நரேந்திரன்
ஒரே தவறை பத்து முறை செய்தாலும் தவறு சரியானதாகி விடாது என்பார்கள். இராக்கிற்கு மேலும் 30,000 அமெரிக்க துருப்புகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் சமீபத்திய “புதிய இராக்கிய திட்ட”மும் அதனை உறுதி செய்கிறது. அவரைச் சுற்றி சரியான ஆலோசனைகள் வழங்குபவர்கள் இல்லை அல்லது நியோ-கான்கள் எனப்படும் டிக் செனிகளின், ரம்ஸ்·பீல்ட்களின் ஆளுமை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதனையே இது காட்டுகிறது.
இதே நிலைமை இப்படியே தொடர்ந்தால் அமெரிக்காவைக் காப்பாற்ற அந்த ஆண்டவனாலும் கூட முடியாது. ஒரு 2005-ஆம் ஆண்டுக் கணக்கின்படி, இராக் போருக்கு ஒவ்வொரு மணி நேரமும் 7.4 மில்லியன் டாலர்கள் செலவாகிறது. பில் கிளிண்டனின் பதவிக்காலம் முடிகையில் surplus-இல் இருந்த அமெரிக்க பட்ஜெட் காணாமல் போய், ஜார்ஜ் புஷ்ஷின் ஆறாண்டு கால ஆட்சி 8 டிரில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனில் தத்தளிக்கிறது. அதாவது ஒவ்வொரு அமெரிக்கக் குடும்பத்திற்கும் $75,000 வெளிநாட்டுக் கடன் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். மொத்த உள்நாட்டுக் கடனான 2.1 டிரில்லியன் டாலர்கள் இதில் சேர்த்தியில்லை. வாங்கும் கடனில் 80% சதவீதம் சீனா, தைவான் போன்ற நாடுகளில் இருந்து வருகிறது. இராக் சண்டையினால் பெருகி வரும் கட்டுக் கடங்காத செலவைச் சமாளிக்க வெளிநாட்டுக் கடனை நம்பியே இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறது அமெரிக்கா.
நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன், இராண்டாம் உலகப் போரில் புகழ்பெற்ற அமெரிக்க ஜெனரலும், அமெரிக்க ஜனாதிபதியுமான ஐசனோவர் (General Dwight D. Eisenhower), தன்னுடைய பதவிக்காலம் முடிந்து வெளியேறு முன் அளித்த பேச்சில், ராணுவத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும், ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கும் உள்ள உறவினால் ஜனநாயகத்திற்கு ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் சொன்ன வார்த்தைகள் இன்று நடைமுறைக்கு வந்திருக்கின்றன.
“In the councils of government, we must guard against the acquisition of unwarranted influence, whether sought or unsought, by the ‘minilitary industrial complex’. The potential for the disastrous rise of misplace power exists and will persist.”
அமெரிக்கர்கள் இன்னும் அதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
அமெரிக்காவில் சிவப்பு மாநிலங்கள், நீல மாநிலங்கள் (Red States and Blue States) என்று இரண்டு பிரிவுகளுண்டு. இதில் சிவப்பு மாநிலங்கள் குடியரசு கட்சிக்கும், நீல மாநிலங்கள் ஜனநாயக கட்சிக்கும் தொடர்ச்சியாக ஆதரவு அளித்து வருபவை. ஒவ்வொரு தேர்தலிலும் இந்த சிவப்பு, நீல மாநிலங்கள் முக்கியத்துவம் பெறும். ஏதாவது ஒரு மாநிலம் மாற்றி வாக்களிப்பது அமெரிக்க அரசியல் தளத்தில் பெரும் மாறுதலைக் கொண்டுவரும் என்பதால், அதனைத் தக்கவைத்துக் கொள்ள இரு கட்சிகளிடையே பெரும் போட்டி நிலவும்.
பொதுவாக அமெரிக்காவின் மத்திய மற்றும் மத்திய மேற்கு மாநிலங்கள் ஜனாதிபதி தேர்தல்களில் குடியரசு கட்சிக்கு மட்டுமே ஆதரவளிப்பவை. அபூர்வமாக, மிக அபூர்வமாக மட்டுமே வேறோரு கட்சிக்கு ஆதரவளிப்பது நிகழ்ந்திருக்கிறது.
சிவப்பு மாநிலங்களின் மிகத் தீவிரமான குடியரசுக் கட்சி ஆதரவிற்கான காரணம் பற்றி அறியும் சந்தர்ப்பம் சமீபத்தில் Link TV-இல் வந்த ஒரு டாகுமெண்டரியில் பார்க்கக் கிடைத்தது. ஒரு மணி நேரம் ஓடக் கூடிய இந்த டாகுமெண்டரி, குடியரசுக் கட்சிக்கு ஆதரவளிக்கும், கன்சர்வேட்டிவ், சிவப்பு மாநிலங்களின் ஊடாக ஏறக்குறைய 6000 மைல்கள் பயணம் செய்த ஒருவரால் எடுக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் இன்றைய மிக முக்கியப் பிரச்சினைகளான இராக் போர், சட்டப்படியான கருக்கலைப்பு உரிமையை மகளிருக்கு வழங்குவது, இமிக்ரேஷன் பிரச்சினைகள், பொருளாதாரம் பற்றிய கேள்விகள் இம்மாநிலத்தின் மக்களிடம் கேட்டகப்பட்டன. அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பெரும்பாலோனோர் நாட்டில், உலகில் நடக்கும் நடப்புகள் பற்றி அறியாதவர்களாக இருந்தார்கள். அல்லது அதுபற்றிய அக்கறை இல்லாதவர்களாக இருந்தார்கள். என்ன நடந்தாலும் குடியரசுக் கட்சிக்கு மட்டுமே வாக்களிப்பேன் என்றவர்களே அதிகம்.
உதாரணத்திற்கு ஒன்று,
கேள்வி : சென்ற ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள்?
பதில்: சந்தேகமில்லாமல் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷ¤க்குத்தான்….சென்ற தேர்தலில் மட்டுமல்ல, அதற்கு முந்தைய தேர்தலிலும் கூட…
கேள்வி : என்ன காரணம் என்று நான் அறிந்து கொள்ளலாமா?
பதில்: ஜார்ஜ் புஷ் ஒரு நேர்மையான, கிறிஸ்தவ மதத்தில் மிகப் பற்றுள்ள, உண்மையான கிறிஸ்தவர். அதை விட வேறென்ன காரணம் வேண்டும்?
எதற்கய்யா அந்த ஆளுக்கு ஓட்டுப் போடுகிறாய்? என்றால், அவரை மாதிரி தமிழ் பேசமுடியுமா? என எதிர் கேள்வி கேட்கும் திராவிட கொடுக்குகள்தான் என் நினைவுக்கு வந்தார்கள். பொருளாதார முன்னேற்றத்தை விட, தமிழ் பேசுவதுதான் முக்கியம் அவனுக்கு. ஜனநாயகம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரிதான் போலிருக்கிறது.
சிவப்பு மாநிலங்களின் தீவிரம் குறித்து நேரில் அறிவதற்கான சந்தர்ப்பம் எனக்கும் வாய்த்திருக்கிறது.
சில வருடங்களுக்கு முன் இண்டியானா மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள ஒரு சிறு நகரத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். இராக் போருக்கான தீவிர முஸ்தீபுகள் நடந்து கொண்டிருந்த நேரம். நாளுக்கொரு தடவை ஜார்ஜ் புஷ்ஷோ அல்லது Cheneyயோ அல்லது ரம்ஸ்·பீல்ட் போன்றவர்களோ தொலைக்காட்சிகளில் தோன்றி, சதாம் ஹ¤செய்னை ஒழித்துக் கட்டி, இராக்கியர்களுக்குச் சுதந்திரம் வாங்கித் தருவதின் முக்கியத்துவம் பற்றி முழங்கிக் கொண்டிருந்தார்கள்.
சதாம் பதுக்கி வைத்திருக்கும் பேரழிவு ஆயுதங்களினால் (WMD) அமெரிக்கர்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களும், நியூயார்க்கில் நிகழ்ந்த உலக வர்த்தக மையக் கட்டித் தகர்ப்பிற்குக் காரணமான சதாம்-அல்காய்தா கூட்டணியை முறியடித்தே ஆகவேண்டிய கட்டாயம் குறித்தும் மணிக்கணக்காக பேருரைகளும், விவாதங்களும் நடந்தவண்ணம் இருந்த காலம். செப்டம்பர் 11-க்குப் பிறகு ஜார்ஜ் புஷ் எது சொன்னாலும், செய்தாலும் கண்களை மூடிக்கொண்டு அமெரிக்கர்கள் ஆமோதித்துக் கொண்டிருந்தார்கள்.
செய்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்க, ஒரு சக ஊழியரின் அறைக்குச் சென்றிருந்தேன். பேச்சு, வரவிருக்கும் இராக்கிய யுத்தம் பற்றித் திரும்பியது. “இராக் யுத்தம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என அவர் கேட்க, மத்திய மேற்கு அமெரிக்காவின் (Mid-West) “டைனமிசம்” குறித்து அந்நேரம் அறிந்திராத நான், “இராக்குடன் போர் செய்வது பைத்தியக்காரத்தனம்” எனப் பதில் சொன்னேன். அத்துடன் நிற்காமல், போருக்கு எதிரான காரணங்களையும் விளக்க முற்படும் பெருந்தவறினைச் செய்தேன்.
அன்பரின் முகபாவம் கடுமையாக மாறி, படு கோபத்துடன் என்னுடன் விவாதிக்க ஆரம்பித்தார். அமெரிக்கப் படைகளின் வலிமை குறித்தும், சி.ஐ.ஏ. போன்ற அமைப்புகள் மற்றும் ஜார்ஜ் புஷ்ஷின் ஆளுமை குறித்தும், தொண்டை நரம்புகள் புடைக்க எனக்கு விளக்கிக் கொண்டிருந்தார். இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்பிப்பது எனப் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த என்னை, எதோச்சையாக அந்தப் பக்கம் வந்த இன்னொரு சக ஊழியர் மீட்டுச் சொன்ன, “செங்கழுத்தர்களிடம் எச்சரிக்கையாக இரு! (Be careful with red necks!)” மறக்கக் கூடிய ஒன்றல்ல. அனுபவமே சிறந்த ஆசான்!
மேற்கூறிய அந்நகரத்தில் பெரும்பான்மையானவர்கள் வெள்ளை இனத்தவர்கள். பொதுவாக வேறு இனத்தவர்கள் அங்கு வந்து குடியேறுவதை அவர்கள் விரும்புவதில்லை. வெளி ஆட்கள் அதிகம் வந்து குடியேறிவிடுவர்கள் என்ற அச்சத்தில், அந்த நகரத்தைத் தொட்டுச் செல்லும்படி அமையவிருந்த ஒரு முக்கிய சாலைத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள். இன்றும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜார்ஜ் புஷ் போன்ற நியோ-கன்சர்வேட்டிவ்களுக்கு அங்கு இருக்கும் செல்வாக்கு உண்மையிலேயே அச்சமூட்டக் கூடியது. அமெரிக்காவின் இது போன்ற பகுதிகளில் கனன்று கொண்டிருக்கும் இனவெறி இருக்கும் வரை, ஜார்ஜ் புஷ் போன்றவர்களின் செல்வாக்கை யாரும் அசைக்க இயலாது என்பது கண்கூடான உண்மை.
911-க்குப் பிறகு அமெரிக்கர்கள், இஸ்லாமியர்கள் மீது (குறிப்பாக ஆசியர்கள், தாடி வைத்தவர்கள், தலைப்பாகை அணிந்தவர்கள்) அச்சமும், அவநம்பிக்கையும் அடைந்தவர்களாக இருந்தார்கள். எனினும், உடனடியாக அவர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பரவலாக நிகழவில்லை. அதே சமயம், 911 நடந்த சில நாட்களில், மேற்கூறிய நகரத்தில் அமைந்திருந்த ஒரு இஸ்லாமிய கலாச்சார மையத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. அமெரிக்காவின் வேறெந்த பகுதியிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழவில்லை. அதே ஊரில் இருந்த ஒரு ரெஸ்டாரண்டில் வேலை செய்த, ஒரு பாவமும் அறியாத பத்திற்கும் மேற்பட்ட அப்பாவி எகிப்தியர்களை, அல்-காய்தா அமைப்பினர் என்று யாரோ ஒரு அனாமதேயன் கொடுத்த புகாரினை ஏற்று, FBI கைது செய்து கொண்டு போனதும் நிகழ்ந்தது அங்கே.
எல்லாவற்றிற்கும் மேலாக, இனவாத இயக்கமான KKK (Klu Klux Klan) அந்தப் பகுதியில் மிகத் தீவிரமாக இயங்கி வருவது தெரிந்ததும், வேறொரு பெரு நகரத்திற்கு ஜாகையை மாற்றிக் கொண்டதும் என்னைப் பொறுத்தவரை வரலாற்று நிகழ்வுகளே!
புகைப்படம் :
ஜனவரி 11, 2007 அன்று, இராக் போரில் இறந்த Marine Cpl. Jason Dunham-க்கு, அமெரிக்க வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் நிகழ்ந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் W. புஷ்.
(yahoo.com-இல் இருந்து)
narenthiranps@yahoo.com
- Salute el Presidente
- பெரியபுராணம்- 120 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- யானை வரும் முன்னே
- நீர்வலை (7)
- காதல் நாற்பது (5) தனிமைக் கூக்குரல் !
- என் அறை
- இலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)
- ‘நீலக்கடல்’ நாவலுக்கு தமிழக அரசின் பரிசு
- பாரத அணுகுண்டைப் படைத்த ராஜா ராமண்ணா
- தப்புக் கணக்கு
- எழுத்தாளர் சல்மா – அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம்
- கூத்துப் பட்டறை – நாடக நிகழ்ச்சி
- திருப்பூர் மத்திய அரிமா சங்கம் – விருதுகள் 2006
- சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஆறு – ஜனவரி 15, 2007
- சென்னை புத்தகக் கண்காட்சி நாள் எட்டு – ஜனவரி 17, 2007
- சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஏழு
- சென்னை புத்தகக் கண்காட்சி நாள் 9
- NFSC Screening – ” Chennai:The Split City” by Shri Venkatesh Chakravarthy
- கடித இலக்கியம் – 41
- சிவகவிமணி, சி. கே., சுப்பிரமணிய முதலியார். (சம்பந்த சரணாலயர்)
- “மலையகச் சிறுகதைத் தொகுப்புள்”வாழ்வு”-ஒரு தேடல்”
- வாய் மொழி வலி
- பின்நவீன ஜிகாதும் – மார்க்சீயமும்
- எதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு
- உலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்
- வரலாற்றின் சலனத்தில் பாரசீகம் – பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:1)
- கொழும்பு குதிரை
- மடியில் நெருப்பு – 21