கே. ஆர். மணி
பழைய புத்தகத்தில் வைத்திருந்த மயிலிறகு போல சில நினைவுகள். மாயைதானென்றாலும் அதன் பவித்ரம் சார்ந்த பழையநினைவுகளின் பாதிப்புகள் நம்மில் எப்போதும் அதற்கான வாசனைகளை சுழற்றிக்கொண்டேதானிருக்கிறது. அப்போது அது குட்டிகளையும் போடுகிறது. காந்தியின் நினைவுகளும் அப்படித்தான். ஓவ்வொரு முறையும் பலகண்ணாடிகள் போட்டுக்கொண்டு படித்தும் பார்த்திமுருக்கிறேன். கலைடாஸ்கோப்புபோல அவர் மாறிக்கொண்டேதானிருக்கிறார்.
டேவிட் சேவியர், என் பண்ணிரான்டாவது வகுப்பின் ஆங்கிலாசிரியர். அட்டைப்போட்ட மார்க்கிச புத்தகங்களை படித்து, அதன் கேள்விகளை வகுப்பறைக்காற்றில் கலப்பவர். ‘ஏலே காந்தி என்னத்தலே கிழிச்சாரு.. பொம்பிளைங்க கூட வெறுமன படுத்துட்டு ஆட்டுப்பால்லல குடிச்சாரு.. ..’என்று ஆரம்பித்து புரட்சியில்லாமல் வந்ததால்தான் இந்தியா இன்னும் அடிமையாகிக் கிடக்கிறது என்கிற மார்க்கிசிய லெனினிச பஜனை பாடுகிறவர். அதை தர்க்கரீதியாக அவர் சொல்வதை கேட்டால் வருகிற புரட்டாசி புனித திங்களில் புரட்சிவந்து பரிட்சை தள்ளிப்போடப்பட்டு விடும் என்றெல்லாம் அந்தோனி சேவியரும், ராஜாவும் பேசிக்கொண்டார்கள். புரட்டாசிதான் வந்தது, புரட்சி இழவு ஒன்னுமே வரவேயில்லை, நாங்கள் பரிட்சை எழுதத்தான் வேண்டியிருந்தது. சுவர்களில் அரசாங்கம் வெறு, ஜனநாயகம் கிழி என்று கருப்பு வெள்ளையில் எழுதப்பட்ட எல்லா எழுத்துக்களுக்கும் சூத்திரதாரி சார்தான் என்று நினைத்துக்கொண்டோம்.
பாதிரியாருக்கு தெரியாமல் அவர் படிக்கிற புத்தகங்களிலிருந்துதான் அந்தப்புரட்சிக்கான விதைகளை தேடுகிறார் என்றும் எண்ணியிருந்தோம். ஆனாலும் அவரின் ஆங்கில ஆளுமை பிரமிப்பானது. அதுவும் அவரது வித்தியாசமான சிந்தனையும் எங்களை கட்டிப்போட்டது. லெனின் சவரிமுத்துவை அவர் அடிப்பதோ, திட்டுவதோ இல்லை, அதிகபட்சமாய், ‘ஏம்லா, இந்தப்பேர வெச்சுகிட்டு அழிச்சாட்டியம் பண்ணுதே ‘ என்று அதிகமாய் வருத்தப்படுவதோடு சரி. ரஸ்யாவில் மருத்துவம் படித்துமுடித்து வந்த சரவணனை பள்ளிக்கூடம் பெரியவிழா நடத்தி பாராட்டியது. டேவிட்சார்தான் அதை முன்னின்று நடத்தி அந்தக்கூட்டத்தில் ரஸ்யாவின் புகழ்பாடினார். நாங்கள் பள்ளிமுடிக்கும் வரை எந்தப்புரட்சியும் வரவமில்லை. 80’களின் கலவையும், 90களின் தொடக்கமும்
அதிவித்தியாசமாய் இருந்தன. அதன்பிறகு வாழ்க்கை அதன் பக்கங்களை வேகமாய் எழுதிக்கொண்டேபோனதால் பழைய பக்கமாகிப்போனது பள்ளி.
காலச்சுவடின் இதழான 97ல் காந்தியை பத்தின சிறப்பு இதழாக வந்தது. எல்லாமே அற்புதம் தமிழில் இத்தகைய ஆழமான கட்டுரைகள், அதன் பரப்பு, மொழிபெயர்ப்புதான் என்றாலும் அது செய்யப்பட்ட விதம் உண்மையில் பிரமாதம். வாழையிலைப்பந்தி. அதுவும் பாலக்காட்டு அடைப்பிரதமன் பந்தி.
அதில் அஸீஸ் நந்தியின்கட்டுரை, தமிழில் சீனிவாசனால் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது.
http://www.kalachuvadu.com/issue-97/page70.asp
காந்திக்கும், கோட்சேக்கும் ஏதாவது ஓற்றுமை இருக்குமாயென்ன ? படித்துப்பாருங்கள். கொலையாளிக்கும், கொலையூண்டவனுக்கும் எப்படி ஓற்றுமை இருக்கமுடியும், அதுவும் தேசநலனுக்காக இருந்திருக்கமுடியுமா ? கீழே படியுங்கள் :
” இந்த இருவருக்கும் இடையிலிருந்த பல ஒற்றுமைகளைப் பற்றிப் பேசாமல் அவர்களுக்கு இடையேயான வேறுபாடுகளைப் பேச முடியாது. இருவரும் அர்ப்பணிப்பும் துணிவும் மிகுந்த தேசியவாதிகள்; இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையினர் என்பதால் இந்தியாவின் பிரச்சினை அடிப்படையில் இந்துக்களின் பிரச்சினையே என்று இரு வரும் எண்ணினர்; பிளவுபடாத இந்தியா என்ற
கருத்தில் இருவருமே உறுதியுடன் இருந்தார்கள். இருவருமே பிரம்மச்சரியம் அரசியல் செயல்பாட்டின் முக்கிய அங்கம் என்று கருதினார்கள். காந்தியின் பிரம்மச்சரியம் அனைவரும் அறிந்தது; கோட்ஸே ஒரு முனிவரைப் போல வாழ்க்கை நடத்தினான். மரப்பலகையில்தான் அவன் உறக்கம்; எப்போதாவதுதான் போர்வையைப் பயன்படுத்தினான்; மிக மோசமான குளிர்காலத்தில்கூட வெறுஞ்சட்டை மட்டுமே அணிந்திருப்பான். அவன் திருமணமே செய்துகொள்ளாமல், கட்டைப் பிரம்மச்சாரியாக வாழ்ந்தான். காந்தியைப் போலவே கோட்ஸேயும் தன்னை ஒரு சனாதனியாகக் கருதிக்கொண்டான். அவனது விருப்பத்திற்கிணங்க அவனது உடல் சனாதனி முறையில் எரியூட்டப்பட்டது. ஆனால், இந்து சமூகம் சாதியற்ற சமூகமாகத் திகழ வேண்டும் என்றும் ஜனநாயக அரசு நிலவ வேண்டும் என்றும் தான் நம்புவதாக அவன் குறிப்பிட்டான். இந்த அம்சத்திலும் அவன் காந்தியோடு ஒற்றுமை கொண்டிருந்தான். முஸ்லிம் தலைவர்களுக்குச் சில சலுகைகள் அளித்து அதன் மூலம் தேச நலனுக்காக இந்திய முஸ்லிம்களை ஒன்றுதிரட்ட காந்தி மேற்கொண்ட முயற்சிகளையும் அவன் ஆதரித்தான். ”
ஏன் ஒரு காலத்திலும் இன்னும் அவரை மார்க்கிசிய டேவிட் சேவியரும் வெறுக்கிறார், நான் சந்தித்த வலதுசாரிகளும் வெறுக்கிறார்கள். என் அம்பேத்கார் வழிபோகிற நண்பன் சுமேத்தும் வெறுக்கிறான். மும்பாய் சாகிப், பால்தாக்கரேவும் வெறுக்கிறார். நக்சல்பாரிகள் வெறுக்கிறார்கள். அவரின் வெற்றி, அவர்கள் எதிர்பார்த்த உலகத்தை படைப்பதில் எழுந்த பெரும் தடையாக காந்தியம் இன்னும் ஓட்டிக்கொண்டிருப்பதால் அவர்களின் கதறலில் நியாயமிருப்பதாகவே எடுத்துக்கொள்வோம். அதன் ஒரே பிரச்சனை, அது வெறும் ஒருமனிதர் சார்ந்ததாகிவிட்டது. நிறுவனப்படாதாதோ அல்லது ஒரு குழுவாய் எடுத்துச்செல்லமுடியாததாவிட்டதோதான்
அதன் பலவீனம். காந்தியத்தை காலத்திற்கேற்ப மாறுவாசிப்பு செய்யும் சில முயற்சிகள் நடந்தாலும் அது எவ்வளவு பெரிய வெற்றியை கொடுக்கும் என்று சந்தேகம்தான். தனிமனிதங்கள் பலம் பொருந்தியதாக மாறும்போது மறுபடியும் காந்தியத்தின் அறநிலை அதன் வசீகரிமான, பலமான பகுதியாகலாம்.
காந்தி குறிப்பாய் கடந்த இராண்டுகளாக மறுபடியும் எல்லாரும் பேசப்படுகிற பொருளாகிவிட்டார். முன்னாபாய் படமும், “காந்தி மை பாதர்” படமும் இந்தத்தலைமுறை இளைஞர்களையிடையே அவரை மறுவாசிப்பு செய்தது. சொன்னதுபோல், ஏதோ ஒன்று அவரிடம் இருக்கிறது, உங்களுக்கு பிடித்தமானதும், பிடிக்காதது.
ஒரு சுவையான நிகழ்ச்சி. காந்திகிரி என்று விளையாட்டாய் பேசப்படும்பொருள் எப்படி நிறுவனங்களிடையே முக்கியத்துவம் பெற்றுவருகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
ஒரு உலகவங்கியின் இந்திய வாடிக்கையாளர் பிரிவின் தலைவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அந்த வங்கி தங்களது கிரெடிட் கார்டு பாக்கிகளை வசூலிக்கும் முறைபற்றி முன்னால் பலகதைகள் பேசப்பட்டது. அது ஓரளவு உண்மையும் கூட. குண்டர்கள் கூட்டத்தோடும், மிரட்டல் மற்றும் வசைச்சொற்களின் பின்னிசையோடும் பாக்கிவசூல் செய்யப்படும். மும்ரா மற்றும் ‘உல்லாச் நகர்’ என்கிற மும்பை பகுதியிலிருந்து வருகிற எந்த விண்ணப்பமும் பரீசிலிக்கப்படாது அல்லது பரீசிலிக்கப்பட்டு சின்ன காரணங்களுக்காக மறுக்கப்படும். அங்குள்ள சிந்தி மற்றும் இஸ்லாமிய சிறுவியாரிகளிடம் இந்த வங்கிகளின் பேத,தண்டங்கள் பலிக்கவில்லை. அவர்களும் தெளிவாகவேயிருந்தார்கள். கடன் வாங்குவதே கடமை, செலுத்தவதில் அக்கறை தேவையில்லை என்பதில் உறுதியாகயிருந்தார்கள். இந்தியாவில் கொள்ளையடித்து கொண்டுபோன செல்வம்தானே என்றும் ஊர்த்தண்ணியை நாய்
நக்கியா குறைந்துவிடும் என்று சிரித்துகொண்டே பேசுவார்கள். விளைவு, எல்லா வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களை பகிர்ந்துகொண்டு கடன் செலுத்தாதவர்களை, இந்த கேசில் கிட்டத்தட்ட மொத்த ஊரையுமே எழுதப்படாமல் தள்ளிவைத்துவிட்டார்கள். இந்த உல்லாச் நகர்காரர்கள் மும்பை லோக்கல் மின்சாரவண்டிகளிலும் பயணச்சீட்டின்றியே பெரும்பாலும் பயணிப்பர். சில ஊருக்கு சில குணங்கள், சில மனிதவாசனைகள். இது பழைய கதை.
புதியகதை, எல்லாவங்கிகளும் இப்போது அந்த மாதிரியான பகிஷ்கரிப்போ அல்லது தாதாக்களை வைத்து மிரட்டுவதோயில்லை. அவர்கள் உபயோகிப்பது ‘காந்திகிரி’ அல்லது காந்தித்துவம். சுருக்கமாக ஒரு கன்னத்தில் அறைந்தால்.. கான்செப்ட்.
நீங்கள் கடன் அடைக்கவே முயலவில்லையெனில், குண்டர்களுக்கு பதிலாக மானேஜரோ அல்லது ஓரளவு அழகான வாடிக்கையாளர் சேவை செய்யும் மங்கையோ உங்களை காப்பி அருந்தவோ, டின்னருக்கோ அழைப்பார்கள். உங்களிடம் பேசிவிட்டு முன்னாபாய் ஸ்டைலில் உங்களுக்கு சின்ன பூங்கொத்து கொடுப்பார்கள். இப்படி நீங்கள் பணம் கொடுக்க முயற்சிக்கும் வரைக்கும் செய்ய முயலுவார்கள்.
இது தகுந்த நல்ல பலன்களை தருகிறது என்கிறார்கள். குறைந்தபட்சம் வாடிக்கையாளர் ஆழ்மனத்தில் அறவுணர்வை மீறிய குற்றணர்வை தூண்டியவதாக அமைகிறது இந்த முறை என்றார், அந்த நண்பர். அதுதான், அந்த குற்றணர்வுதான் காந்திகாலம் கட்சிகள் தாண்டியும் அவரை வாழவைத்துக்கொண்டிருக்கிறதோ ? அவரது இறப்பும் சாதாரணமான ஒன்றாக இருந்திருக்குமானால் நாம் அவரை மறந்திருக்கலாம். அவரது அசாதரணமான இழப்பு, அதன் காரணங்கள், அதன் பின்புலம் எல்லாம் புகை கவிந்த நிலமாகவே இன்றுமிருக்கிறது. அவரது இறப்பு இதைவிட சிறப்பாகயிருந்திருக்கமுடியாது என்கிறது இந்த கட்டுரை.
எல்லா பெருங்கொலைகளுக்கு பின்னாலும் இத்தகைய புகையிருக்கலாம், கென்னடி, ராஜுவ்காந்தி, இந்திராகாந்தி. ஹ¥ம்.. இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகலாம் போல. அதுபோல இறந்தபின்னும் அதிகமாக விமர்சிக்கப்படுபவர்கள் அவராகத் தானிருக்கமுடியும். அவருக்கென்று தனிக்கட்சியும், கட்சிதாண்டி சாதரண மனங்களுமிருப்பதுதான் அவரின் பலமும், பலவீனமும் போல.
காலச்சுவடு இதுபோல அம்பேத்கார், சவார்க்கர், நேரு, பெரியார், அண்ணா, காமராசர் போன்ற போன தலைமுறை தலைவர்களையும் மறுவாசிப்பு செய்வதுமாதிரியான சிறப்பிதழை வெளியிடலாம். சில சத்துகளாவது தேறலாம், நிறைய சக்கைதானிருக்குமென்றாலும்.
மும்பை முலுண்ட் காளிதாஸ் அரங்கில் 02/2/2008 சீமானின் உரையும், சிந்தனையும்
“உன் தோட்டத்திலே உன் மண்ணிலே காய்க்கிற இளநீரை நீ வாங்கிகுடிக்கமாட்டே. உனக்கு கோக் குடிச்சாதான் பெருமை. சச்சின் 2 கோடி ரூபாய் வாங்கிட்டு குடிக்கிறான். அட குடிக்கிற மாதிரி நடிக்கிறான். நீ அந்தப் பூச்சி மண்டின பாட்டிலை வாங்கிக் குடிக்கிறே ” சீமான்.
சிந்தனை :
உணவு பழக்கவழக்கங்கள் மாறும் வாழ்க்கை வேகத்தினால் மாறுகின்றது. இடம், காலம் தேவைகள் உணவுப் பழக்கத்தை தீர்மானிக்கின்றன. உலகம் எல்லாம் இட்லியும், தோசையும், எலந்தபழமும் சாப்பிடப்பட வேண்டும் என்று எண்ணுவது வெறும் சென்னை எல்லை தாண்டாத சிந்தனை. எதையும் விற்கும் தளமும்(Scale) முறையும் மாறிக்கொண்டேவருகிறது. பெப்சி ஒரு பிராண்டாகமாறும்போது ஏன் இளநீர் அமெரிக்காவில் விற்கப்படக்கூடாது ? விற்கப்பட வேண்டும். மெக்டானல்ட் விற்கும்போது ஏன் நமது உடுப்பி தோசைகளும், வடாபாவும் உலகளவில் சந்தைப்படுத்த முடியாது ? அதுதான் சீரான சிந்தனை. பெப்சி ஒன்றும் பூச்சி கொல்லி மருந்தல்ல. இந்தப்பிரச்சனை எழுப்பப்பட்டதே, உணவுப்பொருளில் உட்பொருளின் அளவு எவ்வளவு தூரமிருக்கவேண்டும் என்று ஒரு தரநிர்ணயம் செய்யப்படவேண்டும் என்பதாகத்தானிருக்கவேண்டும் என எண்ணுகிறேன். நமது சாப்ட்வேர் மூளை மட்டும் அங்கு விற்கப்படவேண்டும், அவர்களது பெப்சி இங்கு விற்கப்படக்கூடாது என்பது சிவப்பு கிணற்றுத்தவளை கூச்சல்.
நமது ஆயுர்வேத மருந்துகளும், சீரான சித்தவைத்தியமும், மூலிகைகளும், சைவ சாப்பாடுகளும், ஆன்மீக இனிப்புதடவி விற்கப்படவேண்டும். நமக்கு பெரிய சந்தை உண்டு. நம்மாலும் முடியும்.அவை இந்தியா உலகத்திற்கு செய்யப்போகிற பெரிய கொடையாகயிருக்கலாம்.
சிந்தனைக்கு, பெப்சி கம்பெனியின் விஸன்(Vision) எனச்சொல்லப்படுகிற குறிக்கோள் ரொம்ப சின்னது, ‘Creating wealth to Stake Holders ‘ எதையாவது, எப்படியாவது செய்து பங்குதாரர்களுக்கு பணம் சேர்ப்பது என்பதுதான் அதன் நிறுவனதாரக மந்திரம். அதைத்தான் அதுஇப்போது செய்துகொண்டிருக்கிறது.
என்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்பதில் தெளிவும், உறுதியும் இல்லாது போகிற நிறுவனங்கள் பெப்சியாகவும், என்ரானாகவும்தான் போய்விடும். இது அரசியல் கட்சிக்கும் பொருந்தும்.
“நீ எங்களை நாத்திகன்னு சொல்றியே , உண்மையில் பார்க்கப்போன நீதான் நாத்திகன், உனக்குத்தான் உன் கடவுள் மீது நம்பிக்கை இல்லை. அட உனக்கு உன் கடவுள் மீது நம்பிக்கை இருந்தா ஏன் கோவில் வாசலைப் பூட்டிட்டு போறெ. உன் கடவுள் காலடியில் இருக்கிற உண்டியலுக்கு ஏன் பூட்டு போட்டு பூட்டி வச்சிருக்கே. னக்கே உன் கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் தானே. தன் காலடியில் இருக்கும் தன் உண்டியலைக் காப்பாத்த வக்கத்த கடவுள் இந்த ஊரெல்லாம் காப்பாத்தும்னு நம்புறியா?
ஊரெல்லாம் காப்பாத்தும் தாண்டவக்கோனே, உன் உண்டியலைக் காப்பாற்று தாண்டவக்கோனே ” சீமான்
சிந்தனை :
பலமுறை பதில் சொல்லியாயிற்று. எதுவுமே நம்பிக்கை. தமிழ், கண்ணகி சிலை எல்லாம் எப்படி நம்பிக்கையோ அதுபோல இதுவும் நம்பிக்கை. ஆனால் நம்பிக்கைகள் ஓவ்வொரு காலத்திலும் கேள்விக்குள்ளாக்கப்படவேண்டும். அதற்கான பதில்களையும், அறிவியலோடு இணைக்கிற வேலையையும் ஆன்மீகத்தலைவர்கள் செய்துகொண்டேயிருக்கத்தான் வேண்டும். இன்று கோவில் நடத்துவது ஒரு கட்சி அல்லது சினிமா செய்வதுபோல நிறுவனப்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயம். நாட்டார் கோவில்களிலும் நமது வயக்காட்டிலிருக்கும் கோவில்களுக்கும் ஏது உண்டியல், ஏது பூட்டு ?
நமது கோவில்கள் இஸ்லாமிய தாக்கத்திற்கு பிறகு பலபரிணாமங்கள் பெற்றன. தென்னிந்திய கோவில்களையும், வடக்கிந்திய கோவில்களையும் பார்க்கும் எவருக்கும் இந்த உண்மை இலகுவாக புரிந்துவிடும். மதுராவில் நீங்களே கடவுளை தொட்டு பூசைசெய்யலாம். சின்ன சின்ன வீதிகளில் சாமி ஒளிந்துகொண்டிருப்பார். யாருக்கு பயந்து ? எல்லாம் மற்ற மதத்துக்காரர்களின் படையெடுப்புக்கு பயந்துதான். காலத்திற்கேற்ப அவரும் மாறிக்கொண்டேயிருக்கிறார். நாம் மட்டும்தான் மாறாமல் அதையே கேள்வியை எத்தனை வருடமாக கேட்டுக்கொண்டேயிருக்கிறோம்.
“வாழ்த்துகள் திரைப்படம் 3 வாரத்திற்குள் பெட்டிக்குள் போய்விட்டது. மக்களுக்கு படம் முழுக்கவும் தமிழிலேயே இருந்ததால் புரியவில்லையாம்! ஒம்சாந்தி ஓம், ஹாம் ஆப்கோ கோன் புரியுது, வாழ்த்துகள் புரியலை ” சீமான்
என்ன கொடுமை சாரிது ! அது படமா சார். அது வெறும் தமிழ் புரியாதனால போகவில்லை. அதற்கு முந்தி தம்பிஎன்ற படமும்தான் வந்தது. முழுக்க முழுக்க தமிழில், வெற்றி பெற்றதே. வெற்றியை உங்களுக்கும் , தோற்றால் அதை புரியாது பார்த்த பார்வையாளனுக்கும் தருவது எங்களுக்கென்னும் புதுசில்ல சாரே ( ஐயா !) எத்தனை பெரிய ஜாம்பவான்களை பாலசந்தர், பாரதிராஜா எல்லாரையும் உட்காரவைத்திருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் படம்கூட எல்லாபடமும் வெற்றியடைவதில்லை. ஏன் வெற்றி, ஏன் தோல்வி என்று எல்லாரும்தான் தலையை பிய்த்துகொள்கிறார்கள். உங்களுக்கு நிறைய அழகான கறுப்புமுடி. நீங்களும் பிய்த்துக்கொள்ளலாம். உங்கள் வெற்றிக்கோ தோல்விக்கோ சுத்தத்தமிழ் மட்டும் காரணமாயிருக்காது. எதற்குமே ஒற்றைப்பரிமாணம் பார்த்தே பழகிவிட்டீர்கள். விசாலப்பார்வையால் உலகை விழுங்கு -( அட யாருப்பா, பாரதிதாசன் தானே ? )
“நடு செண்டர்னு சொல்றே ஓகே ரைட் சரினு சொல்றியே.. இது என்ன மொழி? சொந்தமொழி தெரியாதவன் முட்டாள் பிறமொழிகள் கற்க வேண்டாம்னு சொல்லலை. பிறமொழிகள் எத்துணை வேண்டுமானாலும் கத்துக்கோ. ஆனால் அதெல்லாம் உன் வீட்டு சன்னல்கதவுகளாக இருக்கட்டும். உன் வீட்டு நுழைவாயிலாக உன் தாய்மொழி இருக்கட்டும். நீ என்ன பண்றே.. உன் தாய்மொழியை உன் கழிவறைச் சன்னலாக வச்சிருக்கியே” சீமான்
சிந்தனை:
அழுத்திற்காக கொஞ்சம் ஓவர்பில்டப் எனினும், அதில் உண்மையில்லாமலில்லை. நெருப்பாயிருந்து யாரையும் மாற்றவேண்டிய கட்டாயமில்லை. தனது மொழி உயர்ந்தது என்றில்லாமல் எல்லா மொழிகளையும் மனிதர்கள்போல மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும். ஆனாலும் வேலைக்கு ஒரு மொழி, வீட்டில் ஒரு மொழி, வெளியில் புழங்க ஒரு மொழி என்கிற நிர்பந்தத்தில் நாம் கொஞ்சம் குழம்பித்தான் போகிறோம். எதிலுமே ஆழமாய் செல்லமுடியாமல் அதன் கலப்பு நிர்பந்தமாகிவிடுகிறது. இலகுவான முறையோடு நமக்கு பிடித்தவர்கள், ‘அட கஸ்டமில்ல கண்ணா, கொஞ்சம் ட்ரை பண்ணித்தான் பாரேன்னு’ சொல்லும்போது அது பெப்சியாய் இனிக்கிறது. பின்லேடன்கள் எந்தவகையில் மொழிக்காகவோ, மதத்திற்காக வந்தாலும் கசக்கத்தான் செய்கிறது.
“தமிழ்நாடு இந்தியாவுக்குள் இருக்கும் மாநிலம் அல்ல, அது இங்கிலாந்துக்குள் இருக்கும் ஒரு மாநிலமாக இருக்கிறது. சோறுதின்னாமா ரைஸ் தின்னா எப்படிடா உனக்கு சுயமரியாதை ஏற்படும்? நான் இவ்வளவு பேசிக்கிட்டிருக்கேன், அவன் “பாட்டுப்பாடு”னு கத்தறான். நீ விளங்கமாட்டே. உன்னை வெறிநாய் மாதிரி அடிச்சியே கொல்லப்போறான். இப்போ உனக்குப் பாட்டு கேட்குது.. அப்படித்தானே.. பாட்டுப் பாடறேன் கேட்டுட்டு செத்துப்போ.!! ” சீமான்
சிந்தனை : Bullshit ( எப்படி மொழிபெயர்ப்பது ? )
“வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்கிறான். எல்லோருக்கும் இடம் கொடுத்தான் தன் மண்ணில். இப்போ எல்லோரும் இவன் மேலே ஏறி மிதிக்கிறான். பர்மா, பம்பாய், கர்நாடகம், கேரளா, இலங்கை இப்போ மலேசியா எல்லா இடத்திலும் தமிழன் அடிப்பட்டுச் சாகிறான். இதிலே ஒரே ஒரு இடத்தில்தான் தமிழன் திருப்பி அடிச்சான்! அவன் திருப்பி அடிச்சவுடனே எல்லாரும் சொல்றான்..இது வன்முறை, தீவிரவாதம்னு.” சீமான்
சிந்தனை :
கடந்த அறுபதாண்டாக எத்தனைபேர் தமிழகத்திற்கு வேலை நிமித்தமாக வந்திருக்கிறார்கள். எத்தனைபேர் வேலை தேடி தமிழகம்விட்டு புலம்பெயர்ந்திருக்கிறார்கள் என்று கணக்கு என்னிடமில்லை. அந்த எண்கள் உண்மை சொல்லும். எனது அநுமானம் சரியாகயிருந்தால் தமிழகத்தைவிட்டு வேறிடம் புலம்புகுந்தவர்களே அதிகமாயிருக்குமென நினைக்கிறேன். அப்படியிருப்பின், வந்தாரை வாழவைக்கும் தமிழகம் எப்ப சார்.. ? பர்மா, பம்பாய் தமிழன் அடிபட்டுச் சாகிறான். அப்படியா.. மலேசியாவை சேர்த்துக்கொள்ளுங்கள்.. ஆழமாக நோக்கினால் இதுவெறும் தமிழன் என்பதற்காக மட்டுமில்லை என்பதுபுரியும். மும்பாய் இப்போது வடக்கிந்தியர்களையும் துரத்துகிறது. சாரே, நாமளும் மண்ணின் மைந்தன் கொள்கைக்கு சாமரம் வீசியவர்கள்தானே, மலையாளி தமிழக முதல்வரே, கர்நாடககாரன் சினிமா உலகை ஆளுவதா என்கிற மலிவான கோசங்கள் எழுந்தது உண்மைதானே. இதை உலகநோக்கோடு அணுக, இந்தியன் என்கிற பெயரோடு போவதே சிறப்பான வழியாக அமையும். இந்தியன் என்கிற பெயரே உங்களுக்கு அறுபது வருடங்களுக்குப்பிறகும் கசப்பது ஆச்சரியம்தருவதுதான். வேரோடுவிட்ட அமுதம், என்ன பாற்கடல் கடைந்துதான் என்ன பிரயோசனம் ?
“ஒரு தீக்குச்சி எரியாமல் தீப்பந்தம் எரியாது. புரட்சி தீக்குச்சி உரசலுக்காக காத்திருக்கிறது” சீமான்
சிந்தனை :
எதற்கு தீக்குச்சியும், தீப்பந்தமும். நல்ல மெழுகுவர்த்திகளோ, பெரிய மின்சார விளக்குகளோ போதும் எதையோஎரித்துதான் எதையும் பெறவேண்டும் என்கிற நிலை யாருக்குமில்லை. உலகத்திலுள்ளவர்களெல்லாம் ஜார் மன்னர்கள் என்றும், புரட்டவிடக்கூடிய நெம்புகோல் கவிதையை தான் எழுதப்போகிறோம் என்கிற சில கற்பனைகளை தாண்டி அந்தவார்த்தைகளில் பலமில்லை. இழக்க எதுவுமில்லை என்கிற வார்த்தைகள் இனி செல்லுபடியாகுது.
சே குவரா டிசர்ட் நன்றாயிருந்தது. [அவர் தமிழா என்ன ? பரவாயில்லை சார், அதனாலென்ன ]
படத்தில் பார்த்ததை விட நீங்கள் கறுப்பாய், அழகாயிருந்தீர்கள். நல்ல படமும், நல்ல மனைவியும் வாழ்த்துக்கள். நல்ல குரல்வளம். நன்றாயிருந்தது பாட்டு. திராவிடக்குஞ்சுகளுக்கு மேடையில் நீந்தவா சொல்லிக்கொடுக்கவேண்டும்.எனக்குப்பிடித்திருந்தது. வெகுசாதரணமான டிவிதொடரைவிடவே தமிழ் சினிமாவைவிடவோ நீங்கள் சுவையாகவும், அருமையாகவும் விருந்துபடைத்தீர்கள். கருத்துகளெல்லாம் பாதி புரியாத என் தமக்கை சொன்னாள். ‘ என்னதானிருந்தாலும் அவன் போல்டா சொல்றான்பாரு.. அதைத்தான் நாம அப்ரிசியேட் பண்ணனும்.. திஸ் இஸ் டாக்பாரம் ஹார்ட்.. ரொம்ப நன்னாயிருந்தது ‘ அதுதான் உங்களுக்கு உண்மையான பரிசு, என்னைப்போல விமர்சன சொறியர்கள் இதயத்திலிருந்து பேசவே மாட்டோம். வெல்டன் சீமான்.. பகுத்தறிவோடு உலகறிவும் நாமெல்லோருக்கும் பரவட்டும். லோகட்சேமத்தை நோக்கிதானே நாமெல்லோரும் பயணிக்கிறோம்.
[நன்றி : புதியமாதவியின் கட்டுரை கீற்றிலிருந்து, அடிக்கோடிட்ட சீமானின் வசனங்கள் மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. Thanks, mam ! ]
mani@techopt.com
- எழுத்துக்கலை பற்றி இவர்கள்………(11 ) – ‘சி.சு.செல்லப்பா’
- தாகூரின் கீதங்கள் – 15 ஏற்றுக்கொள் பூமித் தாயே !
- கருணாகரன் கவிதைகள்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 5 கண்ணனிடம் அடைக்கலம்
- பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா!
- நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE’S DAY )
- பங்கு சந்தை:: ( அகில உலக LOSS வேகாஸ் …? )
- மோரியோடான செவ்வாய்க்கிழமைகள் – புத்தக அறிமுகம்
- சம்பந்தமில்லை என்றாலும் – மதுரை மாவட்ட சுதந்திர வரலாறு ( ந. சோமயாஜுலு )
- அத்வானி, சானியா அச்சுறுத்தல்கள்: நம் அடிப்படை உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்
- திப்பு: அங்கீகார ஏக்கத்தால் உருவானதோர் ஆளுமை
- சீமானின் தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சிகளும் குப்பைகளும்
- குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் உரையும் அதன் தனித்தன்மைகளும்
- தாஜ்மகால்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 6
- நீதியும் நாட்டார் விவேகமும் : பழமொழி நாநூறும்
- கதை சொல்லும் வேளை … 1
- பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கும் பொங்கல் திருவிழா 2008
- அஜீவன் இணைய தளம்
- நேசகுமாரும்…. நல்லடியாரும்….
- இக்கால இலக்கியம்,தேசியக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
- திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும்
- நல்லடியாரின் கடிதம் குறித்து – கர்பளா, வஹ்ஹாபிகள், காபா, பாலியல் வன்முறை, மத மூளைச் சலவை
- வந்து போகும் சுதந்திர தினங்களும் குடியரசு விழாக்களும்
- முக அழகிரி – பன்ச் பர்த்டே
- விருதுகளின் அரசியலும் கொச்சைப் படுத்தலும்
- திண்ணைப் பேச்சு – பிப்ரவரி 7, 2008
- கவிதை
- யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி – ஓர் ஆய்வு – குறமகள்
- மந்திரம்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! முடத்துவ விண்மீன்களின் ஈர்ப்பலைகள் ! (Gravitational Waves)(கட்டுரை: 15)
- மா.சித்திவினாயகத்தின் மானிட வலிக் கவிதைகள்
- அந்தரங்கம்
- சிங்கப்பூர் – ஜுரோங் தீவு
- பயங்கரபறவையால் அழிக்கப்பட்ட கிராமமும் பயங்கரம் கலந்த சிறகுகளும்
- வலியும் புன்னகைக்கும்
- குர்ஆன் மாற்றம் செய்யப் பட்டதா?
- Last Kilo bytes – 7 காந்திக்கும் கோட்ஸேக்கும் உள்ள ஓற்றுமை ?/ சீமானின் உரை
- தத்துவத்தின் ஊசலாட்டம்
- தீராக் கடன்
- மாற்று வழி
- சாம்பல் செடி