கடிதம் ஜூலை 22 , 2004

This entry is part of 54 in the series 20040722_Issue

இப்னு பஷீர்


புஷ் கார்ப்பரேஷனின் உலகை ஆளும் வெறியை அம்பலப்படுத்த தாரிக் அலி எழுதிய புத்தகத்தை தமிழாக்குகிறேன் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு தமிழகத்து ‘பாமர’ முஸ்லிம்களை ‘உய்விக்க’ வந்த ஆசார கீனன், ரூமி RSS என்று ஒரு வார்த்தை சொன்னவுடன் ‘ஆஹா, இந்த ஆள் நமது உண்மை சொரூபத்தை கண்டு கொண்டு விட்டாரே’ என்ற பதற்றத்தில் மேலும் அபத்தமான உளறல்களை அள்ளிக்கொட்டி ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். அதோடு நிற்காமல் ரூமிக்கு பதிலடி கொடுப்பதற்காக, அமெரிக்காவிலிருந்து அரேபியாவுக்கு ஒரு தாவு… ‘ரூமி ஒரு வஹாபி’ என்ற ஒரு கண்டுபிடிப்பு.

அய்யா, இஸ்லாத்தின் மீதான உங்கள் வன்மத்தைய்யல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, சற்றே நடுநிலையான கண்ணோட்டத்துடன் சிந்தனை செய்து பாருங்கள்.

இஸ்லாத்தின் மீது ஏதாவது குற்றச்சாட்டு கொண்டு வர விரும்பினால், அதன் கொள்கைகளை விமரிசனம் செய்யுங்கள். இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்ட முஸ்லிம்களில் சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமிய பெயர் கொண்டவர்களின் தவறான நடவடிக்கைகளுக்கும் கருத்துக்களுக்கும் இஸ்லாம் எப்படி பொறுப்பேற்க முடியும் ? தமிழக முஸ்லீம்கள் அதிலும் திண்ணை வாசகர்கள் பாமரர்களல்ல. வஹாபியிசத்தை பற்றி ஆசாரகீனனை விடவும் அதிகமாக தெரிந்து வைத்திருப்பவர்கள் அவர்கள்.

‘பொழுது விடிந்தால் குண்டு வெடிப்பும், தலை சீவலும்…’ என்று புலம்பும்முன், இதற்கான காரணம் என்ன என்பதை கொஞ்சம் நினைத்துப் பார்க்கவும். இஸ்லாமிய ஆட்சி உலகெங்கும் பரவ வேண்டும் என்பதற்காகவா ஈராக்கியர்கள் போரிடுகின்றார்கள் ? உலகை ஆளும் வெறி யாருக்கு இருக்கிறது ? தாரிக் அலியின் புத்தகத்தில் இதற்கான விளக்கம் உங்களுக்கு கிடைக்கவில்லையா ?

சூடானில் கருப்பின முஸ்லிம்களை கொன்று குவிப்பவர்களின் பாதை தீவிர இஸ்லாமிய பாதைதான், வேறு என்னவாக இருக்கும் ? என்று யூகத்தின் அடிப்படையில் வாதிடுவதை முதலில் நிறுத்துங்கள். சூடானில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து கட்டுரை எழுதிய நீங்கள், சூடானை விட உங்களுக்கு மிக அருகாமையில் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையைப் பற்றியும் எழுதி இருக்க வேண்டுமே ? அப்படி எழுதி இருந்தால் அதை படிக்க திண்ணை வாசகர்களாகிய நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.

“வஹாபிசக்கத்தியால் வெட்டப்படப்போகும் தலைகளில் என்னுடையதும் ஒன்றாக இருக்க கூடாது”

“கழுத்துக்கு மேல் கத்தி எனக்குத்தானே ?”

“தலையில் முக்காடு போட்டுக்கொண்டு போகப்போகும் பல கோடிப்பெண்களில் என் குடும்பப்பெண்கள் எத்தனை பேர் இருப்பர் ?”

நீங்கள் ரொம்பவும் அரண்டு போயிருப்பது தெரிகிறது. உங்கள் கண்களுக்கு நிறைய பேய்கள் தெரிவதிலும் வியப்பு ஒன்றுமில்லை. கவலைப்படாதீர்கள். இந்துத்துவாக்களின் இன வெறி, புஷ்ஷின் உலகை ஆளும் வெறி ஆகியவற்றை வென்று வஹாபிசம் உங்களை நெருங்க பல காலங்கள் ஆகலாம். ஒருவேளை இது நடக்காமல் கூட போகலாம்.

ஒரு வேண்டுகோள்!. எந்த மரபு மீதும் பிடிப்பு இல்லை என்று குறிக்கும் வகையில் புனை பெயர் வைத்திருக்கும் உங்களின் ‘ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தில்’ RSS, இந்துத்துவா, சிவசேனா ஆகியவற்றின் நிலை என்ன என்பதை அறிய ஆவல். அத்தகைய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் (அப்படி எதுவும் இருந்தால்..) திண்ணையில் இடவும். நீங்கள் எந்த அளவுக்கு ‘தெளிவாக’ இருக்கின்றீர்கள் என்பதை திண்ணை வாசகர்கள் புரிந்து கொள்ள இவை பேருதவியாக இருக்கும்.

இப்னு பஷீர்

ibunubasheer@yahoo.com.sg

Series Navigation