பி.கே.சிவகுமார் கண்ணோட்டம்

This entry is part of 45 in the series 20071108_Issue

ஜடாயு


அன்புள்ள ஆசிரியருக்கு,

சென்ற திண்ணை இதழில் பி.கே.சிவகுமார் எழுதியிருக்கும் “வாஸந்தி அவர்கள் கட்டுரை பற்றி ஜெயராமன் எழுதியிருக்கும் கடிதம்” என்ற கடிதம் கண்டேன். அதில் சிவகுமார் பயன்படுத்தும் “எழுத்துலகில் அட்ரஸ் இல்லாத ஜெயராமன் போன்ற காளான்கள் தடம்பதித்த எழுத்தாளர்கள் மீது மலினமானத் தாக்குதல் நடத்துவதை” என்ற சொல்லாடல் மிகத் தவறான கண்ணோட்டம் கொண்டது.

அப்படியானால், “தடம் பதித்த” எழுத்தாளர்கள் மட்டும் தான் மற்ற எழுத்தாளர்கள் எழுதுவதை விமரிசிக்க வேண்டுமா? திண்ணை போன்ற இணைய இதழ்கள் மதிக்கும், வளர்க்க விரும்பும் கருத்துச் சுதந்திரத்திற்கும், இடமளித்தலுக்கும், வாசக அனுபவப் பகிர்வுகளுக்கும் கொஞ்சமும் ஒவ்வாத கருத்து இது.

“லாஜிக்கில்லாத வெறுப்பின் அடிப்படையிலான தாக்குதலை” ஜெயராமன் வாஸந்தி மீது நிகழ்த்துகிறார் என்று கொதிக்கும் சிவகுமார், ஜெயராமனுக்கு அளித்திருக்கும் அடைமொழியில் லாஜிக் என்ன இருக்கிறது, வெறுப்பைத் தவிர வேறு என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.

ஜெயராமன் “அட்ரஸ் இல்லாத ஆள்” அல்ல – அவர் நடத்தி வரும் “விருது” என்ற பதிவுகள் பக்கம் (http://virudu.blogspot.com/) மற்றும் இன்னொரு புதிய பக்கம் ( http://jayaraman.wordpress.com/) இவற்றில் பல சுவாரஸ்யமான, அங்கதமும், நையாண்டியும் இழையோடும் பதிவுகளை எழுதி வந்திருக்கிறார். வைதிகஸ்ரீ (http://vaithikasri.blogspot.com/) என்ற இன்னொரு பக்கத்தில் ஆன்மிகம் பற்றி மிக அழகாக எழுதுகிறார். தமிழ் இணையத்தில் அவர் அறியப்பட்டவர் தான்.

“எழுதியது என்ன” என்பதற்குப் பதிலாக “எழுதியவன் யார்” என்று பார்த்து முத்திரை குத்துவது தான் “ஜெயராமன் போன்றவர்கள்” என்று சிவகுமார் பேசுவதில் தெரிகிறது. இது நடுவுநிலைமை அன்று.

“விமர்சனத்திற்கு அஞ்சி நிச்சயமாய் எழுதுவதை எவரும் நிறுத்துவதில்லை” என்ற முத்தாய்ப்புடன் இந்தக் கடிதத்தைப் பிரசுரித்து தன் நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துரைத்த திண்ணைக் குழு பின்பற்றுதலுக்கும், பாராட்டுக்கும் உரியது.

அன்புடன்,
ஜடாயு


jataayu.b@gmail.com

Series Navigation