பிரான்சு தமிழர் திருநாள் 2007

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

கிரிஸ்தோஃபர் ஃபிரான்சிஸ்


சென்ற ஞாயிறு 14.01.2007 அன்று பாரீஸ் புறநகரான சார்சல் பாரம்பரிய ஆடையணிந்த தமிழர்களின் நடமாட்டத்தால் பரபரப்பானது. தமிழர்களின் தாயகங்களில் மக்களால் கொண்டாடப்படும் ‘பொங்கல் நாள்’ நிகழ்வரங்காகும் எனும் அறிவித்தல் பெருமளவிலான மக்களை ஈர்த்ததிருந்தது.

புகலிட வாழ்வின் நான்காவது தசாப்த நீட்சியில் பேரர்களைக் கண்ட முதற்தலைமுறையும், குடியேறிய நாடுகளிலேயே குடும்பமாகி வாழ்வில் ஐக்கியமாகிய அடுத்த தலைமுறையும், இவர்களின் முகங்களைப் பார்த்தவாறு தவழத் தொடங்கும் மூன்றாம் தலைமுறையுமாக ஈழத்தமிழர்கள் ஒரு புறமும், இதையும் கடந்தவர்களாக பாண்டிச்சேரி வழி கொண்ட தமிழர்களும், காலனியக் கால இடப் பெயர்வுகளால் கண்டங்கள் மாறி தேசங்கள் மாறி மூலம் தேடும் மொரிசியஸ், ரீயூனியன் குவாதலூப் வழிவந்தவர்களும், மனித நேயப்பற்றால் தார்மீக ஈடுபாட்டைக்காட்டும் தமிழ்ப்பண்பாட்டில் பற்றுக்கொண்ட பிரெஞ் தேசத்தவர்களுமாக அரங்கில் மக்கள் குழுமினர்.

தைப்பொங்கல் நாள்: தமிழர்க்கு ஒருநாள் -இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவநாள்! எனும் விருதுவாக்கிய முன்மொழிவுடனான இந்நிகழ்வரங்கை பிரான்சில் செயற்படும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தமிழ்ச்சங்களின் கூட்டமைப்பு, சிலம்பு அமைப்பு ஆகியன இணைந்து நிகழ்த்தின. இரு அரங்குகளாக நிகழ்வுகள் அமைந்திருந்தன.

முதல் அரங்கு, தொடக்க அரங்கமாகவும், பொது நிகழ்வரங்காகவும் அமைந்திருந்தது. நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. திரு- திருமதி பாலசுந்தரம் (.த.ச.கூ), திரு அலன் ஆனந்தன்(உ.த.ப), திரு- திருமதி பரலோகநாதன் (சிலம்பு அமைப்பு), நகர சபைத்தலைவர் (லூபூஜே), திருமதி சாந்தல் தெலமூர், திரு மார்க் ரங்கன் (பிரதிநிதி றியூனியன்), திருமதி பஸ்கால் முருகையன் ஆகியோர் மங்கல விளக்கேற்றினர். தொடர்ந்து அகவணக்கம் நிகழ்த்தப்பட்டது. ஏற்பாட்டாளர்களில் ஒருவரான கி.பி.அரவிந்தன் தொடக்கவுரை வழங்க, நிகழ்வு ஏற்பாட்டுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான திரு அலன் ஆனந்தன் வரவேற்புரை வழங்கினார்.

பொங்கலிடல் நிகழ்வு வில்லியே லூ பெல் தமிழ்ச்சங்கம் சார்பில் திரு டொமினிக் தலைமையில் இதற்கென அழகாகத் தயாரிக்கப்பட்ட வெளியரங்கில் முழுமையான செய்முறை அரங்கமாக நடைபெற்றது. காட்சியரங்கான இத்தொன்மையான நிகழ்வு வயது, பால் வேறுபாடின்றி மக்களைப் பரசவமூட்டியது. இது மதத் தன்மை காட்டாது பொதுவான நிகழ்வாக ஒழுங்கமைக்கப்பட்டதும், பாரம்பரிய இசைக்கருவிகளான சங்கு, சேமக்கலம், மணி போன்றன ஓசைகளை வெளிப்படுத்திய இதம் வார்த்தைகளால் பதியப்பட முடியாதது. இதில் ஒரு கத்தரி வெருளி உருவம் அமைக்கப்பட்டிருந்தமை பலரது பார்வையை வேடிக்கையாக மையம் கொள்ள வைத்தது. வருகை தந்திருந்த அனைவருக்கும் அழகாகப் பெட்டியில் இடப்பட்ட பொங்கல் வழங்கப்பட்டமை அன்றைய சிறப்பம்சமாகும்.

உள்ளரங்கில் தனியாக அழகுபடுத்தப்பட்ட இடத்தில் திருமதி சாந்தல் என்ற பிரஞ்சுப் பெண் நேர்த்தியாக கோலமிட்டதும், கோலமிடும்போது அவரது கவனம்கொள்ளும் தன்மையும், சர்வசாதாரணமாக புள்ளிகளிட்டு கோலத்தை வரைந்தமையும் பலரது புருவங்களை உயர்த்தின. அழகான இக்கோலங்கள் இந்நிகழ்வு முடிந்து திரும்பிய பின்னரும் மனதை நிறைத்திருந்தன.

அழகாக அமைக்கப்பட்ட மேடையில் ‘தமிழர்திருநாள் 2007’ பதாகை கம்பீரமாகப் பார்வையாளர்களை வசீகரித்தது. இதில் இடது பக்க எல்லையில் வள்ளுவர் அமர்ந்திருக்கும் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பாக வெண்துண்டு விரிக்கப்பட்டு அதில் அமர்ந்திருந்தவாறு மொழியில் ஆராச்சியாளரும் தமிழ்ப் பேராசிரியருமான திரு அ. முருகையன் அவர்களால் எமது புதிய தலைமுறையினருக்கு அகரம் எழுதல் நிகழ்வு நடாத்தப்பட்டது. மிக அருமையாக நிகழ்ந்த புதிய நிகழ்வுகளில் இது ஒன்று என்பதை உறுதியாகச் சொல்லலாம். இதில் இளம் சிறார்கள் எழுதிய எழுத்துகளுடன் அவர்கள் எழுதும் படத்தையும் பதிவாக்கி சட்டகத்திலிட்டு இதே அரங்கில் பிரான்சு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் திருமதி எலிசபெத் உதயணன் கைகளால் பரிசாக வழங்கியமை அநேகரது பாராட்டுதலைப் பெற்றது. மிகுந்த அக்கறையோடும் பொருத்தப்பாடோடும் நிகழ்ந்த இந்நிகழ்வு பற்றி தனியாக எழுத வேண்டும். மக்களின் பெரும் அங்கீகாரத்தைப் பெற்ற இந்நிகழ்வு வரலாற்று பதிவாகியதில் எந்த ஆச்சரியத்திற்கும் இடமில்லை.

இதன் தொடர்ச்சியாக இரண்டாவது நிகழ்வரங்கு மேடையில் ஆரம்பமானது. பலரது கவனத்தை ஈர்த்த நிகழ்வாக அமைந்த ‘இசை அரங்கம்’ புதுமையாக இருந்தது. பல்துறைக் கலைஞன் பரா அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வு பல்வாத்தியக் கலைஞன் உமாபதி தலைமையில் நிகழ்த்தப்பட்டது. இதில் பங்கேற்றோர் சத்தியமூர்த்தி : நாயனம், ஃபிரான்சுவா: சுரத்தட்டு, சாரங்கன்: கெஞ்சிரா, கண்ணன்: தவில், சுதர்சன்: மிருதங்கம், பாஸ்கரன்: எலக்ட்ரிக் பேடு, அருண்: எலக்ட்ரிக் பேடு, கனி: ஜம்பை, ராஜா: கிட்டார். பொங்கல் நடைபெறும் வேளையில் முழங்கிய இவ்விசை அமுதம் செவிவழியாகச் சென்று இனித்தது. இதைப் பற்றி தனியாகப் பார்க்க வேண்டும்.

பாரம்பரிய நடனங்களாக மூன்று இடம்பெற்றன.
1. உழவுப்பாடல்- தயாரிப்பு: சிலம்பொலி கலையகம்
நெறியாள்கை: திருமதி சேஷா கற்பகம், பாடல் வழிமூலம்;: கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி பாலசுகுமார்
இசை: யூட் – இலண்டன். பங்கேற்றவர் சேஷா கரோல், ப்யுஷி நதாஷா, க்ருஷ்ணகுமார் லீலா, சேஷா கவின், தவீது பிரியா, வேன்ஸன் ஆனந்தராஜ் விமலா, பெரன் லெத்திசியா.
2. வரவேற்பு நடனம் ‘தமிழே உயிரே வணக்கம்’ நடன ஆசிரியை தனுசா மதி, பங்கேற்பு ஓல்னே சூபுவா- செவ்றோன் தமிழ்ச்சோலை மாணவர்கள் நியோனி தயாநிதி, நிசாந்தினி பாலேந்திரராஐன், சமந்தா மகேந்திரராஐh, சபிதாஈ அம்சலா இராசலிங்கம், டுசிகலா இராசலிங்கம், லாவண்யா விஸ்வநாதன், சுரேனா குணராஐh, அபிநயா நல்லையா, குருசல்யா செல்வராஐh.
3. அம்பாப் பாடல் வழங்கியவர்கள் டேமியன் சூரி மற்றும் குழு (திருமலைக் கலா மன்றம்) இவை மூன்றும் வௌ;வே தளத்திலிருந்து தமக்கேயுரித்தான தனித்துவமான முத்திரையைப் பதித்தன.
4.காவடியாட்டம்-தயாரிப்பு: இவறி சூசெய்ன் தமிழ்ச்சோலை ஆசியர் மாணவர்கள்.

சிறப்புரை வழங்கவும் அகரம் எழுதவும் பாரீசுக்கு வருகை தந்த மூத்த தமிழறிஞர் மணவை முஸ்தபா திடீரென சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தமிழ் நெஞ்சங்களுக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது. இதனால் மெல்லிய கவலை அரங்கு முழுமையும் வியாபித்திருந்தது. இவ்வெற்றிடத்தை நிரப்ப முடியாதபோதிலும் சிப்புரைகளை வழங்கி இந்நாளைச் சிறப்பித்தார்கள் தமிழாசான் போடையிடி குமரன் அவர்கள் தமிழிலும், பேராசிரியர் அ. முருகையன் பிரஞ்சிலும். தவிரவும் சிற்றுரைகள் மூலம் கருத்துரைத்தார்கள் திருமதி சந்தால், வண. பிதா கில்லரி, சார்சல் நகர சபைத்தலைவர், லூபூஜே நகர சபைத் தலைவர்,

வில்லியே லூ பெல் தமிழ்ச் சோலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட ‘சூரிய உதயம்” சிறுவர் நிகழ்கலை அரங்கு இந்தத் தைப்பொங்கல் நிகழ்வு தொடர்பான கருத்தாடலை அழகாகக் காவிச் சென்றது. இதன் நெறியாழ்கை திரு சர்வசீலன். பங்கேற்ற சிறார்கள் ஜெகானி ஜெயச்சந்திரன்(07வ), யதுசா இராஜேந்திரம்;(05வ), சரண்யா சந்திரகுமார்;(09வ), ஆதுசன் பாஸ்கரன்(12வ);, கௌசிகன் இரவிச்சந்திரன்;(12வ), பிரவீனன் இராஜலிங்கம்;(12வ), ஜெகானன் ஜெயச்சந்திரன்(12வ);, தேனீசன் பாஸ்கரன்;(13வ), கௌதமி இரவிச்சந்திரன்;(07வ), ஜெகதா ஜெயச்சந்திரன்;(10வ), பிரவீணா இரவிச்சந்திரன்;(11வ), ஆஸா பாஸ்கரன்;(14வ), கோசீலன் பாஸ்கரன்;(06வ), கௌசல்யா இரவிச்சந்திரன்(09வ);, பிரதீப் இரவிச்சந்திரன்;(14வ) .

இந்நிகழ்வில் சீரான இடைவெளியில் திருக்குறள் கூறல் என்ற வித்தியாசமான நிகழ்வு நடாத்தப்பட்டது. இதில் வயது, பால், தேசியம், மதம் எனக் கருதப்படும் எல்லைகள் கடந்தனவாக வேறுபட்ட பிரசன்னம் காணப்பட்டதைப் பதியவேண்டும். 6 வயது முதல் 75 வயது வரையிலானவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தார்கள். இதில் இஸ்லாமியப் பெண் ஒருவரும், குவாதுலூப்பைச் சேர்ந்த தமிழ் மறந்த மூன:றாம் தலைமுறைத் தமிழர் ஒருவரும், மொறீசியஸ் தமிழ்க் குடும்பமொன்றின் மகளொருவரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தகுந்தது. இதில் பங்கேற்றவர்கள் செல்வன் மதுசன் மகேந்திரராசா (வ.08), செல்வி அக்சயா குமாரவேந்தன் (வ.06), செல்வி அதிசயா நல்லையா (வ.06), செல்வி சிந்தி பாபு (வ.12), திருமதி அசினா முகமட் இப்ராகிம் (வ.21), திருமதி திலகம் லியோ அன்ரன். (50), திரு.கோபாலி (47), திரு.விவேகானந்தன்(வ.52), .செல்வன் ஜோனாஸ் அன்ரன் (வ.16), திரு.ஏ.ரகுநாதன் (வ.71), திருமதி கந்தசாமி(வ74). இக்குறள் கூறல் நிகழ்வில் மேலும் அதிக கவனமெடுத்திருக்கலாம் என்றும் இவற்றின் கருத்துகளை பிரஞ்சு மொழியில் தெரிவித்திருக்கலாம் என்றுமான ஆதங்கத்தைப் பலரும் வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வின் கடைசி முத்தாய்ப்பு நிகழ்வாக ‘சிலம்பாட்டம்’ நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வுக்காக சிறப்பாக அழைக்கப்பட்ட சிலம்பாடக் கலைஞன் ஜோதி செந்தில் கண்ணன் தனது தனித்துவ அசைவால் அவையோரை வசீகரித்தார். புலம்பெயர் தமிழர்களின் ஐரோப்பிய மேடை நிகழ்வொன்றில் தமிழர்களின் பாரம்பரிய வீரக் கலையான சிலம்பாடம் நிகழ்த்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். உடலின் சகல அவையங்களை ஒருங்கிணைத்து கம்பு சுழல வைக்கப்படும் காட்சியை காண மெய்சிலிர்த்தது. பறை ஒலி முழங்க அந்தத் தாளக்கட்டுக்கமைவாக கம்பை இருகைகளாலும் அநாயாசமாக சழற்றியபடி நின்று இருந்து படுத்து அசைந்து துள்ளி ஆடிய ஆட்டம் சபையோரின் பெருத்த கரவொலியைப் பரிசாக்கியது. தமிழர்களின் பாரம்பரியக் கலையான சிலம்பத்தை ஒலிம்பிக்கில் இணைக்கும் பேரவாவுடன் செயற்படும் இளைஞனின் ஈடுபாடு பலரையும் கவனம் கொள்ள வைத்தது. இவர் சென்ற 2004 – 2005 ஆண்டுகளில் பாரீஸ் பேர்சி அரங்கில் பிரஞ்சு அழைப்பாளர்களால் வருவிக்கப்பட்டு பங்கேற்றவர் என்பதும் இப்பதிவு கனல் புளுஸ் தொலைக்காட்சியில் இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தகுந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான முகுந்தனின் இரத்தினச் சுருக்கமான நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது. இத் தமிழர் திருநாள் நிகழ்ச்சிகளை ஐபிசி கலையகத்தில் இருந்து வருகைதந்த எஸ்.கே.ராஐன் தமிழிலும் பாரிசை சேர்ந்த பல்கலைகழக மாணவியான செல்லி சிந்துஐர் குலேந்திரன் பிரெஞ்சிலும் தொகுத்து வழங்கினர்.



kipian@gmail.com

Series Navigation

கிரிஸ்தோஃபர் ஃபிரான்சிஸ்

கிரிஸ்தோஃபர் ஃபிரான்சிஸ்