ஒரு ஹலோபதி சிகிச்சை

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

அப்துல் கையூம்


உலகத்திலேயே அதிகமாக உச்சரிக்கப்படுற வார்த்தை – “Sorry” அல்லது “Thanks”, – இதுவாத்தான் இருக்கும்னு நினைக்கத் தோணும். ஊஹும். அப்படி கிடையாதாம். “ஹலோ”ங்குற வார்த்தைதானாம்.

வாஸ்தவம்தானே! மகாராணி எலிஸபெத் முதல் மம்தா பானர்ஜி வரை போன் எடுத்தா “ஹலோ”ன்னுதானே கூவுறாங்க. “ஹலோ….”ங்குற வார்த்தை ஓ’கார நெடில்லே முடியிறதுனாலே நாலு வீட்டுக்கு கேக்குற மாதிரி ‘லோலோ’ன்னு ஹை டெஸிபல்லே கூவ முடியுது.

சங்கீதத்திற்கு எப்படி ஆலாபனையோ, பாடலுக்கு எப்படி தொகையறாவோ, ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு எப்படி ‘கிளாப்’ சத்தமோ, தூக்கத்துக்கு எப்படி கொட்டாவியோ, அதுமாதிரி டெலிபோன் உரையாடலுக்கு “ஹலோ”தான் இக்னிஷன் சுவிட்சு.

ஒரு நொடியிலே எத்தனைக் கோடி பேரு “ஹலோ” சொல்லுறாங்கன்னு யாருக்குத் தெரியும்? இத்தனைக் கோடி ஜனங்களெ “ஹலோ” சொல்ல வச்சானே ஒரு மனுஷன், அவனை நிச்சயம் நாம பாராட்டித்தான் ஆகணும். அடேங்கப்பா.. லேசுபட்ட சாதனையா இது?

ஒண்ணுமில்லீங்க. மைக் செட்டுக்காரரை எடுத்துக்குவோமே. ஒயர் கனெக்ஷன் ஒழுங்கா கொடுத்திருக்காரா, சவுண்டு ஒழுங்கா கேக்குதான்னு டெஸ்ட் பண்ணி பாக்குறதுக்கு “ஹலோ..!! மைக் டெஸ்டிங் ஒன், டூ, திரீ”ன்னுதான் எல்.கே.ஜி பையன் மாதிரி விரலு விட்டு எண்ணுறாரு.

“ஹலோ’ன்னு சொன்னா என்ன அர்த்தம்?” – என் நண்பர் ஹலோபதி, சாரி; அலோபதி டாக்டர் சேதுபதிக்கிட்ட கேட்டுப் பார்த்தேன். “ஹலோ மிஸ்டர்.. ! ஒருத்தரை ஒருத்தர் ‘விஷ்’ செய்யும் வார்த்தைங்க அது”ன்னு கடுப்படிச்சாரு.

“அதுதான் எனக்குத் தெரியுமே!” ன்னு கல்யாணபரிசு தங்கவேலு மாதிரி சொல்ல நெனச்சேன். ஏன் வம்புன்னுபேசாம இருந்துட்டேன்.

யாருக்கிட்டே கேட்டாலும் “என்ன..? ‘ஹலோ’ ன்னு சொன்னா அர்த்தம் புரியலியா? ஜோக் அடிக்காதீங்க சார்”ன்னு சொல்லி நம்மள வேற்று கிரகத்து மனுஷர பாக்குற மாதிரியே ‘லுக்’ விடுறாங்க.

கோயம்பேடு மார்க்கெட்டுல பொன்னாங்கன்னி கீரை விக்கிற பொன்னம்மா கூட செல்போனை எடுத்தா “ஹலோ”ன்னுதான் கதைக்கிறதுக்கு தூபம் போடுது. அதுக்கிட்ட போயி “பொன்னம்மா! ஹலோன்னா இன்னாம்மா”ன்னு கேட்டுப் பாருங்க. “போயா பேமானி”ன்னு கெட்ட வார்த்தையாலேதான் திட்டிப்புடும்.

யாராவது போன் எடுத்து “ஹலோ”ன்னு காதுகிழிய கத்தும்போது, அவங்க வாயையே பட்டிக்காட்டான் மாதிரி நான் பாத்துக்கிட்டு நிப்பேன். வேற எதுக்கு? இந்த ‘பாரின்’ வார்த்தையை எப்படியெல்லாம் அவுங்க உச்சரிக்குறாங்கன்னு ஆராயத்தான்.

“ஹலோ” “ஹல்லோ” “ஹெல்லோ” “ஹலூஊஊஊ” “அலோஓஓஓஓ” இப்படி ஒவ்வொருத்தரும் இந்த வார்த்தையைப் போட்டு பாடாப் படுத்துறத பாக்குறபோது எனக்கு ஹலுகை ஹலுகையா வரும்.

காதல் ஜோடிங்க ‘பிட்’ போடுறதா இருந்தாக் கூட “ஹலோ”ன்னுதான் ஆரம்பிச்சிக்கிட்டு இருந்தாங்க. இப்ப என்னடான்னா “ஹாய்”ன்னு உஜாலாவுக்கு மாறிட்டாங்க. எனக்கென்னமோ இது மாட்டு வண்டி ஓட்டுற மாதிரியே இருக்குதுங்க. ‘பாரப்பா பழனியப்பான்னு’ எம்.ஜி.ஆர். பாடுற மாதிரி. (“ஹாய் மதன்” தயவு செய்து கோபித்துக் கொள்ளக் கூடாது). “ஹலோ”வே தேவலாம் போலத் தோணுது.

ஒருகாலத்தில் “ஹலோ” போட்டு பாடல் எழுதுறதை ஹாபியா வச்சிக்கிட்டு ‘ஹல்லா குல்லா’ (இந்தியில், அலம்பல்/களேபரம் என்று அர்த்தம்) பண்ணிக்கிட்டு இருந்தாங்க நம்ம பாடலாசிரியருங்க.

“ஹலோ மிஸ்டர் ஜமிந்தார் ஹவ் டூ யு டூ”
“ஹலோ மிஸ், ஹலோ மிஸ் எங்கே போறீங்க?”
“ஹலோ ஹலோ சுகமா? ஆமா நீங்க நலமா?”
“ஹலோ மை டியர் ராங் நம்பர்”
“ஹலோ டாக்டர்” (காதல் தேசம்)

இப்படி அல்லோகலப்படுத்துனாங்க. (சத்தியமா இதெல்லாம் தமில் பாட்டுத்தாங்க) ‘ஹலோ பார்ட்னர்’ன்னு கூட ஒரு சினிமாப் படம் எடுத்தாங்க.

இந்த தடவை நான் ஊருக்கு போயிருந்தப்போ என் தம்பிக்கிட்ட “ஆட்டோ புடிச்சிட்டு வாடா”ன்னு சொன்னேன். “அது என்ன பூனையா புடிச்சுக்கிட்டு வர்றதுக்கு? இருக்கவே இருக்குது ‘ஹலோ ஆட்டோ’ன்னு நெத்தியடியா பதிலு சொன்னான். இரண்டே நிமிஷத்துலே வீட்டுக்கு முன்னாலே வந்து நின்னுச்சு ஆட்டோ. உலகம் எங்கேயோ போயிக்கிட்டு இருக்குது. நாம இன்னும் ஹைதர் காலத்திலேயே இருக்கோமேன்னு நொந்துப் போயிட்டேன்.

இப்போ சர்வமும் ஹலோமயம் ஆயிடுச்சு. பாதுகாப்புக்கு – இருக்கவே இருக்குது ‘ஹலோ போலீஸ்’. செக்ஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினையா?, பங்குச் சந்தையா? மேற்படிப்பு படிக்கணுமா? இங்கிலீஷ்லே சந்தேகமா? வியாதி குணம் ஆகணுமா? மனசுக்கு புடிச்ச பாட்டு கேட்கணுமா? எல்லா சேனல்லேயும் ‘ஹலோ’ன்னு யாராவது கூப்பிட மாட்டாங்களான்னு ரெடியா காத்திக்கிட்டு இருக்காங்க.

டிவியை ஆன் பண்ணினாலே “அடுத்த காலரு லைன்லே இருக்காங்க” “டிவி வால்யூமை கொஞ்சம் குறைங்க” – இந்த லோலாய்தாங்க.

“ஹலோ” சொல்லியே பிரபலமானவங்க நிறைய பேரு. பெப்ஸி உமா, சிட்டிபாபு, அர்ச்சனா இப்படி எத்தனையோ பேரு. இப்படி பேமஸா ஆகனும்னா ஒரே ஒரு தகுதி இருந்தா போதும். அதாவது தமிலெ குதறிக் குதறி பேசணும்.

கடந்த ஆயிரம் வருஷத்துலே, ஜனங்களுக்கு பெருந்தொண்டு செஞ்சவங்களோட லிஸ்ட்டை ‘லைஃப்” பத்திரிக்கை வெளியிட்டிருக்குது. முதல் இடம் யாருக்குன்னு கேட்டா, நம்ம கிரகாம் பெல்லுக்குத்தான்

போனைக் கண்டுபுடிச்ச கிரகாம் பெல் மெத மொதல்லே போனிலே பேசிப் பாத்தபோது அவரோட அஸிஸ்டண்டை கூப்பிட்டுப் பார்த்தாராம். அவரு பேரு ஹுல்லோ.

அந்த ஒரே காரணத்துக்காக நாம எல்லோரும் தினமும் அந்த ஆளை விளிச்சு கத்த வேண்டியதாப் போச்சு.

இத படிச்சபோது எனக்குள்ளார இப்படி ஒரு ஆசை தோணிச்சு, கிரகாம் பெல்லோட உதவியாளர் ஒரு தமிழரா இருந்து, அவரு பேரு ‘முனுசாமி’ன்னு (ஒரு பேச்சுக்குதாங்க) வச்சுக்குவோம். எவ்வளவு சூப்பரா இருந்திருக்கும்? நினைச்சுப் பாருங்க.

வெள்ளைக்காரன், ஜப்பான்காரன், அரபிங்க, எல்லாரும் போன் எடுத்ததுமே ‘முனுசாமி’ “முனூஊஊசாமி” “மூன்சாமி” “முனிசாமி” “மூன் மூன் சாம்”ன்னு ஸ்டைலா கூப்பிடுவாங்க. இல்லியா?

பாவம் அந்த சான்ஸ் நம்ம முனுசாமிக்கு அடிக்காம போயிடுச்சு.

பழைய பிரஞ்சு மொழியிலே ‘ஹோலா’ன்னு சொன்னா “நிறுத்து”ன்னு அர்த்தமாம். ‘ஹோலா’தான் மருவி ‘ஹலோ’ன்னு ஆச்சுதாம். நாம என்னடான்னா’ ஹலோ’ன்னு சொன்னாத்தான் பேசவே தொடங்குறோம். என்ன ஒரு கொடுமை பாத்தீங்களா?

1883-ஆம் ஆண்டிலேயே “ஹலோ”ங்குற வார்த்தை அகராதியிலே ஏறிடுச்சு.
1889-ஆம் ஆண்டுலே டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பணிப்பெண்களெ “ஹலோ கேர்ள்ஸ்”ன்னுதான் கூப்பிட்டுருக்காங்க.

கிரகாம் பெல் மொதல்லே “அஹோய்” (Ahoy) ன்னுதான் கூப்பிட்டாருன்னு வேறு சொல்றாங்க. இப்ப நாம் “ஹாய்”ன்னு சொல்றோமே, அதோட மூல வார்த்தைதானாம் அது. “ஹாய்”ன்னு உரக்க கத்துனா பொருத்தமா இருக்காதுன்னு “ஹலோ”க்கு மாறிட்டாங்களோ என்னவோ.

சாஸர் கலத்திலேயே ஒருத்தரை ஒருத்தர் “ஹலோ”ன்னு கூப்பிடுறது வழக்கமா இருந்திருக்குதுன்னு வேற சொல்லுறாங்க.

தொடக்க காலத்திலே சுரங்கத் தொழிலாளிங்கக்கிட்ட ஆபிஸருங்ககிட்ட உரையாடும்போது சத்தமாக “How Long..?” (இன்னும் எவ்ளொ நேரம் சாமி பாதாளத்துலேயே இருக்குறது?) என்று கூவ அதுவே நாளாக நாளாக “ஹலோ”ன்னு உருமாறிடுச்சுன்னு வேற லாஜிக் பேசுறாங்க.

எது எப்படியோ, “ஹலோ” நம்ம வாழ்க்கையிலே ரொம்பத்தான் விளையாடிடிச்சு. காலையிலேந்து ராத்திரி வரைக்கும் எத்தனை ஹலோதாங்க சொல்லுறது? ஹலோ1 நான் சொல்லுறது கரிக்ட்டுதானுங்களே?

நாம தெருவழியே நடந்து போவும்போது, சிகரெட்டுக்கு நெருப்பு கடன் கேக்குறவங்க மொதக்கொண்டு, டைம் என்னன்னு கேக்குறவங்கவரை (பிச்சைக்காரர்களைத் தவிர) அத்தனை பாதசாரிகளும் “ஹலோ” போட்டுத்தான் அறிமுகம் செஞ்சுக்குறாங்க.

என் நண்பரோட ஒண்ணரை வயசு குழந்தை டெலிபோனை வச்சுக்கிட்டு ஏதேதோ நம்பர் அடிச்சு விளையாட அந்த லைனு நேரா ஜப்பானுக்கு போயிடுச்சு. ரொம்ப நேரமா குழந்தை குஷியா என்னென்னமோ பேச எதிர்முனையிலேந்து ‘முஷி முஷி; முஷி மிஷி’ ன்னு சத்தம் மட்டும் வந்துக்கிட்டே இருந்திருக்குது. டெலிபோன் பில் வந்ததுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது குழந்தை அரைமணி நேரமா ஜப்பானுக்கு பேசிக்கிட்டு இருந்திருக்குன்னு. ‘முஷி முஷி’ன்னு சொன்னா ஜப்பானிய மொழியிலே ‘ஹலோ’ன்னு அர்த்தமாம். இப்பக்கூட நண்பர்கிட்ட பேசும்போது ‘முஷி முஷி’ன்னு ஞாபகப்படுத்தினா மனுஷர் கதிகலங்கிப் போயி ‘முழி முழி’ன்னு பேய் முழி முழிக்கிறாரு.

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடிச்சாலும் கூட ‘ஹலோ’ங்குற வார்த்தையை பிரபலப்படுத்துனது தாமஸ் ஆல்வா எடிசன்னுதான் சொல்றாங்க. ஆயிரத்துக்கு மேற்பட்ட சமாச்சாரங்களை கண்டுபிடிச்ச இந்த மனுஷனோட அபார கண்டுபிடிப்பு இந்த “ஹலோ”தானாம். சொல்லுறாங்க.

சார்லஸ் டிக்கன்ஸ் 1850-லேயும், தாம்ஸ் ஹியு 1857-லேயும், மார்க் ட்வெய்ன் 1872-லேயும் ‘ஹலோ’ங்குற வார்த்தையை பயன்படுத்தி இருக்காங்க.

இந்த அழகான வார்த்தை எங்கிருந்து வந்துச்சுன்னு ஆராய்ஞ்சு பாக்குறதுக்குள்ளே எனக்கே பைத்தியம் புடிச்சிடும் போல இருக்குது. ஆனா இப்ப எனக்கு புடிச்சது இது ஒண்ணுதான். ஆமாம். யாரோ எழுதுன இந்த குட்டிக் கவிதை :

‘குட் பை’ வார்த்தை
காதலர்கள் வாயிலிருந்து
வேண்டுமானால்
வெளிவரக்கூடும்

‘ஹலோ’ எனும் வார்த்தை
நண்பர்களிடத்திலிருந்து
மாத்திரமே !

ஆஹா! காதலைவிட நட்புதான் ஒசத்தின்னு அழகா சொல்லியிருக்கிற கவிஞருக்கு நாம எல்லோருமா சேர்ந்து ஒரு “ஹலோ” போடலாம்.

ஒவ்வொரு வருஷமும் நவம்பர் 21-ஆம் தேதியை “சர்வதேச ஹலோ தினம்”னு கொண்டாடுறாங்க. டெலிபோன் கண்டுபுடிச்ச தினம்னுதான் நானும் இவ்ளோ நாளா நெனச்சிக்கிட்டு இருந்தேன். கடைசியிலே பாத்தா அது எகிப்து நாடும், இஸ்ரேல் நாடும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வச்சு, “ஹலோ” சொல்லிக்கிட்ட நாளாம்.

இதோ ஹலோங்குற தலைப்பிலே நானெழுதிய கவிதை இது

ஹலோ
======

இரண்டே அட்சரம்
இதுநாள்வரை அட்சயம்

தொலைபேசியின்
தேசிய கீதம்

தொலைபேசி உரையாடலின்
பிள்ளையார் சுழி

ஒவ்வொரு
தொலைபேசி ரிசீவரையும்
தலைக்கீழாய்
உலுக்கிப் பாருங்கள்
ஒரு லட்சம்
“ஹலோ” வந்து
உதிர்ந்து விழும்

“அம்மா” என்பது
முதல் வார்த்தை

அடுத்த வார்த்தை
“ஹலோ”தானே?

பல்லே முளைக்கா
பாலகனுக்கும்;
பல்லுப்போன
தாத்தாவுக்கும்;
ஆண்பலருக்கும்,
பெண்பாலருக்கும்;
அம்சமான விளிச்சொல்!

அறிவியல் உலகம்
ஒருநாள்
தொலைபேசியைக் கூட
தொலைத்துவிடக் கூடும்.

ஆனால்
“ஹலோ” மாத்திரம்
ஆயுட்கால உத்திரவாதம்.

vapuchi@gmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்