கடிதம் – மலர்மன்னன்: நேர்மையான படைப்பாளியின் தைரியமான கருத்துக்கள்

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

அரவிந்தன் நீலகண்டன்


தமிழ் இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் ஆகியோரை பெருமளவு அறியாதவன் நான். எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் இன்றைய தேதியில் இந்த அறிவுஜீவி வட்டம்-சிறு பத்திரிகைகள் உலகம் இத்யாதி மிகமிக வர்த்தக இலாப சமன்பாடுகளை கணித்து முற்போக்கு வேடங்களுடன் இயங்குகிறது. ஒருவர் முற்போக்கு முகமூடி அணிவது மட்டுமல்ல அவர் அவ்வப்போது தமது சந்தை போட்டியாளர்களை ‘பிற்போக்குவாதி ‘ என திட்டவும் வேண்டும். தானிருக்கும் அணியைப் பொறுத்து எதிராளியை அரசியல்வாதிகள் தோற்குமளவுக்கு திட்டிவிட்டு பின்னர் அரசியல்வாதிகளே கூட்டணி தாவலில் ஒன்றிரண்டு பாடங்கள் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என்கிற மாதிரியாக அதே நபருடன் கூட்டணி அமைத்து முந்தைய கூட்டணியில் பிற்போக்கு வாதத்தையும் இன்னபிற பாசிஸ டிராகன்களையும் கண்டுபிடிக்கிற முற்போக்கு அறிவுஜீவிகள் இயங்கும் இலக்கிய உலகில் ஒருவர் நேர்மையாக எவ்வித அரசியல் சரித்தனமுமின்றி தோன்றியதை தோன்றியவாறு கூறி வாழ, துணைக்கோள்களும் புகழ் பாடும் குழாம்களும் இல்லாமல் வாழ, அசாத்திய மன தைரியம் நேர்மையின் வலிமை தேவை. அத்தகைய நபர்கள் நானறிந்த வகையில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்தாம். ஒருவர் மடிப்பாக்கத்தில் வசிக்கிறார். மற்றொருவர் மலர்மன்னன். இவரது பகவான் பிர்ஸா முண்டா குறித்த நூல் ஒவ்வொரு தேசபக்தனும் படிக்கவேண்டியது. இலக்கிய படைப்பாளி. அதே நேரம் முற்போக்கு அரிதாரம் பூசி அறிவுஜீவி வேடம் போட்டு பிழைக்கத் தெரியாத உண்மையான சமுதாய அக்கறை கொண்ட நல்ல மனிதர். அவரது நடராஜரும் நந்தனாரும் குறித்த கட்டுரை நெகிழவும் சிந்திக்கவும் வைத்தது. ஒரு ஹிந்து தேசியவாதி என்கிற முறையிலும் தமிழன் என்கிற முறையிலும் அவரது கோரிக்கையின் நியாயபலம் ஒவ்வொரு ஹிந்துத்வவாதியையும் சிந்திக்கவும் செயல்படவும் தூண்டவேண்டும். தில்லை வாழ் அந்தணர் குறித்த அவரது ஆதங்கம் நியாயமானது. ஆனால் முழுக்க முழுக்க ஆதிக்க சக்திகளால் துண்டுப்படுத்தப்பட்டும், மதமாற்றப்பட்டும் வரும் ஒரு சமுதாயம் எந்த அளவுக்கு போர்க்கால அடிப்படையில் தீவிர சமுதாய சீர்திருத்தத்தை ஏற்படுத்திட முடியும் ? ஹிந்து தேசியவாத அமைப்புகள் அனைத்து பிரிவினரும் அர்ச்சகராக அமைப்பு ரீதியான முதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. நந்தனார் சிலை தில்லையில் எழ ஹிந்து ஆலயங்கள் நிர்வாகம் ஹிந்துத்வ அமைப்புகளின் கைகளில் வரவேண்டும்.சடங்கு சம்பிரதாயங்களுக்கு அப்பால் ஹிந்து சமுதாயத்தின் நலிந்த பிரிவினரின் மேம்பாடுகளை சிந்திப்பவர்கள் அவர்கள்தாம். அயோத்தி தாசர், அம்பேத்கர், வீர சாவர்க்கர் ஆகிய ஆழ்ந்த சிந்தனையாளர் மற்றும் சமுதாய சீர்திருத்தவாதிகளுக்கும் ஈவேரா போன்ற பிரிட்டிஷ் தாசனாகவும், தலித் விரோதியாகவும் வாழ்ந்த ஒருவருக்குமான வேறுபாடுகளை மிக அழகாக வெளிக்கொண்டு வந்திருக்கும் இம்முதுபெரும் எழுத்தாளருக்கு பணிவான வணக்கங்கள். வெளியிட்ட திண்ணைக்கு நன்றி. ஹிந்துத்வத்துடன் தன்னை வெளிப்படையாக இணைத்துக் கொண்டிருக்கும் இம்மாமனிதர் மிக பல்லாண்டுகள், வேதம் கூறும் காலம் வாழ்ந்து ஹிந்து சமுதாயத்திற்கும் ஹிந்துஸ்தானத்திற்கும் பணியாற்ற வேண்டும்.

-அரவிந்தன் நீலகண்டன்

—-

aravindan.neelakandan@gmail.com>

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்