வணக்கத்துக்குரியவன்
திரு ரவி ஸ்ரினிவாஸ் (1) சொல்லிக்கொண்டது போல், ஜெயமோகன் பற்றி அவர் எழுதிய கருத்துக்கள் 2 பைசா பெறுமானமுள்ளவை அல்ல. “Not worth the paper it’s printed on” என்று ஒரு சொல்வடை உண்டு.அது ரவி ஸ்ரினிவாஸின் இந்த கருத்துக்களுக்கு நன்றாக பொருந்துகிறது.
நடைபெறும் விஷயம் என்ன என்பதே ரவி ஸ்ரீனிவாஸுக்கு தெரியவில்லை என்பதை அவரது கட்டுரையின் முதல் பகுதியே கூறுகிறது.”ஜெயமோகனுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக விகடன் எங்கே நடந்து கொண்டது, எப்படி நடந்து கொண்டது என்பது எனக்கு புரியவில்லை” என்று ரவி எழுதியபோதே அவரது கட்டுரை சவ,சவ என்று ஆகிவிட்டது.’விகடன் கட்டுரையின் வன்முறையை தூண்டும் விதத்தில் எதுவும் இல்லை’ என்று அவர் குழந்தைத்தனமாக வாதம் புரியும்போது மனதில் தோன்றும் ஒரே வரி..
“ஏம்பா ரவி…இம்பூட்டு நல்லவனாய்யா நீயி?”
தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை பேனா பிடிக்கும் சிறு குழந்தை கூட அறிந்திருக்கும் சூழலில், சக எழுத்தாளனுக்கு விகடன் செய்த இத்தகைய துரோகத்தை நினைத்து தன்னை எழுத்தாளன் என்று கூறும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும்.உடலுறவு பற்றி கால் பைசாவுக்கு கூட பெறுமானமில்லாத ஒரு கருத்தை கூறிய குஷ்புவுக்கு எதிராக கழுதைகள்,துடைப்பகட்டை சகிதம் ஊர்வலம் துவங்கி சுமார் 26 மாவட்டங்களில் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து சாதனை படைத்த மாநிலம் தமிழ்நாடு. (வழக்கு போடுவதும் துடைப்பகட்டை ஊர்வலம் போவதும் அவர்கள் தனிப்பட்ட உரிமை என்று நண்பர் ரவி குழந்தைத்தனமாக கூறினாலும் கூறுவார்.இபிகோ 123 உட்பிரிவு 12ல் ஊர்வலம் போகும் உரிமையும்,வழக்கு தொடரும் உரிமையும் இருக்கிறது என்று கூறி நம்மை புல்லரிக்க வைத்தாலும் வைப்பார்)
‘கருத்து சுதந்திரத்தை இப்படி காப்பாற்றும்’ தமிழ் மாநிலத்தின் புகழ் மிக்க நடிகர்கள் இருவரை பகடி செய்த ஜெயமோகனின் கட்டுரையை, தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் போஸ்டர் எழுதி ஒட்டாத குறையாக கொண்டு போய் சேர்த்தது விகடன்.தமிழகத்தின் பெட்டிக்கடைகள் அனைத்திலும் “சிவாஜி எம்ஜிஆரை இழிவுபடுத்தினாரா ஜெயமோகன்?” என்று பரபரப்பாக தலைப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டு அந்த ஆனந்த விகடன் இதழ் வெளியானது.அந்த கட்டுரையை கண்டித்து சிவாஜி ரசிகர் மன்றம் ஆனந்த விகடன் ஆபிஸ் முன்பு பத்திரிக்கையை வேறு எரித்திருக்கிறது.இப்படி ஒரு கலவர சூழலை தெரிந்தே விகடன் உருவாக்கியுள்ள சூழலில், ரவி “விகடன் எங்கே எப்படி வன்முறையை தூண்டியது?” “விகடன் கட்டுரையில் வன்முறையை தூண்டும் வார்த்தை இல்லை” என்று கட்டுரை எழுதுவதை சிறுபிள்ளைத்தனம் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைக்க முடியும்?
ஜெயமோகனின் அந்த கட்டுரை முட்டாள்தனமானதா, அந்த கருத்துக்கள் ஏற்புடையவையா, அவருக்கு அகந்தை தலைக்கேறியதா என்பதெல்லாம் இங்கே பொருட்டே இல்லை.விகடனுக்கு எதிராக கொதித்தெழுந்த பத்திரிக்கை எழுத்தாளர்கள் அனைவர் முன்னும் இருந்த ஒரே விஷயம் கருத்து சுதந்திரம் மட்டுமே.எம்ஜிஆர் ஆட்சியின் போது சிறையில் அடைக்கப்பட்ட ஆனந்த விகடன் ஆசிரியருக்கு ஆதரவாக தமிழ் பத்திரிக்கை உலகமே திரண்டெழுந்ததே அதே போன்ற நிகழ்வுதான் மீண்டும் இங்கே அரங்கேறுகிறது.காலத்தின் கோலம் அன்றைய ஹீரோவான விகடன் இன்று வில்லனின் ரோலை எடுத்துக்கொண்டது.அன்றைக்கு கமேடியன் என்று யாருமில்லை.இன்று ரவி ஸ்ரினிவாஸ் போன்ற அன்பர்கள் அந்த குறையை பூர்த்தி செய்கிறார்கள்.
ரவியை விடுங்கள்…அவர் ஜெயமோகனை கெட்ட வார்த்தையில் திட்டினாலும் அதனால் ஜெயமோகனுக்கு எந்த பாதிப்பும் நேரபோவதில்லை.ஆனால் விகடன் செய்தது தொழில்தர்மத்துக்கு விரோதமான ஒரு செயல்.ஏசுவை காட்டிக்கொடுத்த யுதாஸின் செயலுக்கும், நார்வேயை ஹிட்லருக்கு காட்டிக்கொடுத்த துரோகி க்விஸ்லிங்கின் செயலுக்கும் ஒப்பான செயல் விகடன் செய்தது.அதை மிகவும் குயுக்தியாக விகடன் செய்தது என்பது தான் விஷயமே.ரவியே சான்றிதழ் தருவது போல் ‘நேரடியாக வன்முறையை தூண்டும் விதத்தில் விகடன் எதையும் எழுதவில்லை’, ஜெமோ சொல்லாத எதையும் விகடன் எழுதவில்லை, அவரது கட்டுரையை முழுமையாக் வெளியிடாமல் மேற்கோளிட்டு வெளியிட்டு உரிம பிரச்சனையிலிருந்தும் தப்பித்து விட்டது…அதாவது சுருக்கமாக சொன்னால், போலிஸ்காரனே திருட துவங்கினால் அவனைபோல் சாமர்த்தியமாக யாராலும் திருட முடியாது என்பார்கள்.அதேபோல் மிகவும் திறமையாக விகடன் செயல்பட்டிருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.
ரவியின் கட்டுரையை படித்துக்கொண்டே வரும்போது நான் மனம் விட்டு சிரித்த இடம் சோவும், சிவாஜியும் எம்ஜிஆரை கிண்டல் செய்வதை அவர் மேற்கோள் காட்டுவதுதான். அண்ணாயிசம் என்பதை அப்பாயிசம் என்று சிவாஜி கூறுவதை காட்டி அதை தமிழ்நாடு இயல்பாக எடுத்துக்கொண்டது என ரவி கூறுகிறார்.இதை படித்ததும் எனக்கு தமிழகத்தின் கருத்து சுதந்திரத்தின் நிலையை பற்றி மிகப்பெரிய மரியாதை உருவாகி விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
தமிழகத்தின் கருத்து சுதந்திரம் பலவான்களுக்கு மட்டுமானதாக இருக்கிறது. சாதா மனிதர்களுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் என்பது டீக்கடை பெஞ்சுகளில் உட்கார்ந்து கொண்டு ஏகவசனத்தில் முதல்வரையும், பிரதமரையும் திட்டும் அளவிலேயே இருக்கிறது.அதையும் பறிக்கும் முயற்சிதான் விகடனின் முயற்சி. உதாரணத்துக்கு ‘மன்மோகன்சிங் ஒரு முட்டாள்’ என்று டீக்கடை பெஞ்சில் சுப்பன் சொன்னதை ஊர் முழுக்க போஸ்டர் போட்டு ஒட்டி, சுப்பனுக்கு பத்வா வரவைக்கும் அழுகுணி முயற்சி தான் விகடனின் முயற்சி.இது ரவி போன்ற அப்பாவிகளுக்கு புரியாமல் இருந்தாலும், பத்திரிக்கை உலகை அறிந்தவர்கள் அனைவருக்கும் புரியும்.
ரவியின் கட்டுரையின் மற்ற பகுதிகளை நினைத்து முதலில் கோபம் வந்தாலும் மீண்டும்,மீண்டும் படித்தால் சிரிப்புத்தான் வருகிறது.(உதாரணம்: எங்க வீட்டுப்பிள்ளை படத்தை ஜெயமோகன் ‘தமிழில் எடுக்கப்பட்ட சிறந்த திரைக்கதை’ என்று வர்ணித்ததை வைத்து ஜெயமோகன் தனது முட்டாள்தனத்தை வெளிக்காட்டுகிறார் என்பது). ரவியின் கட்டுரை வரிகளில் உள்ள லாஜிக்கை நினைத்து மயிர் கூச்செரிகிறது (உதாரணம்:அகந்தையுடன் இருக்கும் ஜெயமோகனால் வெகுஜன கலாச்சாரத்தை புரிந்துகொள்ள இயலாது)
கட்டுரை நீளம் அதிகமாகும் அபாயம் இருப்பினும் இதை அப்படியே விட மனம் ஒத்துக்கொள்ளவில்லை. அகந்தையுடன் இருப்பவரால் ‘வெகுஜன கலாசாரத்தை’ புரிந்துகொள்ள முடியாது என்றால், அப்போது மிகுந்த தன்னடக்கத்துடன் இருக்கும் ரவி போன்றவரால் தான் புரிந்துகொள்ள முடியும் போலும்.மேலும் ரவியின் இந்த திடுக்கிடும் ஸ்டேட்மெண்ட் எதாவது விஞ்ஞான அடிப்படையில் அமைந்ததா அல்லது சட்ட ரீதியிலான பாயிண்டா என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
விகடனை கண்டித்தவர்களை ரவியும் பதிலுக்கு கண்டிக்கிறார்.பிரஸ் கவுன்சிலில் புகார் செய்யப்பட்டதா என்று வினவுகிறார்.ரவி…பெட்டிஷன் ஆன்லைன் வலைதளத்தில் ஒரு பெட்டிஷன் ஏன் போடவில்லை? லெட்டர் டு த ஹிந்துவுக்கு ஏன் எழுதவில்லை? என்று ஏன் கேட்காமல் விட்டுவிட்டீர்கள்?ஒரு வேளை அடுத்த கட்டுரைகளில் அதை எல்லாம் கேட்பீர்களோ என்னவோ?
அடுத்து ரவி விட்ட ஒரு ஸ்டேட்மெண்ட்டை படித்தபின் நான் மயக்கமே போட்டுவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.அந்த ஸ்டேட்மெண்ட்டை நான் கீழே கொடுத்திருக்கிறேன்.
“சிவாஜி கணேசனும், எம்.ஜி.ஆரும் தாங்கள் வாழ்நாளில் எத்தனையோ எதிர்ப்புகளையும், கேலிகளையும், விமர்சனங்களையும் சந்தித்தவர்கள். அவை கண்டு அழுகுணி ஆட்டம் ஆடியவர்களோ அல்ல. ” – அறிஞர் ரவி ஸ்ரீனிவாஸ்
விகடன் ஆசிரியர் போட்ட ஒரு சாதா கார்ட்டூனுக்கு அவரை சிறையில் போட்டவர் எம்ஜிஆர்.அது அழுகுணி ஆட்டமா இல்லையா என்பதை அறிஞர் தனது சட்ட பாயிண்டுகள் மூலம் விளக்கி நம்மை எல்லாம் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.அவருக்கு உதவியாக சில பாயிண்டுகளை நானே எடுத்து கொடுக்கிறேன்.
1.விகடன் ஆசிரியர் கைது செய்யப்பட்டது சட்டபடி தான் நடந்தது.
2.விகடன் ஆசிரியரை சிறையில் போட்டவர் பிஹெச் பாண்டியன்.எம்ஜிஆர் அல்ல.
3.சட்டப்படி சிறையில் போடுவது அழுகுணி ஆட்டம் அல்ல.
4.சிறையில் போட்டதற்கு நஷ்ட ஈடாக ஆயிரம் ரூபாய்க்கான செக் விகடன் ஆசிரியருக்கு கொடுக்கப்பட்டது.
இறுதியாக கட்டுரையின் இறுதியில் ரவி கூறும் வரிகள் அவருக்கே பொருத்தமானதாக இருப்பது தான் மிகப்பெரும் நகைமுரண்.அந்த வரிகளில் ஜெயமோகன் என்பதை எடுத்துவிட்டு ரவி ஸ்ரீனிவாஸ் என்று போட்டு படித்தால் மிகப்பொருத்தமாக இருக்கும்.
“இறுதியாக ஜெயமோகனால் தமிழில் அங்கத்திற்கு பயன் ஏதும் இல்லை என்று அர்த்தமில்லை. தமிழ் சினிமாவில் வரும் சில பாத்திரங்களின்(உ-ம். தில்லா மோகனாம்பாள் சவடால் வைத்தி) குணாம்சங்கள், ஜெயமோகனின் ஆளுமையில் உள்ள சில கூறுகளை கலந்து சில நகைச்சசுவை பாத்திரங்களை எளிதாக உருவாக்கலாம்”
www.worshipme.wordpress.com
worshipful1980@gmail.com
(1) http://www.thinnai.com/?module=displaystory&story_id=60802271&format=html
- சுஜாதாவிற்கு பெங்களூரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம்
- சுஜாதா – தமிழ் சூரியன்
- மாயா ஏஞ்சலு: நிறவெறியை வென்ற சாதனையாளர்
- Last Kilo byte – 8 முடிந்துபோன கடைசிப்பக்கம் – இளையதலைமுறையின் அஞ்சலி
- சம்பந்தமில்லை என்றாலும்-ச் ரீவைஷ்ணவம் – -ராமச்வாமி ராமானுஜ தாசர்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 1
- ‘ரிஷி’ யின் கவிதைகள்
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- சுஜாதா என்றொரு தமி்ழ்ச்சுரங்கம்
- கவிதை
- இது பகடி செய்யும் காலம்
- ரவி ஸ்ரினிவாஸின் கருத்துக்கள் 2 பைசா பெறுமானமுள்ளவை அல்ல
- தாகூரின் கீதங்கள் (19-20) குருவும் நீ சீடனும் நீ !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 9 புல்லாங்குழல் ஊதுவோன் !
- மெழுகுவர்த்தி
- தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
- ஜெயகாந்தன் பதிலளிக்கிறார் – எனிஇந்தியன்.காம் வெளியிடும் மாத இதழில்!
- வராண்டா பையன்
- தமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்
- கவிதை
- ஏமன் நாட்டில் கண்டுபிடிக்கப் பட்ட குர்ஆன் ஏடுகள்!
- திப்பு சுல்தான், காந்திஜி, பாரதி
- மலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்களையும்-வாசகர்களையும் இணைக்கும் சிற்றிதழ்-மலேசியா
- வெளிச்சம்
- “கட்சி கொடிகளும் மரங்களும்”
- பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனம்
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – வளர்ச்சியும் விடுபட்ட அடையாளங்களும்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்…………14 அ.ச.ஞானசம்பந்தன்
- குப்பிழான் ஐ. சண்முகனின் ‘உதிரிகளும்;’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய ஒரு வாசகனின் பார்வை
- மீ ட் சி
- மலையாளக்கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…
- பாய்ச்சல் காட்டும் (விண்)மீன்கள். (myth and mystery of “Red Shift”)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் வளையங்கள் எப்படி உருவாகின ? (கட்டுரை: 19)
- வெளிகளின் உயிர்த்தெழுகைபற்றிய பிந்திய பாடல்
- தும்பைப்பூ மேனியன்
- கறுப்பு தேசம்
- சுஜாதா
- சிலுவைகள் தயார்…
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 1