Boycott of Mission Schools
மிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்

This entry is part 32 of 49 in the series 19991203_Issue

பாரதியார் இந்தியா பத்திரிக்கையில் 18-8-1906 இல் எழுதியது.



  சென்ற வாரம் சுதேசீய மஹான் களையும் புராதன வீரர்களையும், கவிஞர்களையும், தத்துவ ஞானிகளையும் பற்றி நமது இளைஞர்கள் நன்றா யறிந்திருக்கும்படியான சுதேசீய கல்வி இக்காலத்தில் கொடுக்கப்படவேண்டுமென்று வற்புறுத்திப் பேசினோம். மிஷனரிகளின் சம்பந்தமில்லாத சுத்த ஹிந்துப்பாடசாலைகளில் கூட மேற்கண்டவிதமான கல்வி அளிக்கப்படாமலிருத்தல் மிகவும் விசனகரமான விஷயமே. ஆனால் மேற்படி ஹிந்துப் பாடசாலைகளிலே நமது மஹான் களைப் பற்றி வேண்டுமென்று தூஷணை புரிந்து வாலிபர்களின் மனதை மாசு படுத்துவதில்லை என்ற ஒரு நலம் இருக்கிறது.

வியாஸர், வசிஷ்டர், யாக்ஞவல்கியர், சங்கரர் என்ற பெயர்களைப் பற்றி ஹிந்துப் பாடசாலை மாணாக்கர்கள் ஏதுமறியாமலிருக்கிறார்களென்பது மெய்யேயாயினும் மேற்படிப் பெரியோர்களைத் திட்டும்படிக்கு ஹிந்துப்பாடசாலை உபாத்தியாயர்கள் கற்பித்துக் கொடுப்பது கிடையாது. இது சாதாரணத் தீமை என்பதாக லேசாய் எவரும் நினைத்துவிடக் கூடாது.

புராதன சரித்திரமற்ற தேசத்துக்கு மென்மேலும் அபிவிருத்தி ஏற்படுதல் கஷ்டம். புகழ்பெற்ற புராதன சரித்திரமிருந்தும், அதனை மறந்திருக்கும் ஜாதியார் அழிந்தே போய்விடுவார்கள். புகழ் பெற்ற பூர்வகாலச் சரித்திரமிருக்க, அதனை இகழ்ந்து அதன் பொருட்டு லஜ்ஜையுறத் தலைப்படும் தேசத்தாரின் கதியை எழுதவும் வேண்டுமா ?

எனவே கிறிஸ்தவப் பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்பிச் சிவாஜியைக் கொலையாளி யென்றும், வியாசரை அறிவிலி யென்றும், ஸ்ரீகிருஷ்ண பகவானைத் தூர்த்தனென்றும் அவ் விளைஞர்கள் கற்கும்படி செய்கிற ஒவ்வொரு தந்தையும் புத்திரத் துரோகியாகிறான். இளைஞர்கள் அவ்வாறே நினைப்புக் கொண்டவர்களாகி, தமது ஒழுக்கத்திற்கும், அபிவிருத்திக்கும், ஊக்கத்திற்கும் முன்னோர்களிலிருந்து யாரையும் திருஷ்டாந்தமாகச் சொல்ல வன்மையற்றவர்களாகி, அது காரணமாக ஒழுக்க முதலியவற்றிலே தாழ்வடைந்து போய் விடுவார்களாதலால் மேற்கண்டவாறு தமது புத்திரர்களை மிஷன் பாடசாலைகளுக்கு அனுப்பும் தந்தையர் தேசத் துரோகிகளுமாகிறார்கள்.

கிறிஸ்து மார்க்கத்திலே நாம் அனாவசியமாக விரோதம் கொண்டிருப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். உலகத்திற் பிறந்த மஹோபகாரிகளிலும், மஹா ஞானிகளிலும் கிறிஸ்து ஒருவரென்று நாம் நம்புகிறோம். ‘நானும் எனது தந்தையும் ஒன்றே ‘ என்று கிறிஸ்துநாதர் கூறியதற்குக் கிறிஸ்தவர்கள் என்ன பொருள் கூறிய போதிலும் ‘சிவோஹம் ‘ என்னும் அத்வைதக் கோட்பாட்டையே கிறிஸ்து மேற்கண்டவாறு சொன்னாரென்று விவேகாநந்தர் போன்று பெரிய ஹிந்து தேசிகர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆதலால், நாம் கிறிஸ்து மார்க்கத்தை விரோதிக்கவில்லை. கிறிஸ்தவப் பாடசாலைகளிலே கல்வி கற்பிக்கப்படும் மாதிரியையே விரோதிக்கிறோம். இதற்குப் பாதிரிமார்களைக் குறை கூறுவதால் சிறிதேனும் பயனில்லை. அவர்கள் நம்மையும் நமது பூர்வகால மஹான்களையும் அறியாமையாலும், தாம் வாங்கும் சம்பளத்தின் பொருட்டாகவும் தூஷணை புரிகிறார்கள்.

ஆரியத் தன்மையைப் பெரும்பாலும் இழந்து அஞ்ஞானம், மூடநம்பிக்கை என்னும் சேறுகளிலே அழுந்திக் கிடக்கும் நம்மவர், கிறிஸ்தவப் பாதிரிகள் நமது முன்னோரைப் பற்றிக் கூறுவதே மெய்யாக இருக்கலாமென்று கிரகித்துக் கொள்கிறார்கள்.

ஸ்ரீமத் ரானடே, ஸ்ரீ தத்தர் முதலியோர் எழுதியிருக்கும் பூர்வகாலச் சரித்திரப் பகுதிகளை நமது இளைஞர்களுக்குப் பயிற்ற வேண்டும். அறியாமை மிகுந்த அன்னியர்கள் அழுதி வைத்திருக்கும் பொய்ச் சரித்திரங்களைச் சுழற்றி யெறிந்து விட்டு நமது நாட்டின் தேசபக்தியும் நவீன அறிவும் கலந்த மேலோர்கள் சரியானபடி ஆராய்ச்சிகள் புரிந்து உண்மையான சரித்திரங்கள் எழுதத் தலைப்படவேண்டும். அதற்கிடையே இளைஞர்களின் அறிவையெல்லாம் பாதிரிகள் விஷமாக்கி விடாதவாறு அவர்களின் பாடசாலைகளை விலக்கி வைக்க முயல வேண்டும். போதுமானபடி பணம் குவித்து வைத்திருக்கும் மனிதர்கள் பச்சையப்பன் காலேஜ் போன்ற சுதேசீய காலேஜ்களையும் ஸ்கூல்களையும் பலப்படுத்தி, பாதிரிகளின் பள்ளிக்கூடங்களுக்கு நிகராக வேண்டும்.

நமது பாடசாலைகளில் உபாத்தியாயர்கள் ரஸமில்லாமலும், சம்பளம் அதிகமாகவும் இருக்குமானால் இவற்றை மாணாக்கர்கள் எட்டிப் பார்க்கவே மாட்டார்கள். இதையெல்லாம் செல்வர்கள் கவனிக்க வேண்டும். தேசத்தை நாளுக்குநாள் கீழே அழிய விட்டு விடுவோமானால், பிறகு எந்த உபாயத்தாலும் உயர்த்த முடியாமல் போய்விடக்கூடிய ஒருநாள் வந்து விடும். தெய்வக் கிருபையால் அந்த ஒருநாள் இன்னும் வந்து விடாமலே யிருக்கின்றது. அது வருமுன்பாக நானாவிதத்தாலும் முயற்சி புரிந்து நமது நிலைமையைச் சீர்திருத்திக் கொள்ளவேண்டும்.

‘விழிப்பீர்! எழுவீர்! இன்றேல் நீர் வீழ்ந்து கிடப்பீர் என்றுமே! ‘

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< எனக்குள் ஒரு கனவுஈரானின் லிப்ஸ்டிக் அரசியல் >>

பாரதியார் இந்தியா பத்திரிக்கையில் 18-8-1906 இல் எழுதியது.

பாரதியார் இந்தியா பத்திரிக்கையில் 18-8-1906 இல் எழுதியது.