மலர் மன்னனுக்கு பதில்!

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

இப்னு பஷீர்


“பிரஸ்தாப ஆங்கிலச் சொல்லான ‘பாப்புலர்’ என்பதன் சரியான பொருள் “பிரபலம்’ என்பதாகும். “ஆதரவு’ என்று மொழியாக்கம் செய்வதானால் ஆங்கிலச் சொல் “ஸப்போர்ட்’ என்பதாக இருக்க வேண்டும்.” என்கிறார் மலர் மன்னன்.

தமிழ் மொழிப் பெயர்ப்புகளுக்கு நான் வழக்கமாக நாடும் இணைய அகராதியில் ( http://www.lanka.info/dictionary) Popular என்ற வார்த்தைக்கு ‘மக்கள் பற்றிய, மக்களின் ஆதரவு பெற்ற, தெளிவான, மக்களிடையே வழக்கத்தில் இருக்கிற’ எனப் பொருள் கொள்ளப் பட்டிருக்கிறது. இதே அகராதியில் மலர் மன்னன் சொல்லும் support எனும் வார்த்தையின் பொருள், ‘உதவிபுரி, பேணு, தாங்கி நில், விழுவதைத் தடு’ என்பதாகும். ‘பிரபலம்’ என்பதற்கு மிகப் பொருத்தமான ஆங்கில வார்த்தை famous என்பதுதான்.

நான் மேற்கோள் காட்டிய பத்தியில் நூலாசிரியர் முஸ்லிம்களின் ‘ஆதரவு பெறாத’ என்று பொருள்பட ‘not popular’ என்ற பதத்தை மிகச்சரியாகவே பயன்படுத்தியுள்ளார்.

ஆதரவு இல்லையோ, பிரபலமில்லையோ, முஸ்லிம்களை நான் முகமதியர் என்றுதான் அழைப்பேன் என்று வறட்டுப் பிடிவாதம் பிடிக்கும் மலர் மன்னன், நூலாசிரியரின் இந்த வரிகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?

“அவர்கள் முஹம்மதை வணங்குபவர்களல்ல என்பதால் அவர்கள் சொல்வது சரிதான். முஹம்மது ஒரு இறைத்தூதர்தானே தவிர வணங்கப் படுபவர் அல்லர்.”

//வேண்டுமானால் ஒன்று கேட்டுப் பார்ப்போம். “எங்கள் இறை தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்ல’ என்று இப்னு பஷீரோ அவரது ஆதரவாளர்களோ அறிவிப்பார்களா?// என்று கேட்கிறார் மலர் மன்னன்.

திருமறை குர்ஆன் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி திட்டவட்டமாகச் சொல்கிறது, “முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒரு தூதரேயன்றி (வேறு) அல்லர்.” (3:144)

மேலும் இறைத்தூதர் அவர்களும், தன்னைப் பின்பற்றும் முஸ்லிம்கள் தன்னை எவ்வாறு குறிப்பிட வேண்டும் என்பதையும் தெளிவாகவே சொல்லிச் சென்றிருக்கின்றார்கள்:

‘கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன். (அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) – நூல்: புகாரி)

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உயிருக்கும் மேலான நேசத்திற்கு உரியவர்கள். வணங்கப் படுபவர்கள் அல்லர். ‘வணக்கத்திற்கு உரியவன் இறைவன் ஒருவனே’ என்பதே இஸ்லாமின் அடிப்படைக் கொள்கை!

எனவே முஸ்லிம்களாகிய நாங்கள், எங்கள் இறைத்தூதரை மதிப்போம், அவரது வழிமுறைகளை பின்பற்றுவோம். ஆனால் அவரை வணங்க மாட்டோம். அவர் எங்கள் தலைவர், வணங்கப் படுபவர் அல்லர்.

– இப்னு பஷீர்
http://ibnubasheer.blogsome.com/

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்