யார் இந்த தாரிக் அலி ?

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

இப்னு பஷீர்


தாரிக் அலி யார் என்று தெரிந்து கொள்வதற்கு முன், பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி:

கேள்வி: செப்டம்பர் 11-க்கு பிறகு நீங்கள் அளித்த சில பேட்டிகளில் அமெரிக்க அரசாங்கத்தை விட அடிப்படைவாதிகளை கண்டு நீங்கள் அதிகம் அஞ்சுவதாக குறிப்பிட்டிருந்தீர்கள். இருந்தாலும், இந்த தற்கால “சுதந்திர உலகின் எதிரி” ஏற்கனவே அமெரிக்க உளவு நிறுவனத்திற்காகவும், பென்டகனுக்காகவும் வேலை பார்த்தவர்கள் என்பதும், அவர்களின் கோட்பாடுகள் தாக்குதல் மற்றும் அழிவு வேலைக்காக மேலும் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அனைவரும் அறிவர். இந்த அடிப்படைவாதம் இந்த போரின் இரு புறங்களிலும் பயன்படுத்தப்படும் சாத்தியம் உள்ளதா ? உள்ளது என்றால் எதுவரை ?

தாரிக் அலி: எனது சில பேட்டிகளை நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதன் பொருளாதார-ராணுவ கொள்கைகளும்தான் எல்லாவித அடிப்படைவாதங்களுக்கும் தாய் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். எனது புத்தகத்தின் (The Clash of Fundamentalisms) கருப்பொருளும் அதுதான். அவர்களே வளர்த்த கூட்டத்தாருடன் அவர்கள் இப்பொது சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

http://www.counterpunch.org/tariq0708.html

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்! புத்தகத்தை எழுதிய தாரிக் அலியே, அதன் கருப்பொருளை ஒரேவரியில் விளக்கி உள்ளார். அதை அவரை பேட்டி கண்டவர் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை போலிருக்கிறது. அவர் மட்டுமல்ல, வேறு பலரும் இதே தவறை தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தினை சில நாட்களுக்குமுன் ஒருவர் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். புத்தகத்தின் கருப்பொருளுக்கு சற்றும் சம்பந்தமேயில்லாத அத்தியாயம் அது. ஒரு சிலரின் சுயநல நோக்கங்களை திருப்தி செய்து கொள்ள தனது கருத்துக்கள் எவ்வாறு கடத்தப்படுகின்றன என்பதை தாரிக் அலி அறிந்தால், அவர் எழுதுவதையே நிறுத்திவிடக்கூடும்.

தாரிக் அலியின் பார்வையில் இஸ்லாத்தின் வரலாறு எப்படி உள்ளது என்பதைக் காட்டவே இக்கட்டுரையை மொழிபெயர்த்ததாக மொழிபெயர்ப்பாளர் கூறி உள்ளார். இஸ்லாத்தைப் பற்றிய மரபுப்பார்வையில் இருந்து விலகிய மாற்றுப் பார்வைகள் முஸ்லிம்கள் நடுவே உண்டு என்று காட்டுவதும் தனது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது நோக்கத்திற்கு ஆதரவாக தாரிக் அலியை தேர்ந்தெடுத்தது அவருடைய தவறு. ஏனெனில் தாரிக் அலி ஒரு முஸ்லிமே அல்ல! தன்னை ஒரு நாத்திகராகத்தான் அவர் காட்டிக்கொண்டுள்ளார். இதை அவரே தனது பல கட்டுரைகளிலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.bbc.co.uk/bbcfour/documentaries/features/feature_tariqali.shtml

ஏன் ஒரு நாத்திகர் இஸ்லாத்தை பற்றி விமரிசனம் செய்யக்கூடாதா என கேள்வி எழலாம். செய்யலாம்தான். இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், தாரிக் அலி ஒரு இஸ்லாமிய பெயரை உடையவராக இருப்பதால், அவரது கருத்துக்கள் ஒரு முஸ்லிமின் கருத்துக்கள் என்று தவறாக புரிந்துகொள்ளப்படும் சாத்தியம் இருக்கிறது.

இஸ்லாத்தைப்பற்றி, அதனை நன்கு அறிந்த அதனை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு இஸ்லாமிய சீர்திருத்தவாதியின் கருத்துக்களுக்கும், இஸ்லாத்தைப்பற்றி பெரும்பாலும் முஸ்லீம் அல்லாதவர்கள் எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள் மூலம் மேம்போக்காக அறிந்து கொண்டு அதனை ‘சீர்திருத்த’ முயலும் போலி சீர்திருத்தவாதிகளின் கருத்துக்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

இந்த மொழிபெயர்ப்பாளர், தாரிக் அலியை முதல் பிரிவைச் சார்ந்தவராக காட்ட முயற்சி எடுத்துள்ளார். இது தவறு என்பதோடு, மொழிபெயர்ப்பாளர் தெரிந்தே இதை பற்றி குறிப்பிடாமல் விட்டதிலிருந்து அவருக்கு வேறு உள்நோக்கம் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

ibunubasheer@yahoo.com.sg

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்