத்தி மேலும் உறுப்பினரைத் திரட்டும் வாய்ப்புகள் ஏற்படும். சம்பந்தப்பட்ட தன்னூக்க நிறுவனங்கள் கவனிப்பார்களா ?

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்