கொக்கரக்கோ கொக்கரக்கோ

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா


சேவல் கொக்கரக்கோ என்று கூவ, விஜய் “கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ” என்று பாடி நடனமாட காலைப் பொழுது
இனிதே விடிந்தது.
காலை என்பது சிலருக்கு பகல் 11 மணியாக இருக்கலாம். அல்லது நண்பகலுக்கு ஒரு நிமிடம் முன்னாலே 11.50 ஆக இருக்கலாம். ஆனால் எனக்கு காலை என்பது வாரத்தில் எப்போது என்பதைப் பொறுத்தது. ஞாயிறு என்றால் 11.59. திங்களாக இருந்தால் 6.00. “பர பர”வென்று எழுந்து, விழுந்தடித்துக் கொண்டு பாத்ரூமிற்கு ஓடினேன்.
என் நண்பன் “போவ”தற்குள் நாம் பாத்ரூமை அசிங்கப்படுத்திட வேண்டும். அப்புறம் அது எப்படி நாறிப் போனாலும் கவலையில்லை. ஆனால் அவன் பின்னால் மட்டும் நான் போகப் போவதில்லை. இந்த மாதிரி காலைத் “தீசல்” குணத்தோடு
ஆரம்பித்தேன். டூத் பேஸ்ட் வெளியே பிதுக்கியிருந்தார்கள். டியூப் வெளியே வழிந்து காய்ந்து இருந்தது. உள்ளே இருந்து பேஸ்ட்டை பிதுக்குவதற்குள், அடக்கியிருந்தக் கழிவுகள் கூட குடலிலிருந்து வெளியே வந்து விடும். கஷ்டப்பட்டு உழைத்து, பிதுக்கி சற்று வெளியே தலை காட்டிய காய்ந்த வெள்ளை பேஸ்ட்டை ஒரு வழியாக எடுத்து சுற்றும் முற்றும் பார்த்தேன்.
பிரஷ் இல்லை. நான் அதை நார்க்குச்சி என்று தான் கூறுவது வழக்கம். என்னிடம் ரூ 3000 மதிக்கத்தக்க சூட், கோட்டு இருக்கிறது. ஆனால் இந்தக் குச்சி பிரஷ் மூன்று வருடங்களாக இருக்கிறது. தேய்த்து, தேய்த்து அனைத்தும் உதிர்ந்தாலும் அந்தப் பிளாஸ்டிக்க் பற்களில் சர் சர் என்று உரசி பல் தேய்க்க வேண்டும். இதைத் தூக்கி எறிய மனசு வரவில்லை. என்ன பண்ணுவது, இது மேல் எனக்கு அப்படி ஒரு பற்று.
சரி! என் நார்க்குச்சி இல்லாததால் வேறு வழியில்லாததால் எனது ஆள்காட்டி விரலால் பேஸ்ட்டை வழித்து பற்களில் வைத்துத் தேய்க்க ஆரம்பித்தேன். சிறு வயதில் உமிக்கரியை கற்பூரம் வைத்து என் அம்மா ஒரு மாதிரியாக கரிப்பொடியை வத்துக் கொடுத்தது ஞாபகம் வந்தது. “தூ” என்று துப்பினேன். இப்போதெல்லாம் அப்படி இல்லை. நான் வளர்ந்து விட்டேன். கோபால் பற்பொடிக்குத் தாவிவி ந்¢ட்டதால் கொஞ்சம் மாறிவிட்டேன்.
“தூ . . .” துப்பிவிட்டு, வாயைக் கொப்புளிக்க “மெளத் வாஷைத்” தேடினேன். இது பச்சையாக மற்றொரு திரவம். அதை வாயில் ஊற்றினால் வாய் கிராம்பு போட்ட மாதிரி மணக்கும். அவசரத்தில் அள்ளித் தெளித்ததில் கொட்டியது. சிந்தியது.
துடைக்கத் துணியைத் தேடினேன். இல்லை.
வீட்டு பெட்ரூமிற்கு ஓடினேன். துணி கிடைக்க, (என் பழைய சட்டை தான்!) வந்து துடைத்தேன்.
பாத்ரூம் முழுவதும் ஈரமாக இருந்தது. ஈரம் என்றால் எனக்கு அலர்ஜி. குளிக்க நாலு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பக்கம் போவேன். அதுவும் தலைக்கு குளி என்றாள் வெறுப்பாக இருக்கும்.
அடே! சனி மட்டுமாவது எண்ணைக் குளி எடுடா ! அனைத்து அழுக்குகளும் கழுவப்பட்டு, சுத்தமாவாய் ! என்று அம்மா அதட்டுவது காதில் வந்து அடுத்தக் காதில் போய் விடும். பிறகு வெளியே பறந்து விடும். தண்ணீர் கலங்கி செம்மண் மாதிரி இருந்தால் அதில் எப்படி தலையில் ஊற்றிக் குளிப்பதாம். ?
துண்டைக் கொண்டு துடை, துடையென்று துடைத்தேன். “சனியன்” துண்டைத் தூர எறிந்தேன்.
சேவல் கூட விடிந்தவுடன் இப்படி பாடு படாது. நிம்மதியாகக் கொக்கரக்கோ கூவிவிட்டு, பக்கத்து வீட்டுத் திண்ணைக்குத் தாவி ஓசி தானியங்களை கொத்தி தீனி தின்று விட்டு ஒய்யாரமாக வீட்டிற்குள் பிரம்புக்கூடைக்குச் சென்றுவிட்டு நிம்மதியாக வாழும்.
நான் ?. ஓடினேன் வயிற்றை உபாதைப்படுத்தும் வலியால், பாத்ரூமை நோக்கி ! அந்தப் பாழாப் போன கையேந்தி பவனில் சாப்பிட்டுவிட்டு, இப்படியா ?.
உடல் வலிக்க, வயிறு வலிக்க, நெற்றியில் வியர்வையோடு “பாடுபட்டு” வந்தேன். அடுத்து “வாட்ச்”சைப் பார்த்தேன். 6.20. 7.10 மணிக்கு பேக்டரிக்குப் போகும் மின்சார வண்டியைப் பிடித்தால் தான் கொரட்டூர் தாண்டி 8.00 மணிக்குப் போக முடியும். பேக்டரியில் நுழையச் சரியாக இருக்கும்.
அவசர, அவசரமாகத் துண்டை எடுத்துக் கொண்டு போனால் பாத்ரூமில் தகரக் கதவு பின்னால், தாள்பாள் இல்லை. இந்த மேன்ஷனை விட்டு வெளியே வரவேண்டும். பாடிக்கொண்டே குளித்தேன். குளிச்சே ரொம்ப நாளாச்சுது.
வந்தேன் ஹமாம் சோப் மணக்க. பவுடரை அள்ளி அப்பிக்கொண்டு, பனியனைத் தேடினேன். இரு இடத்தில் கிழிந்து போயிருந்தது. எலி கருணையோடு மற்ற பாகங்களை விட்டு வைத்திருந்தது. போட்டுக் கொண்டு ஆயிரம் ரூ. சட்டையை மேலே அணிந்து கொண்டேன். பனியன் இன்னும் இரண்டு வாங்கியிருக்கலாம்.
பாண்ட் அணிந்து கொண்டேன். கறுப்பு பாண்ட். ஆரஞ்சு கலர் சட்டை. கறுப்பு பாண்டிற்கு பிரவுன் கிழிந்த பெல்ட். மூன்றாவது ஓட்டை பெரிதாக, நைந்து போயிருந்தது. கவலைப் படாமல் “பின்னை” செலுத்தி பெல்ட்டை இறுக்கினேன். பாண்ட் பக்கிள்களில் அனைத்திலும் பெல்ட்டை விட்டு சொறுக சோம்பேறித்தனமாக இருந்தது. முதலிலும், கடைசியிலும் போனால் போகட்டுமென்று போட்டேண். இதற்கு அரைஞாண் கயிறு போட்டிருக்கலாம்.
சாக்ஸ் தேடினேன். ஒரு ஓட்டை இருந்தது. பரவாயில்லை. ஷ¤விற்குள்ளே ஒளிந்திருந்தது. காண்பித்தால் தானே ! சாக்ஸ் தோய்த்து மூன்று நாட்களாகியிருந்தன. நானே குளித்து ஐந்து நாளாகி இன்று தான் குளித்திருக்கிறேன். சாக்ஸ¤க்கு என்ன அவசரம் ?
ஷ¤ போட்டுக் கொண்டேன். சிமெண்ட் பாக்டரிக்குப் போகணும். அப்ப பாலீஷ் எதற்கு வீண் செலவு ? சாம்பலாக இருந்த கறுப்பு ஷ¤வினில் காலை நுழைத்துக் கொண்டு, பேருந்தில் இடம் பிடிக்க ஓடினேன். மணி 6.50. தவ்வி ஏறினேன்.
6.50 மணிக்கு நிறைய சேவல்கள் பறந்து வந்து பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டு இருந்தன. ஒவ்வொரு மீதும் ஒவ்வொரு வாசனை. அதனையும் மீறி விபூதி வாசனை. இதற்குத் தான் விபூதி போலும்.
பாக்கெட்டில் சீசன் டிக்கெட் பத்திரமாயிருந்தது. ஓட்டை போட்டு விட்டு நடத்துனர் தர, சென்ட்ரல் எப்போது வருமென்று காத்துக் கொண்டிருந்தேன். ஜி.ஹெச். வந்தவுடன் சரக்கென்று பஸ்ஸில் வெளியே குதித்தேன்.
“சாவுக்கிராக்கி ! கண்டக்கடர் “சவுண்ட்” காதில் தேய, இரண்டாம் பிளாட்பாரத்திற்கு விரைந்தேன். 7.09. இரு நிமிடத்தில் வண்டி புறப்படும். மெலிதாக வியர்வை. ஓட ஆரம்பித்தேன்.
வண்டி மெதுவாக நகர ஆரம்பித்தது. எனது வாடிக்கையான கம்பார்ட்மென்ட்டில் தவி ஏறினேன். அதிலும் மூன்றாவது ஜன்னல் ஓரம் வேண்டும். இல்லையென்றால், பேசின் பிரிட்ஜ் ஸ்டேஷனில் வரும் சல்வார் “”பிகரை”ப் பார்க்க முடியாது. அந்தக் காலை வேளையில் என்னை மறக்கச் செய்யும் பத்து விநாடிகள் அவை. அவளும் கடினப்பட்டு சேவலைப் போன்று கோழியாக கத்தி, பிறகு எழுந்து, மேலே படுத்திருக்கும் சேவலை உதறி, அதற்கும் சமைத்துவிட்டு, குளித்து குடும்ப நன்மைக்குச் சாமியையும் கும்பிட்டு விட்டு, குழந்தையைத் தலை வாரிவிட்டு ரிக்ஷாக் காரரிடம் அனுப்பிவைத்து விட்டு ஓடி, ஸ்டேஷனுக்கு 7.25 மணிக்கு ஓடி வருவாள். பாவம் கோழி.
கொரட்டூர் வரும்வரை இருந்த 30 நிமிடங்களுக்குள், கரெஸ்பாண்டென்ஸில் படிக்கும் தேர்விற்கு வேறு படிக்க வேண்டும். அவசரமாகப் புத்தகத்தைப் புரட்டினேன். பள்ளியில் பெற்றோர் காட்டுக் கத்து கத்தினாலும் காதில் போட்டுக் கொள்ளாமல் இப்போது முன்னேறத் துடித்தேன். டிகிரி வாங்கினால் தான் வேலை நிரந்தரமாம். ·போர்மேன் சொல்லிவிட்டார். அப்பதான் நல்ல பெண்ணாகப் பார்த்து “செட்டிலாகலாம் !”. புத்தகத்தில் கவன்ம் போகவில்லை. பிரயோசனமாக வாங்கி வைத்திருந்த “குமுதம்” கிடைத்தது. படித்தேன். நிம்மதியாக இருந்தது. சேவலிற்கு ஏற்ற கோழிகளைப் பற்றி நிறைய போட்டிருந்தார்கள். கனவு கொரட்டூர் வந்தவுடன் கலைந்தது.
“கொக்கரக்கோ” என்று கத்திவிட்டு இறங்கி பேக்டரிக்கு ஓடினால் தான், இரவு கோழிக்கறி சாப்பிடமுடியும் !.
பிறகு நாளை மீண்டும் மேன்ஷனில் “கொக்கரக்கோ !”.
எங்கள் ஊர் கிராமத்தில் இந்நேரம் சேவல் என்னை விட நிம்மதியாகப் பரணில் தூங்கப் போகியிருக்கும்.
ஏக்கமாக மனதில் ஆகிப்போக, “கொக்கரக்கோ!” என்று மகிழ்ச்சியாகக் கூட கத்த முடியவில்லை.
மணி 8.00 பேக்டர் சங்கு ஊத உள்ளே டைம் மெஷினில் என் கார்டை “பன்ச்” செய்து விட்டு சேவலாக இல்லாமல்,
மாடாக உழைக்க ஆரம்பித்தேன்.


kkvshyam@yahoo.com

Series Navigation

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா