நேசகுமாருக்கு என் பதில்

This entry is part [part not set] of 32 in the series 20090512_Issue

அப்துல் கையூம்



—————————————

நேசமிலா நேசகுமாருக்கு,

நாகூர் ஹனீபாவை பத்தி மிகவும் சுவையா எழுதியிருந்தேன்னு உங்க கடுதாசியை தொடங்கி இருந்தீங்க. பாக்க சந்தோஷமா இருந்துச்சு.

கடைசியிலே பாத்தா ஆடு மழையிலே நனையுதேன்னு ஓநாய் கவலைபட்ட கதையா ஆயிடுச்சு.

சில ஊருலே இப்படித்தாங்க ஆட்டை பலி கொடுக்குறதுக்கு முன்னாடி கழுத்துலே மாலை போடுவாங்க. ஆடு பேசாதுங்குற தைரியத்துலேதான். பேசுற சக்தி மட்டும் இருந்துச்சுன்னா “போடா.. ..ங், நீயும் உன் மாலையும்ன்னு” திட்டிப்புடும்.

திடீர்ன்னு வர்றீங்க. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறீங்க. மீண்டும் முருங்கை மரத்துலே ஏறிடுறீங்க.

மலர் மன்னன் ஐயா என்னைப் புகழ்ந்ததை உங்களால பொறுத்துக் கொள்ள முடியலையோ என்னவோ.

கறுப்புக் கண்ணாடி போட்டுக்கிட்டு பாத்தா பாக்குறதெல்லாம் கறுப்பாத்தாங்க தெரியும். நீங்க என்னடான்னா அதை Permanent Contact Lens மாதிரி பொருத்திக்கிட்டீங்க போங்க.

கொஞ்ச காலத்துக்கு முன்னாடி நாகூர் ரூமியை பகடைக்காயா வச்சு இணையத்துலே பெரிய்ய்ய்ய்..ய விளம்பரம் தேடிக்கிட்டீங்க.

இப்ப என்னடான்னா எல்லா சமூகத்தவரும் தலையிலே தூக்கி வச்சு கொண்டாடுற கவிக்கோ ஐயாவை பலிகடாவாக்கி இணையில்லா புகழ் அடையத் துடிக்குறீங்க.

எனக்குள்ள கவலை என்னான்னு கேட்டா, உங்க உள்நோக்கம் புரியாம எத்தனை பேரு நீங்க அமைச்சிருக்குற சாணக்யா வியூகத்துலே வந்து விழப் போறாங்களோன்னுதான்

“கல்லின் மீது
பூவை எறிபவர்கள்
இப்போது
பூவின் மீது
கல்லை எறிகிறார்கள்”

இந்த வரிகளை வச்சுதானே கவிக்கோ ஐயா இந்துக்களை வசை பாடுறாருன்னு ‘புக்ரான்’ குண்டை எடுத்து போடுறீங்க? இல்லீங்களா?

தாயிஃப் நகரத்துலே, அந்த பத்தரைமாத்து தங்கத்தை அத்துமீறி புத்திகெட்ட பாவிங்க கல்லாலே அடிச்சு சித்திரவதை செய்யிறதை சித்தரிக்கும்போது இந்த சத்தான வரிகளை முத்தமிழுலே கவிக்கோ ஐயா முத்திரை பதிக்கிறாரு.

அரபு நாட்டுலே நடக்குற இந்த சம்பவத்துக்கும், இங்கே இருக்குற நம்ம இந்து சமுதாயத்தாருக்கும் துளிகூட சம்பந்தம் இல்லேங்குற விஷயம் உங்களுக்கு நல்லாவே தெரியும். அப்படியிருந்தும் இதுக்கும் அதுக்கும் லிங்க் கொடுக்குறீங்க. அப்துல் ரகுமானுக்கும் அமாவாசைக்கும் என்னங்க சம்பந்தம்?

அந்த காலத்து அரபிங்களை ‘காட்டரபிகள்’ன்னுதான் வரலாறே குறிப்பிடுது. அரபியிலே ‘ஜாஹிலியத்’, இங்கிலீசுலே ‘Barbaric’ ன்னு வருணிக்குறாங்க. கொஞ்ச நஞ்ச அட்டகாசம் இல்லீங்க. நம்ம ஊரு உசிலம்பட்டியிலே பொட்டைச்சி-னு சொல்லிப்புட்டு பச்ச புள்ளைங்களை கள்ளிப்பாலு ஊத்தி கொன்னாங்க இல்லியா?

அதே மாதிரி இந்த காட்டரபிங்க என்ன செஞ்சாங்க தெரியுமா? பொறந்த குழந்தை பொம்பளைப் புள்ளையா இருந்துச்சுனா உசிரோட மண்ணைத் தோண்டி புதைச்சாங்க.

அது மட்டுமில்லீங்க. பொம்பளைங்களை ஒரு போகப் பொருளாத்தான் அவுக நெனச்சாங்க. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துலே ஜெயலலிதாவை சாட்டையாலே அடிச்சு அடிச்சு ஏலம் விடுவாங்க. அந்த அம்மாவும் “ஆடாமல் ஆடுகிறேன், பாடாமல் பாடுகிறேன், ஆண்டவனைத் தேடுகிறேன்”னு சொல்லிப்புட்டு மயங்கி மயங்கி ஒரு தினுசா டான்ஸ் ஆடும். இப்படித்தான் அரபிகளும் பொம்பளைங்களை ஒரு வியாபாரப் பொருளா கருதி ஏலம் விட்டாங்க.

இங்கே மழை வரலேன்னா நம்ம குன்னக்குடி ஐயா வயலினை வச்சு ‘சொய்ங் சொய்ங்’ன்னு இழுத்து மழை வர வச்சிடுவேன்னு சொல்றாரு. அவுக என்ன செஞ்சாங்க தெரியுமா? மாட்டு வாலுலே தீ வச்சா மழை வருமுன்னு நம்புனாங்க.

அப்ப ஏதுங்க ‘புளு கிராஸ்’, ‘ரெட் கிராஸ்’ இதெல்லாம்? இருந்துச்சுன்னா புடிச்சு முட்டிக்கு முட்டி தட்டியிருக்கலாம்.

அந்த காலத்துலே யாராச்சும் செத்துப் போனா அவங்களை உடனே கடவுளா ஆக்கிடுவாங்க. அப்பா, அம்மா, அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா – இப்படி அவுக தாத்தா பாட்டி எல்லாத்தையும் சிலையா வடிச்சு வணங்குனாங்க.

//“மக்கா நகரத்து அராபியர்கள் கஃபா என்கிற பல நூற்றாண்டுகள் புராதனமான வணக்கஸ்தலத்தை பயபக்தியுடன் வலம் வந்து வணங்குபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். எங்கெங்கிருந்தோ முந்நூற்று அறுபது இறை உருவங்களை எடுத்துவந்து அங்கே பிரதிஷ்டை செய்து தினமொரு கடவுளை பிரார்த்திப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்”//

இத நான் சொல்லலீங்க. குமுதம் ரிப்போர்ட்டருலே பா. ராகவன் எழுதுறாரு. ‘நிலமெல்லாம் ரத்தம்’ ங்குற வரலாற்றுத் தொடருலே இதை நீங்க படிச்சு தெரிஞ்சுக்கலாம்.

விக்கிரகத்தை வச்சு காட்டரபிங்க எப்படியெல்லாம் பூஜித்தாங்க-ங்குற சம்பிரதாயம் சரியா எனக்கு சொல்லத் தெரியலே. ஆனா உலகத்துலே பல இடத்துலே இருந்த விக்கிரக வழிபாடுகள்லே, ஒண்ணோட ஒண்ணு கனெக்ஷன் இருக்க நிறைய வாய்ப்பு இருக்குதுங்க.

லாத், உஸ்ஸா, மனாத், ஹுபால் – இந்த மாதிரி நெறய கடவுளை அரபிங்க அப்ப ஸ்டாக் வச்சிருந்தாங்க. இங்கே கூட நம்ம ஆளுங்க திருச்சியிலே குஷ்புவுக்கு , நெல்லையிலே நமிதாவுக்கு, அரவாக்குறிச்சியிலே நயன்தாராவுக்கு கோயில் வச்சிருக்காங்க இல்லீங்களா?

பா.ராகவன் சார் சொல்லுற “பிரதிஷ்டை”ங்குற வார்த்தையை வச்சு பாக்குறப்போ பூசை, புனஸ்காரம், புஷ்பாஞ்சலி, தூப ஆராதனை, அபிஷேகம், அங்கப் பிரதட்சணம், சாஷ்டாங்க நமஸ்காரம், குடமுழுக்கு, நைவேத்யம் – இதுமாதிரி சம்பிரதாயத்துலே ஏதாவது ஒண்ணு இருக்க சான்ஸ் இருக்குது, இல்லாமலிருக்கவும் சான்ஸ் இருக்குது.

அந்த நாட்டுலே, பூஜையிலே ‘பூ’ இருந்திருக்க வாய்ப்பே இல்லேன்னு அடிச்சும் சொல்ல முடியாது. அது பாலைவனப் பிரதேசம்தான். அதுக்காக பூவே அங்கே மலராதுன்னு சொல்ல முடியுங்களா?

இந்துக்கள் தெய்வச் சிலை மீது பூ எறிய மாட்டாங்க. பூ சாத்துவாங்கன்னு சொல்றதுதான் கரிக்டு. (இங்கிலீசுலே கூட Flower Offerings -ன்னுதான் சொல்லுறாங்க, Flower Throwing-ன்னு யாரும் சொல்லுறதில்லே)

நீங்க சொல்லுற மாதிரி சிலைகளை அம்பாலே எய்தி அவங்க வணக்கம் செஞ்ச மாதிரி, ஏன் பூவை எறிஞ்சு சிலைகளை வணக்கம் செஞ்சிருக்கக் கூடாது?

அப்படியே ‘பூ’ சமாச்சாரம் நம்ம இந்தியாவுலே மாத்திரம்தான் உண்டுங்குற உங்க விவாதத்தை ஏத்துக்கிட்டாலும், பூ’சை/ பூ’சித்தல் சமாச்சாரத்தை பூ’வோடு இணைச்சு உருவகப்படுத்தி கவிதை எழுதுனா என்ன தப்புங்க?

“கல்” – “பூ”
“பூ” – “கல்”

இந்த வார்த்தைகளை வச்சு சொற்சிலம்பம் ஆடுற அந்த அழகான கவிதையை நீங்க ரசிக்கிறதை விட்டுப்புட்டு, “ப்.. பூ” ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு இப்படி குண்டக்கா மண்டக்கான்னு எழுதுறீங்களே.. .. இது நல்லா இருக்கா?

“மதக்காழ்ப்பு”, “தமிழ்ச் சமுதாயத்தின் துரதிர்ஷ்டம்” “உலகின் துரதிர்ஷ்டம்” இப்படி பெரிய பெரிய வார்த்தையெலாம் போட்டு பயமுறுத்துறீங்க வேற.

ஆனா ஒண்ணுங்க. என்னதான் இந்த பூவை நீங்க கல்லாலே எறிஞ்சாலும் இந்த பூவுக்குள்ளேந்து பூகம்பம் புறப்படாதுங்க.

பகைவர்களுக்கும் அன்பு காட்டுங்கன்னுதான் அகில உலகத்துக்கும் அருட்கொடையா வந்த நம்ம நபிகள் நாயகம் சொல்லியிருக்காங்க.

நாயகம் தெனமும் நடந்து போற பாதையிலே, வூட்டு மாடி மேலே நின்னுகிட்டு குப்பையை அவங்க தலைமேலே கொட்டுறத வழக்கமா வச்சிருந்துச்சு ஓரு வயசான யூதக் கெழவி. ஆனா நாயகம் அதை பெருசு படுத்தலே. ஒருநாளு அந்த கெழவியைக் காணோம். அக்கம் பக்கத்துலே நபிகள் விசாரிச்சாங்க. அந்த அம்மா படுத்த படுக்கையா கெடக்குன்னு யாரோ சொல்ல, நபிகள் அந்த கெழவியோட வீட்டுக்குப் போயி “நல்லாயிருக்கீங்களா அம்மா?” ன்னு விசாரிச்சாங்க. அந்த கெழவி துடிதுடிச்சு போயிடுச்சு. “போயும் போயும் இந்த தங்கமான மனுஷரை நாம கொடுமை செஞ்சிட்டோமேன்னு” கண் கலங்கிடுச்சு.

நபிகள் மேலே குப்பை கொட்டுறதையே வாழ்க்கையோட குறிக்கோளா வச்சிருக்கிற நீங்க, என்னிக்காவது ஒரு நாளு மனம் திருந்தி உங்க போக்கை மாத்திக்கிடுவீங்க-ங்குற நம்பிக்கை எனக்கு இருக்குதுங்க.

தாயிஃப் நகரத்து சம்பவத்தை என் கட்டுரையிலே படிச்சிட்டு ஒரு இந்துமதச் சகோதரி “நபிகள் நாயகம் இப்படிப்பட்ட கொடுமைகளைக் கூட அனுபவிச்சிருக்காங்களா? படிச்சு கண்கள் குளாமாயிடுச்சு”ன்னு எனக்கு மடல் எழுதியிருந்தாங்க.

ஆனா நீங்களோ கல்லெறிஞ்சவங்களை விட கல்மனசு படைச்சவரா இருக்கீங்க. கல்லெறிஞ்சது நியாயம்ங்குற மாதிரி ஒரு தோற்றத்தை உண்டு பண்ணப் பாக்குறீங்க. நீங்க கொடுத்திருக்கிற நிறைய தகவல் பொய்யும் புரட்டுமா இருக்குதுங்க, உதாரணமா ‘ஷியா’ பிரிவினர் நபிகள் நாயகத்தை நபின்னு ஏற்க மறுத்தாங்கன்னு சொல்றது உண்மையில்லீங்க.

உங்களோட ஒவ்வொரு வரிக்கும் என்னாலே ஆதாரபூர்வமா, அறிவுப்பூர்வமா வாதாட முடியும். ஆனா அதையே சாக்கா வச்சு நீங்க மேலும் மேலும் நாங்க உசிருக்கு உசிரா மதிக்கிற ‘அழகிய முன் மாதிரி’யை இழித்து பழித்துப் பேசுறதுக்கு சான்ஸா பயன்படுத்திக்கிட்டு பழி தீர்த்துக்கிடுவீங்க.

நீங்க இஸ்லாத்தைப் பத்தி நெறையா தெரிஞ்சு வச்சிருக்கீங்க. ஆனா இஸ்லாத்தைப் பத்தி சரியா புரிஞ்சு வைக்கலே.

நீங்க சொல்லுற மாதிரி “அல்லாஹ்”ங்குற கடவுள் கஃபாவுக்குள்ளே இருக்குறதா யாரும் சொல்லலீங்க. இறைவன் எல்லா இடத்திலும் நீக்கமற நெறஞ்சு இருக்குறான். தூணிலும் இருக்குறான் துரும்பிலும் இருக்குறான்னுதான் இந்து மதமும் கூறுது.

‘கஃபா’ ங்குறது வெறும் கல்மண்டபம். அதப்போயி எந்த முஸ்லீமும் வணங்குறதில்லே. இறைவழிபாட்டுக்காக உலகத்துலே நிறுவப்பட்ட முதல் ஆலயம் அது. இன்னும் சொல்லப்போனா உலகத்துலே இருக்குற எல்லா பள்ளிவாசலும் இறையில்லம்தானுங்க. ஒரு Discipline-க்காக எல்லா முஸ்லீம்களும் கட்டுப்பாடான முறையிலே, ஒழுங்கு முறையைக் கடைப்பிடிச்சு, ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி, ஒரே நேரத்துலே தொழறாங்க அவ்ளோதான். கூட்டுப் பிரார்த்தனையிலே ஒரு ‘பவர்புல் வேவ்ஸ்’ கிளம்புதுன்னு இந்துமத சாஸ்திரங்கள் கூட சொல்லுதுங்களே.

கடந்த 30 வருஷமா நான் வசிக்கிற நாட்டுலே தமிழ்மக்கள் நலனுக்காக, இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ சகோதரர்கள் எல்லோரும் ஒன்றிணைச்சு மதவேறுபாடு களைஞ்சு நாங்க பாடுபட்டு வர்றோமுங்க. அதுலே கிடைக்குற இன்பம் இருக்கே. ஆஹா.. அத அனுபவிச்சு பாத்தாதான் புரியும்.

உங்களுக்கும் எனக்கும் இதுக்கு முன்னாடி அறிமுகம் அறவே கெடையாது, அப்படியிருந்தும் நான் எந்த ‘இஸத்தைச்’ சேர்ந்தவன்னு ஆராய்ச்சி பண்ணுறீங்க. “சூஃபியிஸம்”ன்னு ஒரு முத்திரையை குத்துறீங்க. எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே இஸம்தாங்க. அது HUMANISM.

அந்த இலக்கியப் பண்பாடு உங்கக்கிட்ட இல்லே, இருந்துச்சுன்னா ஒருத்தவன் பொறந்த ஊரை வச்சு அவனை தரக்குறைவா விமர்சனம் பண்ண மாட்டீங்க, நான் நாகூர்காரன்தாங்க. அதனாலே What is your Problem?

எங்க ஊரு, எத்தனையோ படைப்பாளிகளை தமிழ்மொழிக்கு வேண்டி அர்ப்பணிச்சுருக்கு. நீங்க ‘போட்டுக் கொடுக்குற’ காரியத்தை தவிர உருப்படியா இலக்கியத்துக்காக ஏதாவது செஞ்சிருக்கீங்களா?

“நீ இந்த உலகத்தில் மனிதனாய்ப் பிறந்ததற்கு ஏதேனும் ஒரு நினைவுச் சின்னத்தை விட்டுச் செல்ல வேண்டும்” ன்னு சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்காரு. நீங்க வெறும் அவமானச் சின்னங்களைதான் இதுவரை இணயத்துலே விட்டுச் சென்றிருக்கீங்க. உக்காந்து யோசிச்சுப் பாருங்க அப்போ புரியும்,

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டா திகழ்கிற கவிக்கோ ஐயா, அண்ணன் நாகூர் ஹனீபா போன்ற ஜாம்பவன்களையே நீங்க கழுகு மரத்துலே ஏத்தும்போது, நான் வெறும் பிஸ்கோத்துங்க.

ஒண்ணு மட்டும் சொல்றேன். தப்பா நெனச்சுக்க மாட்டீங்களே? .இஸ்லாத்தைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும்னு ஆசை உங்களுக்கு இருக்கு. இந்து மதத்துலே இருக்குற எத்தனையோ நல்ல விஷயங்களை நானும் அப்பப்போ தெரிஞ்சுக்கிட்டு வர்ரேன்.

நீங்க மட்டும் அந்த கறுப்பு கண்ணாடியே கழட்டி வச்சிட்டு பாத்தீங்கன்னு வச்சுக்குங்க. அப்பறமா நீங்களும் ‘உஜாலா’வுக்கு மாறிடுவீங்க.

சும்மா ட்ரை பண்ணிதான் பாருங்களேன். குட் லக்.

அப்துல் கையூம்


vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்