அலெக்ஸாண்டர் இந்தியப் படையெடுப்பைப் பற்றி ….!(கடிதம்-2)

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

சி. ஜெயபாரதன், கனடா.


நக்கீரனை எதிர்த்து அந்தக் காலத்தில் ஒரு பரமசிவன்தான் தோன்றினார். ஆனால் என்னை எதிர்த்துத் தற்போது இரண்டு நீலகண்டன் தோன்றி யுள்ளனர்! என் மதிப்புக்குரிய மாபெரும் அரசியல், அறிவியல் எழுத்தாள நண்பர் அரவிந்தன் நீலகண்டனும், திரு. வஜ்ரா சங்கர் எழுதியதை ஆதரிப்பது பின்னவருக்கு மிக்க வலுவைத் தருகிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அலெக்ஸாண்டரைப் பற்றி எழுதிய கிரேக்க வரலாற்று மேதை புளுடார்க் [கி.பி.46-120] தவறென்று சவால் விட்டுக் கடந்த நூற்றாண்டில் எழுதிய வீர சாவர்க்கர் வரலாற்று நூலைத்தான் நம்ப வேண்டும் என்று ஓர் இத்துத்துவ ஆதரவாளி அரவிந்தன் கூறுவது எனக்கு விந்தையாக உள்ளது! பாரத விடுதலைப் போரில் பங்கெடுத்து மிக்க முரண்பாடும், பிரச்சனைக்குரிய வீர சாவர்க்கரை அரவிந்தன் தனது குருவாகப் போற்றுவது அவரது பிறப்புரிமை! ஆகவே அரவிந்தன் மகா அலெக்ஸாண்டரை வீர சாவர்க்கர் கண்கள் மூலமாகவே ஆராய்வதும் தவறில்லை! பெரும்பான்மையான உலக வரலாற்று நூல்கள், அறிவுக் களஞ்சியங்கள் [Encyclopaedia] யாவும் அவரை “மகா அலெஸாண்டர்” என்று குறிப்பிடும் போது, வீர சாவர்க்கரின் சீடர் அவரைச் “சாதா அலெக்ஸாண்டர்” என்று கீழே தள்ளுவதை நான் எதிர்க்கப் போவதில்லை.

அலெக்ஸாண்டர் இந்தியப் போரில் புருஷோத்தமனிடம் தோற்று ஓடவில்லை என்பது என் உறுதியான கருத்து! புளுடார்க் கூற்றின்படி இந்தியாவில் அவர் நுழையும் போது, கிரேக்கப் படையினர் 120,000 நபர் என்றிருந்தாலும், அவர்களுள் 35,000 நபரே போரிடும் தகுதியுள்ளவர் என்று அறியப் படுகிறது. மற்றவர் யாவரும் உதவி ஆட்கள், மருத்துவ உதவியாளர், விஞ்ஞானிகள், வரைபட வல்லுநர், வரலாற்றுப் பதிவாளர், ஜோதிடர், பெண்கள், குழந்தைகள் என்றும் தெரிகிறது. புருஷோத்தமனின் வல்லமை கொண்ட யானைப் படைகளைக் காட்டிலும், கிரேக்க படையினர் பயன்படுத்திய, பாய்ந்து செல்லும் குதிரைப் படைகளே அலெக்ஸாண்டரின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. பின்னால் இந்தியாவின் மீது பலமுறை படையெடுத்த முகலாயர் வெற்றிக்கும் அவரது குதிரைப் படைகளே காரணம் என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை. அந்தப் போரின் முடிவில் வேனிற் கால அடைமழையில் செல்ல மறுத்த கிரேக்கப் படையினர் சலித்துப் போய்த் திரும்பிச் செல்ல அலெக்ஸாண்டரை மிகவும் வற்புறுத்தினர். கி.மு. 326 ஜூன் மாதம் ஜீலம் [ஹைடபெஸ்] நதிக்கரையில் [on the Bank of Hydapes] செய்த கடைசிப் பெரும் போருக்குப் பிறகு, அலெக்ஸாண்டர் இரண்டு நகரங்களைப் [Alexandria Nicaea and Bucephala] படைத்துப் பெயரிட்டதாக அறியப் படுகிறது.

பின்னர் ஹைடபெஸ்ஸில் 12 தெய்வப் பீடங்களையும், 12 ஒலிம்பிக் தெய்வங்களையும் [12 Altars & 12 Olympian Gods] அலெக்ஸாண்டர் நட்டதாக புளுடார்க் வரலாற்று நூலில் உள்ளது. அங்கிருந்து திரும்பிச் செல்கையில் அலெக்ஸாண்டர் தன் படையினரை இரண்டாகப் பிரித்து, ஒன்று தரை வழியாகவும், மற்றொன்று நதி மூலமாகவும், கடல் வழியாகவும் [படத்தைப் பார்க்கவும்] சென்றதாகத் தெரிகிறது. ஜீலம் நதிக்கரையில் அலெக்ஸாண்டர் தன் ஆயிரக் கணக்கான தொழில் வல்லுநரைக் கொண்டு 800-1000 படகுகள்/கப்பல்கள் கட்டிச் சிந்துநதி வழியாகக் கடலை அடைந்து மீண்டதாக அறியப் படுகிறது. புஷோத்தமனிடம் தோற்று ஓடும் ஆயிரக் கணக்கான அலெக்ஸாண்டர் படையினர் தப்பிச் செல்ல தமது குதிரைகளை ஓட்டுவார்களா அல்லது காலத்தை விரையம் செய்து நூற்றுக் கணக்கான படகு, கப்பல் கட்டிக் கொண்டிருப்பார்களா?

******************

jayabarat@tnt21.com [Oct 19, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா