கடிதம் நவம்பர் 11,2004 – நாகூர் ரூமியும் நேச குமாரும்

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

சோதிப் பிரகாசம்


திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்!

தமது நூலைப் பலரும் வாங்கிப் படித்திட வேண்டும் என்று ‘திண்ணை ‘யில் நாகூர் ரூமி விடுத்து இருந்த வேண்டுகோளினைப் படித்த பின்னர்தான் ‘இஸ்லாம்: ஓர் எளிய அறிமுகம் ‘ என்னும் அவரது நூலை நான் வாங்கினேன். ‘உள்ளடக்கம் ‘ பகுதி கூட இல்லாமல் வெளியிடப் பட்டு இருக்கின்ற ஒரு நூல் இது!

கடவுளைப் பற்றிய கருத்துகளாகச் சமயக் கருத்துகளைப் பார்ப்பது மார்க்சிய வாதிகளுக்கு ஏற்புடையது அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஏனென்றால், குறிப்பிட்டது ஒரு வரலாற்றுக் கட்டத்தில், அக் காலத்தின் சமுதாயச் சூழல்களில் இருந்து எழுந்து வந்து, தொடர்ந்து வளர்ந்து கொண்டு வந்து இருக்கின்ற கருத்துகள்தாம்—-அதுவும், மனிதர்களைப் பற்றிய கருத்துகள்தாம்—-சமயக் கருத்துகள் ஆகும்—-புத்தம், ஸ்ஜாரதூஸ்த்ரம், சிவம், கிறிஸ்தவம், விண்ணவம், இஸ்லாம், என்று எந்த மதத்தின் கருத்துகளாக அவை இருந்தாலும் சரி!

எனவேதான், மறுப்பு வாதிகளைப் போல, சமயக் கருத்துகளை முற்றாக மார்க்சிய வாதிகள் புறக்கணித்து விடுவது இல்லை.

இப்படி, ஒரு மார்க்சிய வாதி என்கின்ற வகையில்தான், ‘இஸ்லாத்தின் வரலாறு ‘ மற்றும் அதன் ‘இறை இயல் ‘ கொள்கை, முதலியன வற்றைத் தெரிந்து கொள்கின்ற நோக்கத்தில் நாகூர் ரூமியின் நூலை நான் வாங்கினேன். இந்த வகையில் எனக்கு உதவியாக அது இல்லை; தொடர்ந்து அதனைப் படிப்பதற்கும் என்னால் முடிய வில்லை. திருக் குர்ரானின் தொடக்கப் பகுதிகளை ஏற்கனவே கொஞ்சம் நான் படித்துப் பார்த்து இருந்தேன் என்பது வேறு விசயம்!

நாகூர் ரூமியின் பான்மை

உலகம் எங்கிலும் மத வாதிகள் மட்டும்தாம் இருக்கிறார்கள்; மனிதர்கள் இல்லை; என்று எல்லா மத வாதிகளும் நினைத்துக் கொண்டு வந்து இருக்கலாம்; ஆனால், மதக் ‘காரர் ‘களாக இருக்கின்ற மனிதர்கள் அனைவரும் மத ‘வாதி ‘கள் அல்லர் என்பதுதான் உண்மை—-இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து, உள்ளிட்ட எந்த மதக் காரர்களாக அவர்கள் இருந்தாலும் சரி!

மனிதர்களுக்கு என்ன, வேறு வேலை-வெட்டியே இல்லையா ? அல்லது படைத்த இறைவன்தான் பொழுதுக்கும் அவர்களைப் பாது காத்துக் கொண்டு வந்து விடுவானா ?

தாம் படைத்த உயிர்களுக்கு ஒரு வேளைச் சோற்றைக் கூட ஒழுங்காகப் போட்டுக் கொண்டு வந்திட முடியாத ஒரு கடவுள் இருந்து என்ன, அல்லது இல்லாமல் போனால்தான் என்ன ? என்று கேள்வி எழுப்புவது ஏழை-எளிய மக்களுக்குத் தவிர்த்திட முடியாததும் ஆகும். ஆனால், கடவுளோ என்ன வென்றால் எல்லா வல்லமையும் படைத்தவராம்; வேடிக்கையாக இருக்கிறது!

சரி, அது போகட்டும்!

இனி, முழுமையான மத நம்பிக்கை கொண்டவர்களாக எந்த மதக் காரர்களும் என்றும் இருந்தது இல்லை; இன்றும் இல்லை என்பது யாரும் மறுத்து விட முடியாத மற்றும் ஓர் உண்மை! மறுப்பு வாதிகள் ஒரு புறம் என்றால், மீதம் உள்ள அனைவரும் ஐயப் பாட்டு வாதிகள்தாம் ஆவர். வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கட்டத்தில் கடவுளை வசை பாடிக் கொண்டு வந்து இராத மதக் காரர்கள் என்று உலகில் யாரும் இருந்ததும் இல்லை.

ஆனால் நாகூர் ரூமியோ, மத ‘வாதி ‘களுக்காக மட்டும்தான் தமது நூலை இயற்றி இருக்கிறார்—-குறிப்பாக, ஹிந்துத்வ வாதிகளுக்காகவும் இஸ்லாத்வ வாதிகளுக்காகவும்! மதக் ‘காரர் ‘களுக்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ அல்ல!

ஜெய மோகனின் ‘விஷ்ணு புரமு ‘ம் ஜெய சாந்தியின் ‘பரணி ‘யும்

ஜெய மோகனின் விஷ்ணு புரத்தைப் படித்துப் பார்த்து இருப்பவர்களுக்கு மிகவும் நன்றாகத் தெரியும்—-இந்து மதத்தின் மூட நம்பிக்கைகளை முழுக்க-முழுக்கக் கிண்டல் செய்து அவர் எழுதி இருக்கின்ற ஒரு கதைதான் அது வென்று!

இதற்காக, இந்துக்கள் யாரும் அவருக்குக் கொலை மிரட்டல் எதையும் விடுத்து விட வில்லை. ஏனென்றால், எல்லா மூட நம்பிக்கைகளையும் எல்லா மதங்களும் ஒரு நாள் களைந்துதான் ஆக வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படித்தான் மத வாதிகளையும் மத வெறியர்களையும் மீறி இந்துக்கள் வளர்ச்சி அடைந்து கொண்டு வந்து இருக்கிறார்கள். இந்துச் சட்டங்களில் ஏற்பட்டுக் கொண்டு வந்து இருக்கின்ற மாற்றங்கள் இதற்குச் சிறந்தது ஓர் எடுத்துக் காட்டு எனலாம்.

ஜெய சாந்தியின் ‘பரணி ‘யை நாம் எடுத்துக் கொள்வோம்.

கிறிஸ்தவ மதக் காரர்கள் கடை பிடித்துக் கொண்டு வருகின்ற சாதி இழிவுகளை மிகவும் கடுமையாகப் ‘பரணி ‘யில் ஜெய சாந்தி சாடி இருக்கிறார். இதற்காக, கிறிஸ்தவர்கள் யாரும் அவரது தலைக்கு விலை குறித்து வைத்து விட வில்லை.

ஏனென்றால், இத் தகு விள்ளனங்களை ஏற்றுக் கொண்டு வளர்ந்து கொண்டு வந்து இருப்பதுதான் கிறிஸ்தவம்! விவிலியத்தினையும் மீறிய ஒரு வளர்ச்சி இது! பொதுப் படையான இஸ்லாமிய மக்களின் வளர்ச்சியும் இப்படிப் பட்டதுதான் ஆகும்.

தனி மனித உரிமை என்றும் பொது நாயகப் பண்பாடு என்றும் மனிதர்கள் முன்னேறிக் கொண்டு வருகின்ற ஒரு வரலாற்றுக் கட்டத்தில், அவர்களைப் பின்னேற்றிடத் துடிக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெறும் சிற்றுடைமைச் சிந்தனையின் புலம்பல்கள்தாம் என்பதைத் தவிர வேறு என்ன ?

கவிஞர் இன்குலாப்பை நமக்குத் தெரியும். எஸ். கே. எஸ். சாகுல் அமீது என்பதுதான் அவரது இயற் பெயர்! அவரை நேர்-கண்டு வாஸந்தி நடத்தி இருந்த நிகழ்ச்சி ஒன்று ‘விண் ‘ தொலைக் காட்சியில் ஒளிபரப்பப் பட்டு இருந்தது.

இஸ்லாம் மதத்தில், முடிதிருத்தும் தொழிலைச் செய்து கொண்டு வந்து இருந்த ஒரு குடும்பத்தில், தாம் பிறந்ததாகவும், எனினும், சாதி இழிவுகளைச் சந்தித்துக் கொண்டு தாம் வந்து இருந்ததாகவும், அந் நேர்-காணலில் இன்குலாப் குறிப்பிட்டு இருந்தார்.

உருது முஸ்லிம்களுக்கும் தமிழ் முஸ்லிம்களுக்கும் இடையே எப் பொழுதும் உள்ளார்ந்த ஒரு பகைமை உண்டு என்பது அறிந்தவர் அனைவரும் அறிந்தது.

இம் மாதிரியான சமுதாயப் பகைமைகளை எல்லாம் மூடி மறைத்து வைத்து விட்டு, மனிதர்களை மனிதர்கள் இழிவு படுத்திக் கொண்டு வருகின்ற கொடுமைகளை ஏற்றுக் கொண்டு வருவது அல்ல, மாறாக, அவற்றை வெளிக் கொணர்ந்து ஒழித்துக் கட்டுவதுதான் இஸ்லாமிய மற்றும் முற்போக்கான அனைத்து அறிவாளர்களினதும் கடமையாக இருந்திட முடியும்.

எந்த மதத்தையும் தழுவிக் கொள்கின்ற உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு; சமன்மை உரிமையும் தனி மனித உரிமையும் ஒவ்வொருவருக்கும் உண்டு; என்பதுதான் முற்போக்கும் மனித நேயமும் ஆகும்; உண்மையான இறைப் பற்று என்பதும் இதுதான்!

எந்த மனிதனுக்கும் இந்த உரிமைகளை மறுப்பதற்கு எந்த மதத்தைச் சேர்ந்த எந்தக் கொம்பனுக்கும் உரிமை இல்லை—எந்த மதமாக அது இருந்தாலும் சரி! மனித நேயத்தை மறுக்கின்ற எந்த ஒரு மதமும், ஒரு மதமும் ஆகாது!

ஆனாலும், நமது சூழலிலோ ஒரு பக்கம் ஹிந்துத்துவ வெறி; இன்னொரு பக்கம் இஸ்லாத்துவ வெறி! இரண்டுக்கும் இடையே நமக்கோ இஸ்லாமிய நெறிகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வம்! இதில், நாகூர் ரூமியின் பங்கு என்ன ? என்பதுதான் இங்கே கேள்வி!

நேச குமார்

நாகூர் ரூமியின் கருத்துகளை மறுத்து நேச குமார் வெளிப் படுத்தி இருக்கின்ற கருத்துகள் இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துகள் அல்ல; மாறாக, திருக் குர்ரானின் ஒரு சில பகுதிகளுக்கு நாகூர் ரூமி அளித்து இருக்கின்ற விளக்கங்களுக்கு எதிரான கருத்துகள்தாம் ஆகும். சும்மா ஊதித் தள்ளி விடக் கூடிய கருத்துகளாகவும் நமக்கு இவை தெரிய வில்லை.

எனவே, தமது விளக்கங்களை வலியுறுத்தித் தமது வாதங்களை நிலை நிறுத்துவதற்குத் தாமாக நாகூர் ரூமி முன் வந்துதான் ஆக வேண்டும். மிகவும் எளிமையாக இஸ்லாத்தை அறிமுகப் படுத்துவதற்காக நூல் ஒன்றினை எழுதி விட்டு, எதிர்க் கருத்துகளை எதிர் கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொள்வதில் எந்தப் பொருளும் இல்லை.

அல்லா அருளி இருந்தது திருக் குர்ரான் மட்டும்தான் என்றால்—-ஹதீதுகளை அல்லா அருளிடவும் இல்லை என்றால்—-புதிய ஹதீதுகளைப் புதிய இஸ்லாமியச் ச்ிந்தனை யாளர்கள் உருவாக்கிக் கொள்வதற்குத் தடை என்ன ? என்பதையும் நாகூர் ரூமி விளக்கி ஆக வேண்டும்.

இனி, அரபி மொழியில் மட்டும்தான் திருக் குர்ரானைப் புரிந்து கொள்ள முடியும் என்றால்—-தமிழ் மொழியில் அதனைச் சரியாகப் புரிந்து கொள்வது முடியாததுதான் என்றால்—-தமிழர்களுக்கு இஸ்லாம் தேவை இல்லை என்று நாகூர் ரூமி கருதுகிறாரா ? என்பதையும் அவர் தெளிவு படுத்தி ஆக வேண்டும்.

காய்தல்-உவத்தல் இன்றி இவர்களது வாதங்கள் தொடர்ந்திட வாழ்த்துகள்!

எப்படியும், ‘எல் ‘ என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபுகள்தாம் ‘ஏலி ‘, ‘அல்லா ‘, ‘ஹெல்லன் ‘ என்னும் சொற்கள் என்பது எனது கருத்து!

அன்புடன்,

சோதிப் பிரகாசம்

07-11-2004

—-

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்