எவ்வித ஆதாரமும் சொல்லாமல்

This entry is part of 40 in the series 20080522_Issue

வஹ்ஹாபி“இங்குப் புளுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டலாம்” என்று போர்டு வைத்திருப்பதாக எண்ணிக் கொண்டு “பெயரின் முக்கியத்துவம் பற்றி” சென்ற வாரத் திண்ணையில் அவிழ்த்துக் கொட்டி இருக்கிறார் மலர் மன்னன். எவ்வித ஆதாரமும் சொல்லாமல் கொட்டப் பட்ட அவரது புளுகுகள்:

(1) முஸ்லிம்களின் இறைத்தூதரை இழிவாகப் பேசியதால் பாகிஸ்த்தானில் ஓர் இந்து கொல்லப் பட்டார். கொலை செய்த இரு முஸ்லிம்களுக்குத் தண்டனை இல்லை.

(2) மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர்வரை முஸ்லிம்களின் இறைத்தூதரை உருவமாகப் பலர் வரைந்து தள்ளியிருக்கின்றனர்.

(3) பெங்களூர் நகரில் முஸ்லிம்கள் கண்டனப் பேரணி நடத்தினால் நகர் முழுதும் உள்ள காவல் நிலையங்கள் மூடப் படும். பெங்களூர் நகரின் எல்லாக் காவலர்க்கும் அன்றைக்குக் கட்டாய விடுப்பு.

(4) முஸ்லிம்களின் இறைத்தூதர் சாத்தானிடம் ஏமாறிப் போனார்.

மேற்கண்டவற்றுள் நான்காவதுதான் அவர் சொல்ல வரும் செய்தி.

“எங்கள் இறைத் தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்லர்” என்று யாராவது ஒரு முஸ்லிம் கூறினால் அவரை ஜிஹாதிகளிடம் மலர் மன்னன் போட்டுக் கொடுத்து விடுவார் என்று சற்றே அச்சம் ஏற்பட்டாலும் உயிருக்கு அஞ்சி உண்மை சொல்லாமல் இருக்க வேண்டாம் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்:

“எங்கள் இறைத்தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்லர்”

மேலும் சொல்கிறேன்: “எங்கள் வணக்கத்துக்கு உரியவன் ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனே!”

“அங்கீகாரம் இல்லாதவன்” என்று அடிக்கடி தன்னைத் தானே நொந்து கொள்வார் மலர் மன்னன். அப்போதெல்லாம் எனக்கு “ஐயோ, பாவம்!” என்று தோன்றும்; காரணம் விளங்கி விட்டதால் இனிமேல் அப்படித் தோன்றாது.


to.wahhabi@gmail.com
http://wahhabipage.blogspot.com

Series Navigation