கடிதம் டிசம்பர் 30, 2004-எஸ். அரவிந்தன் நீல கண்டன்: அருள் செல்வன் கந்த சுவாமி: சலாஹுத்தீன்: ஜோதிர் லதா கிரிஜா

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

சோதிப் பிரகாசம்


திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்!

____

தெற்கு ஆசியாவின் கடற்கரை ஓரங்களில், 26-12-2004 அன்று நிகழ்ந்த கடல் கோளின் விளவான மனித ஓலங்களைப் பற்றி நாம் என்ன சொல்வது,

மூழ்கிடல் ஆயிற்றே!

என்பதைத் தவிர ?

____

எஸ். அரவிந்தன் நீல கண்டன்

திரும்புகின்ற திசைகளில் எல்லாம் எஸ். அரவிந்தன் நீல கண்டனுக்கு மதக் காரர்கள் மட்டும்தான் கண்களில் தட்டுப் படுகிறார்கள்; மனிதர்கள் அல்லர்!

மதங்கள்! எங்கு நோக்கினும் மதங்கள்!

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், முதலிய பலப் பல மதங்கள்; இவற்றைச் சேர்ந்த மதக் காரர்கள்!

இந்த மதங்கள்தாம் மனிதர்களின் அடையாளங்கள்!

வரலாறு என்பது உயிர் வாழ்க்கைப் போராட்டத்தின் வரலாறு அல்ல!

மதங்களின் வரலாறு; மதப் போராட்டங்களின் வரலாறு!

பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் மனத்தில் ஒரு மதத்தைச் சுமந்து கொண்டுதான் பிறக்கிறது; மதத்தில்தான் மனிதர்கள் மூச்சு விடுகிறார்கள்!

மதத்திற்காகத்தான் மனிதர்கள் வேலை தேடிக் கொண்டு அலைகிறார்கள்; மதத்திற்காகத்தான் அவர்கள் உழைக்கிறார்கள்; உற்பத்தி செய்கிறார்கள்; பணத்தையும் சொத்து-சுகங்களையும் சேர்க்கிறார்கள்!

ஏனென்றால், மதத்தைதான் அவர்கள் உண்கிறார்கள்—-உடுக்கிறார்கள்—-உயிர்க்கிறார்கள்!

எதற்காக, மனிதர்கள் காதல் புரிகிறார்கள் ? கலியாணம் செய்து கொள்கிறார்கள் ? காமத்தில் திளைக்கிறார்கள் ?

மதத்திற்காக; மதத்திற்காக மட்டும்தான்!

சமுதாயம் என்பது கூட, இந்துச் சமுதாயம், இஸ்லாமியச் சமுதாயம், கிறிஸ்தவச் சமுதாயம் என ஏதேனும் ஒரு மதத்தின் சமுதாயம்தானே ஒழிய மனிதர்களின் சமுதாயம் அல்ல!

இப்படித்தான் மனிதர்களை எஸ். அரவிந்தன் நீல கண்டன் புரிந்து வைத்துக் கொண்டு இருக்கிறார் என்று நாம் கூறினால், அவரைக் கொச்சைப் படுத்துவதாகத்தான் அது இருந்திட முடியும் என்பதில் அணுவளவும் நமக்கு ஐயம் இல்லை.

ஆனாலும், இப்படி எல்லாம் அவரால் சிந்தித்திட முடிகிறதே, எப்படி ?

எனினும், சிற்றுடைமைச் சிந்தனை என்பது இதுதான் ஆகும்!

‘மூக்கு முட்டச் சோறும் சோம்பலில் கழிப்பதற்குக் கொஞ்சம் ஓய்வும் மாய வாதத்தின் மயக்கமும் காதல் பற்றியும் காமம் பற்றியும் விந்தையான சில சிந்தனைகளும், கூடவே, இவற்றைப் படித்துப் பகிர்ந்து கொள்வதற்குச் சில கதைகளும் கவிதைகளும் இருந்தால் போதும், ஒரு பின்-புதின வாதியாக யாரும் மாறி விடலாம்; தனது வருமானத்தையும் தனது வசதிகளையும் தவிரப் பிற அனைத்தையும் கட்டுடைத்துப் பார்த்தும் கொள்ளலாம்! ‘ என்று ‘ஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மாயங்கள் ‘ என்னும் ஒரு கட்டுரையில் நான் எழுதி இருந்தேன்.

அதுதான் இப் பொழுது என் நினைவுக்கு வருகிறது. ஏனென்றால், மதத்தின் பெயரால் வெறிகளை விதைத்துக் கொண்டு வருபவர்களுக்கும், இந்த மூக்கு முட்டும் சோறுதான் அடிப்படை! வேறு வேலை-வெட்டி எதுவும் அவர்களுக்குத் தேவை இல்லை அல்லவா ?

அதே நேரத்தில், மதங்களின் வரலாறாக மனித வாழ்க்கையின் வரலாற்றினை நோக்குகின்ற ஜமாலனைப் போல்தான் எஸ். அரவிந்தன் நீல கண்டனும் வரலாற்றினை நோக்குகிறார்.

சரியோ தவறோ, எனது நூல்களை அல்ல என்ற போதிலும், எனது கட்டுரைகளையாவது இவர் படித்துப் பார்த்து இருக்கலாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

இந்துக்களின் அறம்

ஹிந்து தர்மமாக எஸ். அரவிந்தன் நீல கண்டன் கருதுகின்ற அறம், எந்த வகையான அறம் என்பது எனக்குத் தெரிய வில்லை. எனினும், தமிழ் மொழியின் மேல் உண்டோ இல்லையோ, பார்சிய மொழியின் மேலாவது இவருக்குப் பற்று இருக்கிறது என்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

அரபிய மொழியையும் இதில் நாம் சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால், ‘ஹிந்து ‘ என்பது ஒரு மேற்கு ஆசிய உச்சரிப்புதான் ஆகும்.

இருப்பவன் என்றும் இல்லாதவன் என்றும்—-முதலாளி-உழைப்பாளி, சிற்றுடைமை-பேருடைமை என்றும்—-ஆண்டைச் சாதி-அடிமைச் சாதி என்றும்—-தங்களுக்குள் பிரிவு பட்டுக் கிடக்கின்ற எல்லா மதக் காரர்களையும் போல்தான், இந்துக்களும் பிரிவு பட்டுக் கிடக்கிறார்கள் என்பதை யாரும் மறுத்து விட முடியாது—-எல்லா மதக் காரர்களும் நம்புகின்ற எல்லாக் கடவுள்களும் கூட!

இதில், இந்துக்களின் அறம் என்பதை ஆதி சங்கரரின் பான்மையில்தான் நான் பார்க்கிறேன்:

மாயப் படல் கீறித் தூய ஞான நாட்டம் பெற்ற பின் யானும், உன்னையும் கண்டேன், காண்டலும், என்னையும் கண்டேன் பிறரையும் கண்டேன்! என்று பட்டினத்து அடிகள் கூறினாரே, (பட்டினத்தார் அல்லர்) அந்தப் பரம் பொருள் முறையான அறம்தான் இந்து மதத்தின் அறம்! இதுதான் மனித இயல்பான அறமும் கூட!

இந்த அறமோ சமன்மை, எனவே, தனி மனித உரிமை, எனவே, கிளைமையான அன்பு, ஆகிய வற்றினை உள்ளடக்கியது!

ஆக,

(1) கடவுளின் பெயரால் சமுதாயத்தில் மூடங்களை விதைத்துக் கடவுள் நம்பிக்கையினை இழிவு படுத்திக் கொண்டு வருகின்ற எவனும் ஓர் இந்து ஆகிட மாட்டான்.

(2) சாதியின் பெயரால் மனிதர்களை மனிதர்கள் இழிவு செய்து கொண்டு வருகின்ற கொடுமைகளை எதிர்த்துப் போரிடுவதற்கு முன் வந்திடாத எவனும் ஓர் இந்து ஆகிட மாட்டான்.

(3) மத நம்பிக்கை என்பது மனிதர்களின் ஆள்வயமான நம்பிக்கை; இந்த நம்பிக்கைக்கும் அரசுக்கும், எனவே, சட்டத்திற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை; எந்த ஒரு மதத்தையும் தழுவிக் கொள்கின்ற உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு; இதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை; என்று மதங்களின் சமன்மை உரிமையினை ஏற்றுக் கொள்பவன் மட்டும்தான் ஓர் இந்து ஆகிட முடியும்.

(4) சமுதாய முறையாக ஆணும் பெண்ணும் சமம் என்பதைச் செயல் முறையாகக் கடை பிடித்திடாத எவரும் ஓர் இந்து ஆகிட முடியாது.

(5) எங்கும் எதிலும் மனித நேயத்தை மட்டும் தங்கள் அளவு கோலாகக் கொண்டு செயல் படுபவர்கள் மட்டும்தாம் இந்துக்கள் ஆவர்.

தமது ‘ஹிந்து தர்மம் ‘ என்ன ? என்பதை விளக்குவதற்கு எஸ். அரவிந்தன் நீல கண்டன் முன் வருவார் என்றால், எனது கருத்துகளைச் செழுமைப் படுத்திக் கொள்கின்ற வாய்ப்பினை எனக்குத் தந்தவர் அவர் ஆவார்.

மார்க்சிய வாதிகளின் அன்பு

மார்க்சியம் என்பது மனித வாதம்; உண்மையான ஆன்மிகம் என்பதும் அதுதான்!

ஆனால், மார்க்சியம் என்றால் என்ன ? என்பதைப் புரிந்து கொள்வதற்குக் கொஞ்சம் கூட முயன்று பார்க்காமல், அது பற்றி எஸ். அரவிந்தன் நீல கண்டன் பேசுவது என்ன வகையான நாணயம் என்பதுதான் எனக்குப் புரிய வில்லை.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சியத்தைப் போதித்துக் கொண்டு வந்து இருக்கின்ற கவிஞர் இன்குலாப்பிற்கு மார்க்சியத்தின் ஆனா, ஆவன்னா கூட தெரியாது; நிழலின் குரலில் மார்க்சியத்தை வசை-பாடி இருக்கின்ற நண்பர் ஜெய மோகனுக்கும் அது தெரியாது.

இதுதான் இந்த நாட்டின் அறிவாண்மை நாணயம்! இந்த அவல நிலையினை உடைத்துக் கொண்டு வெளி வருவதற்கு எஸ். அரவிந்தன் நீல கண்டன் முயலலாமே!

மக்களின் மேல் மார்க்சிய வாதிகளுக்கு அன்பு உண்டு என்பது உண்மைதான் என்ற போதிலும், பசப்புத் தனமான இந்த அன்பு மொழியில் பேசுவதற்கு மார்க்சிய வாதிகள் வெட்கப் படுகிறார்கள் என்பதுதான் அதனையும் விட உண்மை!

ஏனென்றால், மற்றவர்களை—-தெரிந்தவர்களையாவது—-நேசிக்காத மனிதர்கள் என்று உலகில் யாரும் இல்லை.

சமன்மை, தனி மனித உரிமை, முதலிய பொது நாயகப் பண்புகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் குற்றம் புரிபவர்கள் என்பதால், அவர்களைப் பற்றிப் பேசுவதை இங்கே நாம் தவிர்த்து விடலாம்.

மற்ற படி, நம்பிட முடியாத ஒரு கிண்டலாக எஸ். அரவிந்தன் நீல கண்டன் கூறுவது போல, அடிப்படையான மார்க்சியக் கருத்தாக்கங்களுக்கும் மார்க்சின் ஒரு சில கருத்துகளுக்கும் இடையே சில வேறுபாடுகள் உண்டு என்பதுதான் எனது கருத்து.

ஏனென்றால், மார்க்சியம் என்பது கார்ல் மார்க்சின் சொந்தக் கருத்தாக்கம் அல்ல; காலம் காலமாகச் சமுதாயத்தில் வளர்ந்து கொண்டு வந்து இருக்கின்ற சிந்தனைகளின் விளைவு அது; சமுதாய வளர்ச்சியின் விளைவுதான் அது! கார்ல் மார்க்ஸ் என்று ஒருவர் பிறந்து இருக்கவே இல்லை என்றாலும் கூட, உலகில் அவரது கருத்துகள் தோன்றாமல் இருந்து இருக்க முடியாது. எனினும் இது நிற்க!

மார்க்சியத்தைத் தெரிந்து கொள்ளுகின்ற ஆர்வம் உண்மையிலேயே எஸ். அரவிந்தன் நீல கண்டன் அவர்களுக்கு உண்டு என்றால், எனது ‘வரலாற்றின் முரண் இயக்கம் ‘ நிச்சயம் அவருக்கு உதவும்; தமிழகத்து நூலகங்களிலும் இது கிடைக்கும்.

வாயில் மலம்

கடந்த பொதுத் தேர்தலில் பா. ஜ. க. தோல்வி அடைந்து விட்டது என்பதற்காக எஸ். அரவிந்தன் நீல கண்டன் எவ்வளவு வேதனை அடைந்து இருந்து இருந்தார் என்பது நமக்குத் தெரியும். இவருக்காகவேனும் அந்தக் கட்சி வெற்றி பெற்று இருக்கக் கூடாதா ? என்று கூட அப் பொழுது நான் எண்ணினேன்.

ஆனால், திண்ணியத்தில் தலித் ஒருவரின் வாயில் மலத்தைத் திணித்தார்களே, ஒரு சில சூத்திரர்கள்! எவ்வளவு பெரிய அவமானம் அது; இழிவு அது! மனித இனத்தின் வாயில் திணிக்கப் பட்ட மலம் அல்லவா, அந்த மலம்!

இதற்காக, ஒரு நொடி நேரமாவது எஸ். அரவிந்தன் நீல கண்டன் வேதனை அடைந்து இருப்பாரா ? அவமானம் அடைந்தாரா ? ஒரு வரியாவது எழுதினாரா ?

ஏன், அந்த மனிதர் ஓர் இந்து இல்லையா ? ஓர் இந்துவின் வாயில் தனது மலத்தை இன்னும் ஓர் இந்து திணிக்கலாமா ?

எஸ். அரவிந்தன் நீல கண்டனைப் போன்ற ஹிந்துக்களுக்கு இது பற்றி எல்லாம் எந்தக் கவலையும் இருந்திட முடியாது என்பது உண்மைதான்; ஆனால், இந்துக்களுக்கு உண்டு.

ஏனென்றால், பரம் பொருள் நிலையில் மட்டும் அல்ல, சமுதாய நிலையிலும் எல்லோரும் சமம் என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஒவ்வொரு வேளையும் உணவினை அள்ளி வாயில் போட்டுக் கொள்கின்ற பொழுது எல்லாம் இந்த மலத் திணிப்பினை எஸ். அரவிந்தன் நீல கண்டன் நினைத்துப் பார்த்துக் கொள்ளட்டும்! கூடவே, இவர் உண்ணுகின்ற பொழுது, உண்ண உணவு இல்லாமல் பட்டினி கிடக்கின்ற இந்துக்கள் எத்தனை பேர் என்பதையும் இவர் எண்ணிப் பார்த்துக் கொள்ளட்டும்! அதன் பின்னர் இவர் எழுதட்டும்—-தமது ஹிந்து தர்மத்தைப் பற்றி; மார்க்சியத்தைப் பற்றி; கூடவே, ஒற்றைப் பார்வையையும் இரட்டைப் பார்வையையும் பற்றி!

ஆனால், மூளை நோகாத ஞானம் எல்லாம் இதற்குப் பயன் படாது; கார்ல் பாப்பரின் ‘பொய்ப்பிக்கும் இயன்மை ‘ என்பதைப் ‘பொய்ப்பித்தல் ‘ என்று இவர் புரிந்து கொள்கின்ற புத்தி சாலித் தனமும் உதவாது!

ஆரியர் படை எடுப்பு

படை எடுத்துக் கொண்டு ஆரியர்கள் வந்தார்களாம்; அந்தப் படை எடுப்பினைக் கடுமையாகப் பாரதத் தேசிய வாதிகள் எதிர்த்தார்களாம்!

என்ன இது, புதுக் கரடி!

ஆரியர் என்று ஒரு பந்தவமோ அல்லது மொழி இனமோ உலகில் எங்கும் எப் பொழுதும் இருந்தது இல்லை. இது பற்றித் தெரிந்து கொள்கின்ற உண்மையான தேடல் எஸ். அரவிந்தன் நீல கண்டனுக்கு இருக்கும் என்றால், எனது திரவிடர், ஆரியர் வரலாறுகள் நிச்சயம் அவருக்கு உதவிட முடியும். ஆங்கில நூல்களைப் படிப்பதுதான் பெருமை என்று இவர் கருதுவார் என்றால், பி. :டி. சீனிவாசனாரின் நூல்களை இவர் படித்துப் பார்த்தும் கொள்ளலாம்.

தங்கள் சமுதாயத்தின் வளர்ச்சிக் குறைவுக்கான காரணங்களைத் தங்களுக்குள் தேடாமல், முற்றிலும் வெளியில் தேடிக் கொண்டு வந்து இருந்த திரவிடச் சிந்தனையாளர்களுக்கு, இந்த ‘ஆரியர் ‘ கதை மிகவும் பிடித்துப் போயிற்று. அதே நேரத்தில், ஆரியர் என்று தங்களை அழைத்துக் கொண்டு வீண் பெருமைகளில் மிதந்து கொண்டு வந்து இருந்த ஒரு கூட்டமும் நாட்டில் உருவாகி இருந்தது இவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் போயிற்று!

இப்படியாகத்தான், ஆரியர்களை வசை-பாடித் தங்களைத் தலைவர்கள் முன்னிலைப் படுத்திக் கொள்கின்ற ஓர் அரசியல் உத்தி தமிழகத்தில் உருவாகிட நேர்ந்து இருந்தது.

எனினும், விரிக்கில் பெருகும் என்பதால், சுருக்கமாக இதனை ஈண்டு நான் முடித்துக் கொள்வதுதான் பொருத்தம்!

ஆரியர் பந்தவம் என்பது ஈரோப்பியர்தம் ஆய்வு அகந்தையின் விளைவுதானே ஒழிய வரலாற்று மெய்மை அல்ல; எனவே, ஆரியர் படை எடுப்பு என்பதும் உண்மை அல்ல. ஆனால், பாவம், பரமணர்கள்! ஆரியர் என்று தங்களை இவர்கள் கருதிக் கொண்டு வந்து இருந்ததால், இல்லாத ஆரியர் மீதான அனைத்து வசைகளையும் இவர்கள் சுமந்திட நேர்ந்து இருந்தது.

பாரதத் தேசம்

தேசம் என்றால் என்ன ? என்னும் ஒரு கேள்வியை எழுப்பிப் பார்க்கின்ற எந்த ஒரு வாய்ப்பும் எஸ். அரவிந்தன் நீல கண்டனின் சிந்தனையில் இல்லை போலும்! எனவேதான், பாரதத் தேசம் பற்றிய, அதுவும், அந்தக் காலத்துத் தேசம் பற்றிய கற்பனைகளை இவர் வளர்த்துக் கொண்டு வந்திட நேர்ந்து இருக்கிறது.

ஏனென்றால், எஸ். அரவிந்தன் நீல கண்டனின் ‘மத மொழி ‘யில், சமுதாயம் என்றால் ஒரு மதத்தின் சமுதாயம்; வாழ்க்கை என்றால் ஒரு மதத்தின் வாழ்க்கை; பொருளாதாரம் என்றால் ஒரு மதத்தின் பொருளாதாரம்; சட்டம் என்றால் ஒரு மதத்தின் சட்டம்; காதல் என்றால் கூட அது ஒரு மதத்தின் காதல்தான்! எனவே, தேசம் என்றாலும் அது ஒரு மதத்தின் தேசம்தான்!

ஆனால், முதலாண்மைச் சமுதாயத்தின் தோற்றத்திற்கு முன்னர், உலகில் எங்கும் தேசங்கள் இருந்தது இல்லை என்பதுதான் வரலாறு! ஏனென்றால், முதலாண்மையின் எழுச்சிக்கு முன்னர், உலகில் பேரசுகள் மட்டும்தாம் இருந்தன; சிற்றரசுகளும் இருந்தன; ஆனால், தேசங்கள் இருந்தது இல்லை.

எடுத்துக் காட்டாக, கத்தோலிக்கப் போப்பும் ஸ்பெய்ன், ஃப்ரான்ஸ், இங்கிலாந்து மன்னர்களும் கூட்டாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டு வந்து இருந்த ‘புனித ரோமப் பேரரசின் ‘ ஆதிக்கத்தினை உடைத்துக் கொண்டு எழுச்சி அடைந்து இருந்ததுதான் இங்கிலாந்தின் தேசியம்!

ஆங்கில மொழியின் பரப்பிற்குள் உருவாகி வந்து இருந்த ஒரு தேசியம் அது; போப்புக்கும், அதாவது, மதத்திற்கும் அரசுக்கும் இடையே இருந்து கொண்டு வந்து இருந்த பந்தங்களை அறுத்து எறிந்து இருந்த ஒரு தேசியம் அது; ஆங்கில மொழியினை அரியணையில் ஏற்றி வைத்து இருந்த தேசியமும் அதுதான்! அதற்கு முன்னர் இங்கிலாந்தில் ஆட்சி மொழியாக அமர்ந்து இருந்ததோ லத்தின் மொழி!

ஆனால், எதிர் நிலைக் கிறிஸ்தவத்தின் எழுச்சி அல்ல இதற்குக் காரணம்; முதலாண்மை உற்பத்தி முறையின் வளர்ச்சிதான் காரணம்!

இப்படித்தான், மக்கள் மேல் மதக் குருக்கள் செலுத்திக் கொண்டு வந்து இருந்த ஆதிக்கம்—-வாழ்க்கையின் ஒவ்வொரு சாயையிலும் தலையிட்டுத் தங்கள் வழி காட்டுதல்களை மக்கள் மேல் திணித்துக் கொண்டு வந்து இருந்த மதக் குருக்களின் ஆதிக்கம்—-இங்கிலாந்தில் தகர்த்து எறியப் பட்டு இருந்தது.

மதமும் அரசும்—-மதமும் சட்டமும்—-இணைந்து இருக்கின்ற எந்தச் சமுதாயமும் முன்னேறியது இல்லை என்பதுதான் நமக்கு வரலாறு காட்டுகின்ற பாடம்! மதக் குருக்களோ, காட்டு-மிராண்டிக் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதற்குத் துடித்துக் கொண்டு இருக்கின்ற பிற்போக்கு வாதிகள் ஆவர்!

ஆக, ஒரு மொழியின மக்களுக்கு உரிய முதலாண்மையின் விரிவுதான் தேசம் என்பதே ஒழிய, ஒரு மதத்தின் விரிவிற்கு உரியது அல்ல.

ஒரு மதத்தின் விரிவுதான் தேசம் என்றால், ஈரோப்பில் இத்தனை தேசங்கள் எதற்கு ? மேற்கு ஆசியாவில் இத்தனை அரசுகள் எதற்கு ? கிறிஸ்தவ மதத்தினால் ஈரோப்பையும் இஸ்லாம் மதத்தினால் மேற்கு ஆசியாவையும் ஒரே தேசமாக ஒருமைப் படுத்திட முடிய வில்லையே, ஏன் ?

இன்றைய இந்தியாவும் இலங்கையும் பாக்கிஸ்தானும் பேரரசுகளே அன்றித் தேசங்கள் அல்ல; தேசிய இனங்களின் சிறைக் கூடங்கள் இவை! சம உரிமை வாய்ந்த மக்களாக ஒவ்வொரு மொழி இன மக்களும்—-சம உரிமை வாய்ந்த மொழிகளாக ஒவ்வொரு மொழியும்—-திகழ்ந்திடத் தக்க வாய்ப்புகள் உருவாகின்ற பொழுதான் இந்தியாவில் கூட்டாட்சித் தேசங்களைப் பற்றி நாம் பேசிடவும் முடியும்.

இந்திய அரசமைப்புப் பேரவையில் முதன் முதலாக ஜவகர்லால் நேரு கொண்டு வர, பின்னர் நிறைவேற்றப் பட்டு இருந்த தீர்மானம் ஒரு கூட்டாட்சித் தீர்மானம்தான் ஆகும். இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் இந்தியாவை அல்லது பாரதத்தைக் கனவு கண்ட டாக்டர் எஸ். இராதாக் கிருஷ்ணன், ஒரு ‘பல தேச அரசு ‘ (மல்ட்டி நேஷனல் ஸ்ட்டேட்) என்றுதான் அதனை வரையறுத்தார்.

எப்படியும், ஒரு பிறவி ஞானியாகத் தம்மை எஸ். அரவிந்தன் நீல கண்டன் கருதிட வில்லை என்றால், உலகத்தைப் புரிந்து கொள்வதற்காக ஜவகர்லாலின் Glimpses of World History-யையும் உலகத்தில் இந்தியாவைப் புரிந்து கொள்வதற்காக அவரது Discovery of India-வையும் அவர் படித்துப் பார்த்துக் கொள்வது நல்லது.

பிறவி ஞானிகளையும் பிறவிப் பெரியவர்களையும் உலகம் ஒதுக்கிப் பல காலம் ஆகி விட வில்லையா ?

இறுதியாக, எஸ். அரவிந்தன் நீல கண்டன் மகிழ்ச்சி அடைந்திடக் கூடிய ஒரு செய்தியினையும் இங்கு நான் குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். அதாவது, அடல் :பிஹாரி வாஜ்பாயி என்னும் பெயரில் வருகின்ற ‘அடல் ‘ என்னும் சொல், ஒரு தமிழ்ச் சொல்தான் ஆகும்.

அருள் செல்வம் கந்த சுவாமி

சிந்து வெளி எழுத்துகளை இன்னமும் யாரும் படித்து அறிந்திட வில்லை என்றுதான் அருள் செல்வம் கந்த சுவாமி நினைத்துக் கொண்டு இருக்கிறார் போலும். ஆனால், அவற்றைப் படித்துப் பல நூல்களை எழுதி இருப்பவர் இரா. மதி வாணன்! அண்மையில், பூரணச் சந்திர ஜீவாவும் இவ் வெழுத்துகளை ஆய்ந்து நூல் ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ் எழுத்துகளைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு நூலினைத் திரு. ஐராவதம் மகா தேவன் அவர்கள் எழுதி இருக்கிறார் என்பது பலரும் அறிந்தது. இந்த நூலின் விலையோ 1500 ரூபாயாம்! வாசகர் சந்தைக்காக அன்றி, ஏதோ ஒரு தனிச் சந்தைக்காக விலையிடப் பட்டு இருக்கின்ற ஒரு நூல்தான் போலும் அது!

பேழைகளில் அடைத்து வைப்பதற்காக விலையிடப் படுகின்ற நூல்களை எப்படி நாம் வாங்கிப் படித்திட முடியும் ?

கார்ல் பாப்பரின் வெங்காயத்தை உரித்துப் பார்த்திட வேண்டும் என்று பல நாட்களாக எனக்கு ஆசை! நண்பர் ஜெய மோகன்தாம் அவரைப் பற்றி முதலில் எனக்கு மடல்-எழுதி இருந்தவரும் ஆவர். திண்ணையில் வெளியான கார்ல் பாப்பரின் கட்டுரையைப் படித்தது முதல், ஒரு பேராசையாக என்னுள் இந்த ஆசை உருவெடுக்கவும் தொடங்கி விட்டது.

எனது நண்பர் சொ. கண்ணனிடம் அண்மையில் இந்த நூலின் விலையைப் பற்றி நான் கேட்டேன்; 1200 ரூபாய் என்றார். மார்க்சின் தொகுதிகள் ஒவ்வொன்றையும் 3 ரூபாய்க்கும் லெனினின் தொகுதிகள் ஒவ்வொன்றையும் 2 ரூபாய்க்கும் வாங்கியவன் நான்! எனினும், 1200 ரூபாய் என்பது வாசகர் சந்தைக்கு உரிய ஒரு விலையாக எனக்குத் தோன்ற வில்லை. 200 முதல் 400 ரூபாய்க்குள் நோம் :சாம்ஸ்கியின் நூல்கள் கிடைக்கின்றன.

எப்படியோ, கார்ல் பாப்பரின் நூல்களைப் பற்றி நான் விசாரித்துக் கொண்டு இருந்தது நண்பர் குடியரசு மூலமாக நண்பர் சிவகாமியின் காதில் விழ, அந் நூல்களை எனக்குப் பெற்றுத் தருவது என்று நண்பர் சிவகாமி முடிவு செய்து இருப்பதாகக் கேள்வி! மாக்ஸ் முல்லரின் மொழியியல் சொற்பொழிவுகளை எனக்குப் பெற்றுத் தந்தவரும் அவர்தாம்! நண்பர் ஜெய மோகனிடம் கூட கார்ல் பாப்பரின் நூல்கள் இருக்கலாம்!

விசயம் இதுதான்: வாசகர் சந்தையினைக் கருத்தில் கொள்ளாமல் நூல்களுக்கு விலையிடுவது ஒரு பகற் கொள்ளை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. வணிகம் என்பது ஒரு கொள்ளை அல்ல! எனினும், கொள்ளை என்று அதனை நினைத்துக் கொண்டு நூல்களுக்கு விலையிடுகின்ற புத்தக வணிகர்களைப் பற்றி நாம் என்ன நினைப்பது ?

மற்ற படி, நூல்களை ஒளித்து வைக்கும் பழக்கம் எதுவும் எனக்கு இல்லை. எனவே, என்னிடம் உள்ள நூல்களைப் பொறுத்த வரை, யாரும் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்

—-அருள் செல்வம் கந்த சுவாமி உட்பட!

சலாஹுத்தீன்

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை, இராய புரத்தில் ஒரு மரணம் நிகழ்ந்தது.

மேலங்கி அணியாமல் வெளியே செல்லக் கூடாது என்று தமது மகளை ஒரு தாய் கட்டாயப் படுத்த, இந்த வாதத்தில் மிகவும் இழிவாகத் தன்னைத் தனது தாய் திட்டியதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மகள் ஓடிப் போய்க் கடலில் விழ, அவளைக் காப்பாற்றப் போன அண்ணன் இறுதியில் மரணம் அடைந்திட நேர்ந்தது. மகளோ காப்பாற்றப் பட்டு விட்டு இருந்தாள்.

மகனை இழந்து விட்ட தாயின் வேதனையும் அண்ணனை இழந்து விட்ட தங்கையின் வேதனையும், இன்றும் கூட அவர்களின் மனத்தினை நிறைத்துக் கொண்டு இருந்திடலாம்.

மேலங்கியினை முஸ்லிம் மதப் பெண்கள் அணிந்துதான் ஆக வேண்டும் என்கின்ற கட்டாயம் எதுவும் இஸ்லாத்தில் இல்லை என்றும் முஸ்லிம்கள் கூட சரியாக இதனைப் புரிந்து கொள்ள வில்லை என்றும் திரு. சலாஹுத்தின் கூறுகிறார்.

முஸ்லிம் தமிழர்கள் இடையே முன்பு எல்லாம் இந்த மேலங்கி வழக்கம் இருந்ததும் இல்லை.

உரியவர்களிடம் முறையாகச் சென்று சேர்ந்திட வேண்டிய ஒரு செய்தி இது!

ஜோதிர் லதா கிரிஜா

விசிதாவின் கருத்துகளை முழுமையாக எதிர் கொள்வதற்கு ஜோதிர் லதா கிரிஜா கொஞ்சம் தயங்குகிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

சட்டம் எதுவும் மீறிடப் படாத வரை, எந்த ஆடையையும் யாரும் அணிந்து கொள்வதில் என்ன தவறு ?

ஆண்களைப் பற்றிய அச்சத்துடன்தான் தங்கள் ஆடைகளைப் பெண்கள் தேர்வு செய்திட வேண்டும் என்றால், ஆண்களுக்கு அடங்கியவர்களாகத்தாம் தங்கள் வாழ்க்கையினைப் பெண்கள் அமைத்துக் கொண்டு ஆக வேண்டும் என்று அவர் கருதுகிறாரா ?

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் இடையே மேலை நாடுகளில் மண முறிவு என்பது ஒரு பிரச்சனையே அல்ல; இந்தியாவில்தான் ஆண்களுக்குச் சாதகமாக இந்தச் சட்டம் உள்ளது. அதே நேரத்தில், கட்டைப் பஞ்சாயத்துப் போல, மதக் குருக்களின் மூலமாக மண முறிவு செய்து கொள்பவர்களும் உண்டு.

மண முறிவினைப் பொறுத்த வரை, இந்துத் திரு மணச் சட்டம்தான் முற்போக்கான ஒரு சட்டம் என்பது எனது கருத்து!

அன்புடன்,

சோதிப் பிரகாசம்

26-12-2004.

sothipiragasam@yahoo.co.in

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்