கருணாநிதிக்கு ஒரு வார்த்தை…

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

வரதன்


கீதைக்கான தாங்கள் மீண்டும் உங்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள்.

மகிழ்ச்சி.

அமெரிக்கா முதல் மனிதன் கண்டுபிடிக்கும் முன்னரே தோன்றிய தொன்மையான வரலாறு கீதை கொண்டுள்ளது.

எப்படி தற்போது ஒரு நிறுவனம்,

தயாரிப்பு பிரிவு, உற்பத்தி பிரிவு, ஆராய்ச்சி & வளர்ச்சி பிரிவு, விற்பனை பிரிவு, பாதுகாப்பு பிரிவு என்று தன்னை அமைத்துக்கொண்டு செயல்படுதல் ஒரு அறிவு பூர்வமான ISO தர நிர்ணயத்திற்கான அடிப்படைத் தேவையோ அதை கீதை காலத்திலேயே சொல்லப்பட்டு செயல்படுத்தப்பட்டது ஆச்சரியமான விஷயமன்றி அருவருப்பான விஷயமல்ல.

இதில் கீதையில் அவர்களின் நிலைப்பாட்டைக் காண்போம்.

நீங்கள் சொல்லும், பிராமண, சத்திரிய, வைஷிய, சூத்திர பிரிவுகளை, தற்போதைய நிலைக்கு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

பிராமண :::: ஆராய்ச்சி & வளர்ச்சி பிரிவு

சத்திரிய ::: பாதுகாப்பு பிரிவு

வைசிய :::: விற்பனை பிரிவு,

சூத்திர :::: உற்பத்தி பிரிவு

என்ற பிரிவுகளுக்கு கொள்ளலாம்.

இப்பவும், மூன்று வருடம் விற்பனைப் பிரிவில் வேலை பார்ப்பவன், ஆராய்ச்சி பிரிவிற்கு தாவுதல் மிகக் கடினம். அது போல் ஒரு துறையில் அனுபவம் பெற்று பிறிதொரு துறைக்கு தாவுதல் மிக மிக கடினம்.

உடனே, இதை அடக்குமுறை என்று கூவுதல் மடமை.

அப்படி மாறுபவர்கள் புதுத் துறைக்கான பயிற்சியில் சேர்ந்து பின் புதிதாக பயிற்சியாளராக வாழ்வைத் தொடங்குதல் கண்கூடு.

அது போல் தான் அன்றிருந்தது.

இதில் எது தவறு.. ?

ஒரு பொது அமைப்பில் ஒரு பொறுப்பிற்கு வந்தவுடன் , அந்த அமைப்பிற்கு இருக்கும் ஒரு கட்டமைப்பை மறந்து, அமைப்பிற்கு உழைத்த மற்றவரின் சேவையையும் மறுத்து, தன் வாரிசுகளை தலைவராக தமக்குப் பின் கொணர்தல் தான் கொடியதிலும் கொடியது.

அதைக் கண்ணபிரான் செய்யவில்லை. செய்வது யார் என்று தமிழ் கூறும் நல்லுலகம் அறியும்.

உங்களின் வயோதிகத்திற்கு அழகு உண்மை பேசுதல். அதிலும் சமுதாயத்திற்கு நல் கருத்துக்களைச் சொல்லுதல்.

பால் மெக்கென்னா ( கண்ணன் அல்ல இது வெளிநாட்டுக்காரன் தான் , அதனால் உடன் மறுக்க வேண்டாம் ) பல மதங்கள் கோட்பாடுகளின் ‘தங்க சட்டங்கள் ‘ என்ற தொகுப்பிலிருந்து ஒரு வரி,

‘கடமையின் கூட்டு விடை இது தான். உனக்கு அவர்கள் செய்தால் வலி ஏற்படுத்தக் கூடிய செயலை , பிறருக்கு நீ செய்யாதே… ‘

மஹாபாரதம் 5:1517

அவரின் தொகுப்பில் எல்லா மதத்திலிருந்தும் குறிப்பு உண்டு.

‘உனக்கு என்ன நடந்திட வேண்டும் என்று விரும்புகிறாயோ அதையே உனக்கு நீ விரும்பு ‘

இஸ்லாம் முகமது நபி

எந்த மதமானாலும், இல்லை மத நூல்கள் ஆனாலும் அதில் நல்ல விதமாக கற்றுக்கொள்ள வேண்டியது கொட்டிக் கிடக்கிறது.

எப்படி தமிழ் இலக்கத்தில் சொல்வதுபடி, அன்னப்பறவையானது வேண்டாதது அகற்றி வேண்டியது மட்டும் எடுத்துக் கொள்கிறதோ , அந்த தன்மை தருவதே, மனிதனின் வளர்ச்சியின் அடையாளம்.

அதானால், குதர்க்கவாதம் சமூகக் கேடு. அதை செய்யாதீர்கள்.

தங்களைத் தலைவனாக காட்டிக் கொண்ட எத்தனையோ பேர், கால ஓட்டத்தில் குப்பையாக ஒதுக்கப்பட்டுள்ளார்கள். உண்மையின்படி வாழ்ந்தவனே கவிதையாகி இயற்கை போல் காலம் தாண்டி வாழ்கிறான்.

நீங்கள் சத்தியத்தின் படி நடந்து கொள்ள, திமுக-விலும் , ஆட்சியிலும் நிறைய கடமைகள் இருக்கிறது. அதில் கவனம் செலுத்துங்கள்.

முதலில், நீங்கள், ‘கருணாசிரமத்திலிருந்து விடுபட்டு, ஒரு புதிய சமுதாயத்திற்கு உழைக்கக்கூடிய தலைவனை திமுக-வில் அரியணை ஏற்றுங்கள்.

பின், பேசுங்கள்.

அதுவரை நாங்கள் பாடிக் கொண்டிருக்கும் பாடல்,

‘எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. சொந்த நாட்டிலே….தமிழ் நாட்டிலே… ‘

—-

வரதன்

—-

Series Navigation

வரதன்

வரதன்