மூன்றாவது மொழிப்போரும் கீறல் விழுந்த கிலுகிலுப்பைகளும்

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

குட்டுவன்


தமிழகத்தின் ஞானக் கோணிகள் எழுத்துக்களால்

இன்று நிறைந்து கொண்டிருக்கின்றன. பலவற்றை

எழுதி எதையும் சாதிக்க இயலாதவர்கள் எல்லோரும்

தமிழகத்திலே தற்போது இராமதாசு மற்றும் திருமாவளவன்

பக்கம் திரும்பி கரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு வகையில் இது மிக நல்லதே. கோபாலபுரம் பக்கம்,

அதைக் கொஞ்சம் விட்டால் கலிங்கப் பட்டி பக்கம் தங்கள்

தமிழ் சார்ந்த கேள்விகளைக் காட்டி சாகசம் செய்து

கொண்டிருந்தவர்களை இன்று தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் (த.பா.க)

ஈர்த்திருக்கிறது என்பது நோக்கத் தக்கது.

திரைப்படங்களுக்கு தமிழிலே பெயர் சூட்டுங்கள்

என்றதோடு கடைகள் முதல் வழக்கு மன்றங்கள் வரை

அனைத்தும் தமிழால் நிறைய வேண்டும் என்ற பட்டியலை

இட்டு த.பா.க தமது கருத்தை ஏறத்தாழ 7/8 மாதங்களாக

பரப்பி வருகிறது.

அவற்றுள், வழக்கம் போல, திரைப்படத்துக்குப் பெயர்

சூட்டுதல் என்ற சேதி மட்டுமே, மற்ற எல்லாவற்றையும் விட

தமிழக மக்களைச் சென்று சேர்ந்துள்ளது. அதை மட்டும்

வைத்துக் கொண்டே ஞானக் கோணிகளும் நிரம்பி வழிகின்றன.

இந்தக் கோணிகள் எவற்றால் நிரம்புகின்றன என்று

பார்த்தால் நமக்கு வியப்பாகிறது.

கோரிக்கை என்ன ? ‘திரைப்படங்களுக்குப் பெயரை

தமிழில் வையுங்கள் ‘ என்பதுதான்! இந்தக் கோரிக்கை

ஏற்கப் படாவிடில் போராடுவோம் என்பது த.பா.கவின்

அறிவிக்கை.

இதற்காக இராமதாசையும், திருமாவையும்

கண்டிப்பதுவும், அவர்களை கரித்துக் கொட்டுவதையும்

தொழிலாகக் கொள்வது தேவையா ?

இராமதாசின் சில பல அரசியல் நிலைப்பாடுகள்

அவர் மீது கறையை ஏற்படுத்தியிருக்கலாம் பலருக்கு.

அப்படிக் குறைபட்டுக் கொண்டோரில் யாரும் அவருக்கு

வாக்களிப்பவர்கள் இல்லை என்பதும் வேறு விடயம்.

இராமதாசும், திருமாவும் த.பா.க சார்பில் நடத்தப்படும்

தமிழ்ப் போராட்டம் தமது நலத்துக்காக நடத்திக்

கொள்வதாக இங்கே கூட சிலர் கருத்து சொல்வதோடு,

அவர்களின் நோக்கத்திற்கும் ஒரு களங்கத்தைக்

கற்பிக்க முயல்கிறார்கள்.

தமிழ்ப் பணி ஒன்றனை செவ்வனே செய்து அதனால்

அவர்கள் பெயர் பெற்றால் நல்லதுதானே ?

இசைக் கச்சேரிகளில், தமிழ் நாவில் வந்து விடக்கூடாது

என்ற கங்கணம் கட்டிக் கொண்ட இசைமேடைகள்

நிறைந்த தமிழ்நாட்டில், அண்ணாமலை அரசருக்குப்

பின்னர் இராமதாசுதான் தமிழிசை வளர்ச்சிக்கு

முயற்சியெடுத்து ஒரு கழகம் அமைத்திருக்கிறார்

ஈராண்டுகள் முன்னர். அது தற்போது மெல்லத் தவழ

ஆரம்பித்திருக்கிறது.

இராமதாசின் திரைப்படங்களுக்கு பெயர் சூட்டுதல்

கோரிக்கையை எதிர்ப்பவர்களில் எத்தனை பேர்,

சமக்கிருதம், தெலுங்குப் பாடல்கள் மட்டுமே நிறைந்த

இசை மேடைகளில், தமிழ் ஈர்க்குச்சியாகக் கூட

நுழைய முடியாமல் கிடக்கும் நிலைக்காக வருந்தியவர்கள் ?

அப்படி யாரேனும் இருந்தால், அவர்களுக்கு

இராமதாசின் நிலைப்பாடை பற்றிக் கருத்துக் கூறவோ

அல்லது விமர்சனம் செய்யவோ நிறைய அருகதை இருப்பதாகக்

கருதலாம்! அப்படி யில்லாதவர்களின் கருத்துக்கள்

கீறல் விழுந்த கிலுகிலுப்பை வகையில்தான் சேரும்.

திருமாவளவன் அண்மையக் காலத்தில் அவர் இயக்கத்தைச்

சார்ந்த பத்தாயிரம் பேருக்கு தமிழில் பெயரைச் சூட்டி விடும் முன்

தன் தந்தைக்கும் தமிழ்ப் பெயர் சூட்டியவர்.

ஆக, திருமாவும், இராமதாசும் தமிழ்ப் பணிகளில்

மும்முரமாக இறங்குவதற்கு முன் இவர்களின் தமிழ்

நோக்கங்களில் களங்கம் இல்லை என்பதைத்

தங்கள் செயல்களில் நிறுவி விட்டுத்தான் களத்தில்

இறங்கியிருக்கிறார்கள்.

அரசியல் களத்தில் அவர்கள் நிலைப்பாட்டைப் பற்றி

தமிழ்க் களத்தில் கவலைப் படவேண்டிய அவசியம்

ஏதும் இருக்கவில்லை.

இவர்கள் அறிவிக்கையின் எதிரொலி எப்படியிருக்கின்றது ?

உதயா, சூர்யா, செமினி என்றெல்லாம் பிற மொழி மாநிலங்களில்

அந்தந்த மொழிக்கேற்றவாறு பெயர் வைத்த சன் தொலைக்காட்சி

நிறுவனத்தார் தமிழ் நாட்டில் மட்டும் ‘சன் – டிவி ‘,

‘சன் – மியூசிக் ‘, ‘கேடிவி ‘, ‘சன் நியூசு ‘ என்றெல்லாம்

பெயரிட்டிருக்கிற முரண்பாடு எல்லோரையும்

கேள்வி கேட்க வைத்திருக்கிறது.

தமிழுக்குத் துளி கூட தொடர்பில்லாத முதல்வரைக் கூட

திமுகவினரைப் பார்த்து எள்ளி நகையாட வைத்திருக்கிறது.

1965ல் மொழிப்போரின் தளபதிகளுக்கு இந்த ஏளனம்

தேவைதான் போலும்! திரைப்படங்களுக்கு பெயரிடுவதைப்

பற்றிய கருத்தைக் கூட திமுக தலைவரினால் பல நாள்கள்

சொல்ல முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியது. அப்படிச்

சொன்ன போது அதுவும் தமிழுக்கு ஏற்புடையதாக இல்லை.

ஆக, திமுக அதிகம் சொந்தம் கொண்டாடிய தமிழ்ப் பற்று

அதனால் அதிகம் முடியாதபோது பிறரால் எடுத்துக் கொள்ளப்

பட்டிருக்கிறது என்பது வரவேற்கத் தக்கது.

இங்கே கூட, அன்புமணி தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில்

எழுதுகிறார் கடிதம் என்று கருத்து வந்தது. இது மட்டுமல்ல

சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியின் படை பரிவாரங்கள்,

பா.ம.க கட்சித் தலைவர் யி.கே மணி யின் பெயரில் G.K என்ற

ஆங்கில முதலெழுத்துக்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டி

எள்ளி நகையாடி நையாண்டி செய்தார்கள். சைக்கிளுக்குத்

தமிழ் தெரியுமா என்று செயலலிதா கேட்டு அவரின்

அணியினரோடு கூத்தடித்து கும்மாளம் போட்டார்கள்.

குட்டிக் கரணம் மட்டும்தான் போடவில்லை; மற்ற எல்லா

நகைப்புகளையும் செய்து ஏளனம் செய்தார்கள்.

இது எதைக் காட்டுகிறது ?

பா.ம.கவினரையும், தமிழ்ப் பெயரிடலை வரவேற்பவர்களையும்

தமிழ் என்று பேச தகுதியற்றவர்கள் என்றா காட்டுகிறது ?

அப்படி அல்ல. தமிழ் கெட்டுப் போய் கிடக்கும் இந்த

மோசமான நிலையையும், ஆளுவோர்களின்

அறிவின்மையையும்தான் காட்டுகிறது.

மொரீசியசில் இருக்கும் தமிழர்களுக்கு தமிழ் பேசக் கூடத்

தெரியாது. அவர்கள் தமிழ் வளர்க்க வேண்டும் என்று

முன் வந்தால் அவர்களை ஏளனம் செய்வோமா ?

தமிழ் குறைந்து போய் விட்டது; போய்க் கொண்டே யிருக்கிறது;

அதுதானே நிலை ? அதனால்தானே அதனைக் காக்க வேண்டும்

என்று முன் வருகிறார்கள் ? அவர்களைப் பிடித்து நக்கலும்

நையாண்டியும் செய்வது எவ்வகையில் அறிவுடைமையாகும் ?

அதுவும் இதனை ஒரு மாநிலத்தை ஆளுவோர் செய்யலாமா ?

அப்படிச் செய்தால் அவர்கள் நோக்கம் என்ன ?

ஆள்வோர்களும், பொறுப்பற்ற ஞானக் கோணிகளும்

செய்யும் எதிர்-பரப்பீடுகள் தமிழகத் தமிழையும் மொரீசியசு

நிலைக்குத் தள்ளிவிடும் என்பதில் அய்யம் வேண்டாம்.

திருமா தன் ஆங்கிலமாக்கிய புத்தகங்களைத்தான்

முதல்வரிடம் கொடுத்தார் என்று ஒரு கருத்து வந்தது.

அவர் சரியாகத்தான் செய்திருக்கிறார். அந்த அம்மையார்

என்றாவது தமிழில் பேசி யாரேனும் கேட்டிருக்கிறார்களா ?

எனக்குத் தெரிந்தவரை அவர் ஆங்கிலத்தில் பேசித்தான்

கேட்டிருக்கிறேன். அப்புறம் அவர்கிட்ட ஆங்கில நூல்களைக்

கொடுத்தார் என்று சுளுக்கிக் கொண்டால் அது எப்படி

சரியாகும் ? யார் யாருக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ

அதைத்தான் திருமா கொடுத்திருக்கிறார் என்று எண்ணுவது

பொருத்தமாகும்.

அரசியலுக்கும், த.பா.கவினருக்கும் அப்பாற்பட்டு சிலவற்றை

நாம் சிந்திக்க வேண்டியதிருக்கிறது.

வளர்ந்து வரும் விஞ்ஞான வேகத்தில் தமிழ்ப் பெயர்கள் தோற்றுப்

போய்க் கொண்டிருக்கின்றன. யாருக்கும் ‘DVD Player ‘ க்கும்

‘Digital Video Camera ‘ வுக்கும் உருப்படியான

தமிழ் தெரியாது. எங்காவது யாராவது ஒருவர் கண்டு பிடித்து

அதை, தான் மட்டும் பயன்படுத்திக் கொண்டிருந்தால்தான்

உண்டு.

இராமதாசையும் திருமாவையும் கண்டிக்கும் முன்னர்,

அவர்களைக் கரித்துக் கொட்டுவதற்கு முன்னர்,

காலகாலமாக இருந்து வந்த தமிழ் என்ன வாயிற்று

என்று எண்ண வேண்டும்.

வண்ணம், நிறம் என்று தமிழ் இருக்க ‘கலர் ‘ என்று

அழைப்பது ஏன் ?

கோந்து, பிசின், பசை என்று தமிழ் இருக்க ‘கம் ‘ என்று

அழைப்பது ஏன் ?

மனைவி, கணவன் என்று பெயரிருக்க ‘ஒய்ப் ‘, ‘அசுபண்டு ‘

என்று சொல்லிக் கொள்வது ஏன் ?

பிள்ளைகளைக் கூட ‘டாட்டர் ‘, ‘சன் ‘ என்று

சொல்லிக் கொள்கிறோம்.

சரி அதைக் கூட விடுங்கள்;

தண்ணீரைக் கூட ‘வாட்டர் ‘ என்கிறோம்.

அதைக் கொண்டு வரும் தம்ளரை அது

கண்ணாடியாக இல்லாமல் வெண்கலம் அல்லது

இருப்பு, அல்லது வெள்ளித் தம்ளரே ஆனாலும்

அதற்கும் நாம் ‘கிளாசு ‘ என்றுதான் சொல்கிறோம்.

(தம்ளர் என்பதே தமிழ்தானா என்று தேடிப்பார்க்க வேண்டும்).

வெட்கமாக இல்லை ?

எசு.வி.சேகர் ஒரு நாடகத்தில் நையாண்டி செய்வார்;

‘டாக்டர், உட்காருர இடத்தில கட்டி ‘ – ‘சரி தள்ளி

உக்காந்துக்க ‘ என்று ஒரு நகை வரும்.

மருத்துவரிடம் போய் நாம் என்ன சொல்கிறோம்;

‘டாக்டர் பட்டக்சில ஒரு கட்டி ‘ –

அய்யா, பட்டக்சுக்கு தமிழ் இல்லையா ?

படித்த நாம் யாரையாவது திட்ட வேண்டும் என்றால்

வெகு எளிமையாக ‘ass hole ‘ என்று சொல்லி விடுகிறோம்.

ஆனால் ஆசன ஓட்டை என்பதனை அறவே வெறுக்கின்றோம்.

இது இடக்கர் அடக்கல் அல்ல. நமது கோமாளித்தனம்.

திரைப்படங்களில் கூட ‘bastard ‘ என்றால் அது அனுமதிக்கப்

படும். அதுவும் அழுத்தி – ஒரு பாணியாகச் சொன்னால்

அது விரும்பப்படும். ஆனால் ‘தே.. ‘ என்று சொல்வது

போல் வாயசைப்புதான் இருக்கும்.

பேருந்து என்று சொல்லவே மாட்டோம்.

தஞ்சாவூர் என்றோ தூத்துக்குடி என்றோ பேச மாட்டோம்.

டேஞ்சூரும் டூட்டிக்குரினும் தான் நமக்கு வாயிலவரும்.

ஏன்னா அதுக்கு தமிழ் இல்லை பாருங்கள்!!

அவ்வளவு ஏன் படத்துக்குப் போவதைக் கூட

‘film ‘ க்குப் போலாமா ? cinema – உக்குப் போலாமா

என்றுதான் பேசுகிறோம்.

ஆனால், நம்மில் பலர் நாணங்கெட்டத்தனமாய்

இராமதாசையும் திருமாவளவனையும் அவர்கள்

செய்யும் தமிழ்ப் பணிகளுக்காக ஏளனம் செய்கிறோம்;

அவர்கள் நோக்கத்திற்கும் நம்மில் பலரால் களங்கம்

கற்பிக்க முடிகிறது என்றால் நம்மை எந்தக் கணக்கில்

சேர்ப்பது ?

அடுத்ததாக, திரைப்படங்களுக்குத் தமிழ்ப் பெயர்

வைக்கக் கோரிக்கையாகச் சொல்லலாமே தவிர

கட்டாயப் படுத்தக் கூடாது என்று சொல்வார்களும் உண்டு.

திருட்டுப் படவட்டுகளைப் பார்க்காதீர்கள் என்று

திரைத்துறையினர் கோரிக்கை வைத்தனர் பல ஆண்டுகளாக!

திருட்டுப் படவட்டுகளை விற்காதீர்கள் என்றும்

கோரிக்கை வைத்தனர். கேட்டோமா ?

இல்லை, அம்மையார் குண்டர் சட்டத்தில் பிடித்து

உள்ளே போடுவோம் என்றவுடன் வாலைச் சுருட்டிக்

கொண்டு பொதுமக்களாகிய நாம் அடங்கினோமா இல்லையா ?

ஆனால், இதே திரைத்துறையினர் தமிழ்ப் பெயர் சூட்டுதலை

மட்டும், கோரிக்கையாக மட்டும் இருக்க வேண்டும் என்று

எதிர்பார்ப்பது என்ன நியாயம் ?

இவ்வளவு ஏன் ? இணையத் தளங்கள் பலவும் பல

வித குறியீடுகளில் உள்ளன. போதாதற்கு ஒருங்குறி(unicode)

என்ற பெயரில் அரைக்குறியீடு ஒன்று அசிங்கமாக வாலாட்டிக்

கொண்டு வேகமாகத் திரிகிறது. இது குறித்த கவலை

இணையத்தில் புழங்கும் பலருக்கும் உண்டு. ஆனால்,

தினகரன், தினமலர், தினமணி என்று எல்லாமே ஒவ்வொரு

குறியீடு. இவையெல்லாம் கோரிக்கையில் தீர்ந்து விடுமா ?

மிகையாக பீற்றிக் கொண்டிருந்த சூரியா என்ற

நெறியாளுனர் தம்மைத் திருத்திக் கொண்டிருக்கிறார்

என்பதே இவர்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.

திரைப்படத்துறை என்பது தமிழகத்தின் முக்கியமான மிடையம்.

மதம் பிடித்த களிர் போல அது அள்ளி வரும் மொழிமாசு

சற்றேனும் குறையுமாயின் அது பெரும் பயனைத் தரும்.

அங்கே இவர்கள் இப்பணியைத் துவங்கி இருப்பது பலருக்கும்

விழிப்பைத் தரும். ஒவ்வொரு துறையாக இது தொடர வேண்டும்.

தினமும் வெளிவரும் ஆயிரக்கணக்கான உலகக் கண்டுபிடிப்புகளுக்கு உடனே தமிழ் கிடைக்காவிடிலும்,

காலகாலமாக இருக்கும் மரமும், செடியும் கொடியும்

சோறும் தண்ணியும், கலையும் பண்பும், தாயும் பிள்ளையும்,

மண்ணும் விண்ணும், காற்றும் நெருப்பும், தூசும் துப்பும்,

ஆறும் குளமும், மலரும் மணமுமாவது பிழைக்கட்டும்.

வறட்டு ஞானம் காட்டி, அதிலும் மண்ணை அள்ளிப் போடும்

வஞ்சனையைச் செய்யாதிருக்க வேண்டிய நாகரிகத்தையும்

நாணயத்தையும் சற்று நாம் பேணுவோம்.

அப்படிப் பேணாவிடில், யாரும் நக்கலுக்கும் நையாண்டிக்கும்

களிமண் கோணிகளுக்கும் அஞ்சியோ, அண்டியோ

இன்றோ நாளையோ இந்த நேர்மையான பணியினை

செய்யாமல் விடமாட்டார்கள் என்பதனை உணர்ந்து

கொள்ளவாவது செய்வோம்.

பழ.நெடுமாறன், இராமதாசு, திருமா போன்றோர்

நேர்மையான தமிழ்க் கவலையோடு களம் இறங்கி

இதனை மூன்றாவது மொழிப் போர் என்று அறிவித்து

செயல்படுவது வரவேற்கத் தக்கதாகும். இவர்கள்

பணி வெற்றி பெற வாழ்த்துதல் நமது கடன்.

அன்புடன்

குட்டுவன்

—-

kuttuvan@rediffmail.com

Series Navigation

குட்டுவன்

குட்டுவன்