சிறப்புச் செய்திகள்-3 அல்லது குருட்டுத்தனக் கட்டுடைப்பு

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

வஹ்ஹாபி


சென்றவாரம் (12.10.2006) திண்ணையின் அரசியலும் சமூகமும் பகுதியில் இடம் பெற்ற குலாம் ரஸூலின் ‘திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள் …’ என்ற கட்டுரை, திண்ணையின் முஸ்லிம் வாசகர்களுக்கு வியப்பையோ சினத்தையோ அல்லது இரண்டையுமோ ஏற்படுத்தியிருக்கலாம்.

எனக்கு ஏற்படுத்தவில்லை!

யானையைத் தடவிப் பார்த்து, தமக்குத் தோன்றியவாறு கூறிய குருடர்களைப் பற்றிப் படித்தபோது, யாருக்காவது வியப்போ சினமோ ஏற்பட்டதுண்டா?

இனி, குருட்டுத்தனமான சங்கதிகளை ஒவ்வொன்றாய்க் கட்டுடைக்கலாம்:

1. “இமாம் அபூபக்கரின் காலத்தில் இம்முயற்சி துவங்கி சைதுஇப்துதாபித் என்ற குர்ஆன் தலைமை எழுத்தாளாரின் முன்முயற்சியில் மனனம் செய்யப்பட்ட நபித்தோழர்களின் வசனங்கள் அவர்களின் முன்னிலையிலேயே உறுதி செய்யப்பட்டு தொகுக்கப்பட்டு முதல் கலீ•பா அபூபக்கர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்தம் மரணத்திற்கு பிறகு மகளாரும் நபிமுகமதுவின் மனைவியுமான ஹப்சாவிடம் இப்பிரதி பாதுகாக்கப்பட்டு வந்தது”
என்று கூறுவது யார் தெரிகிறதா? அன்னை ஹஃப்ஸா யாருடைய மகள் என்று கூடத் தெரியாத ‘குர்ஆனை வரலாறு சார்ந்து அறிவு ரீதியாக அணுகு’வதாகப் பீற்றிக் கொள்ளும் குலாம்தான்.

அன்னை ஹஃப்ஸா, இரண்டாவது கலீஃபா உமர் அவர்களின் மகளாவார்; முதலாவது கலீஃபா அபூபக்ரு அவர்களின் மகளல்லர். குர் ஆனின் தொகுப்பு குறித்த வரலாற்றுச் சான்றுகளை[சுட்டி-1]ப் படித்துப் பார்த்து, அவற்றை விளங்கி, பின்னரே எழுதத் துணிய வேண்டும். இல்லையெனில், இழுக்குதான்.

2. “ஒலிவடிவம் / எழுத்து வடிவமாகும்போதே ஒரு மாற்றத்திற்குள்ளாகிறது என்பதே முதல் உண்மை.” மிகவும் மெனக்கெட்டு இந்த உண்மையைக் கண்டு பிடித்ததுபோல் குறிப்பிடுகிறார் குலாம் – பெயருக்கே உரிய சிறுபிள்ளைத் தனமாய். الله என்ற வரிவடிவத்தை “அல்லாஹ்” என்ற ஒலிவடிவத்தால் மொழியும்போது உண்டாகும் அந்த ‘ஒரு மாற்றம்’ என்னவோ? குலாமுக்கே வெளிச்சம். الله என்ற வரிவடிவத்தை ‘அல்லாஹ்’ என்று சரியாக எழுதத் தெரியாத குலாம்தான் ‘வடிவ மாற்ற’ங்களைப் பற்றிய ‘உண்மை’யை வெளிக்கொணர முயல்கிறார்; வேடிக்கையாயில்லை?

3. “அரபு எழுத்து மரபில் ஸேரு, ஸபரு, பேஷ், ஷத்து, மத்து, நுக்தா உள்ளிட்ட உயிர்க் குறிகள் சார்ந்து இலக்கணமுறைமைகளும், வாக்கிய அமைப்பு, தொகுப்பு, தலைப்பிடுதல் உள்ளிட்டவை பிற்காலத்தில் இணைக்கப்பட்டவையாகும்.” என்று எழுத்து மரபெல்லாம் சொல்ல வருகிறார் குலாம். ‘ஸேரு, ஸபரு, பேஷ்’ ஆகியன அரபுச் சொற்களே அல்ல; மாறாக அவை உருதுச் சொற்கள். எகர-ஏகார ஒலி வடிவங்கள் அரபு மொழியில் இல்லாதவை என்ற அடிப்படை விதி, பாவம் ‘ஸே’ரும் ‘பே’ஷும் சொல்ல – அரபுப் பேராசிரியர் வேடமிட்டு – வந்திருக்கும் குலாமுக்குத் தெரியாததில் வியப்பொன்றுமில்லை.

இணைப்புப் படத்தில் உள்ள இறைவசனங்களை அகர, இகர, உகரக் குறியீடுகள் எவையுமின்றி துல்லியமாகப் படிப்பதற்கு, வேண்டியதெல்லாம் அரபு மொழியறிவே! வேடம் பூண்டு வந்தால் விளங்கி விடாது; வேடம் கலைந்து விடும்.

4. “அல்லாஹ் தன்னையே தான் ஒருபோதும் புகழ்வதாக சொல்வதில்லை” என்று, அல்லாஹ்வின் வேதத்தைக் கரைத்துக் குடித்தவர்போல் அடித்துக் கூறுகிறார் குலாம். விரிவஞ்சி, மிகச் சில மறுப்புகள் மட்டும்: “வானங்களையும் பூமியையும் படைத்து, இருள்களையும் ஒளியையும் உண்டாக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” [006:001]; “எவ்விதக் கோணல் குறைபாட்டையும் கொண்டிராத இவ்வேதத்தைத் தன் அடியார் (முஹம்மது) மீது அருளிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” [018:001]; “இரவிலும் பகலிலும் வானங்களிகளிலும் பூமியிலும் உள்ள அனைத்து(உயிரினங்களு)ம் போற்றும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” [030:018]; “வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. திண்ணமாக அல்லாஹ் தேவையற்றவனும் மிகப் புகழுக்குரியவனுமாவான்.” [031:026]; “புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! … [034:001]; “அகில உலகத்தாரையும் படைத்தாளும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” [037:182].”வானங்களின், பூமியின் மற்றும் அகிலத்தாரின் இறைவனுமான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” [045:036]. இவையன்றி, “தூய்மையானவன்”, “அன்பு நிறைந்தவன்”, “கருணையாளன்”, “மன்னிப்பவன்” போன்ற தன் பண்புப் பெயர்களை அல்லாஹ் தானே எடுத்தியம்பிப் புகழ்ந்து கொள்ளும்/புகழக் கற்பிக்கும் ஏராள வசனங்கள் குர்ஆனில் உள – அவனுடைய சொற்களாகவே.

5. “நபியே நீர் கூறும் என்பதான சிலபகுதி வசனங்களை அல்லாவின் வார்த்தைகளாக சிலர் ஆதாரம் காண்பிக்க கூடும். ஆனால் இவ்வார்த்தைகள் நபிமுகமதுவின் உள்மனக் குரலாகவே வெளிப்பட்டுள்ளது” என்றும் “திருக்குர்ஆன் நபிமுகமதுவின் வார்த்தைகளாகும்” என்றும் “திருக்குர்ஆன் நபிமுகமதுவின் வார்த்தைகள்தான் என்பதற்கு திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்பாத்திகாசூரா சுட்டிக்காட்டுகிறது” என்றும் “எனவே திருக்குர்ஆன் நபிமுகமதுவின் வார்த்தைகளென உறுதிப்பட கூறலாமென்ற கருத்தும் விவாதிக்கப்படுகிறது” என்றும் ‘திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த சில கற்பிதங்களை கட்டுடைக்க’ முயன்று தன் அகக் குருட்டைத் திண்ணையில் வெளிப்படுத்தும் குலாம், முதலில் தன்னுடைய குருட்டுத் தனத்தைக் கட்டுடைத்து விட்டு வர வேண்டும். இதைத்தான் என்னுடைய 24.02.2006 திண்ணைக் கடிதத்தில் [சுட்டி-1] குறிப்பிட்டிருந்தேன்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
மேற்காணும் 1-5 எண்களிட்ட சொற்றொடர்களை முறையே, குருட்டுத் தனம்-1, குருட்டுத் தனம்-2 … என்று படித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

இனி, சிறப்புச் செய்தி-3:
தன்னைச் சுற்றிக் கூடியிருந்த சீடர்களிடம் முஹைதீன் ஆண்டவர் கூறினார்:
“காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் என்னிடம் வந்து ஸலாம் சொல்லி, அன்றைய நாளில் உலகில் என்னென்ன நடக்கும் என்பதை எனக்கு அறிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் என்னிடம் வந்து அந்த ஆண்டில் நிகழவுள்ள நிகழ்ச்சிகளின் அறிக்கையை என்னிடம் சமர்ப்பிக்கின்றது. ஒவ்வொரு மாதமும் வாரமும் நாளும் தம்மிடம் என்னென்ன மறைவான விஷயங்கள், ரகசியங்கள் (இரண்டும் ஒன்றுதானே என்று யாரும் கேட்கக் கூடாது) நடக்கவுள்ளன என்பதை எனக்குத் தெரிவிக்கின்றன.”

கீழக்கரை அப்துல் மஜீத் அரூஸ் மவ்லானா என்பவரால் பிழை திருத்தப் பட்ட, 336 பக்கங்களைக் கொண்ட மவ்லிதுப் புத்தகத்தின் பக்கம் 189இல் 19-21 வரிகளில் மேற்காணும் மாயாஜாலச் சிறப்புச் செய்தி இடம் பெற்றுள்ளது. வெளியீட்டாளர்கள்: ஷாஹுல் ஹமீதிய்யா பதிப்பகம். முகவரி: எம்.ஏ. ஷாஹுல் ஹமீது அண்ட் ஸன்ஸ், 20 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5.

“(நபியே! அவர்களிடம் கூறுவீராக:) அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளனவென்று நான் கூறவில்லையே! மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். நான் ஒரு வானவர் என்றும் உங்களிடம் கூறவில்லை. எனக்கு இறைச் செய்தி மூலம் அறிவிக்கப் படுவதையன்றி எதையும் நான் பின்பற்றுவதில்லை … [006:50].

“மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவற்றை அவனையன்றி வேறெவரும் அறிய முடியாது …” [006:059].

அகிலத்தின் அருட்கொடையாக வந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே வழங்கப் படாத, அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய தனித் தன்மையை முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானிக்குச் சூட்டி அழகு பார்க்கும் ‘மரபுவழிப் பண்பாட்டுக் கலாச்சார’ மவ்லிதை, குலாம் ஏன் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஒற்றைக் காலில் நிற்கிறார் என்று வாசகர்களுக்கு இப்போது விளங்கியிருக்கும்.

பெரிய-கொடிய மிருகங்கள் எல்லாம் மோதிப் பார்த்த மலைதான் குர்ஆன். அதில் மோதிச் செத்துப் போன மிருகங்களின் உக்கிப்போன எலும்புகள் அம்மலையின் அடிவாரத்தில் இன்னும் எஞ்சிக் கிடக்கின்றன. கழிவிடக் கொசுக்களின் கடிக்கெல்லாம், மலை அசைந்து கொடுத்து விடாது.

கட்டுடைப்பு தொடரும், இன்ஷா அல்லாஹ்.
ஃஃஃ
இணைப்பு: 006_059.jpg

to.wahhabi@gmail.com
http://wahhabipage.blogspot.com
__________________________
சுட்டிகள்:
1- http://www.holyquran.net/books/tahreef/12-2.html

2 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=806022413&format=html

Series Navigation

வஹ்ஹாபி

வஹ்ஹாபி