உடம்பு இளைப்பது எப்படி?

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

அப்துல் கையூம்


முன்பு எழுதியதைப் போல இப்பொழுதெல்லாம் சுதந்திரமாக எழுத முடியவில்லை. பயமாக இருக்கிறது. எழுவாய் இருக்கிறதா? பயனிலை இருக்கிறதா? என்று பார்த்து பார்த்து எழுத வேண்டியிருக்கிறது. வடமொழி சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் தவிர்ப்பதற்கு படாத பாடு பட வேண்டியிருக்கிறது.

மக்கள் தொலைக்காட்சியில் ‘தமிழ்ப்பண்ணை’ நிகழ்ச்சியில் எங்கே பேராசிரியர் நன்னன் அவர்கள் என்னுடைய வாக்கியத்தை எடுத்து வைத்துக் கொண்டு அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்து நம்மை நாற அடித்து விடுவாரோ என்ற ‘கிலி’ ஆட்கொண்டு ஆட்டிப் படைக்கிறது.

உயர்திணைக்கும், அஃறினைக்கும் வேறுபாடு தெரியாத இவர்களெல்லாம் ஏன் எழுத வருகிறார்கள் என்று கேட்டு நம் மானத்தை வாங்கி விடுவார்.

அவர் நம்மை “பண்ணையாளர்களே!” என்று அழைப்பது கேட்க காதுக்கு குளுமையாக இருக்கும். விவசாயத்திற்கு ஒரு ‘குழி’ நிலம் இல்லாத போதிலும் நம்மைப் பார்த்து ‘பண்ணையாளர்களாகிய நீங்கள்தான் யோசித்து இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும்’ என்று சொல்லி விட்டு ‘என்ன நான் சொல்வது சரிதானே?” என்று கேட்டு உறுதி படுத்திக் கொள்வார். என்னை நானே ஜிப்பா அணிந்த மிராசுதாராக கற்பனை செய்து மகிழ்ந்துக் கொள்வேன். முடிக்கும் போது “இனி நாம் அடுத்த விழாவில் கூ..டுவோமே?” என்று சொல்வது அழகாக இருக்கும்.

எது எப்படியோ, துணிந்து நான் பட்ட அவஸ்தையை (மறுபடியும் ஒரு வடமொழிச் சொல் வந்து விழுத்து விட்டது) ஏதோ ஒரு மொழியில் அல்லது பாஷையில் வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்வது என முடிவு செய்து விட்டேன்.

இந்த அத்னான் சாமியை நினைத்தாலே எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. அடிக்கடி தொலைக்காட்சி வழியே புகுந்து எங்கள் குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணி போய் விடுகிறார்.

“எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிவிட்டார் பாத்தீங்களா? நீங்களும்தான் இருக்கீங்களே?” கொஞ்ச நாட்களாகவே என் மனைவியின் உபத்திரவம் தாங்க முடியாமல் போய்விட்டது.

அந்த சாமியைப் போல் நானும் இளைத்து தொலைக்க வேண்டுமாம். என் மனைவி பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தாள். நம்மை ஜாலியாகவே இருக்க விட மாட்டர்கள் போலிருக்கிறதே. “Marriage is not a word. It’s a sentence” என்று மொழிந்த வாய்க்கு சர்க்கரையை அள்ளிப் போட வேண்டும்.

என்னை என் மனைவி டாக்டரிடம் ‘தர தர’ வென்று இழுத்துக் கொண்டுப் போக, வேண்டா வெறுப்பாக கிளீனிக்குக்குள் நுழைந்தேன். என்னை சோதித்துப் பார்த்தது ஒரு பெண் டாக்டர். வெறுப்பு கொஞ்சம் குறைந்தது போலிருந்தது. வழக்கப்படி ‘ஹி.. ஹி..’ என்று அசடு வழிய தைரியம் வரவில்லை; கூடவே என் மனைவி இருந்ததால்.

ஸ்டெதாஸ்கோப்பை (தமிழில் இதற்குப் பெயர் மார்பாய்வியாம். பெயர் ஒரு மாதிரியாக இருந்ததால், இதனை நான் பயன் படுத்தவில்லை. தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்) முதுகில் வைத்து நன்றாக மூச்சை இழுத்து இழுத்து விடச் சொன்னார். “உ..ம் இன்னும் நன்றாக இழுத்து விடுங்க” என்று அன்பாணை விடுத்தார். “இதுக்கு மேல் மூச்சை விட்டால் நான் பரலோகத்திற்குச் சென்று விடுவேன்” என்றேன். சிரித்துக் கொண்டார். பரவாயில்லையே.. டாக்டர்கள்கூட அழகாக சிரிக்கிறார்களே?

“யுவர் மெயின் ப்ராப்ளம் இஸ் ஓபிசிட்டி” என்றார். பப்ளிசிட்டி, எலக்ட்ரிசிட்டி, மெட்ராஸ் சிட்டி – இவைகள் தெரியும். ஏன் ஏ.பி.சி.டி. கூட நன்றாகத் தெரியும். இது என்ன ஓபிசிட்டி (Obesity)? புரியாமல் போனதும் நல்லதற்கே. டாக்டரே அவருடைய கொஞ்சும் தமிழில் சற்று விளக்கமாக புரிய வைத்தார். கேட்பதற்கு மனதுக்கு இதமாக இருந்தது.

“தெனிக்கும் 2 கிலோ மீட்டராவது வெறும் வவுத்திலே நீங்கோ நடக்கணும்” என்றார் டாக்டர். “யார் வயித்திலே டாக்டர்?” என்று கேட்க வேண்டும் போலிருந்தது. சீரியஸான இடத்தில் தமாஷ் பண்ணக் கூடாது என்று என்னை நானே கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டேன்.

தினமும் 2 கிலோமீட்டர் என்ற கணக்கில் நடந்து வீட்டிற்கு திரும்ப வராமல் அப்படியே காசிபக்கம் போகாலாமா என்று கூட நினைத்தேன். அந்த அளவுக்கு “உடம்பை குறை, உடம்பைக் குறை” என்று ஒரு டார்ச்சர்.

உண்மைதான். படிமீது ஏறும்போதெல்லாம் மூச்சிரைக்கத்தான் செய்கிறது. கண்ணாடியில் என் மேனியை பார்த்தபோது ‘மடிப்பு அம்சா’ போன்று வயிற்றில் எக்ஸ்ட்ரா சுருக்கங்களும் தெரிந்தன.

இதில் வேடிக்கை என்னவென்றால் உடம்பு இளைப்பதற்காக நான் ஏற்கனவே Tread Mill (கால் மிதியாலை) வாங்கிப் போட்டிருந்தேன். அது ஒரு மூலையில் ‘கைப்படாத ரோஜாவாக’ காட்சியளித்தது.

சில வணிக வளாகத்தில் “இன்று கடன் கிடையாது” என்று எழுதி வைத்திருப்பார்கள். இன்றுதானே கிடையாது என்று அடுத்த நாள் வந்து பார்த்தோமானால் அப்பொழுதும் அதே வாசகம் கண்ணில் படும்.

ஒவ்வொரு முறையும் என் மனைவி வற்புறுத்தும்போதும் “நாளை முதல் நான் நடக்கிறேனே?” என்று கெஞ்சிக் கூத்தாடி சமாளித்து விடுவேன். Tread Mill-ல் நடப்பதற்கு பதிலாக அந்த நேரத்தில் கணினி முன் அமர்ந்து “Thread” போடலாமே என்றுதான். வேறென்ன?

இனிமேலும் தாமதிக்கக் கூடாது என்று எண்ணி அன்று முதல் நடந்தே தீருவது என்று முடிவு செய்து விட்டேன். அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு, ஜாகிங் ஷூவை அணிந்துக் கொண்டுதான் நடக்க வேண்டுமாம். இதென்ன பெரிய வம்பாக போய்விட்டது என்று நினைத்துக் கொண்டேன்.

உபகரணங்களை அணித்துக் கொண்டு கண்ணாடி முன் நின்று மீண்டும் ஒரு பார்வை பார்த்தேன், கண்றாவியாக இருந்தது. பாலச்சந்தர் படத்தில் வரும் அனுமந்துவைப் போலிருந்தது. கையில் ஒரு லாலிபாப்பையும் (அதுதாங்க குச்சிமுட்டாய்) கொடுத்து விட்டால் சுத்தம்… போங்க.

மிதியாலையில் ஏறி லேசாக ஓட ஆரம்பித்தேன். சிவாஜி பேசிய வசனம்தான் நினைவில் வந்தது. ‘ஓடினேன்; ஓடினேன், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்’. கலைஞரும் மிதியாலையில் நடந்துக் கொண்டேதான் இந்த வசனத்தை எழுதியிருப்பாரோ?

கலைஞர் தினமும் காலையில் எழுந்து ‘வாக்கிங்’ போவதாக கேள்வி. ஒரு மேடையில் பேசும்போது விவேக் கூட இதனை அழகான பாணியில் சொன்னார். “ஒரு சூரியன் எழுந்திருக்கும் முன்பே இன்னொரு சூரியன் எழுந்து நடை பழக போகின்றது” என்று.

“ச்சே.. எழுந்து நடப்பதற்கு அலுப்பு பட்டுக் கொண்டு இப்படி ஒரு வாழைப்பழ சோம்பேறியாக இருக்கின்றோமே” என்று என்னை நானே நொந்துக் கொண்டேன். கலைஞர் மீது பொறாமைகூட வந்தது.

பரிட்சை ஹாலில் மாணவர்கள் காப்பியடிக்கிறார்களா என்று பார்வையிடுவதற்காக கண்காணிப்பாளர்கள் இருப்பார்களே அதுபோல என் மனைவி பக்கத்திலேயே காவல் புரிந்தாள். என்ன ஒன்று. கையில் பிரம்பு மிஸ்ஸிங். அவ்வளவுதான். ‘ஹா.. ஹா.. ஹா..’ லேசாக இளைத்தது.

“ஏம்பா! இந்த நிலைமை உனக்குத் தேவைதானா? என்று என் மனசாட்சியே என்னை கிண்டலடித்தது. இனி Junk Food சாப்பிடுவாயா? KFC பக்கம் போவாயா? என்று யாரோ பின்னாலிருந்து அதட்டுவது போலிருந்தது.

நாளையிலிந்து சாண்ட்விச்சில் எனக்கு Cheese-ம் கிடையாதாம். இல்லத்தரசி நினைத்து நினைத்து புதிய சட்டம் போட்டுக் கொண்டிருந்தாள். “ஏ சீஸ் படிஹே மஸ்த் மஸ்த்” என்று cheese-ன் மகிமையை மனதுக்குள் பாடிக் கொண்டேன். இன்னும் என்னென்ன சுவையான அயிட்டங்கள் போகப்போக நம் மெனுவிலிருந்து கட் ஆகுமோ தெரியாது.

“ஹா,, ஹா.. ஹா..” திருச்சி கல்லூரியில் படித்த காலத்தில் வெங்கடேஸ்வரா கொட்டகையில் இரண்டாம் ஆட்டம் பார்த்து விட்ட வந்த சமயத்தில் நாய் ஒன்று துரத்திய போது இப்படிதான் எனக்கு வேர்த்து விறுவிறுத்தது.

மிதியாலையிலிருந்து இறங்கலாம் என்று ஆயத்தமாகையில் அதெல்லாம் கிடையாது வெறும் அரை கிலோ மீட்டர்தான் ஆகியிருக்கிறது என்று சட்டாம் பிள்ளை போல் பேசினாள். 200 கலோரியாவது எரிக்க வேண்டும் என்றாள். கண்ணகி மதுரையை எரிப்பது போலிருந்தது அவள் பார்வை.

நடக்கும்போதும் கவிதைதான் என் நினைவில் நிழாலாடிக் கொண்டிருந்தது. முந்தைய தினம் உணவகத்தில் சிக்கன் டிக்கா சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலும் இதேபோன்றுதான் ஒரு கவிதை பிறந்தது.

“இங்கு வளைகுடா நாட்டில்
தினந்தோறும் தைப்பூசம் திருவிழாதான்
அலகு குத்திக் கொள்ளும் சிக்கன் டிக்கா”

என்று ‘பண்புடன்’ குழுமத்தில் ஒரு கவிதை வடித்திருந்தேன். “உக்காந்துதான் யோசிப்பீங்களோ?” என்று ஒரு நண்பரும், “இது ‘அய்யோ..கூ’ ரகமா என்று வேறொரு நண்பரும் கலாய்த்திருந்தார்கள்.

கவிதை சிந்தனையை கலைந்து விட்டு ‘கருமமே கண்ணாக’ வேக வேகமாக நடந்து கொண்டிருந்தேன். இந்த பாழாய்ப் போன சிந்தனை எங்கு போனாலும் நம்மை விட மாட்டேன் என்கிறதே. என்ன பண்ணுவது?

கவிஞர் வைரமுத்துவின் மேல் கூட எனக்கு தீராத கோபம். “ஊசி போன்று உடம்பிருந்தால் தேவையில்லை பார்மஸி” என்று திருவாய் மலர்ந்தருளியவர் அவர்தானே? ‘ஊசி’ போன்று இருந்தால்தான் ‘தையல்’ விரும்புவாள் போல் தெரிகிறது. அப்படிப் பார்த்தால் தயிர்வடை தேசிகருக்குத்தான் அதிக அளவில் ‘கேர்ள் பிரண்ட்ஸ்’ இருந்திருக்க வேண்டும்.

கவிஞர் வைரமுத்துவின் கூற்றில் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பார்மஸிக்கு வருபவர்களை நோட்டம் விட்டால் குண்டாக இருப்பவர்களை விட வத்தலும் சொத்தலுமாக இருப்பவர்கள்தான் அதிகமாக மருந்து வாங்க வருகிறார்கள்.

ஒருவன் குண்டாக இருந்தால் இவர்களுக்கு எவ்வளவு இளக்காரம் பாருங்கள். அடாவடித்தனம் புரியும் போக்கிரிகள் ஒல்லியாக இருந்தால் கூட அவர்களுக்கு இந்த பத்திரிக்கைக்காரர்கள் வைத்திருக்கும் பெயர் ‘குண்டர்கள்’. இது என்ன நியாயம்?

ஆட்களை காலி பண்ணுவதற்கு அமெரிக்காகாரன் ஒரு ஆயுதத்தை கண்டு பிடித்து வைத்திருந்தாலும் அதற்குப் பெயர் ‘குண்டு’. ‘குண்டர்கள் சட்டம்’ என்ற ஒரு ஒரு சட்டத்தை தயார் செய்து வைத்திருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டாலும் அதற்குப் பெயர் குண்டு. ஹிரோஷிமா மீது போட்டாலும் அதற்குப் பெயர் குண்டு.

வாயில்லா ஜீவன்களுக்காகக் கூட ஜீவகாருண்யச் சங்கம் இருக்கின்றது. கொஞ்சம் சதை போட்ட மனிதர்களுக்காக வேண்டி எந்த ஒரு சங்கமும் இல்லாதது வருத்தத்திற்குரிய விஷயம்தான்.

அண்மையில் துபாய் சென்றிருந்தபோது எழுத்தாளர் ஆபிதீனைச் சந்தித்தேன். “தொப்பையை கொஞ்சம் குறையுங்கள்” என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். “வளைகுடாவிற்கு வந்த பிறகு அறிவைத்தான் வளர்க்க முடியவில்லை. இதையாவது வளர்க்கிறேனே?” என்று சொன்னேன். அவர் முகம் அஷ்ட கோணலாய் மாறியது. “போயும் போயும் இந்த மனுஷனுக்கு போய் அட்வைஸ் பண்ணினேனே.. எம்புத்தியை .. ..” என்று நினைத்திருப்பார் போலும்.

ஒருபிடி சதை அதிகமாக ஆனதும் அவரவர் கூறும் ஆலோசனைகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. இப்படி ஆகும் என்று முன்னமே தெரிந்திருந்தால் நான் ஒல்லியாகவே இருந்து தொலைந்திருப்பேன்.

“எதுக்கும் ஒரு தடவை கொலஸ்ட்ரால் செக் பண்ணிக்குங்க. இப்படித்தான் என் நண்பர் ஒருவர் கவனிக்காம விட்டுப்புட்டார். கடைசியிலே என்ன ஆச்சு தெரியுமா?” என் நண்பர் ஒருவர் சொல்லி முடிப்பதற்கு முன்பே அந்த இடத்தை நான் காலி பண்ணி விட்டேன். இது மாதிரி நம்மை பயமுறுத்த வேண்டும் என்பதற்காகவே பிறவி எடுத்து வந்த பிரகஸ்பதிகள் ஊரில் பல பேர் இருக்கிறார்கள்.

ஹைதராபாத் போயிருந்தபோது என் மனைவி எனக்குத் தெரியாமலேயே ஒரு DVD வாங்கி வைத்திருந்திருக்கிறாள். பாபா ராம் தேவ் நடத்தும் யோகா பயிற்சி அது. ஜாலியாக திருவள்ளுவர் மாதிரி சம்மணம் கொட்டி அமர்ந்துக் கொண்டு வேகமாக இருமுவது போல் வாயிலிருந்து மூச்சை “உ..ய்…ங்..” என்று வேகமாக விடவேண்டும். வாக்கிங் போவதைக் காட்டிலும் இது சுலபமாகத்தான் இருந்தது. உட்கார்ந்துக் கொண்டே ஏதாவது வேலை பாருங்கள் என்று சொன்னால் அது நமக்கு வசதிதானே? கையைக் காலை தூக்குவதை தவிர மற்ற எதுவாக இருந்தாலும் உடனே நான் செய்து விடுவேன்.

“இந்த பயிற்சிக்கு பேரு என்ன தெரியுமா?” என்று மனைவி கேட்டாள். “தெரியாது” என்று உதட்டை பிதுக்கினேன். “கபால் பாரதி” என்று விளக்கினாள். “எனக்கு கபால் பாரதியைத் தெரியாது. சுப்பிரமணிய பாரதியைத்தான் தெரியும்” என்றேன். கோபக்கனல் தெரித்தது. அதே கண்ணகி பார்வை. “உங்களையெல்லாம் திருத்தவே முடியாது” என்று சொல்லிவிட்டு விருட்டென்று சென்று விட்டாள்.

அரபி நண்பர் ஒருவர் அட்வைஸ் கொடுத்தார். சூரியகாந்தி விதையைச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை எல்லாம் அது உறிஞ்சி விடுமாம். மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது நினைவில் வந்தது. இனிமேல் “சூரியகாந்தி” என்று சொல்லக் கூடாதாம். அது வடமொழிச் சொல்லாம். “கதிர் வணங்கி” என்றுதான் சொல்ல வேண்டுமாம்.

இப்படித்தான் ஒருமுறை நண்பர் சரவணன் “இனிமேல் நீங்கள் சுத்தத் தமிழில்தான் பேச வேண்டும்” என்று வரையறுத்தார். “சுத்தத்தமிழ் என்று சொல்வதே தவறு. தூயதமிழ் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் உங்களை திருத்திக் கொள்ளுங்கள். பிறகு என்னைத் திருத்தலாம்” என்று கடுப்படித்து அனுப்பினேன்.

தமிழில் பேசிப் பழகுவதில் தப்பே இல்லை. எதார்த்தமாக இருப்பதிலே எத்தனை சங்கடங்களை சந்திக்க நேருகிறது பாருங்கள்.

“யாமறிந்த மொழிகளிலோ தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்”

என்று பாடிய பாட்டுக்கோர் புலவன் மகாகவி பாரதியின் கொள்ளுப்பேத்திக்குத் தமிழ் மொழி தெரியாதாம். அண்மையில்தான் படித்தேன். பாரதியின் சந்ததிக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து கண்ணீர் வடித்தேன்.

குண்டாக இருப்பவர்களைக் கண்டால் என்னையறியாமலேயே ஒரு நட்புணர்வு ஏற்படுகிறது. ஏன் என்று தெரியவில்லை. அவர்களுக்கு இயற்கையிலேயே ஒரு நகைச்சுவை உணர்வு பொதிந்திருப்பதை நாம் காண முடிகிறது. எப்பொழுதும் சிரித்த முகமாகவே இருப்பார்கள்.

வின்ஸ்டன் சர்ச்சில் மீது அவருடைய நகைச்சுவை உணர்வுக்காகவே அவர் மீது எனக்கு ஒரு ஈடுபாடு. அவரும் பிந்துகோஷ் கேஸ்தான்.

இன்னொரு நண்பர் “எதற்கும் நீங்க பத்மாசனம் ட்ரை பண்ணி பாருங்க” என்று அறிவுரை சொன்னார். “யாரு? பத்மா சுப்பிரமணியமா?” என்று கேட்டேன். அன்றிலிருந்து எனக்கு அட்வைஸ் பண்ணவே அவருக்கு பயம்.

இப்படி ஆளாளுக்கு அறிவுரை பண்ணத் தொடங்கியதிலிருந்து எனக்கு ஒரு நல்லது நடக்க ஆரம்பித்து விட்டது. எப்படியும் இளைத்தே தீர வேண்டும் என்ற கவலை வந்து விட்டது.

“என்ன! தினமும் நடக்க ஆரம்பித்து விட்டீர்களா?” என்று கேட்காதீர்கள். இளைக்க வேண்டுமே என்ற கவலை பட்டே நான் இளைக்கத் தொடங்கி விட்டேன்.

அதிகமாக கவலைப் பட்டால் உடம்பு இளைத்து விடும் என்பது சரிதான் போலும்.


vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்