நிலாவின் ‘பனிவிழும் இரவு’ சிறுகதையின்

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

பெஞ்சமின் லெபோ,


நிலாவின் ‘பனிவிழும் இரவு’ சிறுகதையின் வடிவும் முடிவும் வெகு அருமை.
வேலைக்குப் போகும் நடுத்தர வர்க்கத்துப் பெண்ணின் கோணத்தில் ‘பனி விழும் இரவை’ப் படம் பிடித்துக் காட்டிய பாங்கு பாராட்டத்தக்கது.

வேலையின் கடுமை ஒரு புறம் (‘அலுவலகத்தில் ட்ரெயினிங் என்று ஒரு அறைக்குள் மாட்டிக் கொண்ட ரோகிணி…’),
போக்குவரத்து தடைப்பட்ட கொடுமை மறுபுறம் (‘ஒன்றேகால் மணி நேரப் பயணம் வீட்டிலிருந்து தினமும். ரயிலில் உட்கார இடம் கிடைக்குமாதலால் படிப்பதற்கெனப் பிரத்யேகமாய் நேரம் கிடைக்கிற திருப்தி உண்டு. ஆனால் ரயில் போக்குவரத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் இப்படித்தான் மாட்டிக் கொள்ள நேரிடுகிறது. இங்கிருந்து வெளியேறுவதற்கு வேறு வழிகள் ரொம்பக் குறைவு.’)

இடையில், யார் யார் மீதோ இயல்பாக எழுகின்ற எரிச்சலும் கோபமும்!
(“‘வெறுமனே எத்தனை நேரம் நிற்பது! இந்த சனியன் பிடித்த ஸ்நோ இப்படி கழுத்தறுக்குமோ?
க்ளோபல் வார்மிங்கை இத்தனை தூரம் வளரவிட்ட மனிதர்கள் மேல் கோபமாக வந்தது. யார் யாரையோ சொல்லி என்ன பயன்?
இப்படி தினமும் வேலைக்கு வந்து அல்லல் படவேண்டியிருக்கிறதே! பெற்றோர் கோடீஸ்வரர்களாக இருந்திருக்கலாம் அல்லது
கோடீஸ்வர மாப்பிள்ளைக்காவது கல்யாணம் செய்து கொடுத்திருக்கலாம்! அல்லது மாமியாரின் குத்தலுக்கு பயந்து நான் அடுத்தடுத்து இரண்டு பெறாமலாவது இருந்திருக்கலாம். செலவு குறைவாக இருக்கிற ஏதாவது ஒரு நாட்டில் செட்டில் ஆகி இருந்திருந்தால் ஒற்றைச் சம்பளத்தில் குடும்பம் நடத்தியிருக்கலாம்! கால் வேறு வலித்துத் தொலைக்கிறது… சனியன் பிடித்த ஸ்நோ… ‘ ).

கூடவே, தாய்மையின் கனிவும் பரிவும்
(விழும் பனியில் வீழந்தும் எழுந்தும் அடிக் களிக்கும் குழந்தைகளுக்குச் “சளி, கிளி பிடிக்கப் போகுதுப்பா… உள்ள கூப்பிடுங்க”,
“உங்கம்மாவை இன்னைக்கு சமைக்கச் சொல்லிருங்க. நான் வர்ற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டாம். பிள்ளைகளுக்குப் பசிக்கும்” )

என வேலைக்குப் போகும் நடுத்தர வர்க்கத்துப் பெண்ணின் சகல பரிமாணங்களையும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருப்பது பிரமாதம்.

மேலும் கதைக்குள்ளே பொதிந்து வைத்திருக்கும் விழுமியம் (values)… அடடா…
எல்லாருக்கும் இயற்கை அன்னை ஒரே மாதிரிதான் வருகிறாள், காட்சி தருகிறாள்… மழையாக, வெயிலாக, பனியாக, புயலாக…
ஒருசிலர்தான் (மோகன், அவன் தாயார், குழந்தைகள்) இயற்கை அன்னையைத் தரிசிக்கிறார்கள், ரசிக்கிறார்கள், அவள் தரும் காட்சிகளை ருசிக்கிறார்கள்.
பெரும்பாலோர் ரோகிணிகளாகவே தத்தம் கவலைகளில், எரிச்சல்களில் மூழகி இயற்கையின் அழகைக் கண்டு களிக்காமல் தொலைத்து விட்டு முழிக்கிறார்கள்.
வெறும் பணம், காசு, வேலை வெட்டி என்று அலைந்து திரிந்து விட்டு இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்வைத் தொலைத்து விட்டு…
இறுதியில் ””ம்… ஸ்நோ விழும்னு வெயிட் பண்றேன்” என்று வெட்டியாகக் காத்திருக்கிறார்கள்.
இந்த விழுமத்தை (values) கதை ஆசிரியர், இறுதி வரியில் மிக அழகாகக் கோடிட்டுக் காட்டி உள்ளார்.

சிறு கதையிலேயே மிக முக்கியமானவை முதல் வாக்கியமும் இறுதி வாக்கியமும்தான்.
இச்சிறு கதைக்கும் இது பொருத்தமாகவே உள்ளது.
சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு் இதற்கு உண்டு.
ஆசிரியருக்குப் பாராட்டுகள்.

அன்புடன்
பெஞ்சமின் லெபோ, பாரீஸ் (பிரான்சு)


benjaminlebeau@gmail.com

Series Navigation

பெஞ்சமின் லெபோ

பெஞ்சமின் லெபோ