ஒன்றும் ஒன்றும் ஒன்று

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

வஹ்ஹாபி


“ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம் – முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா?” என்ற கேள்வியை எழில் என்பவர் சென்ற வாரத் திண்ணையில் எழுப்பியுள்ளார்.

“முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அவர்களது மதம் உண்மையான மதம் என்று உறுதி இல்லை. அதனால்தான் எங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறார்கள்” என்று ஜாகிர் நாயக் கூறியதாகக் குறிப்பிட்டிருக்கிறார் எழில்.

ஜாகிரின் கூற்று மிகத் தவறானது என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது. அவரே ஆற-அமர சிந்தித்துப் பார்த்தாரெனில், தன் பதிலில் உள்ள தவறு ஜாகிருக்குப் புரியும்.

“நான் பிறந்த நாடு எனக்கு உரிமை அளித்திருக்கிறது; நான் பிரச்சாரம் செய்கிறேன்” என்று நாச்சறுக்கின்றி பதில் கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

சறுக்குதல் என்பது ஜாகிருக்கு மட்டுமின்றி எல்லாருக்கும் ஏற்படுவதுதான். எழிலையே எடுத்துக் கொள்வோமே!

“காலிப்பாத்திரம் ரொம்ப சத்தம் போடும்.. நிறை குடம் ததும்பாது என்பது தமிழ் பழமொழி” என்ற முதல் எட்டிலேயே எழிலின் சறுக்கல் தொடங்கி விட்டது.

‘காலி’ தமிழ்ச் சொல்லா? ‘பாத்திரம்’ தமிழ்ச் சொல்லா? காலிப் பாத்திரம் சப்தமிடுமா? சப்தம் தமிழ்ச் சொல்லா? (‘சத்தம்’ தமிழ்தான் ‘கூலி’ என்ற பொருளில்). எழுத வந்த செய்திக்குப் பொருந்தாத் தலைப்பிட்டு, அந்தப் பழியைத் தமிழின் தலையில் சுமக்கச் செய்வது எழுத்து நேர்மையன்று.

சரியான ‘தமிழ்’ப்பழமொழி: குறைகுடம் கூத்தாடும்; நிறைகுடம் ததும்பாது என்பதே! குறையுள்ள ஒரு மனிதனை ஒன்றுமே தெரியாத ‘காலி’ என்று மிகைபடக் கூற முனைந்ததால் தொடக்கத்திலேயே சறுக்கினார் எழில் என்பதே உண்மை.

தான் நம்பும் கொள்கையைச் சரி என நிலைநாட்டுவதற்கு எல்லாத் தரப்பு மக்களுக்கும் உரிமை உள்ளது.

அதற்காக, ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற தசம அடிப்படைக் கணக்கையும் ஒன்றோடு ஒன்று பத்து என்ற பைனரியையும் சனாதனத்துக்கான உதாரணமாக முன் வைத்தது எழிலின் சறுக்கலில்லையா?

தசமக் கணக்கு ஒரு கொள்கை அடிப்படையிலும் பைனரி வேறொரு கொள்கை அடிப்படையிலும் இயங்கக் கூடியவையன்றோ?

தசமமோ பைனரியோ முடிவே இல்லாதவையா என்ன?

சரி, அப்படியே இருக்கட்டும். ஒரு கம்ப்யூட்டர் பயனாளர், காலத்துக்கும் டிபக் நிலையிலேயே தொடர்ந்து இருந்து வரும் ப்ரோக்ராமை விரும்புவாரா முழுமையடைந்த ப்ரோக்ராமை விரும்புவரா?

தனக்கு எது பயனுள்ளதாக இருக்குமோ அந்த முழுமையடைந்த ப்ரோக்ராமைத்தான் ஒரு அறிவுள்ள பயனாளி தேர்ந்தெடுப்பார் என்றும் அதுதான் இயல்பு என்றும் நான் நினைக்கிறேன்.

ஃஃஃ
to.wahhabi@gmail.com
http://wahhabipage.blogspot.com

Series Navigation

வஹ்ஹாபி

வஹ்ஹாபி