ஈவேரா- காந்தியடிகள் உரையாடல் – எழுப்பும் சில கேள்விகளும் வெளிப்படுத்தும் சில உண்மைகளும்

This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue

அருணகிரி



கடந்த இதழில் வெளியான இந்த உரையாடலைப்படித்ததும் முதலில் எனக்கு எழுந்த சில கேள்விகள்: 1927-இல் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த உரையாடல் , காந்தி இறந்த 1948-இல்தான் முதலில் வெளியிடப்பட்டதா? எனில் , 21 ஆண்டுகளாக இதனை வெளியிடாமல் இருக்க என்ன காரணம் ? 21 ஆண்டுகளாக இந்த உரையாடல் எங்கே ஆவணப்படுத்தப்ப்ட்டு இருந்தது , காந்தியின் இறப்புக்குப் பிறகே வெளியிடப்பட்டது எனில் 21 வருடங்கள் கழித்து அந்த நேரத்தில் வெளியிடப்பட வேண்டிய அவசியம் என்ன? “வசதியாக ” காந்தி இறந்த பின் வெளியிடப்பட்ட ஒரு உரையாடல் இது என்ற குற்றச்சாட்டு எழ வாய்ப்புள்ளதால், இதன் மூல ட்ரான்ஸ்கிரிப்ட் தருதல் நலம்.

தாஜ் எழுதியவற்றில் நகைச்சுவை மிகுந்த பகுதி, சாதியை எதிர்த்தால் கொன்று விடுவார்கள் என்று ஈவேரா சொன்னாராம், அது உண்மையானதாம். பொய் சொன்னாலும் பொருந்தச்சொல்ல வேண்டும். இந்து என்ற அடையாளம் தாங்கிக் கொண்டு ஆனால் முஸ்லீம்களுக்கே முதன்மை வாழ்வுரிமை என செயல்பட்டது காந்தியடிகளின் இறப்புக்குக் காரணம் ஆனது ( அது சரியா என்பது வேறு விஷயம்). சாதி எதிர்ப்பால் சாவு என்றால் ராஜாராம் மோகன்ராய், விவேகானந்தர், பாரதியார், நாராயண குரு, பூலே, அம்பேத்கார் என அத்தனை சீர்திருத்தவாதிகளும் பார்ப்பனர்களால் கொல்லப்பட்டிருக வேண்டும், அப்படி ஏதும் நடந்ததாக வரலாறு இல்லை. ராமசாமி நாயக்கர் கூட 60-வயதில் மகள் போன்ற ஒருத்தியை மணந்து 30 வருடங்களுக்கு மேல் இரண்டாம் மண வாழ்க்கை வாழ்ந்து 90- வயது தாண்டி இயற்கையாய்த்தான் இறந்தார். ஆனால் அவரது கு-க்ளக்ஸ் -கான் வகை பாசிச வெறுப்பியல் குண்டர்களால் இன்றும் கூட பார்ப்பனர்கள் ஆபாசமாகப் பேசப்பட்டும் , அடிக்கப்பட்டும், வெட்டப்பட்டும் , குண்டெறியப்பட்டும் அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

நிற்க. இந்த உரையாடலில் முக்கியமாக ஈவேராவின் சுய உருவமும், அவரது பார்ப்பன சாதிக்காழ்ப்பின் அடிமூலமும் வெளிப்படையாகியிருப்பதைச் சுட்டிக்காட்டுவது அவசியம். ‘ராஜாஜியும் பார்ப்பனர்தானே, நல்லவர் இல்லையா’ என்ற கேள்விக்கு பதில் சொல்கையில், பார்ப்பனர்களுக்கு மட்டுமே அவர் உண்மையான தொண்டர் என்பதாகவும் “ஆனால் , என் வகுப்பு நலத்தை அவரிடம் ஒப்படைத்துவிடச் சுலபத்தில் எனக்கு மனம் வராது” என்றும் மனம் திறக்கிறார் ஈ.வே .ராமசாமி நாயக்கர் . அதாவது, ஆதிக்க சாதிகளில் ஒன்றாக இருந்த தனது சாதியின் நலனை , தன் சாதியை விட மேலானதாகக்கருதப்படும் பார்ப்பன சாதிக்காரரின் கையில் கொடுக்க மனம் வராது என்கிறார் ராமசாமி நாயக்கர். ‘தன் சாதியினரை விட மேல் தட்டில் உள்ள பார்ப்பனரை கீழிறக்க வேண்டும் ‘ என்ற சாக்கினில் வடிகட்டிய சாதிப்பாசம்தான் பார்ப்பன வெறுப்பாக அவரால் இங்கே உமிழப்படுகிறது. உண்மையில் இதில் வெளியாகியிருப்பது ஈ.வே .ராமசாமி நாயக்கரின் பார்ப்பன வெறுப்பின் அடிமூலம்தானே தவிர , சாதியற்ற சமூகம் என்ற சமரச எண்ணமோ, ஹரிஜன மேம்பாடு என்ற சீர்திருத்தச் சிந்தனையோ அல்ல. படிநிலையாய் சாதியமைப்பைக்கண்டு அதில் மேலே உள்ளவனைக் கீழே தள்ளும் நோக்கம் மட்டுமே இதில் வெளியாகிறதேயன்றி, கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற செயல் திட்டமோ அனைவரும் சம நலன் பெற வேண்டும் என்ற சமரச எண்ணமோ வெளிப்படவில்லை. பார்ப்பனர் மேல் இருந்த துவேஷம் மட்டுமே பார்ப்பனரல்லாத அனைவர்மீதும் பரிவை உருவாக்கி விடாதுதான். இதனால்தான் ஆதிக்க சாதிகளால் ஹரிஜனங்கள் கொளுத்தப்பட்டபோது கூட அதனை எதிர்த்துப் பேசாமல் ஈ .வே.ரா .வால் இடிபோன்ற மவுனம் காக்க முடிந்தது. எது தனக்கு அதிகம் பிடித்தமானது என்பதை விட, யார் மேல் தனக்கு துவேஷம் அதிகம் என்பதை வைத்தே தனது கொள்கைகளை வகுத்துக்கொண்டவர் ராமசாமி நாயக்கர் . “இந்தி மேலே இருந்த துவேஷம் தமிழ் மேலே அன்பா மாறித்து. அதுதான் உண்மை” * என்று சொல்கையில் தனது இந்த வெறுப்பியல் மனப்பான்மையைத்தான் ஈவேரா வெளிச்சம் போடுகிறார். யாருக்கு உதவ வேண்டும் என்பதை அடிப்படையாய்க்கொண்டு சமூக அரசியல் நடத்தியவர் காந்தியடிகள், தாழ்த்தப்பட்ட சாதியை மேம்படுத்த அவர்களினூடே அறிவியக்கம் நடத்தி செயல்பட்டவர் நாராயண குரு , ஆன்மீகத்தின் துணையுடன் சாதிக்கொடுமைகளுக்கெதிராக சண்டமாருதமாய்க் குரலெழுப்பிய்வர் துறவி விவேகானந்தர். யாரை அடிக்க வேண்டும் என்பதை மட்டுமே அடிப்படையாக்கி அரசியல் கூட்டம் வளர்த்த தமிழக பாசிஸ்டு ஈ. வே.ராமசாமி.

மட்டுமன்றி, இந்த உரையாடலில் ஆபிரஹாமிய மதங்கள் குறித்த காந்தியடிகளின் தெளிவான சிந்தனையும் பதிவாகியிருக்கிறது: “கிறிஸ்துநாதர் என்ன சொன்னாரோ , அவர் சொன்னதாகச் சொல்லும் பைபிள் என்ன சொல்கிறதோ , அந்தப்படிதான் கிறிஸ்தவர்கள் என்பவர்கள் நடந்தாக வேண்டும். முகம்மது நபி அவர்கள் என்ன சொன்னாரோ , குரான் என்ன சொல்லுகிறதோ, அதன்படிதான் முஸ்லீம்கள் என்பவர்கள் நடந்தாக வேண்டும் , மாறுபட்டு ஏதாவது ஒரு திருத்தம் சொன்னால், அது மத விரோதமாக ஆகிவிடும். சொல்லுகிறவர் மதத்திற்கு வெளியில் வந்துதான் சொல்ல வேண்டும். உள்ளே இருந்து சொன்னால் , ஒழித்து விடுவார்கள் இதுதான் உண்மையான மதம் என்பவைகளின் தன்மை. ஆனால் , இந்து மதம் என்பது இல்லாத மதம் ஆனதால் , அந்த மதத்தின் பேரால் யாரும் மகான்களாக ஆகி எதையும் சொல்லலாம் . அப்படியே இந்துமதத்தில் ஏற்பட்ட பல பெரியோர்கள், மகான்கள் பலவற்றைச் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால் , நாமும் அந்த மதத்தை வைத்துக் கொண்டே அநேக சீர்திருத்தங்களை இந்தக் கால மனிதவர்க்கத் தேவைக்கு ஏற்றபடிச் செய்யலாம்”.

இப்படிப்பட்ட சீர்திருத்தங்களைத்தான் இராஜாராம் மோகன்ராயும், நாராயண குருவும், விவேகானந்தரும், பாரதியாரும், காந்தியடிகளும், அம்பேத்காரும் தத்தம் களங்களில் செய்தனர். மாதா அமிர்தானந்த மாயியும், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரும் இன்றும் செய்கின்றனர். இந்து மதத்துக்கு உள்ளே இருந்தே சாதி எதிர்ப்பு இயக்கங்கள் வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதே சமயம், இன்றும் கூட குரானுக்கு எதிராக உள்ளிருந்து எழும் குரல்கள் பட்வாக்களாலும் பயங்கரவாதங்களாலும் அடித்து ஒடுக்கப்படுவதைக் காண்கிறோம் . 147 வருடங்களுக்கு மேலாகியும் இனமும் கிறித்துவ உலகம் பரிணாமக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை . அறிவியல் வெற்றிகளின் சிகரத்தில் உள்ள அமெரிக்காவிலோ பைபிளுக்கு எதிரானது எனச்சொல்லி பரிணாமப் பாடமே தடை செய்யப்படக்கூடிய நிலைகூட இன்னும் கூட சில மாநிலங்களில் உள்ளது.

தளைகள் அனைத்திலிருந்தும் விட்டு விடுதலையாகி நிற்க மனித மனங்களுக்கு அறைகூவல் விடுப்பது இந்து ஞான மரபு. இன்னமும் கூட இறுகிய கோட்பாடுகளாலும் பயங்களாலும் சிறைபட்டுக் கிடப்பது ஆபிரஹாமிய மதங்களின் இயல்பு. இந்து தர்மத்தின் இந்த இளகிய தன்மைதான் ஈவேராவுக்கு இந்து தெய்வங்களை அவமதிக்கவும், பிள்ளையார் சிலைகளை உடைக்கவும், இராமருக்கு செருப்பு மாலை போடவும் வசதியாகிப்போனது; இல்லாவிட்டால் , சல்மான் ருஷ்டியைப்போலவோ தஸ்லிமா நஸரீனைப்போலவோ பாத்வா விதிக்கப்பட்டு உயிருக்குப்பயந்து ஒளிந்து வாழ வேண்டி வந்திருக்கும். 60-வயதில் இளம்பெண்ணை மணந்து , 90-வயது தாண்டி நிம்மதியாய் வாழ்ந்திருக்க முடியாது.

———————————————————————————
arunagiri_123@yahoo.com

* http://www.tamiloviam.com/unicode/07210509.asp

Series Navigation

அருணகிரி

அருணகிரி